நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
சீவக சிந்தாமணி...!!
🌟யாழிசை போட்டி நடைபெறும் நாளும் வந்தது. போட்டியில் கலந்து கொள்ள பல தேசங்களில் இருந்தும் அரசர்கள் வந்தார்கள். அவர்கள் மட்டுமல்லாது வணிகர்கள், செல்வந்தர்கள் என பலர் நிரம்பி இராசமாபுரமே ஒரு திருவிழா போல காட்சி அளிக்கும் விதத்தில் இருந்தது.
🌟அது மட்டுமல்லாமல் யாவரும் அமர்ந்து கண்டு மகிழும் வகையில் அழகான மணிமண்டபத்தில் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

🌟காந்தருவதத்தையோ சீதத்தனிடம் போட்டியில் கலந்து கொள்ள யாராவது வந்திருக்கிறார்களா? என்று கேட்டாள்.
🌟அதை ஏன் கேட்கின்றாய்? நாம் எதிர்பார்த்ததை விட நிறைய நபர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்கள். போட்டி களமானது போர்க்களமாக மாறாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன் என்று சீதத்தன் கூறினான்.
🌟என்னிடத்தில் போட்டி போடுவதற்கு இவ்வளவு கூட்டமா? எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது என்றாள்.
🌟எனக்கும்தான்... உன்னிடத்தில் போட்டி போடுவதற்கு மட்டும் இந்த கூட்டம் அல்ல. உன்னுடைய அழகை காண்பதற்கும், அதை தன்னோடு எடுத்து செல்வதற்காகவும் பலர் போட்டியிடுகின்றார்கள். சில அரசர்கள் போட்டியில் எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் வந்திருக்கின்றார்கள். அவர்கள் ஆவலோடு வந்தால் பரவாயில்லை? கூடவே போருக்கு தேவையான ஆயுதங்களோடும் வந்திருக்கின்றார்கள். என்ன நிகழுமோ? என்றான் சீதத்தன்.
🌟இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வீணாபதி உள்ளே வந்தாள். வந்தவள் சீதத்தனை நோக்கி போட்டியை துவங்கலாமா? என்று வினவினாள்.
🌟தாராளமாக போட்டியை துவங்கலாம் என்று சீதத்தன் கூறினான். வீணாபதியும் இரு கைகளை தட்ட, வெளியே இருந்தவர்கள் உள்ளே வர, போட்டிக்கு தேவையான அனைத்து யாழ்களையும் போட்டி நடக்கும் களத்திற்கு எடுத்து செல்லுங்கள் என்று வீணாபதி கூறினாள்.
🌟உடனே போட்டிக்காக தயார் நிலையில் இருந்த யாழ்கள் அனைத்தும் போட்டி நடைபெறும் களத்தினை நோக்கி ஊர்வலமாக சென்றது.
🌟அங்கே களத்தில் கூடியிருந்த மக்களுக்கு ஒரே அதிசயமாக இருந்தது. ஒரு போட்டிக்கு இத்தனை யாழ்களா? எதற்காக இத்தனை யாழ்கள்? என்று ஒருவன் வாய்விட்டே கேட்டான். அதற்கு அங்கு இருந்த மற்றொருவனோ அப்பொழுது தானே சரியான யாழை தேர்ந்தெடுப்பதில் போட்டியாளர்களுக்குள் குழப்பம் ஏற்படும் என்று கூறினான்.
🌟அப்பொழுது விலகுங்கள்.. விலகுங்கள்.. என்று கூறியபடி கட்டியங்காரனின் காவலர்கள் கூட்டத்தினை விலக்கிய வண்ணமாக வந்தார்கள். எவ்வளவு விலக்கினாலும் கூட்டம் விலகாமல் அப்படியே இருந்தது. ஆகையால் கிடைத்த சிறு இடைவெளியின் வழியாக கட்டியங்காரன் மணிமண்டபத்தில் தனக்கான இடத்தில் போய் அமர்ந்தார்.
🌟 போட்டி நடைபெறும் களத்தில் கூடியிருந்த வாலிபர்கள் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தது. காந்தருவதத்தையின் தோழியான வீணாபதி அவையில் இருந்த திரையை விலக்கி அனைவருக்கும் முன் வந்து நின்றாள். வீணாபதியை கண்டதும் அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரிக்க தொடங்கினர்.
🌟 அவர்களுடைய சிரிப்பு வீணாபதிக்கு புதிதான ஒன்றாக தெரியவில்லை. அரங்கத்தில் இருந்த சிலரோ யார் இவள்? ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லையே? இவர்களுடைய ராஜ்யத்தில் சாப்பிடுவதற்கு உணவு கூட இல்லையோ என்னவோ? அதனால் தான் இவ்வளவு மெல்லியதாக இருக்கின்றாள். பார்த்து மா... பாதுகாப்பாக இரு... பறந்து விடாதே... என்று கூறி சிரிக்க தொடங்கினார்கள்.
🌟 அதற்குள் மற்றொருவனோ தேவதை ஒருத்தி வந்திருக்கிறாள் என்று கூறினார்கள். ஆனால் இவளை பார்த்தால் தேவதையாக தெரியவில்லையே. கவர வேண்டியவை அனைத்தும் கவிழ்ந்து கிடக்கின்ற பொழுது யாரை கவர போகின்றாள் என்று கூறி அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர்.
🌟 இளைஞர்கள் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வீணாபதியோ, என்னை படைத்த பொழுது பிரம்மனிடம் எமனே வந்து அனைத்தும் நிறைந்த கன்னியாக இவளை அனுப்பி விடாதீர்கள்? மற்றவர்களின் உயிரை பறித்து செல்லும் வேலையாவது விட்டுவிடுங்கள்? என முறையிட்டதால் தான் நான் இப்படி இங்கு முழுமை இல்லாமல் வந்து இருக்கின்றேன் என்று வீணாபதி கூறினாள்.
🌟 பின் வீணாபதியோ அனைவரையும் வணங்கிய வண்ணமாக போட்டிகளை பற்றி எடுத்துரைத்து விட்டு காந்தருவதத்தையை மேடைக்கு அழைத்தாள்.
🌟 காந்தருவதத்தையை மேடைக்கு அழைத்ததும் அங்கிருந்த பேச்சு, சத்தங்கள் யாவும் குறைய தொடங்கின. அனைவரின் விழிகளும் இசை மேடையை மட்டுமே நோக்கிய வண்ணமாக இருந்தது. அப்பொழுது பவள மேனியுடைய காந்தருவதத்தை மேடைக்கு வந்தாள்.

🌟 அங்கிருந்த அனைத்து மக்களும் தங்களையே மறந்து இமை கொட்டாது அவளை பார்த்து, அவளுடைய அழகில் மயங்கி இருந்தனர். சிலரோ இவள் பாடவே வேண்டாம் இப்படியே நின்று கொண்டிருந்தால் போதும் என்று எண்ணி கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் அவரவர்களின் மனப்போக்கிற்கு ஏற்ப பாவையை நயந்து சென்றனர்.
🌟 காந்தருவதத்தையோ யாரை பற்றியும் எந்த கவலையும் கொள்ளாமல் மேடையில் தனக்கான இருக்கையில் அமர்ந்து பாட துவங்கினாள்.
🌟 எள்ளளவும் பிழையில்லாத தெளிவு நிறைந்த நாதத்துடன் அவளுடைய பாடலானது இருந்தது. புருவங்கள் எதுவும் நிமிரவில்லை. விழிகள் எதுவும் பிறழவில்லை. பற்கள் எதுவும் வெளியே தெரியவில்லை. அங்க அசைவுகள் எதுவும் இன்றி பாடல்கள் அனைத்தையும் தங்குதடையின்றி பாடினாள்.
🌟 காந்தருவதத்தையின் பாடல்கள் மற்றும் இசைகளை கேட்டதும் பாடல்களை விரும்பக்கூடிய பறவைகளான கின்னரம் பறவைகள் அரங்கில் வந்து நிறைந்தன.
🌟 காந்தருவதத்தையின் பாடலுக்கும், அவள் இடத்திலிருந்து வெளிப்பட்ட குரலுக்கும் ஏற்ற யாழினை தேடுவதிலேயே பல அரசர்கள் தோல்வியை கண்டனர். அதில் வெற்றி கொண்ட சிலரும் அவள் ஆடிய ஆடல் வேகத்திற்கு யாழினை அசைக்க முடியாமல் திணறினார்கள்.
🌟 சுரங்கள் எதுவும் இல்லாமல் பாடப்பட்ட பாடல்களை கேட்ட கின்னரம் பறவைகள் அனைத்தும் அடுத்த கணத்திலேயே பதறி வெளியேறின. மீண்டும் காந்தருவதத்தையின் குரலை கேட்டதும் போட்டி அரங்கத்திற்குள் நுழைந்தன.
🌟 போட்டிக்கு வந்த ஒவ்வொருவரும், ஒருவர் பின் ஒருவராக தோற்க துவங்கினார்கள். அரசர்கள், வணிகர்கள் என பலரும் தோற்று கொண்டே இருந்தார்கள்.

🌟 போட்டியில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவராக தோற்றுக்கொண்டு இருப்பதை உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருந்த கட்டியங்காரன் கண்டு சிரித்துக் கொண்டிருந்தார். சீதத்தன் என்ன செய்வது என்று புரியாமல்? திகைத்து நின்று கொண்டிருந்தான்.
🌟 அவனுடைய மனைவியான பதுமை இங்கே நிகழ்வது என்னவென்று புரியாமலும்? இவ்வளவு அழகும், இனிமையும் நிறைந்த தேவதை போன்ற ஒரு பெண்ணை அழைத்து செல்ல ஒரு ஆடவனும் நம் ராஜ்யத்தில் இல்லையா? என்றும் கவலைப்பட்டாள்.
🌟 கட்டியங்காரனோ இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள எந்தவொரு ஆண்மகனும் நமது நாட்டில் இல்லை என்று முடிவு செய்தான். பின், இந்த போட்டியும், நிகழ்வும் எதுவரை செல்கிறது என்று பார்ப்போம். என்ன செய்வது? எதுவும் முடியவில்லை என்றால் யாவும் நிறைந்த தேவதை போன்ற இந்த பெண்ணை அவளுடைய நாட்டிற்கு அனுப்பி விடுவது தானே தனக்கு நல்லது. விலைபோகாத காயை சந்தைக்கு கொண்டு போனால் மட்டும் விற்க வா போகின்றது என்று தனது மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டான்.
🌟 கூடியிருந்த மக்கள் அனைவரும் சீதத்தனை ஒரு புத்தியில்லாத மடையன் போல பார்க்க துவங்கினார்கள். வியாபாரம் பண்ண போனவன் தேவையில்லாத வம்பையும் வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.
🌟 ஏனென்றால், கொடி என்றால் படர்வதற்கு ஒரு கம்பு வேண்டுமல்லவா? எல்லா கொடியும் ஒரே கம்பில் படர்வது என்பது முடியாதல்லவா? இந்த கொடி படர்வதற்கு தகுந்த கம்பு இங்கு இல்லையோ? என்று பேசி அவர்களுக்குள்ளேயே சிரித்து கொண்டிருந்தார்கள். போட்டி இல்லாமல் இருந்தால் கம்பாக நான் இருப்பேன் என்றும் சிலர் சொல்லிக்கொண்டு இருந்தனர்.
🌟 களத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் கூற்றுக்களை கூறி கொண்டிருந்தனர். ஆனால் காந்தருவதத்தையோ எவர்களுடைய கூற்றுக்களையும் கண்டுகொள்ளாமல் இருந்தாள். எனக்கானவன் எங்கும் இல்லை, இங்கு தான் இருக்கின்றான் என கணித்து கூறியவரின் கூற்று பொய்யாகாது என்ற நம்பிக்கையில் வந்தவர்கள் மற்றும் தோற்றவர்களை பற்றிய எவ்வித கவலையும் கொள்ளாமல் இருந்தாள்.
🌟 அரச குடும்பத்தில் இருந்து தான் எனக்கானவன் இருக்க வேண்டும் என்பதில்லையே... பாஞ்சாலிக்கு அர்ஜுனன் வந்ததை போன்று, சாதாரண வேடத்திலும் எனக்கானவன் வருவான் என்ற நம்பிக்கையில் போட்டியில் ஈடுபட்டவர்களிடம் தன்னை தோற்கடிக்கக்கூடிய திறமை எவரிடமாவது உள்ளதா? என்று தேட துவங்கினாள்.
🌟 காந்தருவதத்தையின் நிலையை எண்ணி நாட்டு மக்கள் அனைவரும் சற்று கவலை அடைந்தனர். ஏனென்றால் ஆட்சியானது நன்முறையில் நடந்தால் தானே மக்கள் இசை போன்ற புதிய கலைகளை நாடுவார்கள். உயிர் வாழ்வதற்கே போராட்டம் என்ற பொழுது மக்கள் எவ்விதம் இசையை நாட முடியும்.
🌟 கொடுங்கோலன் ஆட்சியில் இனி என்னென்ன நிகழ போகின்றதோ? இந்த பெண்ணிற்கு மணமகன் கிடைக்கவில்லை என்றால் இது நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் அல்லவா? இதை எண்ணும் பொழுதே கட்டியங்காரனை மக்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கினர்.

🌟 அரியணையில் அமர்ந்திருந்த கட்டியங்காரனோ அங்கு நிகழ்ந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தான். பின் தனது அருகில் இருக்கக்கூடிய மதனனிடம் அந்த வாலிபன் வந்திருக்கின்றானா? என்று வினவினான்.
🌟 எந்த வாலிபன் அரசே? யாரென்று? மதனன் கேட்டான்.
🌟 அவன்தான் அந்த பசு மாட்டு கூட்டத்தை மீட்டு கொண்டு வந்தானே.. அவன் பெயர் கூட ஏதோ ஓ... ஓ... ஆ... சீவகன் என்று அவன் பெயர் கூறினான்.
🌟 அதற்கு மதனனோ, அரசே எனக்கு தெரியவில்லை.. வந்திருந்தாலும் வந்திருப்பான் என்று தயக்கத்துடன் கூறினான்.
🌟 வரட்டும்... வந்தால் அவன் உயிருடன் திரும்பி போவதற்கான சூழ்நிலைகளே இருக்கக்கூடாது. அனைத்து ஏற்பாடுகளும் தயாராக தானே இருக்கின்றது? என்று கேட்டுவிட்டு கட்டியங்காரன் போட்டியை கவனிக்க தொடங்கினான்.
🌟 கட்டியங்காரன் சீவகனை பற்றி கேட்டதும் மதனன் சிரித்த வண்ணமாக அரசே அன்று நாடக மேடையில் நிகழ்ந்தது, இன்று இந்த மேடையில் நிகழாது தானே என்றான்.
🌟 அன்று ஒரு நாள் சீவகன் வேடவர்கள் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டு வந்ததை முன்னிட்டு ஊர் மக்கள் இணைந்து அவனுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அப்பொழுது அந்த விழாவை பார்ப்பதற்காக கட்டியங்காரன் வந்திருந்தான். கட்டியங்காரன் அந்த விழாவிற்கு வந்திருக்கின்றான் என்பது சீவனுக்கு தெரியாது.
🌟 அந்த விழாவில் கலந்து கொண்ட கட்டியங்காரனுக்கு ஏன் இந்த விழாவில் கலந்து கொண்டோம்? என்ற அளவில் மிகுந்த வெறுப்பும், கோபமும் ஏற்பட துவங்கியது. அதற்கு காரணம் அன்றைய நாடகத்தில் நடனமாடிய ஒரு பெண் தான். அவள் பெயர் தான் அனங்கமாலை.

🌟 நீண்ட நாட்களாகவே அனங்கமாலையிடத்தில் ஆசை கொண்டு அவளை அடைவதற்கான பல முயற்சிகளை கட்டியங்காரன் மேற்கொண்டான். ஆனால் அவளோ கட்டியங்காரனை எள்ளளவும் பார்க்கவில்லை. அன்று அவள் சீவகனை பார்த்து ஆடிய அந்த நடனத்தில் காமமும், காதலும் அளவுக்கு அதிகமாக வெளிப்பட துவங்கியது.
🌟 அதை அவளிடத்தில் கண்டுபிடிக்க கட்டியங்காரனுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை சிறு அசைவுகளிலேயே அவளின் எண்ணங்களை தெளிவாக புரிந்து கொண்டான். அவள் சீவகனை பார்த்த வண்ணமாக அவனிடத்தில் மையம் கொண்டு ஆடி கொண்டிருந்தாள்.
🌟 இதை புரிந்து கொண்டதும் கட்டியங்காரனுக்கு சீவகன் மீது பொறாமை அதிகரிக்க துவங்கியது. அவன் ஒரு சிறு வாலிபன், அவனிடத்தில் தான் தோற்பதா? என்ற எண்ணம் அவனுள் தோன்றியது.
🌟 எனவே, அந்த வாலிபனான சிறு பதரை இப்பொழுதே கொன்று விடுங்கள் என்று தன்னிடம் இருந்தவர்களிடம் கூறினான். ஆனால் அதற்குள்ளாக சீவகன் அவ்விடத்திலிருந்து எதிர்பாராத விதமாக சென்று விட்டான்.
🌟 கட்டியங்காரனின் ஆணைகளை ஏற்று கொண்டு சீவகனை கொல்வதற்காக அவனுடன் இருந்தவர்கள் தேடினார்கள். ஆனால் அவன் எங்கும் இல்லை என்பதை புரிந்து கொண்டு அதை அரசனிடம் தெரிவித்தார்கள்.
🌟 கோபமும், பொறாமையும் தலைக்கேறிய கட்டியங்காரன் என்ன செய்கின்றோம் என்று புரியாமல் மேடையின் மீது ஏறி அனங்கமாலையை பிடித்து அவ்விடத்திலேயே அனைவரும் முன்னிலையிலும் பலமாக அடித்தான். ஆட வந்தவளுக்கு காமம் தேவையா? என்று கூறி அனைவரின் முன்னிலையிலும் அடித்தான்.
🌟 அனங்கமாலையின் கூற்றுக்களை கேட்டதும் கட்டியங்காரனுக்கு இன்னும் கோபம் அதிகரிக்க துவங்கியது. அந்த கோபத்தின் விளைவாக அவன் அனங்கமாலையை அரண்மனை வரை அடித்தே இழுத்து வந்தான்.
🌟 பின்பு தனது அருகில் இருப்பவர்களிடமும், அமைச்சர்களிடமும் யார் அந்த வாலிபன்? என்னைவிட அவனுக்கு என்ன அவ்வளவு திறமைகள் இருக்கின்றதா? நான் பல நாட்கள் முயன்றும் வசியம் செய்ய முடியாத அனங்கமாலையை ஒரு நொடி பொழுதில் அவனுக்கு உரியவளாக மாற்றி விட்டானே. எப்படி அவனால் மட்டும் முடிந்தது? என்று கோபத்தில் ஏதேதோ கூறி கொண்டே இருந்தான்.

🌟 மன்னருடைய கோபத்தை கண்டு பயந்த அவன் அருகில் இருந்தவர்களும், அமைச்சர்களும் சீவகனை பற்றிய எந்தவிதமான உண்மைகளையும் சொல்ல முடியாமல், தைரியம் இல்லாத கோழைகளான அமைச்சர்கள் அவன் அவ்வளவு பெரிய திறமைசாலி ஒன்றும் கிடையாது மன்னா. அவன் சாதாரண ஒரு வில்வீரன் மட்டும் தான்.. பார்ப்பதற்கு ஏதோ அழகாக இருக்கின்றான்.. அதனால் தான் அவனை அவளுக்கு ரொம்ப பிடித்து விட்டது போல என்று கூறி மன்னருடைய கோபத்தை சமாளிக்க துவங்கினார்கள்.
🌟 இந்த நிகழ்வில் இருந்து கட்டியங்காரனுக்கு ஒரு உண்மை தெளிவாக புரிந்து விட்டது. இவனை வளர விட்டால் தன்னுடைய ஆட்சிக்கு இவன் பாதகம் செய்து விடுவான் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டான்.
🌟 உடனே மதனனை அழைத்து இந்த போட்டிக்கு அவன் கண்டிப்பாக வருவான். ஒருவேளை அவன் இந்த போட்டியில் ஈடுபட்டால் அவன் வெற்றி அடையக்கூடாது. ஒருவேளை அவன் வெற்றியடைந்து விட்டால் அவன் உயிருடன் இந்த இடத்தினை விட்டு திரும்பி செல்லக்கூடாது. அதற்கு தகுந்த விதத்தில் ஏற்பாடுகளை செய்துவை என்று கட்டளையிட்டிருந்தான்.
🌟 கட்டியங்காரன் மதனனிடம் பேசி கொண்டிருந்ததை சாமரம் வீசி கொண்டிருந்த நாகமாலை கேட்டதும் சீவகனை எண்ணி மிகுந்த அச்சம் கொண்டாள்.
🌟 அங்கு சீவகனின் நண்பர்கள் பலர் போட்டியில் நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றி ஒருவருக்கொருவர் பேசி கொண்டும், புன்னகைத்து கொண்டும் இருந்தனர். அதாவது, ஒரு பெண்ணிற்கு தகுந்த சரியான வரன் நமது நாட்டில் இல்லையா என்றும், அந்த பெண் மணமகனே கிடைக்காமல் தனியாக தத்தளித்து கொண்டிருக்கின்றாள் என்றும் பேசி கொண்டிருந்தனர்.
🌟 இன்னொரு நண்பனோ, ஏன் இல்லை? அவளுக்கானவன் இங்கே தான் இருக்கின்றான். இவன் தானே செல்ல மாட்டேன் என்று கூறி கொண்டிருக்கின்றான். இவன் சென்றால் தானே நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவநிலையை நீக்க முடியும் என்று கூறினான்.
🌟 யாழிசை போட்டியில் நடைபெற்ற அனைத்து விபரங்களையும் நண்பர்கள் மூலமாக சீவகன் அறிந்து கொண்டான். காந்தருவதத்தையை மணக்க வேண்டும் என்ற ஆசை அவனிடத்தில் இல்லை. ஆனால் நம்முடைய நாட்டை நம்பி வந்த அன்னிய நாட்டு பெண்ணிற்கு ஏற்பட்டு உள்ள இந்த நிலையை எண்ணியும், அவன் மனதளவில் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை எண்ணியும் கவலை கொண்டான்.
🌟 தன்னுடைய நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த களங்கத்தை போக்குவதற்காக காந்தருவதத்தையுடன் அந்த யாழிசை போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தான். போட்டியில் கலந்து கொள்ள தன்னுடைய தந்தையிடம் அனுமதி பெற்று வருமாறு தன் நண்பர்களில் திறமை மிக்க புத்திசேனனை அனுப்பி வைத்தான்.

🌟 கந்துக்கடன் போட்டியை காண செல்வதற்காக தயாராக இருந்தார். ஆனால் அவருடைய மனைவி தயாராவதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டு கொண்டிருந்தது. நீ தயாராகி வருவதற்குள் போட்டியே முடிந்துவிடும் என்று எண்ணுகின்றேன். சீக்கிரம் வருவாயாக என்று மனைவியிடம் கூறி கொண்டிருந்தார்.
🌟 அந்த சமயத்தில் தான் புத்திசேனன் சீவகனின் வீட்டை அடைந்தான். அவனுடைய தந்தையை பார்த்த வண்ணமாக, தந்தையே எப்படி இருக்கின்றீர்கள்? நன்றாக இருக்கின்றீர்களா? என்று வினவினான்.
🌟 அதற்கு கந்துக்கடன், வா புத்திசேனா! பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நான் நலமாக தான் இருக்கின்றேன். நீ ஏன் இன்னும் போட்டிக்கு செல்லவில்லை? என்று கேட்டார்.
🌟 யாழினை பற்றியும், நடனத்தை பற்றியும் எனக்கென்ன தெரியும். இதுவே வாளை பற்றி நடைபெறும் போட்டியாக இருந்தால் இந்நேரம் நான் அங்கல்லவா இருந்திருப்பேன். இங்கு உங்களுடன் பேசி கொண்டிருப்பேனா? என்றான்.
🌟 அதுவும் சரிதான். இரும்பு கடையில் ஈ-க்கு என்ன வேலை இருக்கின்றது? என கூறி இருவரும் சிரித்து கொண்டிருந்தனர்.
🌟 தந்தையே உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்லலாம் என்று வந்திருக்கின்றேன் அந்த விஷயத்தை சொல்லலாமா? என்று புத்திசேனன் கேட்டான்.
🌟 புத்திசேனன் சொல்ல வந்ததை சொல்லாமலேயே இருந்தான். அதற்கு, சொல்வது என்று முடிவெடுத்த பின்பு தான் என்னை காணவே வந்து இருக்கின்றாய். அதற்கு பின் என்ன சொல்லலாமா? என்ற ஒரு கேள்வி? தைரியமாக சொல். நான் என்ன சொல்ல போகிறேன் என்றார் கந்துக்கடன்.
🌟 சீவகன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விருப்பப்படுகின்றோம். ஆனால் சீவகனோ ஒரு பெண்ணிற்காக இந்த போட்டியில் கலந்து கொள்வதா? என்று ஒரே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றான்.
🌟 ஆனால் நாங்களோ இது உன்னுடைய திறமைக்கான போட்டி. இதில் உன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறு. பின்பு வெற்றி பொருளான அந்த நங்கையை பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினோம்.
🌟 அப்படி கூறியும் அவன் அந்த போட்டியில் கலந்து கொள்ள ஏதோ தயக்கம் கொள்கின்றான். அதனால் தான் உங்களிடம் கேட்டு அனுமதி பெற்று பிறகு அவனை போட்டியில் கலந்து கொள்ள வைக்கலாம் என எண்ணி நான் இங்கு வந்திருக்கின்றேன் என்று தன் மனதில் தோன்றியதை சாதுர்யமாக தந்தையிடம் கூறினான்.

🌟 ஓ... அப்படியா செய்தி. சீவகனுக்கு யாழில் நல்ல பயிற்சியும், திறமையும் இருக்கின்றது. அவனிடத்தில் இனிமையான குரல் வளமும் இருக்கின்றது. முருங்கை முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே தீர வேண்டும்.
🌟 அப்படி இருக்கும் பொழுது என்ன பதற்றம். தைரியமாக... என்று சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே திடீரென்று நாகமாலை மிகுந்த பதற்றத்தோடு கந்துக்கடனை பார்ப்பதற்காக அவன் வீட்டிற்கு வந்தாள்.
🌟 நாகமாலை பதற்றத்தோடு உள்ளே வந்ததை இவ்விருவரும் கண்டனர். ஏன் என்ன ஆயிற்று? ஒரே பதற்றமாக வந்து கொண்டிருக்கிறாய் என்ன செய்தி? என்று கந்துக்கடன் வினவினார்.
🌟 நாகமாலை மன்னன் கூறியதை கந்துக்கடனிடமும், புத்திசேனனிடமும் தெளிவாக கூறினாள்.
🌟 நாகமாலை கூறியதை கேட்டதும் கந்துக்கடன் புத்திசேனனை நோக்கி, இனி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. அனைத்தையும் நீயே கேட்டாய். போட்டியில் கலந்து கொள்வதற்கு நான் எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை. ஆனால் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் தயாராக போக வேண்டும். அதைத்தான் நான் கூறுகின்றேன். சீவகனிடம் இதை கூறு அவனுக்கு புரியும் என்று கூறினார்.
🌟 புத்திசேனன் கந்துக்கடனிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு, சீவகனிடம் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறினான். அதுமட்டுமில்லாமல் கந்துக்கடன் கூறியதையும் கூறினான்.
🌟 சீவகனும், புத்திசேனனை பார்த்து தந்தை கூறியதில் எந்தவிதமான தவறும் இல்லையே. போட்டிக்கு செல்வது தவறில்லை. ஆனால் தயாராக மட்டும் தான் செல்ல வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
🌟 'பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு அஞ்சாது. குறைக்கின்ற நாய் கடிக்காது" என்பது போல இந்த அறைகூவலுக்கெல்லாம் நாம் அஞ்ச வேண்டியதில்லை. நாமும் தயாரான நிலையிலேயே, தேவையான ஆயுதங்களோடு போட்டிக்கு செல்வோம் என்று கூறிக்கொண்டு போட்டி நடைபெறும் களத்தினை நோக்கி கிளம்பினான் சீவகன்.
🌟 அவனுடைய நண்பர்களான பதுமுகன், நபுலன், விபுலன், நந்தட்டன் ஆகியோரும் சரியான நேரத்தில் போட்டி நடைபெறும் களத்தை வந்தடைந்தார்கள்.
🌟 யாரும் எதிர்பாராத அந்த தருணத்தில் சீவகன் அந்த அவைக்கு வந்ததுமே அரங்கமே மிகுந்த ஆர்ப்பாட்டமும், மகிழ்ச்சியும் அடைந்தது.
🌟 புதிதாக போட்டியில் கலந்து கொள்ள வந்தவனை கண்ட காந்தருவதத்தை, இதுவரையில் அவள் அறியாத ஒரு புதிய உணர்வினை அடைந்தாள். யார் இவன்? இவனை கண்டதும் ஏன் என்னுள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்று தனது உடனிருந்த வீணாபதியிடம் வினவினாள்.
🌟 இவன்தான் சீவகன் என வீணாபதி கூறினாள்.
🌟 சீவகன் என்று அறிந்ததும் இவரை பற்றிய பல செய்திகளை நான் கேள்விபட்டிருக்கின்றேன். அவைகள் எல்லாம் இவரை மிகைப்படுத்துதல் போன்று இருக்கின்றன என்று நினைத்திருந்தேன். ஆனால் அவை எதுவும் இல்லை. அனைத்தும் இயல்பாக தான் இருக்கின்றன என காந்தருவதத்தை கூறினாள்.
🌟 சீவகனை போட்டி நடைபெறும் இடத்தில் கண்டதும் அங்கிருந்த கன்னியர்கள் அனைவரும் காந்தருவதத்தையின் மீது மிகுந்த கோபம் கொண்டனர். 'கொடுத்து வைக்காதவள் கெடுத்து கொண்டாள்" என்பது போல இசை போட்டியில் அவன் இவளை வெல்லவில்லை என்றால் இவள் அவனை இழப்பது உறுதி. அவள் தனக்குத்தானே வேலியை போட்டு கொண்டு தன்னுடைய வாழ்க்கையையும் கெடுத்து கொள்ள போகிறாள் என்று அவர்களுக்குள்ளே பேசி கொண்டனர்.
🌟 ஒரு சிலர், அப்படி எதுவும் இங்கு நடைபெற போவதில்லை. ஏனென்றால்? வெற்றியும், தோல்வியும் அவளே நிர்ணயம் செய்வது போல விதிகள் இருக்கின்றன. ஒருவேளை அவள் விட்டுக்கொடுத்தால் இவன் போட்டியில் வெற்றி பெறுவான். இசையில் தோற்றுவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவாள் என்றும் கூறினார்கள்.
🌟 யாழிசை மேடையில் அமர்ந்திருந்த காந்தருவதத்தையோ சீவகனை கண்டதும் அவனுடைய அழகில் மயங்கினாள். பலரை மயக்கியவள் ஒருவன் அழகில் மயங்குவது இயல்பு தானே.
🌟 ஒருவேளை இவன் இசையில் தன்னிடம் தோற்றுவிட்டால் நான் என்ன செய்வது என்று அஞ்சினாள். வேண்டுமானால் நாமே போய் போட்டியில் தோற்று இவனை வெற்றி அடைய செய்வோமா? என்று ஒரு பக்கம் எண்ணினாள். ஆனால் இது முறையான வெற்றியாக இருக்காது. எவ்விதம் என்னுடைய விதி எழுதி இருக்கின்றதோ அதன்படியே நடக்கட்டும் என்று கூறி எப்பொழுதும் போல போட்டியாளரை போட்டி கொள்ள துவங்கினாள் காந்தருவதத்தை.
🌟 நிகழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் புதுமையாக இருந்தாலும் அதை அனுபவிக்கும் மனப்பக்குவத்தில் காந்தருவதத்தையும் இல்லை. ஏனென்றால் வீணாபதியும், மற்ற கன்னிகளை போல் சீவகனின் அழகில் மயங்கி விட்டாள் போல. அவள் பெயருக்கு ஏற்றவாறு அவள் காலத்தையும் வீணடித்து கொண்டிருந்தாள்.
🌟 சீவகனை பார்த்த வீணாபதி உங்களை பார்த்தால் வாள் வீரரை போல இருக்கின்றீர்கள். உங்களால் யாழை இசைக்க முடியுமா என்று வினவினாள். அதை தெரிந்து கொள்ளத்தான் இந்த போட்டி நடைபெறுகின்றது என்ற சீவகன் எந்தவித படபடப்பும் இல்லாமல் இயல்பாக இருந்தான்.
🌟 விட்டால் இவர்கள் இருவரும் பேசி கொண்டே காலத்தை வீண் செய்து விடுவார்களோ? என்று எண்ணிய காந்தருவதத்தை காலத்தை வீணாக்காதே வீணாபதி போட்டிக்கு தேவையான யாழினை அவருக்கு எடுத்து கொடு என்று கூறினாள்.
🌟 காந்தருவதத்தையுடைய அவசரத்தை புரிந்து கொண்டு வீணாபதியும் போட்டிக்கு தேவையான யாழினை வரிசையாக கொண்டு வந்து வைத்தாள். இதில் உமக்கு வேண்டிய யாழினை நீயே தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறினாள்.
🌟 அவள் கொண்டு வந்த யாழின் வரிசையில் முதல் யாழின் மீது இருந்த உரையை அகற்றினான். அந்த யாழினுடைய மரப்பகுதிகளை தட்டி பார்த்தான். இந்த யாழ் எனக்கு வேண்டாம் என்று கூறினான்.
🌟 ஏன் இந்த யாழினை வேண்டாம் என்று கூறுகின்றீர்கள்? இந்த யாழ் நன்றாக தானே இருக்கின்றது? என்று கேட்டாள் வீணாபதி.
🌟 யாழானது நன்றாக இருந்தாலும் அதில் உள்ள நரம்புகள் சரியான முறையில் இருந்தால் தானே மனதிற்கு இதமான இசைகள் வெளி வரும். நரம்பு சரியில்லாத இந்த யாழை வாசித்தால் இசை எப்படி வரும் என்று கூறினான்.
🌟 இரண்டாவது யாழினை தட்டி பார்த்ததும் இந்த யாழ் நீரில் போட்ட மரத்தினால் செய்யப்பட்டதாகும். எவ்வளவு மெலிதாக இருக்கின்றது பாருங்கள். இதுவும் வேண்டாம் என்று கூறி அந்த யாழினையும் வேண்டாம் என்றான்.
🌟 சீவகனோ முதல் இரண்டு யாழ்களையும் தட்டிக்கழித்துவிட்டு, மூன்றாவதாக உள்ள யாழை கண்டான். அந்த யாழையும் பார்த்து அழுகல் மரத்தினால் செய்யப்பட்டது இந்த யாழும் வேண்டாம் என்றான். அடுத்த உள்ள யாழ் வாளினால் வெட்டப்பட்ட மரத்தினால் செய்யப்பட்டது. இதுவும் வேண்டாம் என்றான்.
🌟 இது இடியினால் தாக்கப்பட்ட மரத்தினால் செய்யப்பட்டது. இந்த யாழில் வாசித்தால் சரியான இசை வெளிப்படாது என்றான்.
🌟 இந்த யாழிசை போட்டியை கண்டு கொண்டிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது. இவன் என்ன ஒவ்வொரு யாழையும் வேண்டாம் என்று நிராகரித்துக் கொண்டே வருகின்றான். போகின்ற போக்கை பார்த்தால் இவன் எந்த யாழையும் வாசிக்க மாட்டான் போல. அனைத்தும் தரமற்ற யாழ்கள் என்று கூறிவிடுவானோ? என்று எண்ண தொடங்கினார்கள்.
🌟 சீவகன் யாழினை தேர்ந்தெடுக்கும் பொழுது இறுதியாக அவன் கண்களில் காந்தருவதத்தையை போல தேடல்கள் கொண்ட யாழ் ஒன்று தென்பட்டது. அந்த யாழினை கண்டதும் நங்கையின் நலத்தது (நலத்தது : விரும்புதல்) என்று கூறினான். சீவகனின் இந்த கூற்றினை கேட்ட காந்தருவதத்தை மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். தன்னை ஒரு யாழிற்கு உவமையாக கொண்டு மதிக்கின்றான் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டாள்.
🌟 இவ்விடத்தில் நங்கை என்று தன்னை சொன்னானா? அல்லது பொதுவான ஒரு மங்கையை கூறினானா? என்று தடுமாற்றம் அடைந்தாள். இருப்பினும் அவனுடைய ரசனையை கண்டு இவள் மெய் மறந்தாள்.
🌟 தனக்கான யாழினை தேர்ந்தெடுத்து கொண்ட சீவகன் இசைக்க துவங்கினான். ஒவ்வொருவருடைய வயதிற்கு எந்தவிதமான பாடல்கள் பிடிக்கும் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தது போல, பிரிவால் வாடும் காதலியின் நெஞ்சை சித்தரித்து காதல் பாட்டினை பாட துவங்கினான்.

🌟 சீவகனின் பாடலை கேட்ட மக்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இசையின் வெள்ளத்தில் அவரவர்கள் தங்களையே மறக்கவும் துவங்கினார்கள்.
🌟 சீவகன் முடித்ததும் காந்தருவதத்தைக்கான வாய்ப்பு தரப்பட்டது. அதில் காந்தருவதத்தை இளவேனிற் பருவத்தில் தலைவனோடு கூடி மகிழும் தலைவியின், இனிய மகிழ்ச்சியான நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக பாடினாள்.
🌟 இருவருக்கும் இடையில் யார் பாடுகின்றார்கள்? யார் இசைக்கின்றார்கள்? என்பதே புரியாத வண்ணமாக ஸ்ருதியை சுத்தமாக இயக்கினார்கள். சில நேரங்களில் சீவகனின் சுதி தவறினாலும், யாழானது அதை சரி செய்தது.
🌟 நடனம் ஆடுகின்ற பொழுது சீவகன் மீட்டிய இசையினுடைய இனிமையினால் அவளுடைய மனமானது ஒரு நிலையில் இல்லாமல் கடலில் நிற்கின்ற கப்பலை போன்று மேலும் கீழமாக ஏறி இறங்கியது. எல்லைகள் அற்ற காதல் உணர்வுகள் அவளிடத்தில் உருவாக துவங்கின.
🌟 இந்த மாதிரியான உணர்வுகளுக்கு மத்தியில் அவளால் போராடவும் முடியவில்லை. நடனத்தின்பால் மனதினை செலுத்தவும் முடியவில்லை. நடனத்தில் அவள் மனம் சென்றாலும் அவனை காணுகின்ற கண்கள் மூலமாக அவளுடைய கைகளும், கால்களும் நாணத்தின் நூல்களினால் கட்டுப்பட்டது. அடைபட்ட நீரானது அணையில் இருந்து எவ்வளவு வேகமாக வெளிப்படும், அவ்வளவு வேகத்தில் தன்னுடைய நிலையை மறந்து அவனுடைய தோளில் சாய்ந்து தன்வசம் இழந்தாள்.

🌟 அவளையும் மறந்து பாரதத்தையும் மறந்து நின்றாள். இறுதியாக சீவகனே போட்டியில் வெற்றி அடைந்தான். சீவகன் வெற்றியடைந்த செய்தியை மக்கள் அனைவரும் ஏதோ போட்டியில் தாமே வெற்றி பெற்றது போல ஆரவாரம் செய்தார்கள். சீவகனை அடைய இவை என்ன தவம் செய்தாளோ என்று அனைவரும் பாராட்டினார்கள்.
🌟 யாழிசை போட்டியில் வெற்றி பெற்ற சீவகனுக்கு மாலையை அணிவிப்பதற்காக காந்தருவதத்தை மாலை எடுக்க வந்தாள். அப்பொழுது வீணாபதி அவளின் அருகில் வந்து என்னிடம் மட்டும் ஒரு உண்மையை சொல்வாயா, இதில் யார் யாரை வென்றது? என்று சிரித்த வண்ணமாக கேட்டாள்.
🌟 என்ன கூறினாய் எனக்கு எதுவும் புரியவில்லையே என்று காந்தருவதத்தையும் கூற, நீங்கள் இந்த உலகத்தில் இருந்தால் தானே நான் கூறுவது புரியும். போட்டியில் சிலர் வேண்டுமென்றே சுருதியை விலக்கினார்கள் என்பதை நான் அறிந்தேன் என்று கூற, சீ..! என்று நாணமாக கையை ஓங்கினாள்.
🌟 போட்டியில் கலந்து கொண்ட மற்ற அரசர்கள் அனைவரையும் தோற்கடிக்க செய்து சீவகன் வெற்றியடைந்தான் என்ற செய்தி மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அரசர்கள் மத்தியில் இந்த செய்தியானது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
தொடரும்...!!
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP