நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
சீவக சிந்தாமணி...!!
🌟 சுதஞ்சணன் சீவகனை பார்த்து, இப்பொழுது நாம் இருக்கும் இடம் என்பது சங்கவெண் மலை என்பதை நினைவில் வைத்துக்கொள். இங்கிருந்து இரண்டு காத தூரம் நடந்து சென்றால் அரணபாதம் என்ற மலை ஒன்று வரும். அந்த மலையில் சமண முனிவர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
🌟 அந்த முனிவர்கள் அனைவரும் துறவு நிலையில் இருக்கக்கூடியவர்கள். பின்பு அந்த மலையை கடந்து இருபத்தைந்து காத தூரம் சென்றால் பெரிய ஆறு ஒன்று வரும். இந்த ஆறு பார்ப்பதற்கு கடலை போன்றிருக்கும். அந்த ஆறு தான் மிகவும் அபாயம் நிறைந்த பகுதியாகும். அந்த ஆற்றை கடந்து செல்பவர்கள் என்பது மிக குறைந்தளவு மட்டுமே. அந்த பாதையின் வழியாக நிறைய பொய்கைகளும், அருவிகளும் இருக்கும். அந்த அருவியில் இருந்து வலது பக்கமாக நீ செல்ல வேண்டும்.
🌟 பின்பு இன்னும் இரண்டு காத தூரம் நடந்து சென்றால், அடர்ந்த காடு வரும். அந்த காட்டில் பேய்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்விடத்தில் நீ மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செல்ல வேண்டும் என்றான்.
🌟 அப்பொழுது சீவகன், இறந்து போய் பேயாக இருக்கக்கூடியவர்களால் என்னை என்ன செய்ய இயலும்? என்றான்.

🌟 பேயாக இருக்கக்கூடியவர்களில் மோகினி பிசாசுகளும் உள்ளன. அவைகள் உன்னை கவர்ந்திழுக்க பார்க்கும். அதனுடைய அசைவுகளிலும், அழகிலும் சிக்கி கொள்ளாமல், ஒரு காத தூரம் நடந்து சென்றால் எழில்மிகு நகரம் ஒன்று தென்படும்.
🌟 அந்த நகரத்தின் பெயர் பல்லவ நாடு என்றும், அந்த நகரத்தில் நீ இரண்டு மாத காலம் தங்கியிருக்க வேண்டிய சூழல் உண்டாகும் என்றும் சுதஞ்சணன் கூறினான்.
🌟 ஏன் அங்கு மட்டும் நான் இரண்டு மாதம் தங்க வேண்டும்? அப்படி என்ன அந்த இடத்தில் தனித்துவம் இருக்கின்றது? என்று கேட்டான் சீவகன்.
🌟 நான் இப்பொழுது சொன்னால் உனக்கு எதுவும் புரியாது. நேரில் அங்கு சென்று நீயே காணும் பொழுது புரிந்து கொள்வாய் என்று சுதஞ்சணன் புன்னகையுடன் கூறினான்.
🌟 அதை கடந்து இன்னும் நீ பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த பாதையில் மரங்கள் என்பது துளியும் இல்லாமல், பாறைகள் யாவும் நிறைந்திருக்கும். கதிரவனின் ஒளிக்கதிர்கள் உன்னை வாட்டி எடுத்து விடும்.
🌟 ஆகவே அவ்விடத்தில் பொறுமையாக இருந்து உன்னுடைய பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளவும். அதன் பிறகு நீ அடையும் நகரம் என்பது மத்திய தேசமாகும். அந்த தேசத்தில் உனக்கு பல ஆச்சரியங்களும், அறிமுகங்களும் காத்திருக்கின்றன என்று கூறினான் சுதஞ்சணன்.
🌟 சுதஞ்சணன் பாதையை பற்றி கூறி முடித்ததும், நீ கூறிய அனைத்தையும் என் மனதில் பதிய வைத்து கொண்டேன். இப்பொழுது பயணத்திற்கான ஏற்பாடுகளை நான் மேற்கொள்கின்றேன் என்றான் சீவகன்.
🌟 பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக நான் உனக்கு சில மந்திரங்களை கற்று தருகின்றேன். அந்த மந்திரங்களை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள். உனக்கு ஏதேனும் துன்பமும், ஆபத்தும் ஏற்படும் பொழுது அந்த மந்திரத்தை பயன்படுத்தி உனக்கான துன்பத்தை போக்கிக்கொள் என்று சுதஞ்சணன் கூறினான்.

🌟 ஆமாம், எனக்கு மந்திரம் எதற்கு? நீ கூற போகின்ற இந்த மந்திரத்தினால் எனக்கு என்ன பயன்கள் ஏற்பட போகின்றன? என்று கேட்டான் சீவகன்.
🌟 அதற்கு சுதஞ்சணன், நான் உனக்கு மூன்று மந்திரங்கள் பற்றி தெளிவாக கூறுகிறேன். முதல் மந்திரம் உன்னுடைய குரலில் இருக்கக்கூடிய கடினத்தன்மையை குறைத்து, எளிமையை அதிகப்படுத்தும். இரண்டாவது மந்திரம் பாம்பு விஷத்தினை முறிக்கக்கூடிய மந்திரமாகும். மூன்றாவது மந்திரம் நீ விரும்பிய உடலை பெற்று தரும் என்றான்.
🌟 எல்லா மந்திரங்களும் மிகவும் பயன்படும் விதத்தில் தான் இருக்கின்றன. அது என்னென்ன மந்திரங்கள் என்று கூறு, நான் தெளிவாக நினைவில் வைத்து கொள்கின்றேன் என்றான் சீவகன்.
🌟 சுதஞ்சணனும் சீவகனுக்கு பயன்படக்கூடிய மந்திரங்களை பற்றி கூற தொடங்கினான். சுதஞ்சணன் கூற சீவகன் அந்த மந்திரங்களை தெளிவாக தனது மனதில் பதிய வைத்து கொண்டான்.
🌟 மந்திரங்களை பற்றி தெளிவாக அறிந்ததும், சீவகன் தன்னுடைய தோழனான சுதஞ்சணன் மற்றும் அவனது குடும்பத்திடம் இருந்து விடைபெற்று தனது பயணத்தை மேற்கொண்டான்.
🌟 சுதஞ்சணனும், அவனுடைய குடும்பத்தினரும் உங்களுடைய பயணம் இனிமையாக அமையட்டும் என்று வாழ்த்திய வண்ணமாக பயணங்களுக்கு தேவையான சில பொருட்களையும் அவனிடத்தில் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
🌟 தன்னுடைய பயணத்தை மேற்கொண்ட சீவகன் தனிமையான அந்த காலத்தில் காந்தருவதத்தையை பற்றியும், குணமாலையை பற்றியும் எண்ணி கொண்டிருந்தான்.
🌟 அந்த பழைய நினைவுகள் அவனுடைய பயணத்தில் சில மாற்றங்களை உருவாக்கியது. ஒளி சிறிதும் இல்லாமல் இருள் நிறைந்து காணப்பட்ட அந்த நேரத்தில் பகலில் நடந்து கொண்டிருக்கின்றேனா? அல்லது இரவில் நடந்து கொண்டிருக்கின்றேனா? என்பதே தெரியாத அளவில் சீவகன் சென்று கொண்டிருந்தான்.
🌟 சீவகன், இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று தெரியாமலும், அரணபாத மலை வந்துவிட்டதா என்பதை அறியாமலும், குழப்பமான நிலையில் நடந்து கொண்டிருந்தான்.
🌟 கதிரவன் ஒளிகள் காடு முழுவதும் நிரம்பி இருக்காமல் ஒரு சில இடங்களில் மட்டும் நிரம்பி இருந்தது. அவ்விடத்தை காணும் பொழுது சீவகனுக்கு ஒருவிதமான புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் பிறந்தது. பயணம் செல்லும் வழியில் அவ்வப்போது காணப்படக்கூடிய அழகிய பூக்களும், நீர்நிலைகளும், தாமரைகளும் அவனுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தின.
🌟 அவன் மேற்கொண்டிருந்த அந்த பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு சத்தத்தை கேட்டான். அதாவது திடீரென்று வனத்தில் இருக்கக்கூடிய இலைகள் யாவும் நொறுங்கும் சத்தத்தை கேட்டான்.
🌟 அந்த சத்தத்தை கேட்ட சீவகன் ஏதோ மிருகங்களின் கூட்டமாக இருக்குமோ? என்று எண்ணி, ஒரு மரத்தின் பின்பு மறைந்து நின்றான். சிறிது நேரத்தில் அந்த சத்தத்திற்கு காரணமானவன் யார்? என்றும் அறிந்து கொண்டான்.
🌟 கையில் வேலும், அம்பும் ஏந்திய வண்ணமாக வேடுவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவனுடைய தோளின் ஒரு பக்கத்தில் இறந்த மிருகத்தின் மாமிசமும், மறு பக்கத்தில் கிழங்கும், கரங்களில் மதியை மயக்கக்கூடிய மதுவும் இருந்தது.
🌟 அவன் தன்னை போன்ற சாதாரண மனிதன் தான் என்பதை முடிவு செய்த சீவகன் மறைவிலிருந்து வெளியே வந்தான். திடீரென்று இருளில் இருந்து வெளியே வந்த சீவகனை பார்த்த வேடுவன், ஒரு நிமிடத்தில் திடுக்கிட்டதோடு மட்டுமல்லாமல் உடனே கரங்களில் அம்பை தொடுத்து எய்துவதற்கு தயாராக இருந்தான்.

🌟 பின்பு தன்னை நிதானம் செய்து கொண்டு யார் நீ? இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? என்று வேடுவன் வினவினான்.
🌟 அதற்கு என் பெயர் சீவகன் என்று கூறி, நீங்கள் இந்த வனத்திலா வசித்து கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டான்.
🌟 இல்லை.. நான் இந்த மலையில் வாழவில்லை. இங்கு மனிதர்களெல்லாம் தங்க முடியாது. அதோ அங்கு தெரிகின்றது பார்த்தாயா! அந்த மலையில் தான் வேடுவர்கள் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும், நான் தான் அந்த கூட்டத்தின் தலைவன் ஆவேன் என்றும் கூறினான்.
🌟 அந்த வேடுவன் சீவகனிடம் பேசி கொண்டிருக்கும் பொழுதே அவனிடத்தில் இருந்து ஒருவிதமான கள்ளின் வாடை வீசியது. என்ன சாப்பிட்டு கொண்டிருக்கின்றீர்கள்? உங்கள் மீதிருந்து ஒருவிதமான வாடை வந்து கொண்டிருக்கின்றது என்றான் சீவகன்.
🌟 என்னது உனக்கு இது கூட தெரியவில்லையா? நீ இந்த மலைக்கு தான் புதியவனாய் இருப்பாய் என்று எண்ணினால் நீ உலகிற்கே புதியனாக இருப்பாய் போல தோன்றுகிறது என்றான் வேடுவன்.
🌟 பின்பு தன் தோளின் மீது இருப்பது பன்றியின் மாமிசம் என்றும், அதை நெருப்பில் வாட்டி, தேன் விட்டு சாப்பிட்டால் அவ்வளவு சுவையாகவும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் கூறினான். வரும் வழியில் தாகம் ஏற்பட்டால் அந்த தாகத்தை தணிப்பதற்காகத்தான் கள்ளு குடிக்கின்றேன். உனக்கும் கொஞ்சம் வேண்டுமா? என்றான் வேடுவ தலைவன்.
🌟 எனக்கு இதெல்லாம் வேண்டாம்... அது என்ன இடது கையில்? என்று கேட்டான் சீவகன். இது மரவள்ளிக்கிழங்கு, ஒருவேளை வேட்டையாடும் பொழுது எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் அன்றைக்கு இது தான் எங்களுக்கு உணவாகும் என்று கூறினான்.
🌟 அதற்கு சீவகன், இவ்வளவு இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை விட்டுவிட்டு, ஏன் மிருகங்களை வேட்டையாடி அதை உண்ண வேண்டும்? என்றான்.
🌟 வெறும் கிழங்கை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு எப்படி தெம்பு கிடைக்கும்? காடுகளிலும், மேடுகளிலும் சென்று வருவதற்கு வழுவும், திறனும் வேண்டுமல்லவா? அதற்காக தான் நாங்கள் வேட்டையாடுகின்றோம் என்றான் வேடுவ தலைவன்.

🌟 நான் இது வரையிலும் வெறும் தாவர உணவுகளை மட்டும் தான் உண்டு வருகின்றேன். எனக்கு எந்த சக்தி குறைபாடுகளும் ஏற்பட வில்லையே? உங்களுக்கு இணையாக தானே நானும் மலையேறுகின்றேன். அனைத்து இடங்களுக்கும் சென்று வந்து கொண்டு இருக்கின்றேன்.
🌟 உயிர்களை கொலை செய்வது அல்லது வதைப்பது என்பது பாவம் மிகுந்த செயலாகும். நாம் எப்படி இந்த உலகத்தில் தோன்றி இருக்கின்றோமோ, அதைபோல தான் உலகத்தில் மற்ற உயிர்களும் தோன்றி இருக்கின்றன. அவற்றிற்கு துன்பத்தை ஏற்படுத்துவது என்பது படைப்பு தொழிலை அவ மதிப்பது போன்றாகும். அது மட்டுமல்லாமல் இது அறமற்ற செயலாகும் என்று கூறினான் சீவகன்.
🌟 அறம் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரிந்தது ஒன்று மட்டும் தான். அது எங்களுக்கு தேவையான உணவை வேட்டையாடி எடுத்து கொள்வது மட்டும் தான் என்றான் வேடுவ தலைவன்.
🌟 அறம் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று வேடுவ தலைவன் கூற, சரி நான் உங்களை ஒன்று கேட்கின்றேன் அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? என்று சீவகன் கேட்டான்.
🌟 தாராளமாக என்னிடத்தில் என்ன கேட்க விரும்புகின்றீர்களோ அதை கேளுங்கள் நான் உங்களுக்கான பதிலை சொல்கின்றேன் என்றான் வேடுவ தலைவன்.
🌟 உங்களை போன்றே இருக்கக்கூடிய மற்ற உயிர்களை வேட்டையாடி உண்டு இவ்வுலக வாழ்க்கையை முடித்த பின்பு நரகத்திற்கு செல்ல விரும்புகின்றீர்களா? அல்லது வாழ்கின்ற காலத்தில் எந்த உயிரையும் வதைக்காமல், இயற்கையாக கிடைக்கக்கூடிய தாவர உணவுகளை உண்டு இவ்வுலக வாழ்க்கையை முடித்த பின்பு தேவராக வாழ விரும்புகின்றீர்களா? என்று கேட்டான்.
🌟 சீவகனின் இந்த கேள்வி வேடுவ தலைவனின் மனதில் குழப்பத்தையும், கேள்வியையும் உருவாக்கியது.
🌟 மேலும் சீவகன், வேடுவ தலைவனை பார்த்து மாமிச உணவுகளை உண்டால் நரகத்தின் வாயில் திறந்தே இருக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் குடிக்கின்ற குடியினால் புத்தியானது தடுமாறும். எது சரி? எது தவறு? என்று புரியாமல் தவறிழைக்க நேரிடலாம்.

🌟 குடி குடியை மட்டும் கெடுக்காமல் ஒரு குலத்தையே அழித்து விடும் அல்லவா! நீங்களே தலைவராக இருந்து உங்கள் குலத்திற்கு இப்படி ஒரு உதாரணமாக இருப்பது என்பது சரியா? நீங்கள் மாறினால் மட்டுமே உங்களை சார்ந்து இருக்கக்கூடியவர்களும் மாற்றங்களை நோக்கி பயணிப்பார்கள். இல்லை என்றால் அவர்களும் அதே நரக வாயிலை நோக்கி தான் செல்வார்கள் என்றான் சீவகன்.
🌟 சீவகன் கூறிய கூற்றுக்கள், வேடுவ தலைவனின் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பின் இருவரும் தங்களுக்குள் உரையாடி கொண்டே பயணத்தை மேற்கொண்டார்கள்.
🌟 இறுதியாக வேடுவ தலைவன் அடைய வேண்டிய மலைப்பகுதியும் வந்தது. நான் போக வேண்டிய மலை அதோ அங்கே இருக்கின்றது. உங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் பேசியவை அனைத்தும் எங்கள் குலத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவில் இருக்கின்றது. உங்களுடைய அறிவுரையின் படியே நானும், எங்களுடைய குலத்தை சேர்ந்தவர்களும் வேட்டையாடி உணவு உண்பதை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் சைவ உணவுகளை உண்டு வாழ்கிறோம்.
🌟 வேடுவ தலைவனின் பேச்சை கேட்டதும் சீவகன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். இவர்களுடைய வேட்டைகளில் இருந்து சில உயிரினங்களாவது தன்னால் காப்பாற்றப்பட்டது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.
தொடரும்...!!
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP