சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


சீவக சிந்தாமணி...!!

🌟 மதம் பிடித்த அந்த யானையை பாகனிடம் ஒப்படைத்த சீவகன் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது அந்த யானையின் பிடியில் சிக்கி கொண்டிருந்த குணமாலையின் பதற்றமான முகம் மட்டுமே அவனுடைய நினைவிற்கு திரும்ப திரும்ப வந்து ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.


🌟 வீணையில் காந்தருவதத்தையை வென்றதை அவன் முழுமையான வெற்றியாகவே ஏற்று கொள்ளவில்லை. யானையின் பிடியில் சிக்கி கொண்டிருந்த குணமாலையை, யானையிடமிருந்து காப்பாற்றி யானையின் மதத்தை அடக்கியதையே அவன் முழுமையான வெற்றியாக நினைத்தான்.


🌟 குணமாலை பார்த்த அந்த மோக பார்வையில் எத்தனை விதமான பொருட்கள் இருந்ததோ? என்று அவனுக்குள்ளே உரையாடி கொண்டிருந்தான்.


🌟 வீட்டை அடைந்ததும் அவன் கொண்ட தனிமை அவனை மிகவும் வாட்டியது. சோலையில் இருக்கக்கூடிய கிளிகளை காண அவன் உள்ளம் ஏனோ துடித்து கொண்டே இருந்தது.


🌟 அருகில் இருப்பவர்கள் வந்து சென்று தன்னுடைய கற்பனை தவத்தினை கலைப்பதை அவன் விரும்பவில்லை. அந்த யானையின் பிடியில் சிக்கியவளை அணு அணுவாக எண்ணிய விதமாக, பாற்கடலில் நீந்தி விளையாடி கொண்டு, வீட்டின் பின்புறத்தில் இருக்கக்கூடிய சோலையில் உள்ள ஒரு மேடையின் மீது ஏறி அமர்ந்தான். அங்கே மரத்தில் இருக்கக்கூடிய கூட்டில் எங்கிருந்தோ வந்த பறவைகள் முணுமுணுத்து திட்டி கொண்டிருப்பது போல ஒலிகளை எழுப்பி கொண்டிருந்தன.


🌟 இங்கு குணமாலையோ, ஆபத்து நேரத்தில் அவன் உயிரை துச்சமாக எண்ணி, களத்தில் இறங்கி தன்னை காப்பாற்றி, இப்பொழுது தான் உயிரோடு இருப்பதற்கு காரணமாக இருக்கின்ற சீவகனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் வந்ததை நினைத்து மனதளவில் தேள் கொட்டியது போல துடிதுடித்து கொண்டிருந்தாள்.


🌟 மனதில் ஏற்பட்ட இந்த குழப்பங்கள் அனைத்தையும் யாரிடத்திலாவது சொல்லி தீர்வினை அறிய வேண்டும் என்று எண்ணினாள். ஆனால் இதை யாரிடமாவது கூறினால் பின்னாளில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு விடுமோ? என்றும் எண்ணினாள். மதில் மேல் பூனை நிற்பது போல இந்த பக்கம் இறங்குவதா? அந்த பக்கம் இறங்குவதா? என்பதே புரியாமல், இறுதியாக சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளையிடம் மனதில் இருப்பதை வெளிப்படுத்தி கொண்டிருந்தாள் யாரும் இல்லா தனிமையான பூஞ்சோலையில்.


🌟 கிளிப்பிள்ளையிடம் வந்து நெடுநேரம் ஆகியும் குணமாலை ஏதும் பேசாமல், தன்னந்தனியாக சிரித்த வண்ணமாக அமர்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்ட பேசும் கிளி, குணமாலையே! நடப்பது எதுவும் எனது பார்வைக்கு சரியாக படவில்லை என்று கூறியது.


🌟 கிளியின் குரலைக் கேட்டு நினைவுக்கு திரும்பிய குணமாலையோ என்ன கூறினாய்? என்ன சரியாக படவில்லை? அனைத்தும் நன்றாக தானே நடக்கின்றது என்று கேட்டாள்.


🌟 அதற்கு கிளியானது அதை தான் உன்னிடம் நான் கேட்கிறேன்! வந்து நெடுநேரமாகியும் என்னிடம் பேசாமல் ஏதோ அமைதியாக அமர்ந்து உள்ளுக்குள்ளே சிரித்து கொண்டிருக்கின்றாய். எப்பொழுதும் இல்லாத ஒருவிதமான பூரிப்பு இன்று உனது முகத்தில் வெளிப்படுகின்றதே! என்ன நிகழ்ந்தது? என்று வினவியது அந்த பேசும் கிளி.


🌟 இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் குணமாலை பேசும் கிளியிடம் கூறிவிட்டு, தனது மனமானது இப்பொழுது தன்னிடத்தில் இல்லை என்றும், தன்னை காப்பாற்றியவன் தனது மனதையும் களவு கொண்டு போய் விட்டான் என்றும் கூறினாள்.


🌟 மனதில் தவறான ஆசைகளை வளர்த்து கொள்ளாதே குணமாலை.. அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பதை நீயே கூறி இருக்கின்றாய்! என்று அந்த கிளி கூறியது.


🌟 அதற்கு குணமாலை ஒரு சாதாரண கிளிக்கு இவ்வளவு வாய் இருக்கக்கூடாது என்று கூறிவிட்டு, இதில் என்ன தவறு இருக்கின்றது? என கிளியை பார்த்து கேட்டாள்.


🌟 ஆமாம்.. இப்பொழுது நீ தான் உன்னை பற்றியும், உன் மனமானது களவு போனதை பற்றியும் கூறினாய். ஆனால் உன் மனதை களவு எடுத்தவன் உன்னை காதலிக்கின்றானா? என்பதை அறியாமலே உன் மனதில் தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்து கொள்ளாதே! பின்னாளில் அந்த ஆசைகளே மிகப்பெரும் வேதனையை ஏற்படுத்தும் என்றது பேசும் கிளி.


🌟 ஏன் இவ்வாறு பேசி கொண்டிருக்கிறாய்? எனது அழகின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? என்று குணமாலை கேட்க,


🌟 உனக்கென்ன குறைச்சல்! நீ மிகவும் அழகாக தான் இருக்கின்றாய். ஆனால் சீவகன் மணந்த முதல் மனைவியான காந்தருவதத்தை உன்னை விட அழகில் சிறந்தவளாகவும், பேரழகியாகவும் இருக்கின்றாளே என்றது கிளி.


🌟 கிளியினுடைய பேச்சை கேட்டதும், குணமாலையின் மனதில் இருந்த அனைத்து கவலைகளும் நீங்கி, புன்னகைத்த வண்ணமாக அட உன் வாயில் இருந்தே வந்துவிட்டது. சீவகன் மணந்த காந்தருவதத்தை முதல் மனைவி என்று அப்படியானால்.. என்று சொல்லும் பொழுதே..


🌟 இனி யாராலும் உன்னை திருத்த முடியாது என்றது பேசும் கிளி.


🌟 நீயே இவ்வளவு கூறுவதால் சீவகனுடைய வீட்டிற்கு சென்று அவருடைய எண்ணம் என்னவென்று அறிந்து வந்து என்னிடம் சொல்ல முடியுமா? என்று பேசும் கிளியிடம் உதவி கேட்டாள் குணமாலை.


🌟 இது கூட சரியான யோசனையாக தான் இருக்கின்றது. முதலில் அவனுக்கு உன் மேல் விருப்பம் இருக்கின்றதா? என நான் அறிந்து வருகின்றேன்! அதுவரை உனது ஆசைகளையும், கற்பனைகளையும் கட்டுப்படுத்தி வைத்து கொள்வாயாக! என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து கிளி பறந்து சென்றது.


🌟 கொஞ்சம் விட்டால் ரொம்பத்தான் பேசுகின்றாய் என்று அடிக்க வந்தவள், கிளி பறந்ததை பார்த்து விரைவாக என்னிடம் திரும்பி வந்து நற்செய்தி சொல்வாயாக என்றாள் குண்மாலை.


🌟 குணமாலையின் சோலையில் இருந்து பறந்து சென்ற கிளி வழியில் சென்ற பறவைகளிடம் வினவி, சீவகன் இருக்கும் இடத்தையும் அறிந்து கொண்டது.


🌟 அங்கு சீவகனுக்கு என்ன செய்வது? என்று தெரியாமல் தனித்திருந்த நொடிகள் யாவும் ஒரு யுகமாகவே தெரிந்தது. எனவே தன்னிகரில்லா காட்சியை தனித்துவமாக வரைய வெள்ளை சீலை மாட்டிய தட்டியை தேடி எடுத்து வந்தான்.


🌟 அந்த திரையில் மனதில் என்றும் நீங்காமல் அமையப்பெற்ற அந்த காட்சியை தத்ரூபமாக வரைய துவங்கினான்.


🌟 யானையினுடைய கோபமான கண்களும், யானையினால் அழிவை சந்தித்த சந்தையின் நிலைமைகளும் உண்மையில் எப்படி இருந்ததோ, அப்படியே இருப்பது போல வரைந்தான்.


🌟 யானையினுடைய துதிக்கையில் பல்லக்கின் கட்டைகள் சிக்கி கொள்ள, அந்த பல்லக்கின் திரை மறைவில் தவித்த குணமாலையின் தோற்றத்தையும் அவ்விதமே வரைந்தான்.


🌟 ஒரு நிமிடம் மட்டுமே அவளை கண்டிருந்தாலும், அவளை மறக்க இயலாத அளவில் அவளது உருவம் யாவும் சீவகனின் மனதில் ஆழ பதிந்தது. அது எவ்விதத்தில் என்றால்? சீவகன் வரைந்த படத்தில் அவள் அணிந்திருந்த ஆடைகளும், அணிகலன்களும் உண்மையாக அவள் அணிந்திருந்த விதத்திலேயே இருந்தன.


🌟 அப்பொழுது படம் எல்லாம் அழகாகத்தான் இருக்கின்றது என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்க, யார் அது? என்று சீவகனும் திரும்பி பார்த்தான். அது வேறு யாரும் இல்லை அவனுடைய மனைவியான காந்தருவதத்தையே.


🌟 சற்றும் எதிர்பார்க்காத காந்தருவதத்தையின் வருகை சீவகனின் முகத்தில் ஒரு சில பதற்றத்தை உருவாக்கினாலும் அதை வெளிக்காட்டாமல், காந்தருவதத்தையை வரவேற்று தான் வரைந்த படங்களை அவளிடத்தில் காட்டி கொண்டிருந்தான்.


🌟 சீவகன் வரைந்த படங்களை பார்த்த காந்தருவதத்தை, சந்தையில் இருந்து நீங்கள் வந்தது முதல் நீங்கள் நீங்களாகவே இல்லை. தனிமையில் அதிகம் இருக்கின்றீர்கள். ஒரு பெண்ணின் படத்தை இவ்வளவு அணு அணுவாக ரசித்து வரைந்து கொண்டிருக்கின்றீர்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால்? ஒரு முறை பார்த்த அவளின் முகம் இன்னும் உங்கள் நினைவில் இருந்து அகலாமல் அப்படியே இருப்பது தான்.


🌟 அதுமட்டுமல்லாமல் அவள் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் ஒன்று விடாமல், காதில் இருந்த காதணியும், இடையில் இருந்த மேகலையும், கழுத்தில் இருந்த முத்துமாலையின் வடிவம் உட்பட அனைத்தும் உங்களுடைய நினைவில் இன்னமும் இருக்கின்றது என்று எண்ணும் பொழுது தான் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கின்றது என்றாள் காந்தருவதத்தை.


🌟 ஏதோ எரிந்து கொண்டு இருப்பது போல எமக்கு தெரிகின்றதே! என்ன காந்தருவதத்தை பொறாமை வெளிப்படுகின்றதோ? என்று புன்னகை செய்தான் சீவகன்.


🌟 அதற்கு காந்தருவதத்தையும், சந்தையில் இருந்து வந்தது முதல் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் உங்களுடைய மனதில் இருந்து அகலவில்லை. அதிலும் அந்த பெண்ணின் முகம் சிறிதும் அகலவில்லை. இப்பொழுது நீங்கள் அவளுடைய தாளத்திற்கு ஆடி கொண்டிருக்கின்றீர்களோ? என்று கூறினாள்.


🌟 காந்தருவதத்தையின் இந்த கூற்று சீவகனுக்கு ஒருவிதமான குழப்பத்தையும், அவன் முகத்தில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டி கொள்ளாமல் சூழ்நிலையை எப்பவும் போல சுலபமாக கையாண்டு, எனக்கு எதிலும் தொடர்பு இல்லை என்று உரையை முடித்தான்.


🌟 காந்தருவதத்தை, சீவகனின் முகத்தில் தெரிந்த அனைத்தையும் பார்க்க தவறவில்லை. இருந்தாலும் அவனுடைய கூற்றுக்களை இவள் மனம் ஏற்று கொள்ளவில்லை. வீட்டிற்குள்ளே இருந்து வேலைக்கான குரல் வர.. இருங்கள் வருகின்றேன்! என்று சீவகனிடம் கூறிவிட்டு வீட்டிற்குள்ளே சென்றாள்.


🌟 காந்தருவதத்தை சென்றதும் அவன் மனம் மீண்டும் குழப்பத்திற்கே சென்றது. இப்பொழுது என்ன செய்வது? என்று புரியாமல் தூரிகையை கையில் எடுத்து குணமாலையின் படத்தின் மீது தங்க நிறத்தினை பூசி கொண்டிருந்தான். சித்திரங்கள் வரைந்து கொண்டே சீவகனின் மனமானது பலவிதமான சிந்தனை குவியல்களுக்குள் அகப்பட்டது.


🌟 கண்ணில் இருந்து நீங்காத அந்த பாவையின் தோற்றமானது, அவனை எதுவும் செய்ய விடாமல், தனக்கு தானே பேசிக்கொள்ளும் அளவில் புத்தியையும் குழப்பி விட்டது.


🌟 சீவகன் குணமாலையை பற்றி நினைத்து கொண்டிருந்த பொழுது, அவனது மனசாட்சி அவனிடத்தில், 'ஒரு பெண்ணை அவளறிய ஆடவன் ஒருவன் தொட்டு விட்டால், அவளை யாரும் மணக்க மாட்டார்கள். தொட்டவன் யாரோ அவன் தான், அவளை மணக்க வேண்டும். யானையின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக எண்ணி அவளை நீ தொட்டுவிட்டாய். இனி அவளின் நிலை என்னவாக போகின்றதோ?" என்று கூறியது.


🌟 அதற்கு சீவகன் அவனது மனசாட்சியிடத்தில், 'நான் ஏற்கனவே காந்தருவதத்தையை திருமணம் செய்து கொண்டேன். இனி மற்றொரு பெண்ணை மணப்பது என்றால் அது தவறாகி விடும் அல்லவா! அதுமட்டுமல்லாது துன்பத்தில் மாட்டி கொண்ட அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டு செல்வதும் ஆண்மை அல்ல. அவளை காப்பாற்றுவது தான் ஆண்மை" என்றும்,


🌟 ஒருவேளை நீ சொல்வது சரியாக இருந்தாலும், திருமணம் என்பது திருமகளின் எண்ணங்களில் தான் இருக்கின்றது. அவளுடைய விருப்பம் இல்லாமல் நான் அவளை மணக்கவும் இயலாது. இப்பொழுது நான் தான் இருதலை கொள்ளியாக மாட்டி கொண்டேன் என்றும், என்ன செய்வது? என்றே புலப்படவில்லை. ஆனால் மனதில் அவளோ நீங்காமல் நிறைந்திருக்கின்றாளே! என்றும் கூறினான்.


🌟 இங்கு நிகழ்ந்து கொண்டிருந்த அனைத்தையும் கண்ட கிளியோ, அவளின் நிலையை விட இவனின் நிலை மிகவும் விசித்திரமாக இருக்கிறதே என்று எண்ணியது. இப்படியே விட்டால் இவன் தன்னிலையை மறந்து விடுவானோ! என்று சிந்தித்து, பின் சீவகனிடம் சென்று அவளுக்கும் உன்னை மணம் புரிந்து கொள்ள விருப்பம் தான் என்று கூறிய வண்ணமாக அவன் முன் சென்றது.


🌟 யார் வீட்டு கிளி நீ? யார் கூறிய செய்தியை இங்கு வந்து கூறுகின்றாய்? என்றான் சீவகன்.


🌟 உன்னுடைய மனதில் தோன்றி இருக்கக்கூடிய குழப்பத்திற்கு காரணமானவளின் வீட்டிலிருந்து வந்து உமக்கு வேண்டிய நல்ல செய்தியை தான் நான் கூறியிருக்கின்றேன். இத்தனை நாட்களாக எனக்கு இந்த சிறகுகள் எதற்கு பயன்பட்டதோ... இல்லையோ... உமக்கு நற்செய்தியை உரைப்பதற்காக இன்று பயன்படுகிறது என்று கூறியது பேசும் கிளி.


🌟 நீண்ட நேரங்களாக சீவகனின் மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறந்தது. அவளுடைய மனதின் எண்ணங்களை புரிந்து கொண்ட சீவகனும் அவளை மணப்பதற்கான வாக்குறுதியை கூறினான்.


🌟 ராவணனின் பிடியில் அகப்பட்டிருந்த சீதையின் துன்பத்தை அனுமன் கொண்டு சென்ற ராமனின் கணையாழி எவ்விதம் போக்கியதோ, அதைப்போலவே அவளிடம் என்னுடைய கணையாழியை கொடு. அதுமட்டுமல்லாது இந்த ஓலையும் அவளிடம் சேர்த்துவிடு என்று கிளியின் காலில் கட்டினான்.


🌟 உன் நண்பர்களுக்கு நீ தான் தோழன்! அவளுக்கும் நீ தான் உற்ற தோழன்! உன் தோளில் அவள் துயில வேண்டும்! மேற்கொண்டும் நாட்களை கடத்தாதே.. என்று கூறிவிட்டு ஆகாயத்தின் வழியே பறந்து சென்றது பேசும் கிளி.


🌟 குணமாலையோ, பேசும் கிளி பறந்து சென்றது முதல் வானத்து வீதியையே பார்த்து காத்து கொண்டிருந்தாள். சென்ற கிளி கொண்டு வரும் செய்தி என்னவாக இருக்குமோ? என கவலையுடன் காத்து கொண்டிருந்தாள். வானில் பச்சையாக எது தெரிந்தாலும் அது கிளி என எண்ணி வானத்தை பார்த்த வண்ணமாக இருந்தாள். அருகில் யாரேனும் பச்சை என்ற பெயரை சொல்வதை கேட்டாலே, அவளின் பசியும் கூட பஞ்சு போல் பறந்து சென்றது.


🌟 விண்ணில் பறந்து தனக்கான செய்தியை கொண்டு வந்த கிளியை கண்டதும் குணமாலை அடைந்த மகிழ்ச்சி எல்லை இல்லாத அளவில் இருந்தது. அது மட்டுமல்லாமல் கிளியின் காலில் இருந்த கணையாழியை கண்டதும் சீவகனின் விருப்பம் என்னவென்றும் புரிந்து கொண்டாள்.


🌟 பின்பு கிளிக்கு தேவையான உணவினை கொடுத்து உறங்கு என்று கூறினாள். கிளி அவளுடைய அன்பையும், தனக்கு பிடித்த உணவையும் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தது. இதே போல தினமும் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் எண்ணியது.


🌟 குணமாலையின் செயல்பாடுகள் எப்பொழுதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கொண்டாள் விநயமாலை (குணமாலையின் தாய்). முகத்தில் எப்பொழுதும் இல்லாத மகிழ்ச்சியும், சம்பந்தம் ஏதும் இல்லாமல் அவ்வப்போது வெளிப்படும் அவளது புன்னகையும், ஒருவித பயத்தை அவளிடம் ஏற்படுத்தியது.


🌟 இதை இப்படியே விட்டால் சரியாக வராது என்பதை தெளிவாக புரிந்து கொண்ட விநயமாலை, அவளிடம் இருக்கக்கூடிய இந்த மாற்றங்களுக்கான காரணங்களை அவளிடமே வினவுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தினாள்.


🌟 குணமாலையின் தாயான விநயமாலை, குணமாலையிடம் உன்னுடைய மாமன் மகன் உன்னை திருமணம் செய்து கொள்வதற்காக வரப்போகின்றான் என்று கூறினாள்.


🌟 அவன் எப்படி என்னை மணந்து கொள்ள முடியும்? அவனை எனக்கு பிடிக்கவேயில்லை.. அவன் சீர்களை வேண்டாம் என்று மறுத்து விடுங்கள்! என்று குணமாலை கூறினாள்.


🌟 யானையிடம் பிடிபட்டு உயிர் பிழைத்ததில் இருந்து உன்னுடைய செயல்கள் அனைத்தும் வித்தியாசமாக தான் இருக்கின்றது. இதுவரை என்னிடத்தில் இப்படி நீ கூறியது இல்லை. இப்பொழுது உன்னுடைய மனதில் ஏதோ இருக்கின்றது என எனக்கு தெரிகின்றது. ஆனால் அது என்ன? என்பது தான் எனக்கு புரியவில்லை. காலம் தாழ்த்தாமல் நீயே உன்னுடைய மனதில் என்ன இருக்கின்றது? என்பதை தெளிவாக சொன்னால் சரியான முடிவை அந்தந்த காலத்திற்குள் எடுத்து கொள்ள முடியும். காலம் தாழ்த்தப்பட்டால் முடிவுக்கு உண்டான பலன்களும் மாறுபடும் என்பதை நினைவில் கொள் என்றாள் விநயமாலை.


🌟 ஆமாம்... என்னிடத்தில் மாற்றங்கள் நிறைய இருக்கின்றது தான்! அது தான் இப்பொழுது உங்களுக்கு பெரிய கவலையாக இருக்கின்றதா? என்று தன் தாயை பார்த்து குணமாலை கேட்டாள்.


🌟 குணமாலை, அவளது தாயை பார்த்து தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்கள் தான் உங்களின் கவலையாக இருக்கின்றதா? என்று கேட்டாள்.


🌟 எனக்கு அதுதான் கவலையாக இருக்கின்றது. உன்னுடைய மாமன் மகனுக்கு என்ன குறைச்சல் இருக்கின்றது? வீடு, மனை, தோட்டம் என அனைத்தும் அவனிடம் இருக்கின்றது. அவனை மணந்து கொண்டால் இங்கு இருப்பது போல் அங்கும் நீ சுகமாக இருக்கலாமே. அப்படி இருக்கும் போது ஏன் வேண்டாம் என்று கூறுகின்றாய்? அதற்கான காரணம் என்ன? என்று வினவினாள் விநயமாலை.


🌟 தாயின் கூற்றுக்களை கேட்டுக் கொண்டிருந்த குணமாலையோ, நான் திருமணம் செய்து கொண்டால் யானையிடமிருந்து என்னை காப்பாற்றிய வீரனுக்கு மட்டுமே மாலையிடுவேன். இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினாள். 


🌟 தன்னுடைய மகளின் கூற்றுக்களை கேட்டதும் அவளிடத்தில் என்ன கூறுவது என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள் விநயமாலை. பின்பு அவளிடம் நீ ஆசைப்பட்டவன் திருமணம் ஆகாதவனாக இருந்தால் பரவாயில்லை... ஆனால் அவன் இன்னொரு பெண்ணின் கணவன் ஆவான். அவனை எப்படி மீண்டும் நீ திருமணம் செய்து கொள்ள முடியும்? 


🌟 வீரனை மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் முடிவு செய்து விட்டால் பல ஆண்களின் நிலை என்னவாகும் என்பதே தெரியாது என்றாள் விநயமாலை.


🌟 மனதில் ஈரம் இருக்கின்ற பல மங்கையர்கள் இன்னும் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்களை பார்த்துக் கொள்வார்கள். என்னை அவர்களிடத்தில் சேர்த்து விடாதீர்கள். விட்டுவிடுங்கள் என்றாள் குணமாலை.


🌟 அப்பொழுது குணமாலையின் தந்தை வீட்டிற்கு வர, இருவருக்கும் இடையே காரசாரமான பேச்சுக்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை புரிந்து கொண்டதும், என்ன இருவரும் உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வினவினார்.


🌟 விநயமாலை தன்னுடைய கணவரிடம் மகள் மனதில் கொண்டுள்ள எண்ணங்களையும், ஆசைகளையும் பற்றி கூறினாள்.


🌟 மகளுடைய எண்ணங்களை அறிந்ததும் கோபப்படுவார் என எதிர்பார்த்த விநயமாலைக்கு நிகழ்ந்த நிகழ்வு ஒரே வியப்பாக இருந்தது.


🌟 அதாவது எந்தவிதமான கோபத்தையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக ஆள சிந்திக்க துவங்கினார். எந்தவித உரையாடலும் இன்றி கனப்பொழுதில் மிகுந்த அமைதி அவ்விடத்தில் தோன்றியது.


🌟 தன்னுடைய மகளை சீவகனுக்கு திருமணம் செய்து வைத்தால் கந்துக்கடனுடன் வியாபாரத்தில் இணைந்து நல்ல பொருள் லாபத்தை அடைய இயலும். வணிகமும் மேம்படும். ஏமாங்கத நாட்டின் மொத்த வணிகத்தையும் தங்கள் கைகளிலே வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினார். 


🌟 அதுமட்டுமல்லாமல் சீவகனும் நல்ல மணமகன் தானே. என்ன அவனுக்கு திருமணம் நடந்து விட்டது. அது ஒன்றுதான் இப்பொழுது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது என்று பல வினாக்கள் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்தன.


🌟 விநயமாலை சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த தனது கணவரை நிகழ்காலத்திற்கு கொண்டுவர அவரிடம் உரையாட துவங்கினாள். என்னங்க! எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றீர்களே. மகளுக்கு தகுந்த அறிவுரைகளை கூறலாம் அல்லவா! நான் கூறி அவள் எதுவும் ஏற்றுக்கொள்ளாமல் ஒரே பிடிவாதமாக இருக்கின்றாள் என்றாள்.


🌟 நான் பேசுகிறேன் என்று கூறி குபேரமித்திரன் தனது மகளை கூப்பிட்டு, என்ன ஒரு வித்தியாசமான ஆசை. திருமணமானவரிடத்தில் ஆசை கொள்வது சரியா? என்று மனதில் ஆசை இருந்தாலும் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.


🌟 குணமாலை தந்தையே! ஆபத்து நேரத்தில் சூழ்ந்து இருந்த அனைவரும் விலகிச் சென்ற பொழுது அவன் உயிரை துச்சமாக எண்ணி என்னை காப்பாற்றிய அந்த நொடியிலேயே நான் முழுவதும் அவனுக்கே சொந்தமாகி விட்டேன். அப்பொழுது மட்டும் அவன் வரவில்லை என்றால் இப்பொழுது உங்கள் முன் நான் நிற்க இயலாது. ஆகையால் நான் அவனை மட்டுமே மணந்து கொள்ள ஆசை கொள்கிறேன் என்று கூறினாள்.


🌟 அட அவன் உன்னை காப்பாற்றினான் என்றால் அதற்கு அவனுக்கு தக்க வெகுமதி கொடுத்து சிறப்பிக்கலாம். அதற்காக அவனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுவது தவறு என்றார். குணமாலையோ தந்தை கூறிய எந்த கூற்றுக்களையும் ஏற்று கொள்ளாமல் ஒரே பிடிவாதமாக இருந்தாள்.


🌟 மகளின் கூற்றுக்களை கேட்ட குபேரமித்திரனுக்கு அவள் கொண்டிருக்கக்கூடிய ஸ்திரத்தன்மை தெளிவாக புரிந்தது. இனி அவளை மாற்றுவது என்பது சற்று கடினமான வேலை தான் என்பதையும் புரிந்து கொண்டார். பலவிதமாக எடுத்து கூறியும் அவள் மனம் மாற்றம் அடைவதாக இல்லை. இறுதியாக சீவகனின் பெற்றோரிடத்தில் உரையாடுவோம். அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் திருமண நிகழ்வு பற்றி யோசிப்போம். அவர்கள் இல்லை என்று கூறிவிட்டால் உனது ஆசையும், கனவுகளையும் மறந்துவிட வேண்டும் என்று கூறினார்.


🌟 சீவகனின் எண்ணமும், ஆசையும் என்ன? என்பதை தெளிவாக புரிந்து கொண்ட குணமாலையோ, நடப்பதெல்லாம் சரியாக தான் நடக்கும் என்று எண்ணி தந்தையின் விருப்பத்திற்கு இணங்குவது போல உங்களின் முடிவே இறுதியாகட்டும் தந்தையே என்று கூறினாள்.


🌟 தனது மகள் கொண்டிருக்கக்கூடிய ஆசையை பற்றி விவாதிக்க குபேரமித்திரன் தனக்கு நெருக்கமான சில நண்பர்களுடன் கந்துக்கடன் வீட்டிற்கு சென்றார்.


🌟 குபேரமித்திரன் சில நண்பர்களோடு தன்னுடைய வீட்டிற்கு வருவதை கண்ட சுநந்தை அவர்களை இன்முகத்தோடு வரவேற்றாள். என்ன அண்ணா! இப்பொழுது தான் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு உங்களுக்கு வழி தெரிந்ததா? என்று வினவினாள்.


🌟 இப்பொழுது தான் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு உங்களுக்கு வழி தெரிந்ததா? என்று வினவினாள் சுநந்தை.


🌟 என் தங்கை வீட்டிற்கு வருவதற்கு எனக்கு எப்பொழுதும் வழி தெரியுமே. கொஞ்ச நாட்களாக வியாபார சம்பந்தமாக பயணங்கள் அதிகம் மேற்கொண்டமையால் வருவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது தங்கையே. எங்கே? அவர் இருக்கின்றாரா? என்று வினவினார் குபேரமித்திரன்.


🌟 அவர் இப்பொழுது தான் வெளியே சென்று இருக்கின்றார். இருங்கள் அண்ணா அவரை அழைத்து வருவதற்கு ஆள் அனுப்பி விடுகின்றேன் என்று கூறி, தனது வீட்டில் இருந்த வேலையாள் ஒருவர் மூலமாக குபேரமித்திரன் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்ற செய்தியை கந்துக்கடனிடம் தெரிவித்தாள். குபேரமித்திரன் வருகையை கேட்ட கந்துக்கடனும் வேகமாக வீட்டிற்கு வந்தார்.


🌟 வாருங்கள்... குபேரமித்திரா வாருங்கள்.... எங்கே என் தங்கை? அவளும் வந்திருக்கின்றாளா? என்றார் கந்துக்கடன்.


🌟 குபேரமித்திரன் அவரிடம் தங்கை வரவில்லை... நான் மட்டும்தான் வந்தேன். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்பதற்காக என்று கூறினார்.


🌟 சரி.. சரி.. தங்கை நலம் தானே. குழந்தை குணமாலை நலமாக தானே இருக்கின்றாள். செய்தி கேள்விப்பட்டேன் யானையின் பிடியில் சிக்கிக் கொண்டால் என்று. ஏதும் கவலைப்படும் அளவில் ஒன்றும் இல்லையே என்று நலம் விசாரித்தார்.


🌟 வீட்டில் அனைவரும் சுகமாகத்தான் இருக்கின்றோம். ஆனால் ஒருத்தியை தவிர என்று இழுத்தான் குபேரமித்திரன்.


🌟 ஏன்? யாருக்கு என்னவாயிற்று? செய்தி எதுவும் வரவில்லையே என்றார் கந்துக்கடன்.


🌟 இல்லை... இல்லை... அச்சப்படும் அளவில் ஏதும் நடக்கவில்லை. குழந்தை குணமாலை இன்னும் குழந்தையாகவே இருக்கின்றாள் என்று நீங்கள் தான் நினைக்கின்றீர்கள். ஆனால் அவள் வளர்ந்து விட்டேன் என்று என்னிடம் கூறுகிறாள் என்றார்.


🌟 ஏன்? குணமாலைக்கு என்ன ஆயிற்று? என்றார். 


🌟 பருவ வயதிற்கு உண்டான ஆசைகள் அவளிடத்தில் வெளிப்பட துவங்கி விட்டது. அவளுடைய மனதை கள்வன் ஒருவன் கவர்ந்து விட்டான் என்று என்னிடமே கூறுகிறாள்.


🌟 அட இவ்வளவு தானே. எவ்வளவு மகிழ்ச்சியான விஷயத்தை இவ்வளவு சோர்வாக கூறுகிறாய். யார் அந்த அதிர்ஷ்டசாலி? குபேரமித்திரன் பெண்ணை மணந்து கொள்ள போகும் பாக்கியசாலி யார்? எந்த இளைஞனுக்கு கொடுத்து வைத்திருக்கின்றது இந்த பாக்கியம் என்றார்.


🌟 கொடுத்து வைத்தது குணமாலையா? அல்லது மணந்து கொள்ளக்கூடிய வாலிபனா? என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் வாலிபனை பற்றி விசாரிக்கையில் அவன் குணமாலையை விட சிறந்தவனாக இருக்கின்றான் என்று கூறுகின்றார்கள் என்றார்.


🌟 யார் அந்த வாலிபன்? ஏன் இவ்வளவு பொடி வைத்து பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்? பெயரை சொல்லும் குபேரமித்திரா? நானும் தெரிந்து கொள்வேன் அல்லவா!


🌟 உங்களுக்கும் தெரிந்த நபர்தான். புதிய நபர் ஒருவரும் இல்லை என்றான்.


🌟 உங்களுக்கும் தெரிந்த நபர்தான். புதிய நபர் ஒருவரும் இல்லை என்றார் குபேரமித்திரன்.


🌟 எனக்கு தெரிந்த நபரா! ஆச்சரியமாக இருக்கின்றதே என்னிடத்தில் யாரும் இதை கூறவில்லையே... யார் அந்த வாலிபன்? என்றார் கந்துக்கடன். 


🌟 வேறு யாரும் இல்லை. உங்கள் மகன் சீவகன் தான் என்று கூறினான் குபேரமித்திரன்.


🌟 குபேரமித்திரனின் கூற்றுக்களை கேட்டதும் கந்துக்கடன் மிகவும் ஆச்சரியம் கொண்டான். உங்கள் வீட்டு சம்பந்தம் கிடைப்பது பாக்கியமாக இருந்தாலும் சீவகனுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா? என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! அப்பொழுது தானே நான் உங்களுக்கு தெளிவான முடிவை கூற முடியும்.


🌟 அப்படி என்றால் உடனே சீவகனிடம் கேளுங்கள் என்று குபேரமித்திரன் கூறினார்.


🌟 அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருந்த பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக சீவகன் அவ்விடத்திற்கு வருகை தந்தான்.


🌟 கந்துக்கடனோ தனது மகனான சீவகனிடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பற்றி கூறி இதில் உன்னுடைய விருப்பம் என்ன? என்பதை பற்றி வினவினார்.


🌟 சீவகனுக்கு மனதில் ஆசைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் பெரியோர்கள் விருப்பம் என்னவோ அதற்கு அடிபணிந்து செயல்படுகின்றேன் என்று கூறினான்.


🌟 கந்துக்கடனுக்கோ என்ன சொல்வது என்று புரியாமல் அவ்விடத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தான். 


🌟 சீவகனின் கூற்றை கேட்டது குபேரமித்திரன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். பிறகு என்ன கந்துக்கடனே இனிமேல் நாம் இருவரும் சம்மந்திகளாவோம்... மிக்க மகிழ்ச்சி. வந்த காரியம் இனிதே நிறைவேறியது. இனிமேல் திருமணத்திற்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டியது தான் என்று கூறினார் குபேரமித்திரன்.


🌟 சீவகனுக்கு திருமணம் என்ற செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல பரவியது. ஒவ்வொருவரும் சீவகனை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 


🌟 ஊரிலிருந்த மற்ற இளைஞர்களுக்கு சீவகனின் மீது மிகுந்த பொறாமையும், கோபமும் தோன்றிய வண்ணமாக இருந்தது. சீவகனுக்கு யாருக்கும் தெரியாமல் அதிர்ஷ்டமான மச்சம் இருக்குமோ என்னவோ, அவன் முதல் மனைவியான காந்தருவதத்தையோ பேரழகியாக இருக்கின்றாள், இப்பொழுது திருமணம் செய்ய போகின்றவளோ அழகில் சிறந்தவளாக இருக்கின்றாள் என்று அனைவரும் புகழ்ந்த வண்ணமாக பேசிக் கொண்டிருந்தனர்.


🌟 குணமாலைக்கும், சீவகனுக்கும் திருமணம் நடைபெற போகின்றது என்ற செய்தி, கட்டியங்காரனின் செவிகளுக்கு எட்டியதும் இந்த திருமணத்தை எவ்விதத்தில் தடுத்து நிறுத்துவது? என்று சிந்தித்தான்.


🌟 ஏற்கனவே மணம் முடித்தவன் மீண்டும் மணம் முடித்தால் அவனுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று எண்ணினான். இருந்தாலும் அந்த எண்ணம் கட்டியங்காரனுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் வண்ணமாகவே இருந்தது. ஏனென்றால், அந்தப்புரத்தில் பல பெண்கள் இருந்தனர்.


🌟 இவன் நாளுக்கு நாள் நம்மை விட மக்களிடத்தில் பிரபலமாக வளர்ந்து கொண்டே வருகின்றான். இவனை எவ்விதத்திலாவது அழித்தே தீர வேண்டும்! என்று அவனுடைய சிந்தனைகள் சீவகனை பற்றியே இருந்தது.


🌟 சீவகன் காந்தருவதத்தையை மணந்த போது என்னால் எதையும் தடுக்க முடியாமல் போய்விட்டது என்றும், இனியும் அவனை இப்படியே விடக்கூடாது என்றும் எண்ணினான்.


🌟 குபேரமித்திரனின் மகளான குணமாலை தெருவில் நடந்து வந்தாலே, அவளை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் அங்கு அலைமோதும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அவ்வளவு லாவண்யம் நிறைந்த குணமாலையை இவன் திருமணம் செய்து கொள்ள போகின்றான் என்பதை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. இவனை இப்படியே விடக்கூடாது. இவன் மீது ஏதாவது பழி சுமற்றி இவனை சிறைப்படுத்த வேண்டும் என்று எண்ணினான். அதற்கான வாய்ப்பும் அவனுக்கு கிடைக்க துவங்கியது.


🌟 திருமணத்திற்கான ஏற்பாடுகள் யாவும் நன்முறையில் நடைபெற்று கொண்டிருந்தன. சீவகனும், குணமாலையும் தங்கள் திருமணத்திற்கான நாட்களை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.


🌟 சீவகன் தனது தாயிடம், இப்பொழுது நடைபெறும் இந்த திருமணத்தினால் தன் மனைவியான காந்தருவதத்தைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் உண்டாகக்கூடாது, ஒருவேளை பாதிப்புகள் உண்டாவதை அறிந்தால் மூவரின் திருமண வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகி விடும் என்றும் கூறினான்.


🌟 சீவகனின் கூற்றுக்களுக்கு அவனுடைய தாயான சுநந்தை, சமையல் அறையில் இருந்த வண்ணமாக காந்தருவதத்தைக்கு இந்த திருமணத்தால் எந்தவிதமான பாதிப்புகளும் உண்டாகாது என்று வாக்குறுதி அளித்தார். அதன் பின்பே சீவகனும் (மனதில் குணமாலையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தும்) பெற்றோர்களின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தான்.


🌟 ஒருபுறம் சீவகன் தன் தாயிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, மறுபுறம் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பும், காரணமும் கட்டியங்காரனுக்கு கிடைத்தது.


🌟 மனதளவில் கோபமும் என்ன செய்வது? என்று தெரியாமல் அரண்மனையில் உலாவி கொண்டிருந்த பொழுது காவலன் ஒருவன் வந்து, மன்னா! தங்களை பார்க்க யானை கூடத்தில் இருந்து பாகன்கள் வந்திருக்கின்றார்கள் என்று கூறினான்.


🌟 காலம் நேரம் தெரியாமல் தான் இவர்கள் என்னை பார்க்க வருவார்கள் என்று கடிந்து கொண்டு, அவர்களை சிறிது நேரம் கழித்து வந்து என்னை பார்க்க சொல் என்று கட்டியங்காரன் கூறினான்.


🌟 மன்னனின் கூற்றுக்களை கேட்டு கொண்ட காவலன், யானை பாகன்களிடம் சென்று மன்னன் கூறியதை கூறினான். அவர்களும் வேறு வழியின்றி சிறிது நேரம் மன்னரை பார்ப்பதற்காக காத்து கொண்டிருந்தனர்.


🌟 இந்த குணமாலையை இவன் திருமணம் செய்வதை எப்படி தடுப்பது? என்று சிந்தித்த வண்ணமாக இருக்க, அவ்விடத்தில் யானை பாகன்கள் சிலர் காத்து கொண்டிருந்ததை பார்த்து, யார் அங்கே? நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கட்டியங்காரன் வினவினான்.


🌟 அங்கு இருந்தவர்கள், மன்னா! நாங்கள் யானை பாகன்கள் என்று கூறினார்கள். அப்பொழுது தான் கட்டியங்காரனுக்கு காவலன் கூறியது நினைவுக்கு வந்தது. பின் அவர்களை பார்த்து என்ன செய்தி? என்று கேட்டான்.


🌟 அதற்கு யானை பாகன்கள், அசனி வேகம் (சீவகன் அடக்கிய மதம் பிடித்த யானையின் பெயர்) என்ற யானை உணவு உட்கொள்ள மறுக்கின்றது என்று கூறினார்கள்.


🌟 யானை உணவு உட்கொள்ளவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? அதற்கு தானே நீங்கள் அனைவரும் இருக்கின்றீர்கள் என்று கட்டியங்காரன் கடிந்து கூறினான்.


🌟 யானை பாகன்களோ, மன்னா! நாங்கள் பலமுறை முயற்சி செய்து பார்த்து விட்டோம். எவ்வளவு முயற்சி செய்தாலும் யானை கொஞ்சம் கூட உணவு உண்ணவில்லை என்று கூறினார்கள்.


🌟 கரும்பை கொஞ்சம் அதிகம் கொண்டு வந்து போட்டு பாருங்கள் என்று மன்னன் கூற, பாகன்களோ மன்னா கரும்பையும் அதிகம் கொண்டு வந்து போட்டு பார்த்தோம், யானை அதையும் உண்ணவில்லை என்றார்கள்.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)