நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
சீவக சிந்தாமணி...!!
🌟 சீவகன் யாழிசை போட்டியில் வெற்றி அடைந்தது மன்னர்களுக்கு மட்டும் கோபத்தை ஏற்படுத்தவில்லை. கட்டியங்காரனுக்கும் கோபத்தை உண்டாக்கியது. குளுமையை ஏற்படுத்தும் நிலவின் ஒளி கூட கட்டியங்காரனுக்கு மிகுந்த வெப்பத்தினை ஏற்படுத்தியது. எங்கு வந்தாலும்? எவ்விடத்தில் இருந்தாலும்? என்ன போட்டி நடந்தாலும்? வந்து விடுகின்றான். எந்தவொரு அழகான பெண்ணையும் விட்டு வைப்பதில்லை. எனக்கு சொந்தமான அனங்கமாலையை கூட என்னிடத்தில் இருந்து இவன் பிரித்து விட்டான். இவனை இப்படியே விடக்கூடாது. இவனை எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என்று மனதில் எண்ணி கொண்டு அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.
🌟 சீவகனை அழிக்க நீண்ட நேர யோசனைக்கு பிறகு கட்டியங்காரனுக்கு கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு தான் கோபத்தில் இருக்கக்கூடிய அரசர்களின் மகன்கள். அவர்களுடைய கோபத்தை தனக்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டினான் கட்டியங்காரன்.
🌟 அரசகுமாரர்கள் அனைவரையும் சீவகனுக்கு எதிராக செயல்படும் விதத்தில் அவர்களுடைய எண்ணங்களை மாற்ற துவங்கினான்.
🌟 அரச வேந்தர்கள் இருக்கக்கூடிய குடிலுக்கு சென்ற கட்டியங்காரன், இந்த போட்டியானது எந்தவொரு விதிமுறைகளுக்கும் உட்படாமல், தர்ம நெறிகள் இன்றி, நியாயமற்ற முறையில் செயல்படுகின்றது. பாட்டு பாடுகின்றவனுக்கு தான் பெண் உரிமை என்றால் பாட்டு பாட தெரிந்த அனைவரும் அரச குமாரிகளை அடைவதில் ஆர்வம் காட்டுவார்களே. ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னனுடைய மகள் எந்தவிதமான வீரமும், போர் தகுதியும் இல்லாத பாட்டு பாட தெரியும் என்ற ஒருவனுக்கு சொந்தமாவதை உங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகின்றது.
🌟 இது மன்னர்களுடைய மரபுகளுக்கு எதிராக இருக்கின்றது. சாதாரண வணிகனின் மகன் மன்னர்களுக்கு ஒரு அறைகூவல் விடுவது போல எனக்கு தெரிகின்றது என்றும்,

🌟 சுயம்வரம் என்றால் வீரம் அல்லது காதல் கலந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் ஏதோ தனக்கு தெரிந்த சொற்களை கொண்டு பாடல்களை பாடி, இசைகளை இயற்றுகிறான் என்பதற்காக அவள் அவனுக்கு மாலை இடுவது என்பது தவறாக இருக்கின்றது என்றும் கூறினான்.
🌟 கட்டியங்காரனின் ஒவ்வொரு பேச்சுக்களும் கோபத்தில் இருக்கக்கூடிய அரசர்களுக்கு மென்மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.
🌟 அதிலிருந்த ஒரு அரச குமாரனோ முதலில் சீவகனை வென்று, அவனை கொன்று விட வேண்டும். அதன் பின் நம்மில் யார் வலியவரோ அவர்கள் காந்தருவத்தையை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினான். இந்த முடிவிற்கு மற்ற அனைத்து அரசர்களும் ஒருவிதமான தயக்கத்தோடு சிந்தித்த வண்ணமாக இருந்தார்கள்.
🌟 அரசர்களுடைய முடிவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுடைய சிந்தனை என்ன? என்பது கட்டியங்காரனுக்கு பெரும் சந்தேகமாக இருந்தது.
🌟 இனியும் இவர்களை சிந்திக்க விட்டால் ஏதேனும் வழி மாறிவிடுவார்களோ என்று நினைத்த கட்டியங்காரன், ஒரு நாட்டை ஆளக்கூடிய வேந்தன் என்பவன் வலிமை கொண்டவனாக இருக்க வேண்டும். வலிமை ஒன்றே அனைத்தையும் வெற்றி கொள்ள கூடியதாகும். இதுவே வாழ்வியல் நியதி கூட. வேலை தெரிந்த தொழிலாளியை ஒரு முதலாளி வலிமையினால் அடக்கி ஆள்வது போல, எளியோரை வலியோர்கள் வழி நடத்தி செல்வது தான் உலக நியதியும் கூட. முதலில் சிந்திப்பதை குறைத்து விட்டு செயலில் இறங்குங்கள் என்று உரக்க கூறினான்.
🌟 நம்முடைய எதிரியான சீவகன் மிக அற்பமான எதிரியும் கூட. அவன் ஒரு தனி ஆள். அவனுக்கென்று உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை. அப்படியே அவர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் வணிகத்தில் அவனோடு தொடர்பு கொண்டவர்களாக தான் இருப்பார்கள்.
🌟 அவர்களுக்கு சண்டை என்றாலே பயம். சிவப்பு மையை கண்டால் கூட அஞ்சு நடுங்க கூடியவர்கள். அவர்களை கண்டு நீங்கள் எந்த தயக்கமும் கொள்ள தேவையில்லை.
🌟 யாருக்கும் பயன் இல்லாதவர்கள் வாழ்வது எவருக்கும் பயன் இல்லை. யாழை எடுத்து வாசிக்க தெரிந்தவனுக்கு வில்லெடுத்து எதிர்க்க தெரியாது. புறப்படுங்கள் எதிரியை அழித்தொழியுங்கள் என்று அவர்களுடைய கோபத்தை தனக்காக மாற்றிக் கொண்டான் கட்டியங்காரன்.
🌟 கட்டியங்காரனுடைய நயவஞ்சகமான பேச்சுக்களால் மனதில் ஆசைகள் அதிகரிக்க துவங்கியது அரசகுமாரர்களுக்கு. எங்கே ஆசை அதிகரிக்கின்றதோ அங்கே துன்பமும் அதிகரிக்க துவங்கும் என்பது விதி அல்லவா. அரசகுமாரர்கள் அனைவரும் அவரவர்களுடைய வாளை எடுத்துக்கொண்டு சீவகனை எதிர்க்க துணிந்தார்கள்.

🌟 அரசர்கள் சீவகனை எதிர்க்க வந்து கொண்டு இருப்பதை பதுமுகன் அறிந்து கொண்டு அதற்கு தகுந்த ஏற்பாடுகளையும் மேற்கொண்டான்.
🌟 மறைமுகமாக இருந்த சீவகனின் தம்பிகளும், அவன் தோழர்களும் இணைந்து சீவகனை எதிர்க்க வருகின்ற அரசர்களிடம் சீவகனுடைய போர் திறமைகளை எடுத்து கூறினார்கள். இருப்பினும் அவர்கள் எதற்கும் தலை சாய்க்கவில்லை மாறாக அவனை எதிர்க்கவே துணிந்தார்கள்.
🌟 மன்னர்களே! நீங்கள் அனைவரும் சுய சிந்தனையோடு சீவகனை எதிர்க்க வரவில்லை. உங்களிடத்தில் இருக்கக்கூடிய ஆசைகளை கட்டியங்காரன் தூண்டிவிட்டு அதன் மூலம் சீவகனை எதிர்க்க நீங்கள் வந்திருக்கின்றீர்கள். ஒருவேளை நீங்கள் சீவகனை எதிர்த்து வெற்றி பெற்றாலும் அவன் உங்களுக்கு பேதமையை உருவாக்கி உங்களுக்குள்ளேயே சண்டையும் ஏற்படுத்தி விடுவான்.
🌟 ஆகையால் கட்டியங்காரனின் கூற்றுகளுக்கு மதிப்பளித்து செயல்படாமல் சுயமாக சிந்தித்து செயல்படுங்கள் என்று சீவகனின் நண்பர்கள் கூறினார்கள்.
🌟 பதுமுகன் எவ்வளவு கூறியும், அரசர்கள் சீவகனை எதிர்க்க முன்னேறி செல்வது எள்ளளவும் குறையவே இல்லை.
🌟 இவை அனைத்தையும் அறிந்து கொண்ட சீவகன், இனியும் பொறுத்து கொண்டிருந்தால் எதுவும் நடக்க போவதில்லை என்பதை புரிந்து கொண்டான்.
🌟 அரசர்கள் தன்னை எதிர்க்க வந்து கொண்டு இருப்பதை புரிந்து கொண்ட சீவகன் கந்துக்கடனிடம் சென்று, 'தந்தையே நீங்கள் உரைத்தது போலவே நான் அனைத்திற்கும் தயாராக வந்திருக்கின்றேன். அவர்கள் பதுமுகனின் பேச்சுக்களை எதுவும் கேட்கவில்லை. மாறாக என்னுடைய வில்லையும், வேலையும் தான் எதிர்பார்த்து இங்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். இனி அவர்களின் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றி விட்டு வருகின்றேன்" என்று கூறி தனக்குத் தேவையான அம்புகளையும், வேலையும் எடுத்துக் கொண்டு பதுமுகன் இருக்கும் இடத்தை அடைந்தான்.
🌟 சீவகனும், அவனுடைய நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் இணைந்து எதிர்க்க வந்தவர்களை வீரத்தோடு செயல்பட்டு அனைவரையும் வெற்றி கொண்டனர். சிலர் போர்க்களத்தில் மாண்டு போயினர். சிலர் உயிர்பிழைத்தால் போதும் என்று தங்கள் உயிரை காப்பாற்றிய வண்ணமாக அவ்விடத்தை விட்டு ஓடி கொண்டிருந்தனர்.
🌟 பதுமுகனோ சீவகனை நோக்கி அங்கே சிலர் தப்பித்து ஓடி கொண்டிருக்கின்றார்கள். அவர்களை பின்தொடர்ந்து செல்லட்டுமா? என்று கேட்டான்.
🌟 வேண்டாம் வேண்டாம் விட்டுவிடு. எதிரியை எதிர்த்து போர் புரிய முடியாமல் உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடி கொண்டிருப்பவர்களை துரத்தி சென்று அவர்களை கொன்றால் அந்த பாவம் நம்மை தான் வந்து சேரும். எனவே வேண்டாம் விட்டுவிடு என்று கூறினான் சீவகன்.
🌟 போரும் நிறைவுபெற்றது. போர்க்களத்தில் காயம் பெற்றவர்களுக்கு தேவையான சிகிச்சைகளும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு மானியம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
🌟 போட்டி நடைபெற்ற இசை மண்டபத்தில் அவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு மணமண்டபமாக மாற்றப்பட்டது. எதிராக இருந்த மன்னர்களின் கூட்டம் உயிர்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் ஓட்டம் பிடித்தது.

🌟 நகரத்தில் இருந்த அனைவரும் ஒன்றிணைந்து சீவகன் மற்றும் காந்தருவதத்தையின் மணவிழாவினை நடத்தி தந்தனர். சீவகனின் பெற்றோர்களான கந்துக்கடனும், சுநந்தையும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ஊர் முழுவதும் இவர்களின் திருமணம் பற்றிய பேசுக்களே முக்கிய பொருளாக இருந்தது.
🌟 திருமண சடங்கள் அனைத்தும் செய்து முடித்த பின்பு, அவர்களுக்கான அறையில் அவர்கள் இருவர் மட்டும் தனித்து இணைந்து இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டன.
🌟 அவர்களின் நேரம் வந்ததும் அவர்களும் அந்த அறையில் அனுப்பப்பட்டனர். காந்தருவதத்தையை மணந்த சீவகன் அவளுடைய காந்த சக்தி நிறைந்த பார்வையால் இழுக்கப்பட்டான். அவள் இடத்தில் இருக்கக்கூடிய நிலை இல்லாத புற அழகில் மயங்குவதைவிட, எப்பொழுதும் நிலையாக இருக்கக்கூடிய அவளின் அறிவு ஆற்றலில் தன்னை பறி கொடுத்தான். அவள் யாழ் ஆனாள், அதை மீட்டும் வில்லாக அவன் செயல்பட்டான்.
🌟 சீவகன் காந்தருவதத்தையை பார்த்து, உன்னுடைய தாயையும், தந்தையையும் பற்றி நான் அறிந்ததில்லை. நீயும் இதற்கு முன் யார் என்று எனக்கு தெரியாது. 'வானத்திலிருந்துபொழியும் நீர் வையகத்தில் விழும் போது செம்மண்ணோடு அது கலக்கிறது அதற்கு பிறகு அதை பிரித்து காண முடியாது. அது போல நம் நெஞ்சமும் கலந்து விட்டன" என்று பாராட்டினான். 'காதல் என்பது தொடக்கத்தில் உடல் உறவால் ஏற்படுகிறது எனினும், அது உள்ளத்தின் உணர்வால் ஒன்றுபடுகிறது" என்று கூறி சீவகனும், காந்தருவதத்தையும் இல்லற இனிமையை நுகர்ந்தனர்.
🌟 சீதத்தனும், தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட காந்தருவதத்தையின் திருமண பணியானது நன்முறையில் நிறைவேறியது என்று எண்ணி, நீண்ட நாட்கள் கழித்து தன்னுடைய துணைவியுடன் நிம்மதியாக உறக்கம் கொண்டான்.
🌟 திருமணமான சில நாட்கள் கழித்து சீதத்தனுக்கு ஓலை ஒன்று வந்தது. அந்த ஓலையின் மீது, 'இது சீவகனுக்கு உரியதாகும்" என்று எழுதி இருந்தது.
🌟 சீதத்தன் அந்த ஓலையை சீவகனிடம் கொடுத்தான். சீவகனும் அந்த ஓலையை எடுத்து படித்துப் பார்த்தான்.

🌟 அதில் அன்பும், பண்பும், வீரமும் நிறைந்த எங்களுடைய மாப்பிள்ளையான சீவகன் அவர்களுக்கு உங்களுடைய மாமனாராகிய கழலுவேகன் எழுதி கொள்ளும் மடல் ஆகும். திருமணம் நடைபெறும் சமயத்தில் அவ்விடத்தில் இல்லாதது எனக்கும், என் துணைவியாருக்கும் மிகுந்த ஏமாற்றமாக இருக்கின்றது. இருந்தாலும் அதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். ராசமாபுரத்தில் நிகழ்ந்த போட்டியில் அரச வேந்தர்கள் பலரையும் தோற்கடித்து, அவர்களின் எதிர்ப்புகளையும் வெற்றி கொண்டு என்னுடைய மகளை மனைவியாக ஏற்று கொண்டீர்கள்.
🌟 அதைவிட எனக்கு பெரு மகிழ்ச்சி என்னவென்றால்? போரில் தோல்வியுற்ற அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகளையும், அவர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் செய்ததை எண்ணி என் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.
🌟 எனக்கு மகன் இல்லாத ஒன்றை நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள். இறைவனிடத்தில் நான் இன்றும், எப்பொழுதும் வேண்டி கொள்ளக்கூடிய ஒரு விஷயம் 'நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக என் மகளுடன் இல்லற வாழ்க்கையை நடத்த வேண்டும்" என்று அந்த ஓலையில் கழலுவேகன் எழுதியிருந்தார்.
🌟 சீவகனுக்கு வந்த அதே ஓலையில் சீதத்தனுக்காகவும் கழலுவேகன் எழுதியிருந்தார். அதாவது என்னுடைய மகளை தன் மகளாக நினைத்து, தன் மகளுக்கு எவ்விதம் திருமணம் செய்ய வேண்டும் என்பதை செயல் வடிவில் சீதத்தன் காண்பித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தை பற்றி உங்கள் ஊரில் மட்டுமல்லாது, எங்களுடைய ராஜ்யத்திலும் அதை பற்றிய பேச்சுக்கள் இன்றும் ஓய்ந்தபாடில்லை.
🌟 திருமணத்திற்கு வர இயலாதவர்கள் அவர்களுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக திருமண தம்பதிகளுக்கு பரிசுகளையும், பொருட்களையும் அனுப்பி வைத்திருக்கின்றார்கள். அதையும் உங்களிடத்தில் அனுப்பி வைத்திருக்கின்றேன். சீதத்தன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் இவ்விடத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.
🌟 நீங்கள் இருவரும் நீண்ட காலம் ஒருவருக்கொருவர் துணையாகவும், இனி இருக்கக்கூடிய எதிரிகளை வெற்றி கொண்டு, வெற்றி வாகையை சூடவும் என்னுடைய ஆதரவும், ஒத்துழைப்பும் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும். வாழ்க மணமக்கள்.. பல்லாண்டு வாழ்க.. நீடூழி வாழ்க.. என்று அந்த மடலில் எழுதியிருந்த அனைத்தையும் சீவகன் படித்தான்.
🌟 பின்பு சீதத்தத்தனிடம் அவனுடைய மாமனாரான கழலுவேகன் எழுதியிருந்த தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தான் சீவகன்.
தொடரும்...!!
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP