சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


சீவக சிந்தாமணி...!!

🌟 இராசமாபுரத்தில் உள்ள அருகன் கோவிலில் பூஜைகளும், வேள்விகளும் நடைபெற்று கொண்டிருந்தன. கோவிலின் வாசலில் அந்தணர்கள் மந்திரங்களை கூறிய வண்ணமாக இருந்தனர். இறைவனுக்கு படைக்க வந்தவர்களும், மந்திரம் கூறுகின்ற அந்தணர்களும் உண்ணும் வகையில் உணவு குவிக்கப்பட்டு இருந்தன.


🌟 கோவிலில் அடிக்கப்பட்ட மேளதாளத்தினாலும், அலைமோதிய கூட்டத்தினாலும் பயந்து போன ஒரு நாயானது எங்கே போய் ஒதுங்குவது என்று தெரியாமல் அலைந்து கொண்டே இருந்தது.


🌟 நெடும் நேரமாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்த அந்த நாய்க்கு, குவிக்கப்பட்டு இருந்த உணவை பார்த்ததும் 'இன்று நமக்கு சரியான உணவு தான்" என்று எண்ணி யாரும் கவனிக்காத சமயத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த அந்த உணவினை உண்ண துவங்கியது.


🌟 மந்திரங்கள் அனைத்தையும் உச்சரித்து, தீபாராதனை காட்டும் சமயத்தில் நாய் உணவினை உண்டு கொண்டு இருப்பதை கண்டனர். அப்பொழுது அங்கிருந்த அந்தணர்கள் இறைவனுக்கு வைத்திருந்த உணவினை உண்ட நாயை அடியுங்கள் என்று கூறினர்.


🌟 உடனே அங்கிருந்த அனைவரும் அந்த நாயை அடிப்பதற்காக கையில் கிடைத்த பொருட்களை எடுத்து துரத்த துவங்கினார்கள். நான்கு புறமும் மனிதர்கள் சூழ்ந்து அடிக்க முற்பட்ட போது அந்த நாய் 'இனி இவர்களிடமிருந்து பிழைப்பது கடினம் தான்" என்று எண்ணியதோ என்னவோ அவர்களிடம் அடிப்பட்டு ஊளையிட்டு கொண்டு இருந்தது.


🌟 அப்பொழுது தான் அந்த நாயை வளர்த்து கொண்டிருந்த குடிகாரன் உள்ளே நுழைந்தான். மரணத்தின் பிடியில் சிக்கி கொண்டிருக்கும் அந்த நாயை கண்டதும், 'யாரடா நான் வளர்த்த நாயை இப்படி அடித்தது?" என்று அங்கிருந்த அனைவரையும் கேட்க தொடங்கினான்.


🌟 அவனிடமிருந்து வந்த குடித்த கள்ளின் வீச்சம் தாங்க முடியாமல் அங்கிருந்தவர்கள் விலகி சென்றனர். ஆனால் அவனோ, 'நான் பாட்டுக்கு கேட்டு கொண்டிருக்கின்றேன் நீங்கள் பாட்டுக்கு போய் கொண்டே இருக்கின்றீர்கள். யாரடா என்னுடைய நாயை இந்த நிலைக்கு கொண்டு வந்தது" என்று திரும்ப திரும்ப கேட்டான்.


🌟 அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவன், உன்னுடைய நாய் இறைவனுக்கு படைத்திருந்த உணவினை உண்டது. அதனால் தான் நாங்கள் அதனை அடித்தோம் என்று கூறினான்.


🌟 'ஓ! இறைவனுக்கு வைத்திருந்த உணவை உண்டால் அது யாராக இருந்தாலும் அடிப்பீர்களோ?" என்று அந்த குடிகாரன் வினவினான்.


🌟 ஆமாம், இறைவனுக்கு படைக்கப்பட்டிருந்த உணவை யார் உண்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்று அங்கிருந்த அனைவரும் கூறினார்கள்.


🌟 இதை கேட்ட குடிகாரனோ, 'அப்படியென்றால் யாகங்கள் அனைத்தும் முடிந்த பின்பு இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவினை உண்ணக்கூடியவர்கள் நீங்கள் தானே.. உங்களையும் நான் அடிக்க தானே வேண்டும்" என்று கூறி கையில் கிடைத்த வேலினை எடுத்து தன்னுடைய நாயை அடித்தவர்களை தாக்க துவங்கினான்.


🌟 குடிகாரன் கையில் சிக்கி கொண்டால் அனைத்தும் பாழாகி விடுமே என்று அங்கிருந்த அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக தன் உயிரை காப்பாற்றி கொண்டால் போதும் என ஓட துவங்கினார்கள். குடிகாரனும் விடாமல் அவர்களை துரத்தி கொண்டே போனான்.


🌟 ஒரு நிலையில் ஓட முடியாமல் நின்ற அனைவரையும், குடிகாரன் தன்னுடைய கோபத்தினால் வரையறை இல்லாமல் தாக்கினான். அதை கண்டவர்கள் அந்த நாயை உயிருடனாவது விட்டிருக்கலாமோ என்று எண்ணினார்கள்.


🌟 கூட்டம் தன் பக்கம் தானே இருக்கின்றது என்ற ஆணவத்தில் சிறு உயிரை பொருட்டாக மதிக்காமல் தாக்கி அதனை கொன்றவர்களை வலியவனான எளியவன், வீரம் கொண்டு தாக்கும் பொழுது, அவர்களுக்கு துணையாக நின்ற கூட்டம் எங்கே? என்று தெரியாத அளவுக்கு தனித்தனியாக பிரிந்து ஓடியது.


🌟 எவ்வளவு குடித்திருந்தாலும் வேகம் குறையாமலும், தாக்குதல் குறையாமலும், அவர்களை துரத்தி கொண்டே இருந்தான் அந்த குடிகாரன்.


🌟 திக்கு முத்து தெரியாமல் ஓடியவர்கள் இறுதியாக சீவகன் வீட்டு தெருவின் வழியாக ஓடினர். அப்பொழுது சீவகன் தன்னுடைய நண்பர்களோடு வெளியில் நின்று கொண்டிருக்க, சீவகனை கண்ட மக்கள் கூட்டம் 'சீவகா எங்களை காப்பாற்று இந்த குடிகாரனிடம் இருந்து" என்று கூறிய வண்ணமாக அவனிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.


🌟 மக்களை அடிக்க வந்த குடிகாரனை சீவகன் கட்டுப்படுத்தினான். எதற்காக இவர்களை தாக்க இப்படி ஓடி வந்து கொண்டிருக்கின்றாய்? என்ன நிகழ்ந்தது? என்று சொல் என்றான் சீவகன்.


🌟 குடிகாரனும் 'தான் அன்பாக வளர்த்து வந்த நாயை இந்த பகுத்தறிவு படைத்த மனிதர்கள் கொன்று விட்டார்கள்" என்று நிகழ்ந்த அனைத்தையும் கூறினான்.


🌟 நிகழ்ந்த அனைத்தையும் அறிந்து கொண்ட சீவகன், 'குடிபோதையில் இருந்தாலும் அவன் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கின்றதே. ஒரு நாய் இறைவனுக்கு வைத்திருந்த உணவை உண்டது என்றால் அந்த நாயை விரட்டி இருக்கலாம் அல்லது அந்த நாய் உண்ட பகுதியை அகற்றிவிட்டு, மற்றவர்கள் உண்ணுவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அந்த நாயை கொலை செய்துவிட்டீர்களே? நீங்கள் எவ்வளவு படித்திருந்தும் என்ன பயன்? உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா?" என்று சீவகன் கோபத்தோடு கேட்டான்.


🌟 சீவகன் கூறியதை கேட்டதும் தான் அங்கிருந்தவர்கள், தாங்கள் செய்த தவறினை உணர்ந்து, செய்த செயலுக்காக மனம் வருந்தி எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.


🌟 இதற்கு மேல் உங்களிடம் என்ன சொல்லி என்ன பயன்? என்று கூறிவிட்டு அந்த நாய் எங்கே இருக்கின்றது என்று வினவினான்.


🌟 அங்கிருந்தவர்கள் நாய் இருக்கும் இடத்தை கூற, சீவகன் விரைவாக சென்று அந்த நாய் அடிபட்டிருக்கும் இடத்தை அடைந்தான். அவ்விடத்தில் அவன் கண்ட காட்சி மிகவும் கொடுமையாக இருந்தது.


🌟 கல்வி கற்று பகுத்தறிவில் சிறந்து விளங்கும் இந்த மனிதர்கள் எது அறம்? என்று தெரியாமல் தன்னுடைய தேவைக்காக எதையும் செய்யும் மிருகத்தை விட மிக மோசமாக செயல்பட்டதை எண்ணி அருவருத்து நின்று கொண்டிருந்தான்.


🌟 அங்கே ஏதும் அறியாத நாயோ தன்னுடைய கடைசி மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டிருக்க, என்ன செய்வது? என்று புரியாமல் அதன் அருகில் சென்றான்.


🌟 உடல் முழுவதும் இரத்தம் வெளியேறிய வண்ணமாக, அவர்களிடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்து நடந்ததில், தெருவெல்லாம் நாயின் இரத்தம் சிந்தி இருந்தன. நாயே! நீ ஏன் இந்த ஈனப்பிறவியில் பிறந்திருக்கின்றாய்? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பிறப்பில்லாமல் மோட்சத்தை அளிக்கக்கூடிய மந்திரத்தை நான் கூறுகின்றேன். நீ அதை கேட்டு உன்னுடைய கடைசி மூச்சியை விட்டாய் என்றால் நிச்சயம் அடுத்த பிறவியிலாவது உயர்ந்த பிறப்பாக பிறப்பாய் என்று கூறி விட்டு, சக்தி வாய்ந்த 'மோட்சத்தை" அளிக்கும் மந்திரங்களை கூற துவங்கினான்.


🌟 சீவகன் மோட்சத்திற்கான மந்திரத்தை கூற நாயின் கண்ணில் ஒளியின் தன்மை அதிகரிக்க துவங்கியது. அணையும் விளக்கு எவ்விதம் பிரகாசமாக எரியுமோ, அதே போல அந்த நாயினுடைய கண்களும் பிரகாசமாக இருந்தன. கணப்பொழுதில் கண்ணில் காணப்பட்ட பிரகாசம் நீங்கி மரணித்தது.


🌟 நாயின் மரணத்தினால் சீவகன் கண்ணில் இருந்து விழிநீர் வெளிப்பட துவங்கின. ஆனால் அந்த நாய் இருந்த இடத்தில் ஒரு அதிசயமும் நிகழ தொடங்கியது. நாயின் உடலில் இருந்து ஒருவிதமான பிரகாச ஒளியானது கிளம்பியது.


🌟 அந்த ஒளியானது அருகில் இருக்கக்கூடிய பொருட்கள் எதுவும் தெரியாத அளவில் இருந்தது. அங்கிருந்த அனைவரின் கண்களும் கூசும் அளவில் என்ன நிகழ்கின்றது? என்று புரியாமல் திகைத்து நின்றனர்.


🌟 சிறிது நேரத்தில் அந்த நாய் இருந்த இடத்தில் ஏற்பட்ட ஒளியின் பிரகாசமானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அங்கே ஒரு தேவன் தோன்றினார். அவ்விடத்தில் தோன்றிய தேவன், சீவகனை பார்த்து 'தனக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கி மோட்சமளித்த சீவகனுக்கு நன்றி என்றும், நீர் எனக்கு தந்தை போல" என்றும் கூறினார்.


🌟 சீவகனோ, இங்கு நிகழ்ந்த ஆச்சரியத்தை கண்டு நிகழ்காலம் வர இயலாமல் ஏதோ தேவலோக விந்தைகள் நிகழ்வது போல திகைத்து நின்று கொண்டிருந்தான். பின்பு அந்த தேவன் கூறிய கூற்றுக்களினால் மாயங்களில் இருந்து விடுபட்டு, நிகழ்காலம் வந்த சீவகன் 'ஆமாம் நீங்கள் யார்?" என்று வினவினான்.


🌟 என்னுடைய பெயர் சுதஞ்சணன். நான் சங்கவெண் மலையில் உள்ள சந்திரோதயம் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த தேவன் ஆவேன். செய்த தவறுக்கு தண்டனையாக நாயாக பிறவி எடுத்தேன்.


🌟 இப்பொழுது நீர் கூறிய மோட்ச மந்திரத்தின் காரணமாக என்னுடைய சாபங்கள் யாவும் நீங்க பெற்று, மீண்டும் தேவனாக மாறினேன். தனக்கு ஏற்பட்ட இந்த நிலையிலிருந்து விடுவித்த உமக்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.


🌟 உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்? அதை நான் கண்டிப்பாக செய்கின்றேன். இந்த நொடியில் இருந்து நீங்கள் தான் என்னுடைய எஜமானர். நான் உங்களுடைய அடிமை என்றார் சுதஞ்சணன்.


🌟 ஓ! எனக்கும் ஒரு அடிமை இருக்கின்றாரா? என்னிடத்தில் யாவரும் அடிமையாக இருப்பது எனக்கு பிடிக்காதே... எனக்கு அடிமையாக நீங்கள் இருக்க வேண்டாம். ஆனால் எனக்கு நண்பனாக இருங்கள். எப்பொழுது உங்களுடைய உதவி எனக்கு தேவைப்படுகின்றதோ அப்பொழுது உங்களிடம் நான் கேட்கின்றேன். அப்பொழுது அந்த உதவியை எனக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினான் சீவகன்.


🌟 உங்களுக்காக என்னுடைய உயிரையும் நான் கொடுப்பேன். உங்களுக்கு எப்பொழுது உதவி தேவைப்படுகின்றதோ அப்பொழுது நான் கண்டிப்பாக அவ்விடத்தில் இருப்பேன் என்றார் சுதஞ்சணன்.


🌟 நான் பார்த்த மானிடர்களில் நீர் வித்தியாசமாக இருக்கின்றாய். ஏனென்றால்? எம்மால் செய்ய முடியாத காரியங்கள் எதுவும் இவ்வுலகில் இல்லை. அப்படிப்பட்ட என்னை வைத்து என்ன வேண்டுமானாலும் நிறைவேற்றி கொள்ளலாம்.


🌟 ஆனால் அவ்விதம் நீர் எதுவும் செய்யாமல் இருக்கின்றாய். அது மட்டுமல்லாமல் அடிமையாக இருக்கின்றவனை நண்பனாக அழைக்கின்றாயே! உன்னுடைய குணம் மிகவும் மென்மையானதாகும். நீர் எப்பொழுதும் என்னிடத்தில் உதவியை எதிர்பார்க்க மாட்டாய். ஆகவே நான் இந்த கணத்திலிருந்து உங்களை தொடர்ந்து வருவேன். உங்களுக்கு எந்த கவலையும் இருக்க வேண்டாம் என்றார் சுதஞ்சணன்.


🌟 சுதஞ்சணன் கூறியதை கேட்ட சீவகன், எனக்கு தான் இப்பொழுது எந்தவிதமான கவலையும் இல்லையே. என்னை நீங்கள் எப்பொழுதும் பின் தொடர்ந்து வந்தால் எனக்கு ஒருவிதமாக இருக்கும். ஆகவே என்னை பின் தொடராதீர்கள்.


🌟 எனக்கு எப்பொழுது உதவி தேவைப்படுகின்றதோ அப்பொழுது நான் உங்களை கண்டிப்பாக அழைக்கின்றேன். இப்பொழுது தான் நீங்கள் விமோசனம் அடைந்துவிட்டீர்களே! உங்களது நகரத்தில் இருப்பவர்கள் எப்படி இருக்கின்றார்கள்? என்பதை கண்டு மீதம் இருக்கும் உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். இதுவே என்னுடைய இப்போதைய கட்டளையாகும். எனக்கு தேவைப்படும் பொழுது உங்களை மனதளவில் எண்ணுகின்றேன். அப்பொழுது நீங்கள் வந்து தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று கூறினான் சீவகன்.


🌟 எஜமானரின் கட்டளையை என்னால் மீறி செயல்பட முடியாது. ஆகவே உங்கள் விருப்பப்படியே இப்பொழுது நான் இவ்விடத்திலிருந்து செல்கின்றேன். ஆனால் எனது மனம் உங்களை சுற்றியே இருக்கும். நீங்கள் ஒரு நொடி நினைத்தாலும் நான் அவ்விடத்தில் தோன்றி விடுவேன் என்று கூறி சீவகனிடமிருந்து விடைபெற்று யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் அரூபமாக அவ்விடத்தில் இருந்து மறைந்து சென்றார் சுதஞ்சணன்.


🌟 சீவகனின் நண்பனான நந்தட்டன், 'நமது ஊரில் அடிக்கடி ஆச்சரியம் நிறைந்த பல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நாம்தான் எதையும் கவனிக்காமல் ஏதோ குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல நேராக சென்று கொண்டே இருக்கின்றோம். ஒருவேளை உணவுக்காக சுற்றி திரிந்து கொண்டிருந்த ஒரு சாதாரண நாய் திடீரென ஒரு தேவனாக மாறுகின்றது. என்ன ஒரு ஆச்சரியம் பாருங்களேன்!" என்று நண்பர்களிடத்தில் கூறிய வண்ணமாக இருந்தான்.


🌟 இதை கேட்ட சீவகனோ, 'எல்லாம் மோட்ச மந்திரத்தின் மகிமை தான். அருகனை மனதளவில் நினைத்து, அவன் மீது நம்பிக்கை கொண்டு மந்திரத்தை ஜெபித்தால் செம்பே பொன்னாகும், நாய் தேவனாக மாறுவதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை" என்று கூறினான்.


🌟 இவர்கள் இவ்விதமாக பேசி கொண்டிருந்த பொழுது மக்கள் அனைவரும் ஏதோ நிகழக்கூடாதது நிகழ்ந்துவிட்டது போல எட்டுத்திக்கும் சிதறடித்து ஓடி கொண்டிருந்தனர்.


🌟 சீவகனும், அவன் நண்பர்களும் என்னவென்று புரியாமல் ஓடி கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி, ஏன் எல்லோரும் இப்படி ஓடிக்கொண்டு இருக்கின்றீர்கள்? அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது? ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதா? என்று வினவினார்கள்.


🌟 ஆமாம்.. ஆமாம்.. யாரும் எதிர்பார்க்காத ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது. பட்டத்து யானையான அசனி வேகத்திற்கு திடீரென மதம் பிடித்து விட்டது. மதம் பிடித்த யானை சும்மா இருக்குமா? அருகில் இருந்த சந்தைக்குள் நுழைந்து காய்கறிகளையும், அங்கிருந்த மனிதர்களையும் துரத்தி பந்தாடி கொண்டிருக்கின்றது என்று கூறிவிட்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைவாக ஓடினான்.


🌟 இதை கேட்ட சீவகனும், அவனுடைய நண்பர்களும் அந்த மதம் பிடித்த யானை இருக்கும் இடத்தை நோக்கி ஓடினார்கள்.


🌟 சீவகனும், அவனுடைய நண்பர்களும் அந்த மதம் பிடித்த யானை இருக்கும் இடத்திற்கு சென்றனர். அந்த இடத்தில் சிக்கியவர்களையும், அங்கும், இங்கும் இருந்தவர்களையும் சீவகனும், அவனுடைய நண்பர்களும் தற்காத்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.


🌟 அப்பொழுது அங்கே இருந்த ஒருவர் கட்டியங்காரனின் யானை என்றால் சும்மாவா? அது கட்டுக்கு அடங்காது. அந்த யானை யாரை வேண்டுமானாலும் குத்தலாம், மிதிக்கலாம். ஆனால் அந்த யானையை யாரும் தாக்கவும் கூடாது. தடுக்கவும் கூடாது. எல்லாம் நம் விதி என்று கூறி கொண்டிருந்தார்.


🌟 இதை கேட்டதும் சீவகனுக்கு கோபம் இன்னும் அதிகமாகியது. மக்களுக்கு இந்நிலை ஏற்பட காரணமாக இருந்த அந்த யானையை எவ்விதத்திலாவது அடக்க வேண்டும் என்று எண்ணினான்.


🌟 அதே சமயத்தில் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகள் எதுவும் அறியாமல், குணமாலை பல்லக்கில் அமர்ந்து கொண்டு அருகன் கோவிலில் இருந்து வந்து கொண்டிருந்தாள்.


🌟 பல்லக்கின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த மாலையிடம் (குணமாலையின் சேடி பெண்), இறைவனுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் செய்து விட்டீர்கள் அல்லவா? அதில் எதுவும் குறையில்லையே? என்று வினவினாள்.


🌟 ஆம் குணமாலை! இறைவனுக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டன என்று கூறினாள் மாலை.


🌟 இனிமேலாவது சுரமஞ்சரியின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், அந்த மாற்றம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்றும் குணமாலை கூறினாள்.


🌟 அதற்கு மாலையோ, மாற்றம் எப்பொழுதும் நன்மையை மட்டும் தான் ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்த மாற்றங்களை கையகப்படுத்த தெரியாமல் மாற்றத்தை தவறாக எண்ணுகின்றார்கள் பலர். சுரமஞ்சரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமும் அதே மாதிரி தான். உங்களின் மீது சுரமஞ்சரிக்கு எந்தவிதமான கோபமும், மனவருத்தமும் இல்லை. ஆனால் நீங்கள் தயாரித்த சுண்ணத்தின் தரத்தை விட சுரமஞ்சரி தயாரித்த சுண்ணத்தின் தரம் குறைவாக இருக்கின்றது என கூறிய சீவகனின் மீது தான் அவர்களுடைய அனைத்து கோபங்களும் என்று கூறினாள்.


🌟 பல்லக்கினை தூக்கி வந்தவர்கள் அப்பொழுது தான் ஒரு யானை மதம் பிடித்து வந்து கொண்டிருப்பதை கண்டனர். பல்லக்கு தூக்கி வந்தவர்கள் யானையை கண்டதும் பல்லக்கினை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி ஒளிந்து கொண்டனர்.


🌟 மாலையோ பல்லக்கை தூக்கி வந்தவர்களிடம், பல்லக்கை இப்படி நடுவழியில் விட்டுவிட்டு செல்லலாமா? அனைவரும் வாருங்கள் பல்லக்கினை தூக்கி உரிய பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள்! என்று பல்லக்கை சுமந்தவர்களிடம் பேசி கொண்டிருந்தாள். ஆனால் அவர்களோ உயிர் பிழைத்தால் போதும் இனி யார் எப்படி போனால் எனக்கென்ன? என்று ஓடி விட்டனர்.


🌟 இவ்வளவு நேரம் பயணப்பட்டு கொண்டிருந்த பல்லக்கு திடீரென ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததை அறிந்த குணமாலை என்ன ஆயிற்று? நான் வெளியே வரட்டுமா? என்று மாலையிடம் கேட்டாள்.


🌟 வெளியே வருவதாக சொன்ன குணமாலையை வெளியே வர வேண்டாம் உள்ளேயே இருங்கள் என்று கூறிவிட்டு, அருகில் ஏதேனும் உதவி கிடைக்கின்றதா? என்று பார்க்க தெருமுனையை நோக்கி ஓடி கொண்டிருந்தாள்.


🌟 தெருமுனைக்கு சென்ற மாலையோ, யாராவது இருக்கின்றீர்களா? எங்களுக்கு உதவி தேவைப்படுகின்றது. என் தலைவி யானையின் பிடியில் சிக்கி கொண்டால் அவளை காப்பாற்ற யாராவது இருக்கின்றீர்களா? என்று உரக்க கேட்டாள்.


🌟 ஆனால் அங்கு இருந்தவர்களோ மாலையின் கூற்றுக்களை கவனிக்க முடியாமல், தான் உயிர் பிழைத்தால் போதும்.. என்று அவரவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிய வண்ணமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.


🌟 சற்று தொலைவில் சீவகன் கூட்ட நெரிசலில் அகப்பட்டிருந்த ஒரு முதியவரை தூக்கி கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தான்.


🌟 அந்த இடத்தில் சீவகனை கண்ட மாலையோ, உடனே சீவகனின் அருகில் சென்று குணமாலையின் நிலையை கூறி உதவ உடனே வாருங்கள் என்று வேண்டி நின்றாள்.


🌟 சீவகன் தன்னுடைய தோழனை அழைத்து, முதியவரை அவனிடம் ஒப்படைத்து விட்டு உனது தலைவி எங்கே இருக்கின்றாள்? என்று வினவினான்.


🌟 மாலையும், தன் தலைவி இருக்கும் இடத்தை கை நீட்டி காண்பிப்பதற்குள் மதம் பிடித்த யானையானது பல்லக்கின் அருகில் வர துவங்கியது. யானை பல்லக்கின் அருகில் வந்து கொண்டிருப்பதை சீவகனும், மாலையும் பார்த்தனர்.


🌟 'ஐயோ இன்னும் சிறு நொடியில் பல்லக்கு நொறுங்கி விடுமே! ஐயோ குணமாலை நான் தவறு செய்துவிட்டேன்" என்று மாலை கதறி கொண்டிருந்தாள்.


🌟 அப்பொழுது யானை பல்லக்கின் அருகில் வந்து பல்லக்கை தனது துதிக்கையால் தூக்க அதிலிருந்து குணமாலை கீழே விழுந்தாள்.


🌟 மதம் பிடித்த யானை என்ன செய்யும்? என்று தெரியாமலும், யானையை அவ்வளவு அருகில் கண்டதும் என்ன செய்ய வேண்டும்? என்பதை மறந்தும் அவ்விடத்திலேயே குணமாலை நின்றிருந்தாள்.


🌟 மதம் பிடித்த யானையை பார்த்ததும் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த குணமாலையை, யானை தனது துதிக்கையால் வளைத்து இறுக பிடித்தது.


🌟 இனி காலம் தாமதித்தால் யானையின் பிடியில் சிக்கியவள் பாதிக்கப்படுவாள் என்று சிந்தித்த சீவகன் கணப்பொழுதில் தனது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கழற்றி யானையின் நெற்றியை நோக்கி நேராக வீசினான்.


🌟 பலம் கொண்ட தன்னை குண்டலத்தால் எதிர்த்த எதிரி யார்? என்று யானை திருப்பி சீவகனை பார்க்க, அப்பொழுது யானையின் பிடியில் சிக்கி கொண்டிருந்த குணமாலையின் முகத்தை சீவகன் பார்த்தான்.


🌟 யானையின் பிடியில் சிக்கி கொண்டிருந்த குணமாலையை பார்த்தவுடன் மாலையோ 'ஐயோ குணமாலை" என்று கதறினாள்.


🌟 சீவகன் தனது நண்பனான நந்தட்டனிடம் 'நண்பா நீ மாலையை தெருவின் அந்த பக்கத்திற்கு அழைத்து செல். நான் யானையின் கவனத்தை திசை திருப்பி யானையின் பிடியிலிருக்கும் மங்கையை விடுவிக்கின்றேன். அப்பொழுது நீ பின்புறமாக வந்து அந்த மங்கையை காப்பாற்றி தெருவின் அந்த பக்கத்திற்கு அழைத்து சென்று விடு. அதன் பிறகு யானையை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து செல்கின்றேன்" என்று கூறிவிட்டு யானையை நோக்கி ஓடினான்.


🌟 தன்னை நோக்கி, தன்னை தாக்கிய எதிரி வந்து கொண்டிருக்கின்றான் என்பதை பார்த்த யானையும், அவனை எதிர்த்து தாக்க சீவகனை நோக்கி ஓடி வந்தது. அதன் ஓட்டத்திற்கு தடையாக இருந்த குணமாலையை துதிக்கையின் பிடியை தளர்த்தி தூர வீசியது.


🌟 யானையின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத சீவகனோ, குணமாலையின் நிலை என்ன ஆயிற்று? என்று பதறிய வண்ணமாக யானையின் பிடிக்கு அகப்படாமல் யானையின் பின்பக்கத்திற்கு சென்று குணமாலையின் நிலையை பார்த்தான்.


🌟 நல்ல வேளையாக குணமாலை விழுந்த இடம் பூக்கள் யாவும் விற்பனைக்காக எடுத்து வைக்கப்பட்ட கட்டிலாக இருக்க சிறு சிறு அடிகளுடன் அவளும் பிழைத்தாள்.


🌟 அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்பதை புரிந்து கொண்ட சீவகன் ஏதோ புதிதாக பிறந்தது போல உணர்ந்தான். மதம் பிடித்த யானை மீண்டும் அவனை பின் தொடர இனியும் பொறுமை காத்தல் கூடாது என்பதை முடிவு செய்து கொண்டு யானையை நோக்கி மீண்டும் ஓடினான்.


🌟 கீழே விழுந்த குணமாலைக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை அறிந்து கொண்டதும், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், நேராக ஓடாமல் சற்று வளைந்து சென்று காளை வண்டியின் மீது ஏறி, யானையின் மேல் அமர்ந்து மத்தகத்தை (யானையின் நெற்றியை) பிடித்தான்.


🌟 யானையும் தன்னுடைய எதிரி தன் மீது அமர்ந்திருக்கின்றான் என்பதை உணர்ந்து தனது உடலை பலவாறாக உதறியது. யானை என்ன செய்தும் சீவகனை அப்புறப்படுத்த முடியாமல் நின்றது. ஆனால் சீவகனோ யானையின் உடல் அசைவுக்கு ஏற்ப அசைந்து அவன் பிடியை தளர்த்தாமல், யானையின் காதருகில் சில மந்திரங்களை கூற துவங்கினான்.


🌟 சீவகன் மந்திரம் கூற கூற யானையின் கோபமானது படிப்படியாக குறைய துவங்கியது. பின்பு சிறிது நேரத்திற்குள் யானை அமைதி அடைந்தது. பிறகு அங்குசம் (யானையை கட்டுப்படுத்த யானையின் பாகன் பயன்படுத்தும் பொருள்) கொண்டு அடக்கி வைத்தான்.


🌟 கீழே விழுந்திருந்த குணமாலையை நந்தட்டன் அருகில் சென்று தூக்கினான். அப்பொழுது குணமாலைக்கு என்ன ஆயிற்று? என பதறிய மாலை அவள் அருகில் வந்து நல்லவேளை யானையின் வெறியில் இருந்து தப்பித்து கொண்டீர்கள்.. எல்லாம் நன்மைக்கே! என்று கூறிய வண்ணமாக இருந்தாள்.


🌟 அப்பொழுது குணமாலையோ, தன்னை காப்பாற்றிய சீவகனை பற்றி எண்ணி பார்த்து கொண்டிருந்தாள். அதாவது, நல்லவேளையாக சுரமஞ்சரி நம்முடன் இப்பொழுது வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால் இந்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பு தனக்கு கிடைக்காமலே போயிருக்கும் என்று எண்ணி, தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.


🌟 கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிறு சிறு காயங்களை கண்ட குணமாலை ஏதோ போருக்கு சென்று வீர தழும்புகள் பெற்றது போல ஒருவிதமான வெட்கத்துடன் புன்னகைத்து கொண்டிருந்தாள். மாலையோ குணமாலைக்கு காயம் ஏற்பட்டதை எண்ணி துயரம் கொண்டாள்.


🌟 சீவகன் தான் அடக்கிய யானையின் மீது அமர்ந்து கொண்டு, அரசருடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய யானைகளின் கூட்டங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, இந்த யானையின் பாகன் யார்? என்று வினவினான்.


🌟 அப்பொழுது அந்த யானையின் பாகன் மறைவான பகுதியில் இருந்து வெளிவர, வீட்டில் அடங்காத பிள்ளைகளை ஊரார் அடக்கி விடுவார்கள். அதனால் ஏற்படும் இழப்புகள் சற்று அதிகமாக இருக்கும். இனியும் இது போன்ற தவறுகள் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள் என்று கூறிவிட்டு யானையை பாகனிடம் ஒப்படைத்தான்.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)