நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
சீவக சிந்தாமணி...!!
🌟 யானை பாகன்களோ, மன்னா! கரும்பையும் அதிகம் கொண்டு வந்து போட்டு பார்த்தோம், யானை அதையும் உண்ணவில்லை என்று கூற,
🌟 அதற்கு கட்டியங்காரன், என்ன? யானைக்கு அதிக கரும்புகள் வைத்தும் உண்ண மறுக்கின்றதா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்? என்று யானை பாகன்களிடம் வினவினான்.
🌟 'இது இளவேனிற்காலம் என்பதால் யானை விளையாடுவதற்காக காட்டிற்கு அழைத்து சென்றோம். காட்டில் இருந்து அரண்மனைக்கு அழைத்து வரும் பொழுது யானைக்கு மதம் பிடித்து விட்டது. எங்களுடைய கட்டுப்பாடுகள் அனைத்தையும் தாண்டி யானை ஓட துவங்கியது. பின்பு சந்தையில் இருந்த மக்களையும், அங்கிருந்த பொருட்கள் என அனைத்தையும் நாசம் செய்ய துவங்கி விட்டது. பின்பு சீவகன் அவ்விடம் வந்து யானையை அடக்கி அமைதிப்படுத்தினான்" என்று அங்கு நிகழ்ந்த அனைத்தையும் யானை பாகன்களில் ஒருவன் கூறினான்.
🌟 இதை கேட்டதும் கட்டியங்காரனுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. எப்படி அரசனின் பட்டத்து யானையை தொடலாம்? என்று அவ்விடம் அதிரும் படியாக கத்தினான்.
🌟 மன்னர் கோபத்தின் உச்ச நிலையை கண்ட யானை பாகன்கள், என்ன சொல்வது? என்று தெரியாமல், யானையை கட்டுப்படுத்த முடியாத அளவில் மதம் பிடித்து விட்டது. எங்களால் அடக்க முடியவில்லை என்று பாவமாக கூறினார்கள்.

🌟 உங்களால் முடியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து அதுவே அமைதியாகி இருக்கும். இதற்காக அரசனின் பட்டத்து யானை மீது அவன் எப்படி கை வைக்கலாம்? இதற்கு நீங்கள் எப்படி சம்மதித்தீர்கள்? என்றான் கட்டியங்காரன்.
🌟 அப்பொழுது கட்டியங்காரனை காண அவனுடைய மைத்துனன் மதனன் வந்தான். ஏற்கனவே கட்டியங்காரன் கோபத்தின் உச்சத்தில் இருந்ததை அறிந்து கொண்டு, இந்த செயல் ராஜ துரோகம் என்றும், இவனை இப்படியே விடக்கூடாது என்றும் மதனன் கூறினான்.
🌟 அதுவரை சீவகனை கைது செய்வதை பற்றி சிந்திக்காமல் இருந்த கட்டியங்காரனுக்கு மதனனின் கூற்றுக்கள் ஒரு முடிவினை எடுக்க உதவியது.
🌟 எங்கே சீவகன் இருந்தாலும் அவனை உடனடியாக உயிரோடவோ அல்லது பிணமாகவோ கைது செய்து, என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என்று படை தலைவர்களுக்கு கட்டியங்காரன் கட்டளையிட்டான்.
🌟 இதை கேட்ட மதனன் தக்க படைகளுடன் கந்துக்கடன் இல்லம் நோக்கி சென்றான்.
🌟 அரண்மனையில் நிகழ்ந்த நிகழ்வுகள் எதுவும் அறியாத சீவகன், நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய திருமணத்திற்கான நிகழ்வுகளை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தான். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சூழ குணமாலையை கை பிடித்தான்.
🌟 உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சூழ குணமாலையை கை பிடித்தான். மணமக்கள் இருவரையும் ஆசீர்வதித்த பின்பு, அவ்விருவருக்கும் சிறிது நேரம் தனிமை கிடைத்தது.
🌟 கிடைத்த சிறிது நேரத்தில், சீவகன் சந்தையில் கண்ட காட்சிகளை அன்று ஓவியமாக வரைந்ததை குணமாலையிடம் காட்ட விரும்பி, ஓவியத்தின் மீது இருந்த துணியை விலக்கினான்.
🌟 முன்னே சீவகனிடம் தூது வந்த கிளியானது, சீவகன் வரைந்த படத்தை பார்த்துவிட்டு குணமாலையிடம் சென்று, ஓவியத்தை கண்ட போது ஏதோ அவை கண் முன்பே நிகழ்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும் என்றும், ஓவியம் மிகவும் எழில் மிகுந்து இருக்கும் என்றும் கூறியது.

🌟 அந்த கிளி கூறியது நினைவிற்கு வர, மிகுந்த ஆவலுடன் குணமாலையும் அந்த ஓவியத்தை பார்க்க சற்றே வியந்தும் போனாள்.
🌟 ஏனென்றால் ஓவியமானது அவ்வளவு லாவண்யமாக இருந்தது. அதில் குணமாலை அணிந்திருந்த அணிகலன்கள் மட்டும் அல்லாது அவளுடைய கழுத்துக்கு கீழே இருக்கும் சிறு அளவிலான மச்சத்தையும் வரைந்திருந்ததை எண்ணி ஆச்சரியம் கலந்த வியப்படைந்தாள்.
🌟 பின் சீவகனை நோக்கி அன்று ஏதோ நிறைவாக பார்க்க முடியவில்லை என்று கூறினீர்கள். ஆனால் ஓவியத்தை பார்த்தால் அப்படி ஏதும் தெரியவில்லையே?
🌟 ஆமாம்.. அன்று நான் உன்னை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமையாக பார்க்க முடியவில்லை. ஏதோ அந்த பொழுதில் கண்ட சில காட்சிகளை கொண்டு தான் இந்த ஓவியத்தை வரைய முடிந்தது என்றான் சீவகன்.
🌟 கிடைத்த சிறு கணப்பொழுதில் கண்ட காட்சியே இவ்வளவு லாவண்யமாக இருந்தால், இனி முழுமையை கண்டால் அது எவ்விதம் இருக்குமோ? என்று குணமாலை கூறினாள்.
🌟 அதற்கு சீவகன், பாவையின் கடை கண்பார்வை என்பது வீரனையும் பார்வையற்றவனாக மாற்றும் பொழுது என்னை கலைஞனாக மாற்றாதா என்ன? சின்னஞ்சிறு மனதில் பதிந்த நிகழ்வே இவ்வளவு அழகு எனில், இனி நான் காண போகும் லாவண்ய காட்சிகள் எப்படி இருக்குமோ? என்று பதில் கூறினான்.
🌟 சீவகனின் கூற்றை கேட்டதும் நாணத்துடன் வெட்க புன்னகையை தவழவிட, அவர்கள் இருவருக்கும் இடையே ஒருவிதமான புதிய மொழியில் ஒளியும், ஒலியும் இல்லாமல் விழிகள் இந்த உலகத்தையே மறந்த வண்ணமாக பேசி கொண்டிருந்தன.
🌟 அவள் முகத்தில் அவ்வேளையில் உருவாகிய முறுவலை கண்டு அவன் முகம் நுட்பமாக மலர்ந்தது. காலம் சென்றது தெரியாமல் கதிரவன் மறைய, திங்கள் கலங்கரை போல் வெளிச்சமிட, இரவில் களியாட்டம் இருவருக்கும் நடைபெற, யாரும் சற்றும் எதிர்பாராதவர்கள் அப்போது வந்தனர்.
🌟 அதாவது அந்த சமயத்தில் மதனன் அனுப்பிய காவலர்கள் சீவகனின் வீட்டை சூழ்ந்த வண்ணமாக நின்றனர். தவறு செய்தவர்களே, காவலர்களை பார்த்து ஓட வேண்டும். நாம் ஏன் மறைந்து ஓட வேண்டும்? என்று எண்ணிய கந்துக்கடன் வந்தவர்களிடம் இப்படி வந்து நிற்பதற்கான காரணம் என்ன? என்று வினவினார்.
🌟 அதற்கு காவலர்களில் ஒருவன், உங்களது மகனை கைது செய்ய சொல்லி மன்னன் கட்டளையிட்டுள்ளார். அதை நிறைவேற்றவே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். எங்களுடைய பணியை தடுத்தால் ஏற்பட போகும் விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகவே சீவகனை உடனே எங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினான்.
🌟 காவலன் கூறிய செய்தியினால், கந்துக்கடனுக்கு இங்கு நிகழ்வது என்னவென்று? ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. இந்த தகவலானது காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவியது.
🌟 சீவகனிடத்தில் கந்துக்கடன் மன்னனின் கட்டளையை எடுத்து கூற, சீவகனும் இது தன் மீது கொண்ட கோபத்தின் செயல் தான் என்பதை புரிந்து கொண்டான்.

🌟 சீவகனின் தந்தையான கந்துக்கடன் அவனை பார்த்து, மன்னனின் ஆணையை எதிர்த்து செயல்பட்டால் இன்றைய சூழலில் நமக்கு மட்டுமல்லாது நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தும். ஆகவே தவறான செயல்களை ஏதும் செய்ய வேண்டாம். இப்பொழுது காவலர்களுடன் நீ செல்வாயாக! உன்னை காப்பாற்றுவதற்கான அனைத்து செயல்களையும் நான் மேற்கொள்வேன் என்று கூறினார்.
🌟 சீவகனுக்கும் தந்தை கூறிய கூற்றுக்களிலிருந்த பொருள் நன்கு புரிந்தது. ஆகவே அவனும் அமைதி காத்தான். சீவகனின் தாயும், தந்தையினுடைய கூற்றுக்களில் சில நன்மைகள் இருக்கிறது மகனே! தந்தையின் கூற்றுக்களின்படி செயல்படு என்று கூறினாள்.
🌟 பின் கந்துக்கடன் சீவகனை பார்த்து, மன்னனிடம் உன்னை பற்றி ஏதோ தவறாக சில செய்திகள் சொல்லியிருப்பதனால் தான் அவர் உன்னை கைது செய்யும் அளவுக்கு கட்டளையிட்டுள்ளார். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும், நான் அவரிடம் பக்குவமாக சொல்லி உன்னை விடுவிக்க வைக்கின்றேன் என்றும் கூறினார்.
🌟 சீவகனை கைது செய்ய காவலர்கள் வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்ட குணமாலையோ, இது என்ன கொடுமை? என்னுடைய திருமண நாளன்று தான் இந்த நிகழ்வுகளெல்லாம் நடைபெற வேண்டுமா? என்று எண்ணியபடியே சுயநினைவின்றி மயக்கம் அடைந்தாள்.
🌟 சீவகனும் தந்தையின் கூற்றுக்களுக்கு இணங்கி, மன்னனின் கட்டளைபடியே காவலர்களிடம் சென்றான். வீரம் நிறைந்த வாளேந்திய கரங்களில் கை விலங்கிட்டு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் அழைத்து சென்றனர்.
🌟 சீவகனை கைது செய்த காவலர்கள் சிறைச்சாலைக்கு அவனை அழைத்து சென்று கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியை கேட்ட அவனுடைய நண்பர்கள் அனைவரும் சீவகனை பார்ப்பதற்காகவும், காவலர்களை எதிர்ப்பதற்காகவும் படைகளை திரட்டி அவ்விடத்திற்கு சூழ்ந்து வந்து கொண்டிருந்தனர்.
🌟 சீவகனை கைது செய்த காவலர்களை எதிர்ப்பதற்காக சீவகனின் நண்பர்கள் வந்தனர். ஆனால் சீவகனோ தனது நண்பர்களிடம் எந்தவித எதிர்ப்புகளையும், தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று ஒலி இல்லாமல் அவர்களுக்குள்ளே உரையாடி கொள்ளக்கூடிய அமைதியான முறையில் சைகை காட்டினான்.
🌟 சீவகனுடைய சைகையை புரிந்து கொண்ட அவனுடைய நண்பர்களும் வேறு வழியில்லாமல் எந்தவித எதிர்ப்புகளையும் காட்டாமல், பெரும் படைகளையும் எதிர்க்கக்கூடிய வல்லமையும், திறமையும் இருந்தும் அமைதி காத்தனர்.
🌟 காவலர்கள் சீவகனை அழைத்து கொண்டுபோய் குற்றவாளிகள் இருக்கும் சிறையில் அடைத்து, உன்னுடைய நாட்கள் மிகவும் குறைவாக இருக்கின்றதோ? என்று கூறி சிரித்து கொண்டிருந்தார்கள்.
🌟 சீவகனோ அவர்களை நோக்கி, முகத்தில் எந்தவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் 'பார்ப்போம் யாருக்கெல்லாம் நாட்கள் குறைவாக இருக்கிறது" என்று மனதில் நினைத்த வண்ணமாக அமைதி காத்தான்.
🌟 சீவகனின் தந்தையான கந்துக்கடன் மன்னனை பார்க்க சென்றார். அங்கு அவர் எவ்வளவு கூறியும் மன்னனிடம் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. பொன்னும், பொருளும் தருவதாக கூறியும் மன்னன் எதற்கும் அசையவில்லை. மன்னன் அவனுடைய முடிவில் உறுதியாக இருந்தான். சீவகன் அடக்கிய யானை மூலமாக தான் அவனுக்கான தண்டனைகளை அளிக்க வேண்டும் என்று கந்துக்கடனிடம் கூறினான்.

🌟 இதை கேட்டதும் என்ன செய்வது? என்று புரியாமல் அமைதியாக அவ்விடம் விட்டு அகன்றார் கந்துக்கடன்.
🌟 அங்கு நிகழ்ந்த அனைத்தையும் அறிந்து கொண்ட சீவகனின் நண்பனான பதுமுகனுக்கு கோபம் அதிகரித்தது. பின் நண்பர்களிடம், சீவகன் இவ்விதம் கைதாகி இருக்கக்கூடாது. தந்தையின் கூற்றுக்களை நம்பி சீவகன் சரண் அடைந்தது மிகவும் தவறு என்று கூறி தன்னிடம் இருந்த வாளை சுற்றி கொண்டிருந்தான்.
🌟 அப்போது அவன் அருகில் இருந்த நந்தட்டனோ, பொன்னும்.. பொருளையும்.. கொடுத்தால் கட்டியங்காரன் மனம் மாறிவிடுவான் என்று எண்ணியது மிகவும் தவறாகி விட்டது. சீவகன் மீது கட்டியங்காரனுக்கு ஏதோ தனிப்பட்ட வஞ்சம் இருக்கின்றதோ? என்னவோ?
🌟 அதுமட்டுமல்லாமல் அரசனுடைய பட்டத்து யானையை அடக்கியது என்பது ஒரு சிறு காரணம் தான். இதற்கு பின் ஏதோ ஒன்று இருக்கிறது என்றும், அதனால் தான் மன்னன் அவ்விதமாக கட்டளையை பிறப்பித்து இருக்கின்றான் என்றும் நந்தட்டன் கூறினான்.
🌟 இனிமேலும் பழைய கதைகள் பேசி எந்தவிதமான பயனும் இருக்க போவதில்லை. நிகழ்ந்தது, நிகழ்ந்தது தான். இனி நிகழப்போவது என்ன? என்பதை தான் நாம் யோசிக்க வேண்டும்.
🌟 வெற்றி பெற போகின்றோம் என்ற சிந்தனை இருந்தால் மட்டுமே நாம் பல இன்னல்களையும், தடைகளையும் கடந்து வர இயலும் என்று விபுலன் பொறுமையாக அவர்களிடம் கூறி கொண்டிருந்தான்.
🌟 சீவகனின் நண்பர்கள் பேசி கொண்டிருந்த பொழுது, அவர்களின் மற்றொரு நண்பனான புத்திசேனன், அவர்களிடத்தில் வந்து ஒரு தகவலை கூறினான். எந்த யானையை சீவகன் அடக்கினானோ அந்த யானையின் கால்களினாலேயே சீவகனை மிதித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கின்றன என்று மிகுந்த பதற்றத்தோடு கூறினான்.
🌟 இதை கேட்ட அங்கிருந்த அனைவரும் இதுவரை பொறுமை காத்தது போதும். இனிமேல் நாம் செயல்படுவது தான் நம்முடைய நண்பனான சீவகனின் உயிரை காப்பாற்ற உதவும். ஆகவே இப்பொழுது நாம் எதை செய்தாலும் அதை துரிதமாகவும், உடனடியாகவும் செய்ய வேண்டும் என்று அவர்களிடையே உரையாடி கொண்டிருந்தனர்.
🌟 அப்பொழுது பதுமுகன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சீவகனை காப்பாற்றுவதற்கு உகந்த வழி என்பது என்னிடத்தில் இருக்கின்றது என்று கூறினான்.
🌟 அதாவது ஊரின் வடக்கு பகுதியில் தீ விபத்தை ஏற்படுத்துவதன் மூலம் மக்களிடையே சிறு குழப்பமும், அவர்களிடத்தில் கலவரமும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பற்றிய நெருப்பானது பரவி நகரத்தை அழிக்க ஆரம்பிக்கும்.
🌟 அப்பொழுது காவலர்கள் அனைவரும் தீயை அணைப்பதற்காகவும், கலவரத்தை அடக்குவதற்காகவும் அவ்விடத்திற்கு செல்வார்கள். அந்த வேளையில் நாம் அனைவரும் காவலர்கள் உடையை அணிந்து கொண்டு மாறுவேடத்தில், சீவகனிருக்கும் சிறைக்கு சென்று அந்த சிறுகாலத்திற்குள் சீவகனை விடுதலை செய்து, வெளியே அழைத்து வரவேண்டும் என்று பதுமுகன் கூறினான்.

🌟 அப்பொழுது அங்கிருந்த சீவகனின் நண்பர்களில் ஒருவன் உன்னுடைய திட்டமும், எண்ணமும் நல்ல முறையில் தான் இருக்கிறது. இருந்தாலும் சீவகனிருக்கும் சிறையை விட்டு மதனன் போக மாட்டானே? அவன் அங்கேயே தானே இருப்பான்.
🌟 மதனன் அங்கேயே இருந்தால் அவனை நானே கொல்கிறேன். என்னுடைய அம்பு அவன் உயிரை பதம் பார்க்கும். அவனை கொன்றுவிட்டு தான் சீவகன் வெளியே வரவேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும் என்று கூறினான் பதுமுகன்.
🌟 இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருந்த பொழுது, நானும் என்னுடைய கருத்துக்களை கூறலாமா? என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க, அங்கிருந்த அனைவரும் மிகுந்த பதற்றத்தோடு திரும்பி பார்த்தார்கள்.
🌟 அந்த குரலுக்கு சொந்தக்காரி வேறு யாருமில்லை. சீவகனின் முதல் மனைவியான காந்தருவதத்தையே.
🌟 பின் காந்தருவதத்தை சீவகனின் நண்பர்களை பார்த்து, யானையின் பிடியில் சிக்கி கொண்ட பெண்ணை காப்பாற்றுவதற்கு முடியாமல் அனைவரும் ஓடினார்கள். என் கணவன் தான் அப்பெண்ணை காப்பாற்றினார். அப்பெண்ணை காப்பாற்றியதற்கு தகுந்த மரியாதைகள் எதுவும் கொடுக்கப்படாமல், அவரை அவமதிக்கும் வழியில் மன்னன் செயல்பட்டு கொண்டிருக்கின்றான். இதை எவ்விதம் ஏற்று கொள்வது என்று கோபம் கொண்டாள்.
🌟 காந்தருவதத்தையே பொறுமை கொள்வாயாக! சீவகனை மீட்பது பற்றி தான் நாங்கள் அனைவரும் சிந்தித்து கொண்டிருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டு அவனை எப்படியும் சிறையிலிருந்து விடுவித்து விடுவோம் என்று கூறினார்கள் சீவகனின் நண்பர்கள்.
🌟 நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் அனைத்தும் எனக்கு தெரியும். யாரையும் எதற்காகவும் தீயிலிட்டு எரிக்கவும் வேண்டாம்.. யாருடைய உயிரையும் எடுக்கவும் வேண்டாம்.. அவரை மீட்பதற்கு தேவையான மந்திரங்கள் அனைத்தும் எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் அனைவரும் பொறுமையுடன் செயல்படுவதே போதுமானது என்று கூறினாள் காந்தருவதத்தை.
🌟 அங்கிருந்த சீவகனின் நண்பர்களில் ஒருவன், உன்னுடைய மந்திரத்தின் மூலமாக சீவகன் வெளியே வந்தால் அது அவனுக்கு ஒரு பழி சொல்லாகவே அமைந்து விடும். மனைவி செய்த உதவியின் மூலமாக தானே இவன் உயிர் பிழைத்தான் என்று யாவரும் பேசி கொள்வார்கள் என்று கூறினான்.
🌟 இதை கேட்ட காந்தருவதத்தை, மற்றவர்கள் கூறும் பழி சொல்லுக்கு பயந்து அவர் என்னுடைய உதவிகளை பெறாமல், உயிர் பிழைக்காமல் போவது தான் சிறந்தது என்று நீங்கள் விரும்புகின்றீர்களா? என்றாள்.

🌟 உடனே பதுமுகன், இல்லை காந்தருவதத்தை. நாங்கள் அவ்விதம் கூறவில்லை. அன்று சீதை நினைத்திருந்தால் ராவணனை அவளுடைய சொல்லினாலே கொன்றிருக்க முடியும். ஆனால் அது ராமருடைய வில்லுக்கு இழுக்காகும் என்று அங்கு ஏற்பட்ட அனைத்து கொடுமைகளையும் பொறுத்து கொண்டிருந்தாள் அல்லவா! அதைப்போல தான் உன்னையும் பொறுமை காத்து அமைதி கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம் என்று கூறினான்.
🌟 உடனே அங்கிருந்த புத்திசேனன், எதற்கு நாம் நமக்கிடையே உரையாடி கொண்டே இருக்க வேண்டும்? காந்தருவதத்தை சிறைக்கு சென்று சீவகனை பார்த்து, இங்கு நிகழ்ந்த நிகழ்வுகளை அவள் எடுத்துரைக்கட்டும். பின் சீவகன் என்ன முடிவு எடுக்கின்றான்? என்பதை நாமும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று கூறினான்.
🌟 இதுவும் நல்ல யோசனையாக தான் இருக்கின்றது. இதையே நாம் முதலில் செயல்படுத்துவோம் என்று கூறினாள் காந்தருவதத்தை.
🌟 தன்னுடைய மந்திர ஜாலத்தின் மூலமாக யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் சீவகனிருக்கும் சிறைச்சாலையை அடைந்தாள் காந்தருவதத்தை.
🌟 சிறைச்சாலையில் காந்தருவதத்தையை கண்ட சீவகன் புன்னகை பூத்த வண்ணமாக அவள் அருகில் வந்தான். இருவரும் ஒரு நொடியில் ஓருயிராக இருந்து பின்பு ஈருயிராக பிரிந்து நின்றனர்.
🌟 பின்பு சீவகனிடம் நண்பர்களுடைய திட்டத்தை பற்றியும், தன்னுடைய திட்டத்தை பற்றியும் எடுத்து கூறினாள்.
🌟 காந்தருவதத்தை மற்றும் நண்பர்களின் திட்டத்தை கேட்ட சீவகன், இந்த மதனன் மற்றும் சிறை காவலர்களை கொன்று விட்டு வெளியே வருவதற்கு எனக்கு சிறு நொடிகள் ஆகாது.
🌟 இவர்களை கொல்வதால் மட்டும் எனக்கு என்ன நன்மை ஏற்பட போகின்றது? எனக்கான வேலை செய்வதற்கு இன்னும் காலம் வரவில்லையே. அந்த காலம் வரும் வரை நான் காத்திருக்க வேண்டும் அல்லவா!
🌟 நாட்டை எரித்து தான், நான் வெளியே வருவது என்றால் என்னை நானே எரிப்பதற்கு சமமாகும். நானும், என்னுடைய நாடும் வேறல்ல. இந்த யோசனை எனக்கு பிடிக்கவில்லை என்றும், உன்னுடைய யோசனை மிகவும் நல்ல யோசனையாக இருந்தாலும் அதில் என் மனம் லயப்படவில்லை என்றும் கூறினான்.
🌟 எங்களிடமிருந்து எந்த உதவியும் வேண்டாம் என்று கூறுகின்றீர்கள். அப்படியென்றால் என்ன செய்ய போகின்றீர்கள்? இந்த சிறைச்சாலையிலேயே இருக்க போகின்றீர்களா? அதற்கும் இப்பொழுது காலமில்லையே.. உங்கள் முடிவு தான் என்ன? என்று கேட்டாள் காந்தருவதத்தை.

🌟 காந்தருவதத்தையே ஒருவேளை நான் நண்பர்களின் உதவியை நாடினால் அது ஒரு பெரிய போரில் அல்லவா போய் முடியும். எனது குருநாதர் கூறிய காலமும் இன்னும் வரவில்லை. நான் இங்கேயும் இருக்க போவதில்லை. என்னுடைய மறைவு யாரையும் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் இருக்க போகின்றது என்றான்.
🌟 என்ன கூறுகின்றீர்கள்? உங்களுடைய மறைவா..! என்று அதிர்ச்சியாக கேட்டாள் காந்தருவதத்தை.
🌟 மறைவு என்றால் அந்த மறைவு அல்ல. ஒளிவு என்றும் பொருள் உள்ளது. யாரையும் பாதிக்காமல், என்னை காப்பாற்றுவது யார் என்றால்? அது சுதஞ்சணன் (நாயாய் இருந்து சீவகனால் மோட்சமடைந்த தேவன்) தான். சுதஞ்சணால் மட்டுமே முடியும். அவனை நினைத்தாலே போதும், நொடியில் இங்கு வந்து என்னை காப்பாற்றி விடுவான் என்றும், சரியான நேரத்திற்காக தான் இப்பொழுது காத்து கொண்டிருக்கின்றேன் என்றும் கூறினான்.
🌟 சீவகன் கூறியதை கேட்ட காந்தருவதத்தை, என்னது சரியான நேரமா? அதென்ன சரியான நேரம் என்று கேட்டாள்.
🌟 உடனே நீ இங்கிருந்து புறப்படு. இன்னும் சிறிது நேரத்தில் மதனன் இங்கே வருவான். இது அவன் வரும் நேரம், இது தான் எனக்கும் சரியான நேரமாக இருக்கும் என்று கூறி சிரித்தான் சீவகன்.
🌟 சுதஞ்சணன் மூலமாக நீங்கள் இந்த சிறைச்சாலையில் இருந்து தப்பித்து சென்றால், மீண்டும் நாம் எப்பொழுது சந்திக்க முடியும் என்று குரலில் வீரம் இருந்தாலும் விழியில் நீர் ததும்ப வினவினாள் காந்தருவதத்தை.
🌟 நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன் அல்லவா! எல்லாம் விதிப்படி தான் நடக்கும். எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். நான் எங்கிருந்தாலும் பலத்துடன் தான் இருப்பேன். சரியான நேரம் வந்ததும் நானே வெளிவருவேன் என்று கூறினான் சீவகன்.
🌟 அப்பொழுது எதிர்பாராத விதமாக மதனன் சிறைச்சாலைக்குள் வந்தான். எங்கே அந்த சீவகன்? அவனுடைய கடைசி காலங்கள் மிகவும் அருகாமையில் இருக்கின்றது போல தெரிகிறது. ஏனென்றால் அவனை கொல்வதற்கு யானை தயாராக இருக்கின்றது என்று கூறி கொண்டே சீவகனிருக்கும் சிறையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
🌟 மதனனுடைய குரலை கேட்டதும் சீவகன் தனக்கான நேரம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்டு, காந்தருவதத்தையிடம் இவ்விடத்திலிருந்து உடனடியாக யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் மறைந்து செல்வாயாக என்று கூறினான்.
🌟 காந்தருவதத்தை, நீர் நிறைந்த விழிகளுடன் தன்னுடைய மாய மந்திரத்தின் மூலம் யார் கண்களுக்கும் அகப்படாமல் கணப்பொழுதில் அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றாள்.

🌟 காந்தருவதத்தை மறைந்து சென்றதும் சீவகன் தன்னுடைய நண்பனான சுதஞ்சணனை மனதில் எண்ணிய விதமாக அழைத்தான்.
🌟 சீவகனின் அழைப்பு நீண்ட நெடும் தொலைவில் இருக்கக்கூடிய சுதஞ்சணனுக்கு புரிந்தது. நண்பன் ஏதோ துன்பத்தில் அகப்பட்டு கொண்டிருக்கின்றான். ஆகவே உடனடியாக செல்ல வேண்டும் என்று எண்ணி மின்னல் வேகத்தில் சீவகனிருக்கும் சிறையில் தோன்றினான்.
🌟 சீவகனை சிறைச்சாலையில் கண்டதும், சீவகனுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு யார் காரணம்? என்றும், அதற்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டான்.
🌟 நண்பா சுதஞ்சணா! உன்னை இக்கட்டான சூழ்நிலையில் அழைத்திருக்கின்றேன் என்று சீவகன் கூறி கொண்டிருக்கும் பொழுதே,
🌟 இப்பொழுது நமக்கு பேசுவதற்கு நேரமில்லை. நாம் உடனடியாக இவ்விடத்திலிருந்து புறப்பட வேண்டும் என்றான் சுதஞ்சணன். பின் இருவரும் அவ்விடத்திலிருந்து எந்தவிதமான தடயங்களும் இல்லாமல் மறைந்து சென்றனர்.
🌟 சிறையின் கதவை திறந்து பார்த்த மதனனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. உடனே அங்கிருந்த காவலாளிகளை பார்த்து, எங்கே சீவகன்? என்று கேட்டான்.
🌟 அதற்கு அங்கிருந்த காவலாளிகள், அவன் இவ்வளவு காலம் இங்கே தான் இருந்தான் என்றார்கள்.
🌟 இங்கே தான் இருந்தான் என்றால் இப்பொழுது எங்கே போனான்? என்ன வேலை பார்த்து கொண்டிருக்கின்றீர்கள்? உள்ளே இருந்தவன் எப்படி வெளியே சென்றான்? எந்த பகுதியும் உடைபடவில்லை. வெளியிலே நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களை மீறி அவன் எப்படி சென்றிருக்க முடியும்? என்று கோபத்தோடு உரையாடி கொண்டிருந்தான்.
🌟 மதனன் பேசி கொண்டிருக்க, காவலர்களோ என்ன செய்வது? என்று தெரியாமல் அவனையே பாவமாக பார்த்து கொண்டிருந்தனர்.
🌟 இன்னும் அவனை தேடாமல் என் கண்முன்னே நின்று கொண்டிருக்கின்றீர்கள்? அவன் எங்கே சென்றான்? என்று தேடுங்கள் என காவலாளிகளுக்கு கட்டளையிட்டான் மதனன்.
🌟 மதனனுக்கு கட்டியங்காரனை எண்ணி பயம் அதிகரிக்க துவங்கியது. ஒருவேளை சீவகன் சிறைச்சாலையில் இருந்து தப்பித்து விட்டான் என்ற செய்தி அவனுடைய காதுகளுக்கு எட்டினால் தான் உயிரோடு இருக்க முடியாது என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.
🌟 இப்பொழுது என்ன செய்வது? என்று அவன் மனதில் சிந்திக்க தொடங்கினான். சீவகனை தேட சென்ற அனைத்து காவலாளிகளும் அப்பொழுது மதனனிடத்தில் வந்து, எங்கு தேடியும் சீவகன் அகப்படவில்லை என்று கூறினார்கள்.
🌟 அதுவரையிலும் என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்தவன், உடனே அருகில் இருக்கக்கூடிய கைதியை அழைத்து வரும்படி கூறினான்.

🌟 காவலாளிகளும் அருகில் இருக்கும் அறையில் உள்ள கைதியை அழைத்து வந்து மதனன் முன் நிறுத்தினர். சிறிதும் யோசிக்காமல் தன்னுடைய வாளால் அவனுடைய தலையை துண்டாக்கினான் மதனன். கீழே விழுந்தவன் முகத்தில் அடையாளம் தெரியாத அளவில் வேகமாக பல கோடுகளை போட்டு சிதைத்தான்.
🌟 அங்கிருந்த காவலாளிகளை நோக்கி இறந்த இவன் தான் சீவகன் என்றும், இவன் சீவகன் இல்லை என்று கூறுபவர்களுக்கும் இதே கதி தான் என்றும் கூறினான்.
🌟 காவலர்களும் உடனடியாக இறந்தவனை பார்த்து, அவரவர்கள் தலைதப்பினால் போதும் என்று இவன் தான் சீவகன் இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என்று கூறினார்கள்.
🌟 சீவகன் இறந்த செய்தி கட்டியங்காரனுக்கு தெரிவிக்கப்பட்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். தனக்கென இருந்த ஒரு எதிரியும் இருக்கின்ற இடம் தெரியாமல் அழிந்து போய் விட்டான். மைத்துனன் என்றால் அது நீ மட்டும் தான் மதனா என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். பின் எனக்கு இதில் ஒரேயொரு கவலை தான் மதனா! என்றான்.
🌟 இதில் உங்களுக்கு என்ன கவலை மன்னா? எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள் என்று மதனன் கேட்டான்.
🌟 கடைசியாக நம்முடைய எதிரியின் முகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலை தான் மதனா என்றான் கட்டியங்காரன்.
🌟 இல்லை மன்னா, நீங்கள் அவன் முகத்தை பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நீங்கள் பார்ப்பதற்கு முன்னால் அவன் உயிரை எடுத்து விட்டேன் என்று கூறினான் மதனன்.
🌟 சீவகன் இறந்த செய்தி ராசமாபுரம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் ஊர் மக்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர்.
🌟 இச்செய்தியானது ஊர் மக்கள் மத்தியில் அதிகளவில் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. சீவகனின் பெற்றோர்கள் என்ன செய்வது? என்று புரியாமல் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

🌟 சிறைச்சாலையில் இருந்து மறைந்து சென்ற சீவகன் மற்றும் சுதஞ்சணன் சங்கவெண் மலையில் (வெள்ளிமலையில் உள்ள ஒரு பகுதி) உள்ள நீர் நிரம்பிய ஒரு அருவியின் அருகில் தோன்றினார்கள்.
🌟 இப்பொழுது நாம் எந்த இடத்திற்கு வந்திருக்கின்றோம்? என்று சீவகன் வினவினான். அதற்கு சுதஞ்சணன் இப்பொழுது நாம் வெள்ளிமலையில் இறங்கி இருக்கின்றோம் என்றான்.
🌟 இதுவரை வெள்ளிமலை பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்பொழுது தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது. இந்த அருவியில் சென்று குளிப்போமா? என்று வினவினான் சீவகன்.
🌟 அதற்கென்ன சீவகா! இப்பொழுதே அருவியில் குளிக்கலாம் என்று இருவரும் அருவியில் இறங்கி குளிக்க துவங்கினார்கள். நேரம் சென்றது அவர்கள் இருவருக்கும் புலப்படவில்லை.
🌟 குளித்து முடித்த பின்பு கரையேறிய சுதஞ்சணன், சீக்கிரம் புறப்படு சீவகா! உனக்காக இசை நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன். என் மனைவியர்கள் அனைவரும் காத்து கொண்டிருப்பார்கள் என்று கூறினான்.
🌟 சீவகனும் உடனே கரையேறினான். பின் இருவரும் சுதஞ்சணன் தங்கியிருக்கும் மாளிகையை அடைந்தனர்.
🌟 சீவகனின் வருகையை அறிந்து கொண்ட சுதஞ்சணனின் மனைவியர்கள் அனைவரும் வெளியில் வந்து அவர்களை வரவேற்றனர். இவர் தான் சீவகன் என்பவரா? என்று வினவினார்கள்.
🌟 பின் சுதஞ்சணனை பார்த்து, உங்களுக்கு இவ்வளவு உதவி செய்திருக்கின்றார். அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டியது தானே! உங்களுடைய தோழனுக்கு துன்பத்தை ஏற்படுத்திய அரசனை கொன்று அவருடைய ராஜ்யத்தை இவருக்கு கொடுத்து முடி சூட்ட வேண்டியது தானே! அதை விடுத்து ஏன் இவரை சிறையில் இருந்து அழைத்து வந்தீர்கள்? என்று ஒவ்வொருவரும் வினவினார்கள்.
🌟 நானும் அதை செய்ய தான் விரும்பினேன். ஆனால் சீவகன் தான் தனக்கென்று அந்த மாதிரியான செயல்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும், என்னை இப்பொழுது இந்த சிறையில் இருந்து அழைத்து சென்றால் மட்டும் போதும் என்றும் கூறிவிட்டான். ஆகையால் அவனுடைய விருப்பத்திற்கு மாறாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறினான்.
🌟 இதை கேட்ட அவனுடைய மனைவியர்கள் ஏன் சீவகரே அவ்வாறு கூறினீர்கள்? என்றனர்.
🌟 அதற்கு சீவகன், கட்டியங்காரனை கொல்வது எனக்கு ஒரு சின்னஞ்சிறு விஷயம் தான். இதற்காக சுதஞ்சணனின் உதவியை நாடுவது என்பது சரியாக இருக்காது. மேலும் இது என் ஆண்மைக்கு இழுக்காகும் அல்லவா! நண்பரிடம் இருந்து சிறு உதவிகளை கேட்டு பெறலாம். அவர்கள் செய்கின்றனர் என்பதற்காக மூலதனத்தையே அவர்களிடத்தில் இருந்து பெறுவது முறையானதா? என்றான்.
🌟 சீவகனுடைய கூற்றுக்களில் இருந்து அவனை பற்றிய முழு விவரங்களையும் மனைவியர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர். ஏற்கனவே கணவன் வாயிலாக பல செய்திகள் சீவகனை பற்றி அறிந்திருந்தனர். இருப்பினும் அனைத்தையும் நேரடியாக சீவகனிடத்தில் அறிந்து கொண்டது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
🌟 பின் சுதஞ்சணனின் மனைவியர்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் உடனடியாக கேட்கலாம் என்றும், எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் எங்களிடத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
🌟 எந்தவொரு காரியத்திலும் வெற்றி என்பது அவ்வளவு எளிதாக கிடைக்காது. காலம், இடம் மற்றும் அதற்கான துணை இம்மூன்றும் எவனொருவன் சாதகமாக்கி கொள்கின்றானோ, அவனே இறுதியில் வெற்றி பெறுவான் என்றான் சீவகன்.
🌟 சீவகா நீ கூறுவது உண்மை தான். காலம் வரும் வரை அனைவரும் பொறுமையுடன் தானே இருக்க வேண்டும். உன்னுடைய காலம் வருகின்ற வரை நீ என்ன செய்ய போகின்றாய்? என்று கேட்டான் சுதஞ்சணன்.
🌟 அதற்கு சீவகன், என்னுடைய குருநாதர் ஓராண்டு காலம் வரை பொறுமை காத்தருள வேண்டும் என்று கூறினார். அது முடிவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. அதுவரை நான் பல நாடுகளையும் பல மனிதர்களையும் காண வேண்டும். அப்பொழுது தானே எனக்கு அனுபவம் கிடைக்கும் என்று கூறினான்.
🌟 எந்த நாட்டிற்கு நீ செல்ல விரும்புகிறாயோ, அந்த நாட்டிற்கு நானே அழைத்து செல்கின்றேன் என்று முடிவாக கூறினான் சுதஞ்சணன்.
🌟 இல்லை நண்பனே.. நீயே நீண்ட காலத்திற்கு பின்பு இப்பொழுது தான் உன்னுடைய குடும்பத்தோடு இணைந்திருக்கின்றாய். நீ உன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக காலத்தை கழிப்பாயாக. நான் மட்டும் தனியாக சென்று வருகின்றேன் அப்பொழுது தானே புதுவிதமான அனுபவங்கள் எனக்கு கிடைக்கும்.
🌟 தனித்து செல்வது இனிமை தான். ஆனால் அனைத்து இடங்களிலும் தனிமை என்பது இனிமையாகாது அல்லவா என்றான் சுதஞ்சணன்.

🌟 நீ சொல்வதும் உண்மை தான். இவ்வளவு காலம் தனிமையில் இருந்தாய், அதனால் தான் உன்னை குடும்பத்தோடு இருக்க சொல்கின்றேன் என்றான் சீவகன்.
🌟 தனித்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாய். இனி உன்னை மாற்றுவது என்பது முடியாத காரியம் என்பதை நான் அறிவேன். நான் உன்னோடு வரவில்லை? ஆனால் உன்னுடைய சகோதரர்களும், நண்பர்களும் உன்னை வந்து பார்க்க சிறந்த இடமாக இருப்பது மத்திய தேசம் தான்.
🌟 அங்கு நீ போவதற்குள் அவர்கள் அனைவரையும் அங்கு வந்து உன்னை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்கின்றேன். ஆனால் நீ தனித்து மேற்கொள்ளக்கூடிய பயண பாதை என்பது மிகவும் கடினமும், அபாயமும் நிறைந்தது என்றான் சுதஞ்சணன்.
🌟 பயணம் என்றாலே கடினமும், அபாயமும் நிறைந்தவைகள் தான். எந்த இடத்தில் எந்தவிதமான அபாயம் ஏற்படும் என்பதை நீ தெரிவித்தால் மட்டும் போதும். அதற்கு தகுந்த விதத்தில் நான் அந்த அபாயத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் அல்லது அந்த அபாயத்தை விட்டு விலகி செல்வேன். இதற்காக பயம் கொண்டு பயணத்தை நான் தடை செய்ய முடியுமா? என்றான் சீவகன்.
🌟 அதற்கு சுதஞ்சணன், நீ சொல்வதில் கூட ஒரு உண்மை மறைந்திருக்கின்றது. பயம் ஒருவனை எவ்விதத்திலும், எப்படியும் செயல்பட வைக்கும். அதே சமயம் அவனிடத்தில் தன்னம்பிக்கை இருந்தால் அந்த தடைகளை அவன் நேர்மறை சிந்தனைகளை கொண்டு வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளாக உருவாக்கி கொள்ள முடியும். உன்னுடைய பயணத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களையும், தடைகளையும் உமக்கு நான் கூறுகின்றேன். அந்த இடர்பாடுகளை சரியான முறையில் கையாண்டு உனக்கான வெற்றியையும், இலக்கையும் அடைவாயாக என்று கூறினான். பின் சீவகன் பயணம் மேற்கொள்ளக்கூடிய பாதை பற்றி கூற துவங்கினான்.
தொடரும்...!!
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP