சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


சீவக சிந்தாமணி...!!

🌟 ராசமாபுரத்தில் இளவேனிற்காலம் வந்தது. பசுமை நிறைந்த மரங்களில் உள்ள இலைகள் அனைத்தும் முழுமையாக மஞ்சள் கலந்த நிறத்தில் காணப்பட்டன. ஊரில் இருந்த ஆடவர்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக அருகில் இருந்த நீர் அருவியை நாடி சென்றனர்.


🌟 ஆர்ப்பரித்து ஓடும் நீரில் மக்கள் அனைவரும் மனதில் இருக்கக்கூடிய கவலைகளை மறந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருந்தனர். ஆண்களோ ஆற்றை கடக்கும் போட்டியில் ஈடுபட்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர்.


🌟 சுற்று வட்டாரங்களில் உள்ள மக்களை மகிழ்வுபடுத்தும் விதத்தில் நடனக்காரர்கள் இசைத்த படியும், நடனமாடிய படியும் இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியான ஒலியும், சத்தமும் நிறைந்ததாகவே இருந்தது.


🌟 அருவியில் குளித்த மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை பகிர்ந்து உண்டு கொண்டிருந்தனர். வீடுகளில் ஒரே மாதிரியான உணவுகளை உண்டு உணவின் மீது ஈடுபாடு குறைந்தவர்களுக்கு, பல்வேறு ருசிகளுடன் கூடிய பலவிதமான உணவுகளும் கிடைத்தன.


🌟 பெண்கள் அனைவரும் தங்களை சித்தரித்து கொண்டு காண்பவரை கவரும் விதமாக நின்று கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.


🌟 ராசமாபுரத்தில் வணிகக் குடியில் பிறந்த வனிதையர் குணமாலையும், சுரமஞ்சரியும் ஆவர். அவர்கள் இருவரும் இரட்டை பிள்ளைகளாக பிறக்கவில்லை. எனினும் அவர்களை காணக்கூடியவர்கள் இவர்களை இரட்டையர்கள் என்று சொல்லும் அளவில் இணைந்தே எந்தவொரு செயலானாலும், காரியமானாலும் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் பெருங்குடி வணிகரின் மகள்கள் ஆவர்.


🌟 இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் உரையாடும் பொழுது எதிரில் இருக்கக்கூடியவர்கள் தோற்கும் வகையில் முரண் பட்டு பேசக்கூடியவர்கள். எதிலும் பந்தயம் வைத்து துரிதமாக பேசும் வல்லமை கொண்டவர்கள்.


🌟 எழில் மிகுந்த இந்த இளம் கன்னிகைகளை முத்துப்பல்லக்கில் பிறர் சுமந்து சென்றனர். மற்றவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பாடிக்கொண்டு மாட்டுவண்டிகளிலும், குதிரை பூட்டிய தேர்களிலும் சென்று அருவி இருக்கும் இடத்தை அடைந்தனர்.


🌟 இளம் காளை பருவத்து இளைஞர்கள் தம் தோழர்களுடன் எழில் நிறைந்த இயற்கை காட்சியோடு மனதை கொள்ளை அடித்து செல்லக்கூடிய இனிய மகளிரை எந்தவிதமான தடைகளும், எதிர்ப்புகளும் இல்லாமல் கண்டு மகிழும் வகையில் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாகவே இந்த இளவேனிற்காலத்தை கருதினார்கள்.


🌟 சீனியை சுற்றி எறும்பு திரிவது போல இளம் பசுக்களுக்கு அருகில் நல்லடக்கத்துடன் காளைகளும் சுற்றி கொண்டிருந்தன.


🌟 அருவியில் அமைந்துள்ள சோலையில் உடை மாற்றுவதற்கு என்று மறைப்புகள் ஏற்படுத்தும் விதமாக சிலர் திரைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்.


🌟 எப்பொழுது தான் இதை செய்து முடிப்பீர்கள்? இன்னும் எவ்வளவு நேரம் தான் இதை அமைக்க எடுத்து கொள்வீர்கள்? என்று சுரமஞ்சரி வினவி கொண்டிருந்தாள்.


🌟 அட! என்ன அவசரம்? நிதானமாக அருவியில் குளிக்க போகலாம் என்று குணமாலை கூறிக்கொண்டே சுத்தம் நிறைந்த இடத்தில் அவள் அமர்ந்து கொண்டாள். பின்பு குணமாலை தான் கொண்டுவந்திருந்த சுண்ணத்தை எடுத்துக் காட்டி அதன் பொன் வண்ணத்தை சிறப்பித்து பேசினாள். இது என்னுடைய கைப்பட தயாரித்த சுண்ணம் என்று அதன் வண்ணத்தை பாராட்டி மிகவும் உயர்வாக பேசிக்கொண்டு இருந்தாள்.


🌟 குணமாலை கூறியதை கேட்டுக்கொண்டு இருந்த சுரமஞ்சரி நானும் தான் சுண்ணம் கொண்டு வந்துள்ளேன் என்று கூறினாள். அதுவும் நல்ல நிலையில் உள்ளது. உமக்கு வேண்டும் என்றால் நீயும் எடுத்து கொள் என்று கூறினாள்.


🌟 சுரமஞ்சரி சொல்லியதை கேட்ட குணமாலையோ, வேண்டாம் சுரமஞ்சரி நான் தயாரித்த சுண்ணம் மிகவும் அற்புதமானது. சில முக்கியமான பொருட்களை கொண்டு செய்திருக்கின்றேன் என்று கூறினாள்.


🌟 ஓ.. அவ்வளவு அற்புதம் நிறைந்ததா உமது பொடி? என்னிடத்தில் இருக்கும் பொடியை விட உன்னிடத்தில் இருக்கும் பொடி அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா? வாய்ப்புகளே இல்லை. நான் வைத்திருக்கும் பொடிக்கு உன்னுடைய பொடி ஈடாகவே முடியாது? என சுரமஞ்சரி கூறினாள்.


🌟 அதற்கு குணமாலையோ, இல்லை... சுரமஞ்சரி நீ வைத்திருக்கும் பொடியை விட நான் தயாரித்திருக்கும் பொடி மிகவும் அற்புதமானது. ஒரு வேலை தேவர்கள் தயாரித்திருந்து அவர்கள் என்னிடத்தில் போட்டிக்கு வந்தாலும் அவர்களை விட என்னுடையதே சிறந்தது என்று தேவர்களே கூறுவார்கள். தேவர்களே என்னிடத்தில் போட்டிக்கு வர மாட்டார்கள் என்று இயல்பாக கூறினாள்.


🌟 அப்படியானால் என்னிடத்தில் போட்டிக்கு வருகிறாயா? யாருடைய பொடி உயர்ந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்? என்று கூறினாள் சுரமஞ்சரி. போட்டி எல்லாம் நமக்குள் எதற்கு? என்றாள் குணமாலை.


🌟 இதை பேசுவதற்கு முன்பாகவே நீ சிந்தித்திருக்க வேண்டும். இப்பொழுது போட்டியெல்லாம் வேண்டாம் என்றால் உன்னுடைய பொடியானது என்னிடத்தில் இருக்கும் பொடியை விட குறைவான சிறப்பு உடையது தான் என்பதை ஒத்துக் கொள்கிறாயா? என்று கன்னம் சிவக்க பேசினாள் சுரமஞ்சரி.


🌟 இவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பது பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்பதை புரிந்து கொண்ட அவர்களுடைய மற்ற தோழியர்கள் இந்த போட்டியை தவிர்க்க உரையாடினார்கள். இருப்பினும் எவ்விதமான பயனும் அவர்களிடத்தில் ஏற்படவில்லை.


🌟 முடியவே முடியாது உன்னுடைய ஆணவத்தை இதிலேயே நான் அடக்கி விடுகிறேன் என்று கூறி, 'யார் போட்டியில் தோற்கின்றார்களோ அவர்கள் இந்த அருவியில் குளிக்கவே கூடாது என்றும், இவ்வூரில் உள்ள அருகனுகன் கோவிலுக்கு கோடி தங்க நாணயங்களை கொடுக்க வேண்டும் என்றும்" சுரமஞ்சரி கூறினாள்.


🌟 குணமாலைக்கு சுரமஞ்சரியின் கோபம் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறத்தில் சிரிப்பாகவும் இருந்தது. ஆமாம் இந்த இரண்டு பொடிகளில் யார் சிறந்த பொடியை தயாரித்து இருப்பார்கள்? என கூறப்போகின்ற இந்த போட்டிக்கான நடுவர்கள் யார்? என்றாள்.


🌟 சிறிது சிந்தித்தவள் இரண்டையும் தனித்தனி தட்டுகளில் எடுத்து செல்லுங்கள். நகர மக்களிடத்தில் இதை கொடுத்து கேளுங்கள். அவர்களுடைய முடிவே இறுதி தீர்ப்பாகும் என்றாள் சுரமஞ்சரி.


🌟 சுரமஞ்சரி கூறியதை கேட்ட இரண்டு சேடியர்கள் தனித்தனி தட்டுகளில் பொடிகளை எடுத்துக்கொண்டு மக்களிடத்தில் சென்று, இந்த பொடிகளின் தன்மைகளை யாரிடம் சென்று கேட்பது? என இருவரும் எண்ணி கொண்டிருந்தனர்.


🌟 அவர்கள் எதிரில் இளம் காளையர்கள் சிலர் வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்களிடத்தில் தங்கள் தட்டுகளை இருவரும் நீட்டினார்கள்.


🌟 காளையர்களோ எதையும் சொல்லாமல் அந்த பெண்களையே பார்த்த வண்ணமாக நின்று கொண்டிருந்தனர். தட்டை கொஞ்சம் பாருங்கள் என்று அப்பெண்கள் கூறினார்கள்.


🌟 அதற்கு அந்த காளையர்களோ, இல்லை இல்லை நாங்கள் உங்களை தான் பார்த்து கொண்டிருந்தோம் என்று அவர்களுக்குள் கூறிக்கொண்டு சிரித்து கொண்டிருந்தனர்.


🌟 இதை கண்டதும் சேடி பெண்கள் கோபத்துடன், எம்முடைய தலைவியர்கள் இருவரும் பெரிய வீட்டு பெண்கள். அவர்களுக்குள் சுண்ணம் செய்வதில் யார் சிறந்தவர்? என்று ஒரு சிறு விவாதம் ஏற்பட்டு விட்டது.


🌟 அதாவது அவரவர்கள் தங்களது கைகளால் இடித்து பூசிக்கொள்ளும் சுண்ணம் இது. இதில் எது சிறந்தது? என்று நீங்கள் கூற வேண்டும் என்றனர்.


🌟 நீங்கள் கூறுவதை பார்த்தால் பெரிய இடத்து விஷயம் போல தெரிகின்றது. அப்படி இருக்கும் பொழுது இதில் ஒருவருடைய சுண்ணம் மட்டும் நன்றாக இருக்கின்றது என்று கூறினால், மற்றொருவர் எங்களிடத்தில் கோபித்து கொள்வார். எங்களுக்கு எதற்கு இந்த வீண் விளையாட்டு என்று கூறி விட்டனர்.


🌟 நீங்கள் எல்லாம் எதற்கும் சரியான முடிவுகளையே எடுக்க மாட்டீர்களா? என்று கூறினார்கள் சேடி பெண்கள்.


🌟 நாங்கள் கூற வந்தது இதுவல்ல. எங்களாலும் எது சிறந்தது என்று கூற முடியும். என்ன பெரிய இடத்து பெண்கள் விஷயமாக இருக்கின்றது என்பதால் தான் வேண்டாம் என்று உங்களிடத்தில் கூறினோம். எங்களால் முடியாதது எதுவுமில்லை, எங்களாலும் கூற முடியும். தட்டை கொடுங்கள் பார்க்கின்றோம் என்று கூறினர்.


🌟 சேடி பெண்களும் அவர்களிடத்தில் தட்டை கொடுத்தனர். தட்டில் இருக்கும் சுண்ணத்தை எடுத்து பார்த்தவர்கள் இரண்டு சுண்ணமும் நன்றாக தானே இருக்கின்றது. இதில் எது சிறந்தது? என்று எப்படி கூறுவது என்பதுதான் வியப்பாக இருக்கிறது என்று கூறினார்கள்.


🌟 இந்த பதிலை கேட்கவா நாங்கள் உங்களிடம் சுண்ணத்தை கொடுத்தோம். எங்கள் முன் நிற்காதீர்கள், இவ்விவிடத்தை விட்டு செல்லுங்கள் என்று சேடி பெண்கள் கூறினார்கள்.


🌟 சேடி பெண்கள் கூறியதை கேட்ட இளம் காளையர்கள், 'ஆமாம் நாங்கள் இன்னொன்று சொல்லவா?" என்றனர்.


🌟 என்ன சொல்ல போகின்றீர்கள்? இதையே உங்களால் பார்த்து முடிவெடுக்க முடியவில்லை? நீங்கள் எல்லாம் என்று சேடி பெண்கள் கூறும் பொழுதே..


🌟 அட பொறுங்கள்... பெண்களுக்கு நிதானம் என்பது மிகவும் அவசியம். இது கூட உங்களுக்கு தெரியவில்லை. சுண்ணம் எப்படி இருந்தால் என்ன? அதை பூசிக்கொள்பவர் அழகாக இருந்தால், எப்படிப்பட்ட சுண்ணமாக இருந்தாலும் அதுவும் அழகாக தானே தெரியும்.. என்றனர் காளையர்கள் சிலர். 


🌟 ஆமாம்.. ஆமாம்.. இது பெரிய கண்டுபிடிப்பு. இதற்கு நீங்கள் வேறு எங்கேயாவது சென்று பாடல் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்று கூறி விட்டு, யாரை கேட்டால் சரியான தீர்ப்பு கிடைக்குமோ? என்று குழம்பிய வண்ணமாக பெண்கள் நிற்க...


🌟 சரியான கேள்வியை தான் எங்களிடம் கேட்டிருக்கின்றீர்கள். இதற்கான விடையை நான் கூற முடியும் என்றான் காளையர்களில் ஒருவன்.


🌟 யார் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வினை கொடுக்க முடியும்? என்றனர் சேடி பெண்கள்.


🌟 அட இந்த நகரமே தெரிந்த ஒருவனை பற்றி உங்களுக்கு தெரியவில்லையே என்பதுதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. அவன் பெயர் சீவகன்.


🌟 அவன்தான் காந்தருவதத்தையோடு வீணை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்டவன். ஒப்பனை செய்வதில் அவன் சால சிறந்தவன். பல நிற சுண்ணங்களை பயன்படுத்தியவன். அவனிடத்தில் கேட்டால் இதற்கு தெளிவான தீர்வும், பதிலும் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்கள்.


🌟 சீவகனிடமா! அவர் இப்போது எங்கே இருப்பார்? என்றனர் சேடி பெண்கள். இன்னும் சற்று தூரம் தள்ளி சென்றால் அவனின் தந்தை கந்துக்கடனின் வீட்டில் இருப்பான். இங்கிருந்து மூன்றாம் வீடு என்று கூறி விட்டு காளையர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு சென்றனர்.


🌟 வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு நண்பர்களிடம் போர்களை பற்றியும், போரில் அடைந்த வெற்றிகளை பற்றியும் கூறிக்கொண்டு இல்லற வாழ்க்கையில் நிகழும் போர்களை பற்றியும் பேசிக் கொண்டிருந்தான் சீவகன்.


🌟 சீவகன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது சேடி பெண்களில் ஒருத்தி லேசாக சப்தத்தை ஏற்படுத்தினாள். அவள் எழுப்பிய அந்த சப்தத்திற்கு பின்னரே தங்களை காண யாரோ வந்திருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள் அங்கிருந்தவர்கள்.


🌟 இந்த இரண்டு மங்கைகளும் வேலை எந்திய வீரனை பார்க்க வந்திருப்பது ஏன்? என்பது போல அங்கு இருந்தவர்கள் பார்த்து கொண்டிருந்தனர்.


🌟 சீவகனோ தன்னை காண வந்த சேடி பெண்களை பார்த்து அவர்களிடம், யாரம்மா நீங்கள்? எதற்காக இங்கு வந்திருக்கின்றீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கம்பீரத்தோடு கேட்டான். பாடல் பாடுகின்ற பொழுது அவன் குரலில் இருந்த இனிமை அவன் பேசும் பொழுது சிறிதும் புலப்படவில்லை. மாறாக ஒரு வீரனுக்கு உண்டான குரல் வலிமையுடன் அவன் செயல்பட்டான்.


🌟 ஐயனே! நாங்கள் சுரமஞ்சரி மற்றும் குணமாலை ஆகியோரின் சேடி பெண்கள். எங்களின் தலைவிகள் இருவருக்கும் ஒரு சிறு போட்டி. அதாவது அவரவர்கள் தயாரித்த சுண்ணத்தில், யார் தயாரித்த சுண்ணம் சிறந்தது? என்பதே போட்டி ஆகும். இங்கே இருக்கும் இரண்டு பொடிகளில் எது சிறந்தது? என்று தாங்கள் கூற வேண்டும் என்று கூறினார்கள்.


🌟 இதுதான் உங்கள் பிரச்சனையா? நான் வேறு ஏதாவது இருக்குமோ என்று எண்ணினேன். சரி நீங்கள் கொண்டு வந்து இருக்கக்கூடிய சுண்ணத்தை கொடுங்கள் என்றான்.


🌟 இருவரும் தாங்கள் கொண்டு வந்த சுண்ணம் நிறைந்த தட்டினை அவனிடத்தில் நீட்டினார்கள். சீவகனும் அந்த தட்டில் இருந்து ஒரு சிட்டிகை அளவு சுண்ணத்தை எடுத்து முகர்ந்து பார்த்தான்.


🌟 இரண்டு சுண்ணப் பொடிகளும் நன்றாக தானே இருக்கின்றது. இதில் என்ன உங்களுக்கு பிரச்சனை? என்றான்.


🌟 இதை கேட்ட சேடி பெண்கள் தூரத்தில் தெரிந்த இளம் காளையர்கள் கூட்டத்தை காண்பித்து, அங்கிருந்தவர்கள் நீங்கள் பொடியை பார்த்ததும் எது உயர்ந்தது? என்று கண்டுபிடித்து விடுவீர்கள் என்று அவ்வளவு உயர்வாக கூறினார்கள். நீங்கள் என்னமோ அவர்கள் கூறிய அதே பதிலை தான் கூறுகின்றீர்கள். யாரிடம் தான் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமோ? உங்களிடம் கேட்டால் விடை கிடைத்துவிடும் என்று எண்ணி வந்தோம். கடைசியில் நீங்களும் அதே பதிலை தான் கூறுகின்றீர்கள். இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லையே? என சேடி பெண்கள் கூறினார்கள்.


🌟 புன்னகைத்த வண்ணமாகவே சீவகன் அவர்களிடம், கோடையில் இடித்த சுண்ணம் வாடை மிகுந்து வீசும். மாரியில் இடித்த சுண்ணம் மங்கிப்போகும் என்று கூறினான். 


🌟 அதை எப்படி நாங்கள் அறிந்து கொள்ள முடியும்? என்றனர் சேடி பெண்கள். இதை கண்டுபிடிப்பது மிக மிக எளிது. அதாவது இதை கண்டுபிடிக்கும் வல்லமை கொண்டவர்கள் பூக்களின் ரசிகர்கள் தான். 


🌟 இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? அவர்களை தேடி நாங்கள் எங்கே செல்ல வேண்டும்? என்று சேடி பெண்கள் கேட்டனர். அதற்கு சீவகனோ, எங்கும் செல்ல வேண்டாம். இங்கே தான் இருக்கின்றார்கள். உங்கள் தலையின் மீதுதான் இருக்கின்றார்கள் என்று கூறினான்.


🌟 சீவகன் கூறியதை கேட்ட சேடி பெண்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. பின் சேடி பெண்கள், சற்று தெளிவாக கூறுங்கள். எங்களுக்கு எதுவும் புரியவில்லை என்று கூறினார்கள். 


🌟 அதற்கு சீவகனோ, உங்கள் தலையில் என்ன சூடி இருக்கின்றீர்கள்? என்றான். 


🌟 தலையில் என்ன சூட முடியும்? பூக்களைத்தான் சூடி இருக்கின்றோம். வேறு என்ன எங்கள் தலையில் இருக்கின்றது? என்று சேடி பெண்கள் கேட்டனர். 


🌟 உங்கள் தலையில் வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அந்த தலையை சுற்றி திரிவது யார்?


🌟 கோபம் நிறைந்த பார்வைகளுடன் எங்கள் தலையை யாரும் சுற்றுவதில்லை. சில வண்டுகள் தான் சுற்றி கொண்டிருக்கின்றன. இல்லையென்றால் சில மண்டுகளிடம் சிக்கி கொள்கிறோம் என்றனர் சேடி பெண்கள்.


🌟 நான் மண்டுகளை பற்றி கூறவில்லை. வண்டுகளை பற்றி தான் கூறுகின்றேன் என்றான் சீவகன்.


🌟 வண்டுகள் எப்படி இதற்கு தீர்ப்பு சொல்லும்? என சேடி பெண்கள் கேட்க, சீவகனோ 'உங்களுக்கு சொன்னால் புரியாது. செய்தால் தான் புரியும். உங்களிடம் இருக்கும் தட்டுகளை கொடுங்கள்" என்று தட்டுகளை வாங்கி சுண்ணப் பொடியை எடுத்து மேலே தூவினான்.


🌟 குணமாலை தயாரித்த துகள்கள் ஈரம் இல்லாதால் காற்றில் மேலே பறந்தது. சுரமஞ்சரி தயாரித்த துகள்களோ ஈர சுமையின் காரணமாக தரையில் இறங்கியது. இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் வியந்து நின்றனர்.


🌟 சேடி பெண்களை பார்த்த சீவகன், 'குணமாலையின் பொடிகள் உலர்ந்திருப்பதாலும், அதன் சுவையும், மணமும் நன்றாக இருப்பதினாலும் வானத்திலேயே வண்டுகள் பிடித்து தின்று விட்டன. ஈரம் கொண்ட காரணத்தினால் என்னவோ சுரமஞ்சரியின் சுண்ணம் அவைகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவைகளை வண்டுகள் புசிக்கவில்லை."


🌟 எனவே குணமாலையின் சுண்ணம் தான் சிறந்தது. இப்பொழுது உங்களுடைய சந்தேகம் தீர்ந்ததா? என்று சீவகன் வினவினான். 


🌟 வண்டுகளுக்கு மணத்தை கண்டு சொல்லும் திறமை இருக்கின்றது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? என்று சேடி பெண்களில் ஒருத்தி வினவினாள்.


🌟 சேடி பெண்கள் கேட்ட கேள்விக்கு, சீவகனோ அது மிக மிக எளிது.. திருவிளையாடல் புராணம் படித்திருந்தால் உங்களுக்கு அதனுடைய பதில் தெரியும். அதாவது நக்கீரருக்கும், சிவபெருமானுக்கும் நடக்கும் வாதம் தன்னுடைய காதலியின் கூந்தலுக்கு மணம் இருப்பது இயற்கையாகவா அல்லது செயற்கையாகவா? என்பதே அவர்களுக்குள் ஏற்பட்டு இருக்கக்கூடிய ஒரு கருத்து விவாதமாகும். அந்த விவாதத்திற்கு உண்டான பாடலை இதோ கூறுகிறேன்.


'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற்

செறிஎயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே"

🌟 வாசனை நிறைந்த பல பூக்களை சுற்றி கொண்டிருக்கும் வண்டுகளே, என்னுடைய தலைவியின் கூந்தலில் இருந்து வெளிப்படும் மணத்தை விட அதிக மணம் கொண்ட பூக்களை நீங்கள் கண்டதுண்டோ? என்று வினவுகிறான் என்பதே அந்த பாடலுக்கு உரிய கருத்தாகும்.


🌟 இந்த பாடல் தான் உங்களுடைய கேள்விக்கு உண்டான பதிலை கூறுவதற்கு எனக்கு உதவியாக இருந்தது என சீவகன் கூறினான்.


🌟 பரவாயில்லை கற்ற கல்வி தகுந்த சமயத்தில் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றது என்று உரைத்து சேடி பெண்கள் சீவகனை பாராட்டினர். பின், காலம் மிகவும் தாழ்ந்து விட்டது எங்கள் வருகைக்காக எங்கள் தலைவிகள் காத்துக்கொண்டு இருப்பார்கள். இந்த போட்டியின் முடிவினை நாங்கள் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி அவரிடத்தில் இருந்து விடைபெற்று அவர்களின் தலைவிகள் இருக்கும் இடத்தை அடைந்தனர்.


🌟 குணமாலை அரைத்த சுண்ணம் தான் சிறந்தது என்றும், இருவரில் குணமாலையே வெற்றி பெற்றாள் என்றும் சேடி பெண்கள் இறுதி முடிவினை கூறினார்கள்.


🌟 சேடி பெண்களின் முடிவினை கேட்டதும் சுரமஞ்சரிக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது. யார் இந்த முடிவினை கூறினார்கள்? எவ்விதம் கூறினார்கள்? நான் அரைத்த சுண்ணத்தை விட குணமாலை அரைத்த சுண்ணம் உயர்ந்தது என்று கூறியவன் யார்? என்று சேடி பெண்களை பார்த்து சுரமஞ்சரி வினவினாள்.


🌟 யாழிசை போட்டியில் வெற்றி பெற்று காந்தருவதத்தையை திருமணம் செய்து கொண்ட சீவகன் தான் இந்த முடிவினை கூறினார் என்று சேடி பெண்கள் கூறினார்கள்.


🌟 ஓ... சீவகனா... அவன் என்னைவிட உன்னைத்தான் மிகவும் ரசிக்கின்றான் போல் இருக்கிறது. நம்மிருவருக்கும் நடைபெற்ற இந்த போட்டியை ஒரு காரணமாக கொண்டு அவனிடத்தில் நல்ல மதிப்பையும், பாராட்டையும் பெற்றுவிட்டாய் போல் இருக்கிறது. நீ சரியான கெட்டிக்காரி தான்.


🌟 போட்டியில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், அவனுடைய மனதையும் வென்று விட்டாய். உன்னுடைய பெயரை கேட்டதும் அவன் முடிவு செய்து இருப்பான் பெயருக்கு ஏற்றார் போல் குணம் கொண்டவளாக இருப்பாள் என அவன் எண்ணியிருப்பான் என்று குற்றம் சாற்றினாள்.


🌟 குணமாலை போட்டியில் வெற்றி பெற்றதை பொறுக்க முடியாக சுரமஞ்சரி, 'சுரமஞ்சரி என பெயர் வைத்து எனக்கு என் பெற்றோர்கள் தவறு இழைத்து விட்டார்கள். மாலைக்கு ஒரு காலம் என்றால், மஞ்சரிக்கும் ஒரு காலம் வரும். கண்டிப்பாக அவனை அடைந்தே தீருவேன். இப்பொழுது நான் கன்னி மாடம் சேர்வேன் என்றாள். ஆண்மகன் என்றால் அவன் தான் ஆண்மகன். என் மனம் கவர்ந்த நாயகன். அவனை விடுத்து இனி யாரையும் நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்" என்று கூறினாள். 


🌟 பார்ப்பதற்கு இனியவனாக இருக்கின்றான் என்று நீயே கூறுகின்றாய். அதனால் அவனை காதலிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. இது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு தான். இதற்கு ஏன் உன்னுடைய மனதை புண்ணாகும்படி நீயே பேசிக்கொண்டு இருக்கின்றாய். அதனால் உனக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்றாள் குணமாலை.


🌟 ஆமாம்... ஆமாம்... எனக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ஆனால் உனக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். அவனுக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டது போல. பிடித்ததும் பிடித்தாய் நல்ல புளியங் கொம்பாகவே பிடித்துக் கொண்டாய். இனிமேல் என்ன உனக்கு? மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை தானே என்று சுரமஞ்சரி கூறும் பொழுதே..


🌟 போதும் சுரமஞ்சரி.. போதும்.. இப்பொழுது வரை எனக்கு அவன் மீது எந்த நாட்டமும் இல்லை. நீ சொல்லி தான் எனக்கு தெரிகின்றது அவன் என்னை காதலிக்க கூடும் என்று. என்னிடம் பார்த்து மகிழ என்ன இருக்கின்றது? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நீ ஏதேதோ சொல்கின்றாய். இனி அதையும் காட்டிவிட்டால் போகிறது என்று கூறினாள் குணமாலை.


🌟 அதற்கு சுரமஞ்சரியோ, இப்பொழுது வருகிறது பார் உன் மனதில் இருக்கும் உண்மை. நீ வேண்டாம் என்று விலகி சென்றாலும் உன்னிடத்தில் தன்னுடைய காதலை உரைத்து, உன்னை திருமணம் செய்து கொள்ளாமல் அவன் இருக்க போவதில்லை என்றும், ஒரு பார்வையிலேயே அவன் உன்னை கட்டிப்போட்டு விடுவான். ஒரு சிறிய பூ போதும் உனது மனதை கவருவதற்கு. இப்பொழுது அந்த பூவும் உனக்கு தேவையில்லை. நீ தான் அவனை பொடி போட்டு மயக்கி விட்டாயே என்றும்,


🌟 சுண்ணம் என்று எங்களிடத்தில் மட்டும்தான் கூறினாய். ஆனால் உண்மையில் அது அவனை மயக்கும் சொக்குப்படியாக செயல்படும் விதத்தில் தயாரித்து இருக்கின்றாய். என்னை ஒரு கருவியாக கொண்டு நீ அவனிடத்தில் உன் காதலை தூது அனுப்பியிருக்கின்றாய். உங்களுடைய பேச்சுவார்த்தை இன்னும் தொடரட்டும். அவன் திருமணம் செய்ய போகின்ற இரண்டாவது பெண்ணாக நீ கூட இருக்கலாம் என்று சுரமஞ்சரி கூற..


🌟 போதும்.. சுரமஞ்சரி போதும்..! இனியும் இல்லாத காதலை உன்னுடைய பேச்சுக்களாலே என்னிடத்தில் உருவாக்கி விடாதே. இல்லை என்றால் கிடைக்கும் சிறு வாய்ப்பாக இருந்தாலும் உனக்காகவே அவனை காதலிப்பேன் என்று குணமாலை கூறினாள்.


🌟 குணமாலை கூறியதை கேட்ட சுரமஞ்சரியோ, எனக்காக நீ காதலிக்கிறாயா? இன்னும் எங்களிடத்தில் நீ உன்னை மறைத்து கொண்டுதான் இருக்கின்றாயா? அவன் மீது உனக்கு ஆசை இருக்கின்றது என்பது எனக்கு தெரியும். ஏழு நாட்கள் யாழிசை போட்டி நடந்தது. ஆனால் ஏழாம் நாள் மட்டும் நீ அங்கு வந்தாய். அவன் வந்ததும் ஏழாவது நாளே. அவன் பாடியதும் ஏழாவது நாளே.


🌟 காந்தருவதத்தை பாடிய பொழுது உன்னுடைய கை கால்களில் எந்தவித இயக்கமும் இல்லாமல் அமைதியாக தான் இருந்தாய். ஆனால் அவன் பாடும் பொழுது மட்டும் உன் கைகள் தாளம் தட்டியது. உன் உடலும் அசைந்தது. அந்த போட்டியில் சீவகன் வென்று, காந்தருவதத்தை அவன் மீது மாலை அணிவித்த பொழுது நீயோ எதையோ இழந்தது போல மிகுந்த மௌனத்தோடு இருந்தாயே! ஏன் உன்னுடைய இலக்கு தவறிவிட்டது என்றா? என்று சுரமஞ்சரி கூறினாள்.


🌟 சுரமஞ்சரி யாழிசை போட்டி அன்று குணமாலையின் செயலை பற்றி கூறி கொண்டிருக்க, குணமாலையின் உள்ளத்தில் அந்த வசைகள் அனைத்தும் சீவகனின் மீது காதலை உருவாக்க வைத்தது. நிச்சயம் தனக்கொரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவளும் என்ன துவங்கினாள். தனக்கு சீவகன் கிடைப்பான் என எண்ணி பார்க்காத குணமாலை, மனதில் இருக்கும் ஆசைகளை வெளிக்காட்டாமல் கோபத்தோடு இருந்தாள். ஆனால் மனதில் தன்னிடத்தில் இப்படி ஒரு ஆசையை உருவாக்கிய சுரமஞ்சரியை மனதார வாழ்த்தினாள்.


🌟 சுரமஞ்சரியோ, காதலில் தோல்வியுற்றவர் சரண் அடையும் சரணாலயம் ஆகிய கன்னிமாடத்தில் தனிமையில் இருக்க விரும்பினாள். தன் தந்தையிடம் சொல்லி தனக்கென்று ஏன் ஒரு கன்னிமாடம் கட்டி தர சொல்லக்கூடாது என்று துணிந்தாள். அவனை நெஞ்சில் வைத்து வழிபட அது ஒரு ஆலயமாக அமையும் என்று கருதினாள். அதுமட்டுமின்றி தன்னைப் போல் அடிபட்டு முடம்பட்டுப் போன இளஞ்சிட்டுகள் வந்து தங்குவதற்கு அது ஒரு கூடாக அமையுமே என்றும் நினைத்தாள்.


🌟 நீராடி வர ஒற்றுமையாக சென்றவர்கள் தனியாக திரும்பி வருகின்றாள். இருவரில் ஒருத்தி மட்டும் வருவதை கண்ட அவளுடைய தாய் மற்றொருத்தி எங்கே? என்று வினவினாள்.


🌟 தாயின் கேள்விக்கு சுரமஞ்சரி 'நேற்றுவரை இருந்த உறவு இன்றுவரை நீடிக்கவில்லை" என்றாள். என்ன சொல்கிறாய்? என்ன நடந்தது இருவருக்கும் இடையில்? என்றாள் அவளின் தாய்.


🌟 'சுண்ணத்தின் காரணமாக இருவருக்கும் இடையே எண்ணம் வேறுபட்டன" என்று சுரமஞ்சரியின் சேடி பெண்கள் விளக்கினர்.


🌟 'அவளுக்கு முகமூடி ஏன்" என்று சுரமஞ்சரியின் தாய் கேட்க, 'மற்றவர்கள் யாரும் தன் முகத்தை பார்க்கக்கூடாது! தான் மட்டும் இரண்டு துளைகள் கண்ணுக்கு வைத்துக்கொண்டு மற்றவர்களை பார்க்க போகிறாளாம்" என்று சேடி பெண்கள் கூறினார்கள்.


🌟 'கன்னிமாடம் ஒன்று தனக்காக கட்டி தரவேண்டும். அன்னியர்கள் யாரும் அங்கே வரக்கூடாது" என்று சுரமஞ்சரி கூறினாள்.


🌟 'கட்டி கொடுக்க வேண்டியவள் நீ அங்கே ஒட்டி கொண்டிருந்தால் எப்படி?" என அவளின் தாய் கேட்க, 'என்னை கொஞ்சம் அழவிடு. அழுவதற்கு ஒரு இடம் வேண்டும். அதற்குத்தான் நான் தனி இடம் கேட்கிறேன்" என்றாள்.


🌟 'சிரிப்பதற்கு இடம் கிடைக்கும் வரை சீராக சுரமஞ்சரி அங்கேயே இருக்கட்டும்" என்று அவள் மனப்போக்கின் படி அவள் தாய் விட்டு விட்டாள்.


🌟 அதுமட்டும் அல்லாமல் அந்த தெருவழியே ஆடவர்கள் யாரும் வரக்கூடாது என்றும், இதை அரசரிடம் சொல்லி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சுரமஞ்சரி கூறினாள்.


🌟 சுரமஞ்சரியின் தந்தையும் அவள் சொல்லிற்கு இணங்க, கட்டி தங்கத்தை கொண்டு போய் கட்டியங்காரனுக்கு கொடுத்து அவ்வாறே அனுமதி வாங்கினார்.


🌟 ஆண்கள் யாரும் இந்த தெருவின் பக்கம் வரக்கூடாது என்று ஒரு பலகையும் மாட்டி வைக்கப்பட்டது. அது மிகப்பழைய கட்டிடம். அங்கே இரண்டு சிற்பங்கள் இருந்தன. ஒன்று கிழக்கு பார்த்தவாறும், மற்றொன்று மேற்கு பார்த்தவாறும் இருந்தன. இது ஆண், இது பெண் என்று அவளின் தோழி வேறுபடுத்தி காட்டினாள்.


🌟 சிற்பங்களில் கூட ஆண் சிற்பம் இருக்கக்கூடாது. இவற்றை அகற்றி விட்டு ஒரு பெண் சிலையை இங்கே வை என்றாள். முடியாது என்றால் இந்த சிலையை பெண் சிலையாக மாற்றி விடு என்றாள் சுரமஞ்சரி. 


🌟 அகன்று இருந்த குபேரதத்தன் தெருவில் ஒருவர் மட்டும் செல்லும் வகையில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தெருவின் வாயில் இந்த மாதிரி மாற்றப்பட்டு இருப்பதை கண்டதும் குணமாலை ஆச்சரியமடைந்தாள். அவள் அவ்வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் சுரமஞ்சரியின் சேடி பெண் வந்து கொண்டிருந்ததை கண்டாள்.


🌟 அவளிடம் சென்று, இங்கு என்ன ஆயிற்று? ஏன் தெருவை அடைத்து வைத்திருக்கின்றார்கள்? இந்த தெருவில் இருப்பவர்களுக்கு யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையா? அல்லது ஏதேனும் நிகழ்ந்து விட்டதா? என்றாள் குணமாலை.


🌟 இந்த தெருவில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இதற்கெல்லாம் காரணம் உங்களுடைய தோழியான சுரமஞ்சரி தான். அவளுக்கு என்ன? அவள் நன்றாக தானே இருக்கின்றாள்? உடல்நிலை ஏதாவது சரியில்லையா? என்று பதற்றம் அடைந்தாள் குணமாலை. 


🌟 நீங்கள் பதற்றம் அடைகின்ற அளவுக்கு அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. அன்று நடந்த உங்களுடைய சிறு விளையாட்டுத்தனமான போட்டியில் சீவகன் ஒரு தீர்ப்பை சொன்னார் அல்லவா? அதில் இருந்துதான் இந்த பிரச்சனையே ஆரம்பம்.


🌟 அந்த பிரச்சனை தான் அன்றே முடிந்து விட்டதே! திரும்ப அதனால் என்ன நிகழ்ந்தது? என்று எனக்கு தெளிவாக கூறு என்றாள் குணமாலை.


🌟 நான் என்ன சொல்வது? நீங்களே இங்கு நிகழ்வதை வந்து பாருங்கள் என்று கூறி அவளை அழைத்து சென்றாள். வாயில் கதவை கடக்கும் பொழுது தான் பார்த்தாள். அந்த வாயிலை பாதுகாக்கக்கூடிய காவலர்கள் கூட ஆண்கள் இல்லாமல் பெண்களாகவே நியமிக்கப்பட்டு இருந்தனர்.


🌟 சுரமஞ்சரி தங்கி இருந்த வீட்டிற்கு சென்றதும் அவளுக்கு அந்த இடமே புதிதாக காணப்பட்டது. அனைத்தும் புதிதாகவே இருந்தன. இதற்கு முன்பு ஒருமுறை இவ்விடத்திற்கு வந்த பொழுது, நுழைவாயிலில் ஒரு ஆணின் சிலையும், ஒரு பெண்ணின் சிலையும் இருந்தது. ஆனால் இப்பொழுது இரு சிலைகளும் பெண் சிலைகளாகவே இருக்கின்றது. இது என்ன புது சிலைகளை வாங்கி வைத்திருக்கின்றீர்களா? என்று குணமாலை வினவினாள்.


🌟 புதிய சிலைகள் எதுவும் வாங்கவில்லை. அதை நன்றாக பாருங்கள் ஆண் சிலையே இப்பொழுது பெண் சிலையாக மாற்றப்பட்டு இருக்கின்றது என்று கூறினாள்.


🌟 இன்னும் எதிலெல்லாம் மாற்றங்களை செய்து வைத்திருக்கின்றீர்களோ? என்று கூறிய வண்ணம் சுரமஞ்சரி இருக்கும் இடத்திற்கு குணமாலை சென்றாள்.


🌟 குணமாலை சுரமஞ்சரியை பார்க்க வந்த பொழுது, அவ்வளவு பெரிய வீட்டில் சுரமஞ்சரி மட்டும் தன்னந்தனியாக எதையோ சிந்தித்த வண்ணமாக, வாழ்க்கையில் இழக்கக்கூடாததை இழந்துவிட்டது போல வெறுமையுடன் அமர்ந்திருந்தாள். அப்பொழுது யாரோ வருவது போல சத்தத்தை கேட்டு திரும்பி பார்க்க குணமாலை அவளின் அருகில் வந்து கொண்டிருந்தாள்.


🌟 சுரமஞ்சரி குணமாலையை பார்த்ததும் உன்னை யார் இங்கு வர சொன்னது? உன்னை நான் பார்க்க விரும்பவில்லை? நீ இவ்விடத்திலிருந்து விரைவாக சென்றுவிடு என்று மிகுந்த கோபத்தோடு கூறினாள்.


🌟 சுரமஞ்சரி உனக்கு என்ன தான் ஆயிற்று? ஏன் இப்படி யாரும் இல்லாமல் தனியாக இருக்கின்றாய்? கூட்டம் நிறைந்திருக்கக்கூடிய தெருவே இப்படி வெறிச்சோடி இருக்கின்றதே? எதற்காக இப்படி செய்தாய்? என்று குணமாலை கேட்டாள்.


🌟 ஏதும் அறியாத சிறு குழந்தை போல் என்னிடம் கேட்காதே! சீவகனை உன்னுடைய எண்ணத்திற்கு தகுந்தாற் போல மாற்றி, உன்னுடைய சுண்ணம் தான் சிறந்தது என்றும், என்னுடைய சுண்ணம் தரம் கெட்டது என்றும் சொல்ல வைத்து விட்டாய். என் மனம் எவ்வளவு பாடுபடுகின்றது என்பது உமக்கு புரியுமா? புரிந்திருந்தால் இதை செய்து தான் இருப்பாயா? என்றாள் சுரமஞ்சரி.


🌟 என்னது நான் சீவகனை என்னுடைய விருப்பத்திற்கு தகுந்த விதத்தில் மாற்றி விட்டேன் என்று கூறுகிறாயா? இது உனக்கே அபாண்டமாக இல்லையா? என்று குணமாலை கேட்க,


🌟 இறுதியாக கூறுகிறேன் குணமாலை தெளிவாக கேட்டுக்கொள். நான் அந்த சீவகனை தவிர வேறு எந்த ஆண்மகனையும் பார்க்கவும் மாட்டேன்! மணக்கவும் மாட்டேன்! என்றாள் சுரமஞ்சரி.


🌟 ஏன்? எதற்கு இவ்வளவு கோபம் கொள்கிறாய் சுரமஞ்சரி? கோபம் அளவுக்கு அதிகமானால் இழப்பும் அதைவிட அதிகமாகும் என்பது உமக்கு தெரியும் அல்லவா! இது தெரிந்தும் இந்த தவறை நீ செய்யலாமா? இந்த கோபத்தை விட்டுவிடு என்றாள் குணமாலை.


🌟 என்னுடைய கோபம் உன்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை அழித்துவிடும் என்று பயம் கொள்கின்றாயா? இனியும் என் முன் நிற்காதே! இப்பொழுதே இவ்விடத்தை விட்டு செல்வது தான் உமக்கு நல்லது என்று கூறி முகத்தை திருப்பி கொண்டாள் சுரமஞ்சரி.


🌟 அதற்கு மேல் சுரமஞ்சரியிடம் உரையாட குணமாலையும் விருப்பம் கொள்ளவில்லை. அவளுடைய கூற்றுக்கள் அனைத்தும் குணமாலைக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தின.


🌟 ஒரு சாதாரண சுண்ணம் அவளுக்கு இவ்வளவு துன்பத்தை அளித்து விட்டதே! அதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கின்றேனே! என்று எண்ணும் பொழுதே அவள் விழிகளில் கண்ணீர் துளிகள் அதிகரித்த வண்ணம் இருந்தது.


🌟 குணமாலையால் அதற்கு மேல் அவள் தோழியை இவ்வாறு பார்க்க முடியவில்லை. இதற்கு ஏதேனும் மாற்று வழியை செய்து இவளை இவ்விடத்திலிருந்து வெளிக்கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய வண்ணமாக அவ்விடத்திலிருந்து விடை பெற விருப்பம் இல்லாமல் விடை பெற்றாள்.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)