நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
சீவக சிந்தாமணி...!!
🌟 மாயங்கள் நிறைந்த இந்த மர்ம பூமியில் புதிதான பல விஷயங்களும் இருக்கத்தானே செய்கின்றன. எவ்வளவுதான் பகுத்தறிந்து உணர்ந்தாலும் அறிவுக்கு மிஞ்சிய ஒரு சக்தி இவ்வுலகில் இருகின்றது என்று கூறினால் அது மிகையல்ல. அதை ஏற்றுக்கொள்ள தான் மனம் வருவதில்லை.
🌟 சீதத்தன் எதிர்பார்த்தபடியே மாயம் பல செய்யும் மர்மமான, வித்தியாசமான உடையிலும், விசித்திரமான வாகனத்திலும் வித்யாதர நாட்டை சேர்ந்த ஒரு வாலிபன் அவன் முன் தோன்றினான்.
🌟 அவனைக் கண்டதும் அதுவரையில் அவன் நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறியது போல மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். ஐயா எம்மை விட நீர் ரொம்ப வித்தியாசமாக இருக்கின்றீர்களே! நீங்கள் தான் இந்த தீவின் தலைவரா? என்று கேட்டான்.

🌟 நான் இந்தத் தீவை சேர்ந்தவன் அல்ல. யான் விஞ்சையர் நாட்டிலிருந்து வந்திருக்கின்றேன். எமது பெயர் வித்யாதரன் என்று கூறினான்.
🌟 இதைக் கேட்டதும் சீதத்தன் தனக்கு ஆதரவாக ஒருவன் இருக்கின்றான் என்று எண்ணம் அவனுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியது. அதுமட்டுமின்றி பரந்து விரிந்து இருக்கக்கூடிய நீர் நிரம்பிய இந்த ஆழ்பெருங்கடலில் நீ வந்த கலமும் கவிழ்ந்து விட்டதா? அதனால் தான் என்னை போல் கலங்கி நிற்கின்றாயா? என்று வினவினான்.
🌟 சீதத்தன் கூற்றுகளை கேட்டதும் சிரித்த வண்ணமாக இல்லை.. இல்லை.. என்னுடைய கலம் கவிழ்ந்து போகவில்லை. நிலம் தேடி பொருள் சுமந்து கொண்டு வற்த உன்னுடைய கலமானது கவிழ்ந்து போனதால் உன்னிடத்தில் ஏற்பட்டு இருக்கக்கூடிய துன்பத்தைத் துடைக்க தான் நான் இங்கு வந்திருக்கின்றேன் என்று கூறினான்.
🌟 என்னுடைய கலம் கவிழ்ந்து போனது இவனுக்கு எப்படி தெரியும்? பார்க்கவே வித்தியாசமாக இருக்கின்றான். ஒருவேளை இவன் தான் நம்மை காப்பாற்ற வந்த தேவதூதனோ?
🌟 என் மனைவி மேற்கொண்ட அனைத்து விரதங்களும் பொய்க்காமல் அதற்கான பலன்களை அளிக்க துவங்கிவிட்டதோ? அவள் செய்த நல்வினை தான் இப்பொழுது அவள் மாங்கல்யத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது என்று எண்ணத் துவங்கினான்.
🌟 என்ன சிந்தித்துக் கொண்டு இருக்கின்றாய்? உன்னுடைய மனைவியை மதிக்கின்ற மதிதான் இப்பொழுது உன்னை காத்துக் கொண்டு இருக்கின்றது. உன்னை அறியாமல் ஏதோ சில நன்மைகள் செய்ததன் காரணமாக யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு இப்பொழுது உன்னிடத்தில் வந்து இருக்கிறது அல்லவா! என்று கூறினான் வித்யாதரன்.
🌟 இதைக் கேட்டதும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான் சீதத்தன். தன்னுடைய மனதில் நினைத்ததை எல்லாம் வெளிப்படையாக கூறுகின்றானே! இவன் உண்மையிலேயே தேவதூதனாக தான் இருப்பான் என்று முடிவு செய்தான்.
🌟 இந்த உலகத்தில் பொருள் செல்வம் இல்லாமல் யாராலும் எதுவும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட பொருள் செல்வம் ஏதும் இல்லாத என்னை யார் அக்கறையோடு கவனித்துக் கொள்வார்கள்? ஆள் நடமாட்டமே இல்லாத நான்பக்கமும் ஆழி (நீர்) நிறைந்த இந்த தீவில் உன்னைக் கண்டதே என்னுடைய தவப்பயன் என்று எண்ணுகின்றேன் என கூறினான்.
🌟 கவலை கொள்ள வேண்டாம். நீ இழந்த உன்னுடைய பொருட்கள் யாவும் உன்னிடத்திலேயே திரும்ப வரும். உம்மிடத்தில் இருக்கக்கூடிய துன்பங்கள் யாவற்றையும் நீக்குவதற்கான உதவிகளை யானே செய்கின்றேன். இக்கணமே வான்வழியே செல்வோம். என்னுடைய தலைவன் இடத்தில் உன்னை அழைத்துச் சென்று அவரிடத்தில் அறிமுகம் செய்து வைக்கிறேன்.
🌟 அவரிடத்தில் உன்னுடைய துன்ப நிலைகளை எடுத்துக் கூறினால் அவர் உமக்கு நன்மைகளை செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி தருவார். நீ இழந்த உன்னுடைய மரக்கலமும் அதில் இருந்த மானுடர்கள் அனைவரும் உன்னை திரும்ப வந்து அடைவார்கள் என்று கூறினான்.
🌟 இதை கேட்டதும் சீதத்தன் வித்யாதரனை விசித்திரமாக பாத்தான். எல்லை எதுவென்று தெரியாத ஆழி நிறைந்த கடலில் மூழ்கிய என்னுடைய மரக்கலத்தையும், அதில் இருந்த பொருட்களையும், அதுமட்டுமல்லாது எம்முடன் வந்தவர்களையும் உயிருடன் மீட்டு தருவார்களா? என்று பார்த்தான்.
🌟 சீதத்தன் பார்த்த பார்வையிலேயே அவனுடைய எண்ண அலைகளை புரிந்து கொண்டான் வித்யாதரன். இவரிடத்தில் எடுத்துக் கூறுவதை விட எடுத்துக் காட்டினால் அனைத்தையும் புரிந்து கொள்வார் என்று எண்ணினான்.
🌟 நாம் வான்வழியே செல்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்கின்றேன். உடனே எம்மோடு கிளம்பி வருவாயாக என்று கூறி அவன் வந்த விமானத்தை சீதத்தனிடம் காட்டினான்.

🌟 வான்வழி செல்வதற்கு உண்டான வாகனத்தை பார்த்ததும் சீதத்தன் பிரம்மித்து போனான். ஒருவேளை இவன் சொல்வது போல அனைத்தும் நிகழ்ந்து விடுமோ என்று எண்ணவும் துவங்கினான்.
🌟 வித்யாதரன் பக்கத்தில் ஒரு ஆட்டுக்கிடாய் நின்று கொண்டிருந்தது. அதன் இரு பக்கங்களிலும் இறகுகள் இருந்தன. அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதை திசை திருப்புவதற்கு தேவையான அனைத்துக் கட்டுப்பாடுகளும் வலிமையான புதுவிதமான நாண்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்தன.
🌟 இதன் மூலமாக தான் நீ இவ்விடத்திற்கு வந்தாயா? என்று கேட்டான் சீதத்தன்.
🌟 இதன் மூலமாக தான் நான் உன்னைக் காண்பதற்கு இவ்விடத்திற்கு வந்தேன். இது ஒரு வான் ஊர்த்தியாகும். விஞ்ஞானம் வளர்ந்து இருக்கக்கூடிய இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும், எவ்விதத்திலும் பறக்க வைக்க முடியும். எங்கள் வித்யாதர உலகத்தில் நீர் காணாத பல புதிய படைப்புகளை படைத்திருக்கின்றோம் என்று கூறினார்.
🌟 விமானத்தை பார்த்ததும் சீதத்தனுக்கு ஒரு பழம்பெறும் நினைவு ஏற்பட்டது. ஊரில் இருந்த சில மக்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். எங்களுடைய நாடான இராசமாபுரத்தினை ஆண்ட மன்னரான சச்சந்தன் ஒருவரின் சூழ்ச்சி நிறைந்த வலையில் சிக்கினான். அப்போது அவருடைய மனைவியான விசையையை மயிற்பொறி ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்தார். அதேபோல தான் இதுவுமா? என்று வினவினான்.
🌟 ஆம். அதைப்போல தான் இதுவும். ஆனால் சிறு வித்தியாசங்கள் உள்ளன. மயிற்பொறி என்பது ஒருவர் மட்டுமே செல்ல இயலும். ஆனால் இது ஆட்டுக்கிடாய். இருவர் ஏறி செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறி ஆட்டுக்கிடா மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
🌟 அதுவரை இவன் கூறுவதில் சிறிதளவும் நம்பிக்கை இல்லாமல் இருந்துவந்த சீதத்தனுக்கு இனி நாம் பிழைப்பதற்கும், நாம் இழந்த பொருட்களை மீட்பதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இதை நழுவவிடக் கூடாது என்ற முடிவோடு ஆட்டுக்கிடாயின் பின் பக்கத்தில் ஏறி அமர்ந்தான் சீதத்தன்.
🌟 சீதத்தன் அமர்ந்ததும் வித்யாதரன் ஆட்டுக்கிடாயை இயக்கினான். ஆட்டுக்கிடாயானது விண் வழியே வடதிசை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.

🌟 ஆட்டுக்கிடாய் மீது அமர்ந்த சீதத்தனுக்கு இந்த பயணம் புதுவிதமாக காட்சியளித்தது. ஏனென்றால் மலைகளும், குன்றுகளும் இவன் பாதங்களுக்கு கீழே இருப்பது போல காட்சியளித்தது. கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய ஆகாயத்தில் அங்கும், இங்கும் பயணம் செய்து விளையாடிக் கொண்டு இருக்கக்கூடிய மேகங்களை கீழே இருந்து பார்த்தவனுக்கு அதனுள் நுழைந்து செல்வது என்பது ஒரு புதுமையான, விந்தையான பயணமாகவும் இருந்தது.
🌟 அந்த மேகங்கள் யாவும் இவன் மீது உரசி செல்வது போல உணர்ந்தான். சிறிது தூரம் பயணத்திலேயே நெடுந்தூரத்தை கடந்துவந்து ஒரு சோலை நிறைந்த மலையின் மீது இவர்கள் பயணம் செய்த விமானம் நின்றது.
🌟 அந்த விமானத்தில் இருந்து இறங்கிய சீதத்தன் அந்தச் சோலையில் பூத்துக் குலுங்கிய கனிகளைக் கண்டதும் தன்னிடத்தில் இருக்கக்கூடிய பசியைப் போக்கிக் கொள்வதற்காக அந்த கனிகளை பறித்து உண்ணத் துவங்கினான். பல இடங்களில் பயணம் செய்து பலவிதமான கனிகளை உண்டு ரசித்தவன் இந்த பழத்தின் சுவை ஏதோ தேவ கனியின் சுவை போல உணர்ந்தான்.
🌟 அந்த மலையில் கிடைத்த நீரின் சுவை என்பது மிகவும் புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும், உடலில் இருந்துவந்த ஆரோக்கியமின்மை சார்ந்த அனைத்து இன்னல்களையும் நொடிப்பொழுதில் நீக்கும் வகையிலும் இருந்தது. அதை அருந்தியதும் மனதில் இருந்த கவலைகள் மற்றும் உடலில் இருந்த அனைத்து விதமான சோர்வுகள் யாவும் கணப்பொழுதில் சீதத்தனை விட்டு விலகிச் சென்றன.
🌟 தன்னுடைய தாகமும், பசியும் தீர்ந்த பின்பு அந்த மலையைச் சுற்றிப் பார்த்தான் சீதத்தன். இங்கு மனித நடமாட்டம் இருப்பதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லாதபட்சத்தில், இவ்வளவு கனிகள் நிறைந்த மரங்களை யார் வைத்திருப்பார்கள்? அதுமட்டுமின்றி அந்த வனத்தில் குங்குமம், சுரபுன்னை, சந்தனம் முதலிய விலை உயர்ந்த மரங்கள் அனைத்தும் இருக்கின்றன. பார்ப்பதற்கே ஏதோ ஆகாயத்தின் மேல் இருக்கக்கூடிய பசுமை நிறைந்த வனத்தில் மிதந்து செல்வது போல காட்சியளித்தன.
🌟 பசுமை யாவும் சூழப்பட்ட இந்த வனத்தில் சிறு கற்களோ, பாறைகளோ காணப்படவில்லை. எந்த பக்கம் திரும்பினாலும் வனம் முழுவதும் பசுமையாகவும், ரம்யமான தோற்றம் கொண்டதாகவும், செவிகளுக்கு இனிய இசைகளை இயற்கை அன்னையே எழுப்புவது போல அவ்வளவு இனிமையும், வளமையும், பசுமை நிறைந்து காணப்பட்டது.
🌟 இதுவரை நான் பயணம் மேற்கொண்ட பல நாடுகளில் இவ்வளவு அற்புதங்கள் நிறைந்த வனத்தை நான் கண்டதே இல்லை. இந்த வனத்தில் ஒரு சிறு கற்கள் கூட காணப்படவில்லை. இந்த மலையின் பெயர் என்ன? என்று வினவினான் சீதத்தன்.

🌟 நீங்கள் செய்த செயல்கள் அனைத்தையும் பார்த்ததும் புரிந்து கொண்டேன்... இதுவரை இவ்வளவு அழகிய வனத்தை நீங்கள் கண்டதே இல்லை என்பதை.
🌟 இவ்வளவு வளமும், வளமையும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த மலை வெள்ளிக்கட்டிகள் நிறைந்து இருந்த மலை ஆகும். அதனால் இந்த மலையை 'வெள்ளிமலை" என்று கூறுவார்கள் என்றான் வித்யாதரன்.
🌟 என்னது இந்த மலை முழுவதும் வெள்ளிகள் நிறைந்து காணப்பட்டதா? என்று ஆச்சரியத்துடன் வினவினான் சீதத்தன். அப்படியானால் நீங்கள் இருந்த நகரம் எது? உங்கள் தலைவன் எங்கே இருக்கின்றார்? அவரிடம் அழைத்துச் செல்ல முடியுமா? என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்க துவங்கினான்.
🌟 புன்னகை பூத்த வண்ணமாக வித்யாதரன் பொறுமை காத்தருளுங்கள். எங்களுடைய நகரம் மற்றும் எங்கள் தலைவன் இருக்கக்கூடிய நகரம் என்பது வித்யாதர நகரமாகும். இது அமராவதியை காட்டிலும் மிகவும் அழகும், எளிலும், வீரமும் நிறைந்த பலவிதமான அணிகளை தன்னிடத்திலே பூண்டு கொண்டிருக்கக்கூடிய தேவ நகரமும் கூட என்றான் வித்யாதரன்.
🌟 ஆமாம், சாதாரண வனத்தையே இவ்வளவு கட்டுக்கோப்பாகவும், அழகாகவும் வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய நகரத்தை நீங்கள் எப்படி வைத்திருப்பீர்கள்? என்ற கற்பனை என்னிடத்தில் அளவுக்கு அதிகமாகவே தோன்றுகின்றது. நாம் இப்பொழுது உங்களது நகரத்தை பார்க்க செல்வோமா? ஆமாம் நான் உங்களிடம் ஒன்று கேட்க மறந்துவிட்டேன். உங்களுடைய பெயரென்ன? நான் எப்படி உங்களை அழைப்பது என்று வினவினான்.
🌟 என்னுடைய பெயர் வித்யாதரன் என்று நான் முன்னமே உங்களிடம் கூறினேனே. அதுமட்டுமல்லாது என்னை தரன் என்றும் அழைப்பார்கள் என்று கூறினான்.
🌟 இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இறுதியாக விஞ்சையர் நாட்டினை ஆண்டு கொண்டு இருக்கக்கூடிய அரசனின் அரண்மனைக்கு சீதத்தனை அழைத்துச்சென்றான் தரன்.
🌟 விஞ்சையர் நாட்டின் அரசனான கலுழவேகன் தன் பட்டத்து அரசி உடன் அமர்ந்திருந்தார். அவர்களை கண்ட தரன் அவர்களை வணங்கி தான் அழைத்து வந்து இருக்கக்கூடிய சீதத்தனை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

🌟 சீத்தனை கண்டதும் அரசரும் புன்னகை மலர்ந்த முகத்துடன் ஏதோ ஒரு வெளிச்சத்தை கண்டதுபோல மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வருக! என்று வரவேற்று அவருக்கென்று தனி இருக்கை அமைத்து அமர்க! என்று கூறினார். உங்களுடைய வருகைக்காக நாங்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்.
🌟 இதைக் கேட்டதும் மிகுந்த வியப்பாக இருந்தது சீதத்தனுக்கு. என்னுடைய வருகைக்காக நீங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தீர்களா? எதற்காக என்னுடைய வருகைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருந்தீர்கள் என்று கூற முடியுமா? என்று வினவினான்.
🌟 நாம் ஒன்றும் உறவினர்களோ, நண்பர்களோ கிடையாது. இதற்கு முன் நான் உங்களை கண்டதும் இல்லை. அப்படி இருக்கின்ற பொழுது நீங்கள் ஏன் என்னுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?
🌟 சீதத்தனுடைய வினாவை கேட்டதும் அரசனும் நாமிருவரும் இதற்குமுன் சந்தித்ததில்லை. ஆனால் நம்முடைய முன்னோர்கள் உறவினர்கள் ஆவார்கள். எப்படி எனில், எம்முடைய முன்னோர்கள் உடன் உம்முடைய முன்னோர்கள் தொடர்பு கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் இங்கு வந்து தங்கியும் இருக்கின்றார்கள். நாம் இருவரும் தொன்றுதொட்டே பல நெடுங்காலமாக தொடர்பு கொண்டுள்ளோம். நான் அரசன் என்றும், நீ வணிகன் என்றும் பாகுபாடு நமக்கு தேவையில்லை. நாம் எப்பொழுதோ உறவினர் ஆகிவிட்டோம். நமக்குள் ஏன் இந்த ஜாதி பேதம்? இது அவசியம் அல்ல என்று கூறினார்.
🌟 எம்முடைய முன்னோர்கள் உங்களுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றார்களா? இதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் இனி நாம் உறவினர்களாக இருப்பது என்பது முடியாத காரியமாகும்.
🌟 நாம் உறவினர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் எனக்கு மகனோ, மகளோ இல்லை. கொடுக்கல், வாங்கல் இல்லை என்றால் அந்த உறவு எப்படி கிடைக்கும்? என்று கேட்டான் சீதத்தன்.
🌟 அவ்வளவுதானே இனி நமக்குள் கொடுக்கல், வாங்கல் தொடரத்தான் போகின்றது என்று கலுழவேகன் கூறினான்.
🌟 எனக்கு மகனோ, மகளோ இல்லாத பொழுது நமக்குள் எப்படி இது நிகழும் என்று சீதத்தன் கேட்டான்?
🌟 உங்களுக்குத்தான் மகனோ, மகளோ இல்லையே தவிர எனக்கு மகள் ஒருத்தி இருக்கின்றாள் என்று மன்னன் கூறினான்.
🌟 சீதத்தன் எனக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாம் தாரமாக உங்களது மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்கின்றீர்களா? எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறினார்.

🌟 மன்னரோ உமக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கவில்லை. என் மகளை உன் மகளாக ஏற்றுக் கொண்டு இராசமாபுரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.
🌟 மன்னன் இவ்விதம் கூறியதைக் கேட்டதும் சீதத்தன்னுக்கு தனது மனைவியுடன் நிகழ்ந்த நினைவுகள் யாவும் நினைவுக்கு வந்தன.
🌟 அதாவது தன்னுடைய மனைவிக்கு ஒரு மகள் இல்லையே என்று மிகுந்த ஏக்கமாக இருந்தது. ஏனென்றால் நான் பல நாடுகளுக்கு சென்று வணிகம் செய்து புதுப்புது பொருட்களையும், நகைகளையும் வாங்கி கொண்டு வரும் போதெல்லாம் அதை அணிந்து பார்ப்பதற்கு ஒரு மகள் இல்லையே... என்று மிகுந்த வருத்தம் கொள்வாள். அதற்காக என்னை தொல்லையும் செய்வாள்.
🌟 அவளால் என்ன செய்யமுடியும். அதனால் என்னிடம் விரும்பி பலமுறை முயற்சி செய்வாள். நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று நம்புவாள். வயிற்றையும் தொட்டுப் பார்ப்பாள். சாப்பிட்ட மாதிரியே இருக்கும். அவள் பசி இன்றும் தீரவில்லை என்று மனக்கண்களில் நிகழ்ந்து முடிந்த கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தான்.
🌟 கலுழவேகன் சீதத்தனை நோக்கி வளர்ந்த என் மகளை உனக்குத் தருகிறேன். நீ அழைத்து சென்று அவளை தக்கவனுக்கு திருமணம் செய்து மருமகனாக்கி கொள்வாயாக. அதுமட்டுமல்லாமல் எனக்கு நீ இதில் ஆதரவாக இருக்க வேண்டும் என்று மன்னன் கூறினான்.
🌟 இதைக் கேட்டதும் சீதத்தன் உங்களது ராஜ்யத்தில் மணமகனே கிடையாதா? என்று வினவினான்.
🌟 எங்கள் ராஜ்யத்தில் பல திறமைகளும், அழகில் சிறந்த பல மன்னர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு இவளை திருமணம் செய்வதில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் எனது மகள் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாள்.
🌟 பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் ஊரில் உள்ள சிறந்த ஜோதிடரை அணுகி அவளுக்கு வரப்போகின்ற மணாளன் எப்படி? எங்கிருந்து வருவான்? என்று கேட்டோம். அவர் உங்களுடைய மருமகன் நமது ராஜ்யத்திலிருந்து வர மாட்டான். அவன் அன்னிய நாட்டில் இருந்து தான் வருவான். அதுவும் ஒரு ஊரின் பெயரை சொல்லி அந்த ஊரில் இருந்து தான் வருவான் என்று கூறினார்.

🌟 சீதத்தன் ஜோதிடர் கூறிய ஊர் எந்த ஊர்? என்று கேட்டான்.
🌟 கலுழவேகன் ஜோதிடர் கூறிய ஊர் வேறு எந்த ஊருமல்ல... உன்னுடைய ஊர் இராசமாபுரம் தான் என்று கூறினார்.
🌟 இராசமாபுரத்தை ஆண்ட ஏமாந்தக மன்னனுக்கு வயதாகிவிட்டதே. எப்படி அவருக்கு திருமணம் செய்து வைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் இப்போது உயிருடன் இல்லையே என்று சீதத்தன் கூறினார்.
🌟 அதைத்தான் நானும் ஜோதிடரிடம் கேட்டேன் அவர் உனது மகளை திருமணம் செய்யப் போகிறவன் உனது மகளின் திறமைக்கு இணையாக இருக்கக் கூடியவன். அவன் இராசமாபுரத்தில் தான் இருக்கின்றான் என்று கூறினார். அதற்கு பின்பு எங்களுடைய மனதிலும் இராசமாபுரத்தில் தான் எங்களுடைய மருமகன் இருக்கின்றான் என்பது ஆழப்பதிந்து விட்டது.
🌟 அதுமட்டுமல்லாது அந்த ஜோதிடர் உங்களுடைய மூதாதையர்களின் உறவுகள் மூலமாக தான் இந்த திருமணத்தை நடத்தி வைக்க முடியும் என்றும், அவர் கடல் வணிகத்தை செய்யக் கூடியவர் என்றும் கூறினார்.
🌟 ஜோதிர் கூறியதிலிருந்து எங்களுடைய மூதாதையர் தொடர்புடைய அனைத்து உறவுகளையும் நாங்கள் தேடத் தொடங்கினோம். அப்போது தான் இராசமாபுரத்து மக்களிடம் எமது முன்னோர்கள் தொடர்பு கொண்டதை அறிந்து கொண்டோம். அதிலிருந்து ஜோதிடர் கூறிய வண்ணம் உள்ள நபர்களையும் தேடினோம்.
🌟 அந்த வகையில் அவர் கூறிய அனைத்தும் பொருந்தியவனாக பயணம் செய்யக் கூடியவனவும் நீயே இருந்தாய். அதிலிருந்து நீ மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நாடுகள் பற்றியும் நாங்கள் அறிந்து கொண்டோம் என்று சீதத்தனை பற்றிய அனைத்து விவரங்களையும் விஞ்சைய நாட்டு அரசன் எடுத்துரைத்தார்.
🌟 இதைக்கேட்டதும் சீதத்தன் பிரம்மித்து நின்றான்.
🌟 பின்பு விஞ்சைய நாட்டு மன்னன் தன்னுடைய மகளான காந்தருவதத்தை அழைக்கின்றேன். அவளுடன் நீங்களே பேசிக் கொள்ளலாம். மன்னன் அவருடைய மகளை அழைத்ததும் காந்தருவதத்தை கண்ட சீதத்தன் ஒரு நொடி கூட இமை மூடாமல் அப்பெண்ணை பார்த்த வண்ணமாக மெய்மறந்து நின்றான்.
🌟 நிகழ் காலத்திற்கு வந்த சீதத்தன் காந்தருவதத்தை பார்ப்பதற்கு அவள் தாயைப் போலவே இருந்தாள். ஆனால் பெண்களுக்கு உரிய அனைத்து நளினமும், அழகில் விண்ணுலக தேவதைகளும் தோற்றுப்போகும் அளவில் இருந்தாள்.
🌟 இவ்வளவு அழகு நிறைந்த பேரழகிக்கு நான் எப்படி தகுந்த மணாளனை தேடுவேன்? என்று கேட்டார்.
🌟 ஆனால் காந்தருவதத்தையோ அழகில் சிறந்தவன் எனக்கு வேண்டாம். கலைகளில் சிறந்தவனே எனக்கு வேண்டும் என்று கூறினாள்.

🌟 கலைகளில் சிறந்தவன் என்றால் என்ன? என்று சீதத்தன் வினவினான்.
🌟 நான் இசையில் சிறந்த வல்லவனாக இருக்க கூடியவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன். ஒரு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் வெற்றி கொள்பவனை நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினாள்.
🌟 கலுழவேகன் சீதத்தனை நோக்கி என் மகளின் விருப்பங்களை நீங்களே புரிந்து கொண்டீர்கள். இனி நான் எடுத்துக் கூறவேண்டும் என்ற சூழ்நிலை கிடையாது. எனவே அதற்கு தகுந்த ஏற்பாடுகளை நீங்கள் உங்கள் ஊரில் செய்து தாருங்கள்.
🌟 நான் கொண்டு வந்த பொருட்களையும், என்னுடன் வந்தவர்களையும் இழந்து தனிமையில் நிற்கின்றேன். என்னிடம் நீங்கள் போய் இவ்விதம் கூறுகின்றீர்களே இது நியாயமா? என்று கூறினார் சீதத்தன்.
🌟 உன்னுடைய பொருட்களை இழந்தாய் என்பதும், உன்னுடன் வந்தவர்களும் இறந்துவிட்டனர் என்று கூறுவதும் முறையல்ல. அவைகள் அனைத்தும், அனைவரும் நீ வைத்த இடத்திலேயே அப்படியே இருக்கின்றனர் என்று கூறினார் கலுழவேகன்.
🌟 என்ன அவைகள் அனைத்தும் அப்படியே இருக்கின்றனவா? என்னுடன் வந்தவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? நான் புயலில் மாட்டிக்கொண்டு தத்தளித்தது எல்லாம் பொய்யா? என்று வினவினார் சீதத்தன்.
🌟 ஆம். நீ புயலில் மாட்டிக்கொண்டு தத்தளித்தது எல்லாம் எங்களுடைய கட்டு வித்தைகள் மட்டுமே. நீ கலத்தில் வந்து கொண்டு இருக்கின்றாய் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரிந்தது. ஆகையால் உன்னை இவ்விடத்திற்கு வர வைக்க எங்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாயத் தோற்றமே அது. எங்களுடைய மந்திர சக்தியால் இவைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டன.
🌟 மன்னருடைய கூற்றுகளை கேட்டதும் மகிழ்ச்சி அடைவதா... அல்லது சூழ்ச்சியில் சிக்கி கொண்டோம் என நினைத்து கவலைப்படுவதா... என்பது புரியாமல் நின்று கொண்டிருந்தான் சீதத்தன். இருப்பினும் தன்னுடன் வந்தவர்களும், தன்னுடைய பொருட்களும் பத்திரமாக இருப்பதை அறிந்ததும் அவன் மனம் திருப்தி அடைந்தது.
🌟 காந்தருவதத்தையை சீதத்தனோடு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. தந்தையும், தாயும் தன்னுடைய மகளை பிரிந்து செல்வதற்கு மனமே இல்லாமல் அவளுடைய எதிர்காலத்தை எண்ணி, கங்கை பிறப்பது ஓர் இடமாக இருந்தாலும், அது சென்றடைவது என்னவோ கடலில் தான்.
🌟 அதனால் பயன் அடையும் நகரங்கள் எண்ணற்றவைகள் ஆகும். அதுபோல தான் நம்முடைய மகளும். அவள் மூலம் பல எண்ணற்ற மாயங்கள் இந்த உலகம் காண இருக்கின்றது என்று கூறி பிரியா விடை கொடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் ஏற்றினார்கள்.

🌟 வீணாபதி என்ற அவளுடைய நெருங்கிய தோழியும், யாழிசையில் நுட்பமான கூறுபாடுகளை அறிந்தவளும் அவளுடன் சென்றாள். அதுமட்டுமல்லாது அவள் பழக பயன்படுத்திய யாழ் கருவிகள் பலவும் விமானத்தில் ஏற்றப்பட்டன.
🌟 விமானத்தில் அனைவரும் சென்று பழைய தீவில் ஒதுங்கிய மரக்கலத்தினை அடைந்தார்கள். அதில் இருந்தவர்கள் எந்தவிதமான குறையும், ஆபத்தும் இல்லாமல் இருப்பதைக் கண்டதும் இவன் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத அளவில் இருந்தது.
🌟 சீதத்தனை கண்டதும் கலத்தில் இருந்தவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். கையில் வீணையோடு இறங்கிய அழகில் சிறந்த காந்தருவதத்தையை கலைமகளாகவே எண்ண துவங்கினார்கள்.
🌟 இருப்பினும் வயதில் குறைந்தவராக இருப்பதால் பிரம்மனின் மனைவியாக இருக்க முடியாது. அதுமட்டுமல்லாது நான்முகன் உடன் இல்லாததால் இவள் கலைமகளாக இருக்க முடியாது. சாதாரணமான பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணினார்கள்.
🌟 இவ்வளவு பேரழகு நிறைந்த அழகு பதுமையை நாங்கள் இதுவரை கண்டதே இல்லை. ஆனால் இந்த அழகியை பற்றியும், இவள் வீணை வாசிப்பை பற்றியும் சில வதந்திகளை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அவைகள் உண்மை என்பதை இப்போதுதான் உணருகின்றோம் என்று கலத்தில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர். சீதத்தன் ஏதாவது பேசுவான் என்று அங்கிருந்த அனைவரும் எதிர்பார்த்தனர்.
🌟 ஆனால் சீதத்தன் அவர்களை கண்டதும் வாயடைத்து என்ன பேசுவது? என்று தெரியாமல் உறைந்து நின்று கொண்டிருந்தான்.

🌟 அங்கிருந்தவர்கள் சீதத்தனின் அருகில் சென்று யார் இந்த பேரழகி என்று கேட்டனர்?
🌟 அப்போது தான் சீதத்தன் சுய நினைவிற்கு வந்தான். அங்கே நிகழ்ந்த நிகழ்வுகள் என்ன என்பதை அறிந்து கொள்ள முற்பட்டான். தன்னிடம் வந்து பேசியவர்களிடம் கடலில் நம்முடைய கப்பல் முழுகவில்லையா? என்று கேட்டான்.
🌟 பயங்கரமான சூறாவளி காற்றும் அதனால் கட்டுக்கடங்காத மழை பெய்ததும் உண்மைதான். அதன் விளைவாக நாம் மக்கலமானது கட்டுபாடு இல்லாமல் ஆட்டம் கண்டது. அதற்குப் பின்பு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. கலம் எப்படி கரை சேர்ந்தது என்பதும் எங்களுக்கு புரியவில்லை. உன்னை பற்றி தான் சிந்தித்துக் கொண்டே இருந்தோம்.
🌟 நல்ல வேளை நீ நன்றாக இருக்கின்றாய் என்று கூறினார்கள். ஆமாம் திக்கு தெரியாத இந்த நீர் நிறைந்த கடல் பகுதியில் தேவதை போன்ற பெண்ணை எப்படி கண்டுபிடித்தாய்? எங்களுக்கும் அதைச் சொல்லித் தருவாயா? என்று கேட்டார்கள்.
🌟 இதைக் கேட்டவுடன் சீதத்தன் நான் எங்கே இந்த தேவதையை கண்டுபிடித்தேன்? அவர்கள் தான் என்னை கண்டுபிடித்தார்கள். கலம் கண்ட ஆட்டத்தில் நான் கடலில் விழுந்தேன். அப்போது கிடைத்த கட்டுமரம் ஒன்றினைப் பற்றி கொண்டு கரையை சேர்ந்தேன்.
🌟 அதன் பின்பு கலுழவேகனின் சேவகனான வித்யாதரன் வித்யாதர நகரத்திற்கு அழைத்து சென்று இந்த வீணையோடு நமது கலத்தில் இருக்கக்கூடிய இந்த அழகு நிறைந்த தேவதையை என்னோடு அனுப்பி வைத்தார்கள் என்று கூறினான்.
🌟 மரக்கலத்திலிருந்த அனைவரும் எழில் மிகுந்த அழகிய தேவதையுடன் இராசமாபுரத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். ஒவ்வொருவரும் அந்த பெண்ணிடம் பேச பலமுறை முயற்சி செய்தார்கள். இருப்பினும் அப்பெண் குருகிய வார்த்தைகள் மூலமாகவே அனைவரையும் கையாண்டாள்.
🌟 இறுதியாக மரக்கலமானது தன்னுடைய இலக்கை எந்தவிதமான இடர்பாடுகளும் இல்லாமல் பாதுகாப்பாக வந்தடைந்தது. அதாவது இராசமாபுரத்தை வந்தடைந்தது. அனைவரும் கலத்தில் இருந்து இறங்கினார்கள். சீதத்தன் கலத்தில் இருந்து இறங்கும் போது அவனை தொடர்ந்து ஒரு அழகிய நங்கை வீணையோடு வந்து இறங்கினாள்.
🌟 இந்த செய்தியானது வனத்தில் தீப்பற்றியது போல சில நொடிகளிலேயே ஊர் முழுவதும் பரவியது. அப்பெண்ணை பார்ப்பதற்கு என்றே பலர் அங்கே கூடினார்கள். சிலரோ வயது முதிர்ந்த கிழவனுக்கு இளம் கன்னியா என்றனர்.
🌟 சிலருக்குக்கோ பொறாமை கிழவனுக்கு எங்கோ மச்சம் இருக்கின்றது என்பது போல கூறி, இவ்வளவு நாள் இவன் சேர்த்து வைத்திருந்த அனைத்து பெருமைகளையும் குறைக்க தொடங்கினார்கள்.
🌟 சீதத்தன் ஒரு அழகிய பெண்ணோடு இராசமாபுரத்திற்கு வந்திருக்கின்றார் என்ற செய்தி பதுமையின் காதினை அடைந்தது. அந்த செய்தியை கேட்டதும் அவள் மிகவும் துடிதுடித்து போனாள். இருப்பினும் தன் கணவர் அப்படிப்பட்டவராக இருக்க மாட்டார். அவரை பற்றி எனக்கு தெரியும் நான் அவரிடம் கேட்டு கொள்கின்றேன் என்று அவளிடம் வந்து கூறிய அனைவருக்கும் பதில் உரை கூறினாள். ஏதேதோ நடக்கும் என்று எதிர்பார்த்த சிலருக்கு அவளுடைய பதிலுரை மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
🌟 வீணையோடு வந்திருந்த அந்த மங்கையை சீதத்தன் தனது இல்லத்திற்கு அழைத்து வந்தான்.
🌟 அப்பொழுது அவன் மனைவியான பதுமை திலகமிட்டு உங்கள் இருவரையும் வரவேற்க வேண்டுமா? என்று வினவினாள்.

🌟 சீதத்தன் தன் மனைவி கோபமாக இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நிகழ்ந்ததை உரைக்க முயலும் போது பதுமை கரங்களில் தட்டேந்தி ஆரத்தியும், கற்பூரமும் காட்டி அவர்களிடத்தில் இருக்கக்கூடிய திருஷ்டிகள் யாவற்றையும் நீக்கிவிட்டு, அழகிய நங்கையிடம் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வாம்மா என்று கூறினாள்.
🌟 நங்கைக்கு இந்த நிகழ்வு எல்லாம் புதுமையாக இருந்தது. ஒரு வேளை இராசமாபுரத்திற்கு புதிதாக வருகின்றவர்களை இவ்விதத்தில் தான் வரவேற்பார்களோ! என்று நினைத்தாள்.
🌟 என்ன பதுமை? ஏதோ வீட்டிற்கு மருமகளை வரவேற்பது போல அழைத்து வருகின்றாய் இது முறையல்ல என்று சீதத்தன் கூறினான்.
🌟 அதற்கு பதுமையோ, நான் செய்வதில் எந்த தவறும் இல்லையே. நான் மணமக்களை தானே வரவேற்று இருக்கின்றேன். எனக்கு துணை இல்லை என்று நீங்கள் புதிதாக துணையாக இருப்பதற்கு அழைத்து வந்து இருக்கின்றீர்கள். அவர்களையும் நல்ல முறையில் வரவேற்க வேண்டும் அல்லவா! என்ன அவள் என்னைவிட வயதில் குறைந்தவளாகவும் வாலிபம் நிறைந்து, இளமை நிறைந்து இருக்கின்றாள். ஆகவே இனி இவள் எனக்கு தங்கையாக இருப்பாள் என்று கூறினாள்.
🌟 தன்னுடைய கையாலே தனது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. இவள் உனக்கு தங்கையும் அல்ல. நாங்கள் மணமக்களும் கிடையாது. இவள் வித்யாதர நாட்டு அரசனின் மகளான காந்தர்வதத்தை. இவள் நம்முடைய மகளாவாள். மருமகள் அல்ல தெளிவாக புரிந்து கொள் என்று கூறினார்.
🌟 என்னது இவள் நமக்கு மகளா? இது என்ன புது உறவாக இருக்கின்றது. அதுவும் ஒரு நாட்டின் மன்னனுடைய மகள் நமக்கு மகளா? நம்பும்படியாக இல்லையே என்று பதுமையும் கூறினாள்.
🌟 நம்பி தான் ஆக வேண்டும். நீ தான் எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாய் அல்லவா! இனிமேல் அவள் பிறந்து வளர்ந்து பெரியவள் ஆவாது என்பது ப்ப்பா... அது முடியாத காரியம் ஆகும். ஆகையால் தான் அந்த செயலை தடுப்பதற்காக வித்யாதர நாட்டில் உள்ள ஒரு கடையில் கிடைத்த இவளை நான் இங்கு வாங்கி வந்து இருக்கின்றேன் என்று கூறினான்.

🌟 என்ன விளையாட்டு... கடையில் யாராவது இந்த மாதிரி நங்கைகளை விற்பார்களா? அதுமட்டுமல்லாமல் இவள் இவ்வளவு அழகாக இருக்கின்றாள். என்னை ஏமாற்றாதீர்கள் என்று ஏக்கமாக பேசினாள்.
🌟 அட! உண்மையாக தான் கூறுகின்றேன். இவள் பெயர் காந்தர்வம். இவள் வித்யாதர நாட்டு அரசனான கலுழவேகனின் மகள் ஆவாள். இவளுக்கு ஒரு நல்ல வரனை அமைத்துக் கொடுப்பதற்காக தான் இவளை நமது நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
🌟 அதுமட்டுமல்லாது நான் அவர்களுடைய தூரத்து உறவினன் என்று நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றி சுருக்கமாக தன் மனைவியிடம் எடுத்துக் கூறினான்.
🌟 அதற்கு பின்புதான் பதுமைக்கு உண்மைகள் யாவும் புரிந்தன. கண்டவர் கூறிய பேச்சுக்களை கேட்டு உண்மை நிலையை காணாதபடி என்னுடைய கோபம் என் கண்களை மறைத்து விட்டது. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த பெண்ணை அழைத்து வந்ததில் எனக்கு எந்தவொரு இகழ்ச்சியும் இல்லை. மாறாக புகழ்ச்சி தான் ஏற்படபோகின்றது.
🌟 ஊரில் இருக்ககூடிய அனைவரும் கூட, அரசர்கள் ஒத்துழைப்பு தர, அழகிய மணிமண்டபம் அமைத்து அதில் தண்ணீர் பந்தலை வைப்போம் என்று கூறினாள் பதுமை.
🌟 என்னது தண்ணீர்பந்தலா? தண்ணீர்பந்தல் எதற்காக அமைகின்றாய்? அதற்கு எதற்கு அழகிய மணிமண்டபம் என்று சீறினான் சீதத்தன்.
🌟 இல்லையில்லை தவறுதலாக கூறிவிட்டேன். மணப்பந்தல் வைப்போம். நம்முடைய மகள் சுயம்வரத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிடுவோம் என்று கூற வந்தேன் என்று கூறினாள்.
🌟 சரி விரைவில் அமைத்து விடலாம் என்று கூறினான்.
🌟 பதுமையோ தனது கணவரிடம் சுயம்வரம் என்றால் அவளுக்கு பிடித்த மனம் கவர்ந்தவனை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தானே பொருள்.

🌟 ஆமாம் சுயம்வரம் என்றால் அது தான் இதில் உமக்கு என்ன சந்தேகம்?
🌟 இல்லை இல்லை. இவள் மிகவும் கொடுத்து வைத்தவள் தான். இந்த மாதிரி சுயம்வரத்தினை எனது தந்தை அன்றே ஏற்படுத்தியிருந்தால் நல்லதொரு கணவரை நானும் தேர்ந்தெடுத்திருப்பேன் அல்லவா! என்று கூறினாள்.
🌟 ஆமாம்! ஆமாம்! உனது தந்தை சுயம்வரம் ஏற்பாடு செய்து, அந்த சுயம்வரத்தில் அரசர்கள் அனைவரும் வரிசையாக நின்று நீ ஏந்தி நிற்கும் மாலைக்கு எவராவது ஒருவர் கழுத்தை நீட்டி இருப்பார்கள். நானும் தப்பித்து இருப்பேன் என்று கூறினார்.
🌟 அப்படி எல்லாம் உங்களை என்னால் விட முடியாது. சுயம்வரத்தில் நான் உங்களை தான் தேர்ந்தெடுத்திருப்பேன் என்று தனது கணவரை இறுக அணைத்துக் கொண்டு அவர் மார்போடு தனது தலையை வைத்து சிரித்த வண்ணமாக பற்றி கொண்டாள்.
🌟 சிறிது நொடிகளுக்கு பின்பு மகளை நம் வீட்டிலேயே தங்க வைத்து விடலாமா? என்று சீதத்தன் ஆலோசனை கேட்டான்.
🌟 காந்தர்வதத்தையை வீட்டில் தங்கவைப்பதற்கு பதுமையோ வேண்டாம் வயதிற்கு வந்த பெண்ணாக இருக்கிறாள். ஊரில் இருப்பவர்கள் எல்லாம் அவரவர்கள் வாய்களுக்கு என்ன அகப்படுகின்றதோ அதை எல்லாம் வைத்து கதை கட்டி விடுவார்கள். நாம் நம்முடைய மகளை கன்னி மாடத்திற்கு (கன்னி மாடம் : பெண்கள் தங்கும் இடம்) அனுப்பி வைப்போம். அங்கு அவள் சுதந்திரமாக இருக்க முடியும் என்றாள்.
🌟 ஆமாம். ஆமாம்... இறங்கிய சிறுபொழுதுக்குள் நமக்குள்ளே பெரிய கலவரத்தை உருவாக்கி விட்டார்கள். மகளும் இவ்விடத்தில் தங்கி விட்டால் அவ்வளவு தான். நீ சொல்வதும் உண்மைதான்.
🌟 அவள் சுகமாக சுற்றித்திரிந்து பாடிக்கொண்டிருப்பாள். அவள் பாடல்கள் நம்முடைய நித்திரையை கெடுக்கும். அதுமட்டுமல்லாது ஆட்கள் வேறு இங்கு அதிகமாக இருக்கின்றார்கள். அவளைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இந்த வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தை எல்லாம் இங்கு வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது என்றான்.
🌟 பிறகு காந்தர்வதத்தையும் அவளுடன் வந்திருந்த அவளுடைய தோழி ஆகிய இருவரையும் கன்னி மாடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். சீதத்தன் நீண்ட நாள் பயணங்களுக்கு பின்பு தனது மனைவியோடு இணைந்து நடந்த நிகழ்வுகளை எல்லாம் கூறிக்கொண்டே ஒருவருக்கு ஒருவர் சிரித்து புன்னகைத்துக் கொண்டு அன்றைய இரவுப் பொழுதை ரம்மியமான உற்சாகம் நிறைந்த பொழுதாக கழித்துக் கொண்டிருந்தனர்.
🌟 ஆதவனை நோக்கிய பூமியின் பயணம் தொடர இருள் விலகி சூரிய ஒளியினால் பொழுதுகள் யாவும் விடியத் துவங்கின.
🌟 ஊரில் ஒரு போட்டி வைக்க வேண்டுமென்றால் நாட்டை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய மன்னனுக்கு அது சார்ந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் அல்லவா. அதற்காக சீதத்தன் கட்டியங்காரனை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தான் ஈட்டி வந்த பொருட்களில் விலை உயர்ந்த கற்கள் நிறைந்த அணிகலன்களை மன்னனுக்கு சமர்ப்பிப்பதற்காக எடுத்துச் சென்றான்.
🌟 அரண்மனைக்குச் சென்று கட்டியங்காரனிடம் தான் எடுத்து வந்த பொருட்களை கொடுத்து மன்னனின் ஆதரவை பெற்றான்.
🌟 கட்டியங்காரனோ என்ன தொழில் செய்கின்றாய்? இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொடுக்கின்றாய் என்று ஏதும் அறியாதது போல வினவினான்.

🌟 மன்னா நான் கடல் கடந்து வாணிபம் செய்து வருகின்றேன். அதில் ஈட்டிய பொருட்கள் தான் இவைகள் எல்லாம் என்று கூறினார்.
🌟 ம்ம்ம்..... பரவாயில்லையே, குறைந்த நாட்களில் இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை ஈட்டுகின்றாய். கெட்டிக்காரன் தான் என்று கூறினார். ஆமாம்! என்னை சந்திப்பதற்கு என்ன தேவை உமக்கு இருக்கின்றது. ஒருவேளை ஈட்டிய பொருட்களில் எவரிடமும் காட்ட முடியாத அளவில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா? என்று வினவினான்.
🌟என்னை சந்திப்பதற்கு என்ன தேவை உமக்கு இருக்கின்றது. ஒருவேளை ஈட்டிய பொருள்களில் எவரிடமும் காட்ட முடியாத அளவில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது போலவும் வினாவினான்.
🌟ஆமாம் மன்னரே! நான் ஈட்டிய பொருட்களில் காட்ட முடியாத அளவில் ஒரு பொருளை கொண்டு வந்திருக்கின்றேன்.
🌟அப்படியானால் அந்த பொருளை முன்னமே என்னிடம் காட்டி இருக்க வேண்டுமல்லவா! என்பதுபோல கூறினார்.
🌟இல்லை மன்னரே! அது பொருள் அல்ல. நம் நாட்டவர்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வழியில் ஒரு அழகு நிறைந்த பதுமையை அழைத்து வந்து இருக்கின்றேன் என்று கூறினான்.
🌟அவ்வளவு அழகு நிறைந்த கணிகையாக இருக்கும் பட்சத்தில் அவளை எனக்கு காணிக்கையாக்கி விடு என்று கூறினான் மன்னன்.
🌟இல்லை மன்னா! அவள் கலுழவேகனின் மன்னனின் மகள் ஆவாள். அதுவும் ஒரே மகள். வித்யாதரன் அரசனின் மகளாவாள். அவளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நம் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவள் வீணையில் சிறந்து விளங்குபவள். அந்த வீணை போட்டியில் யார் அவளை வெல்கிறார்களோ அவனையே அவள் நாயகனாக கொண்டு இல்லற வாழ்க்கை நடத்த வேண்டுமென்று குறிக்கோளாடு இருக்கின்றாள். ஆகவே, அவள் பொருட்டு இசைப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்ய தாங்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டி நின்றான்.
🌟ஓ! வித்யாதர நாட்டு மன்னனான கலுழவேகனின் மகளா! அந்த நாடு மாபெரும் படைகளை கொண்ட படை வலிமை மிகுந்த நாடாகுமே. அவனை பகைத்துக் கொள்வது என்பது நம்முடைய ராஜ்ஜியத்திற்கு நன்றாக இருக்காது. நட்பு முறையில் அவனை அணைத்துக் கொண்டால் தக்க சமயத்தில் நமக்கு பயன்படும். அதுவும் அவன் பெண்ணை நமது ஊரில் உள்ள ஆடவர் யாரேனும் திருமணம் செய்துகொண்டால் நட்பு முறையில் அவனை அணைத்துக் கொள்ள முடியும். தக்க சமயத்தில் அவன் நமக்கு பயன்படுவான். அதுவும் அவன் பெண்ணை நமது ஊரில் கொடுத்துவிட்டால் அவன் இங்கு அடிக்கடி வந்து போவதால் நமக்கும் ஆதாயம் உண்டாகும். அழகு நிறைந்த அந்த பெண்மணியை அணைக்கத்தான் முடியவில்லை, அழைக்காவது வருகின்றேன். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள் என்று கூறினான்.
🌟போட்டி நடத்துவதற்கு தேவையான அனுமதியை அளித்ததற்கு நன்றி என கூறி விடைபெற்றான்.
🌟மன்னனிடம் இருந்து விடைபெற்ற சீதத்தனை பார்த்து ஒரு நிமிடம் நில்! போட்டி நடத்துவதற்கான மண்டபங்கள், அமர்வதற்கான இருக்கைகள் என அனைத்து ஏற்பாடுகளும் நல்ல முறையில் இருக்க வேண்டும். இதற்காக அரசு உதவியை எந்த விதத்திலும் எதிர்பார்க்கக்கூடாது.

🌟அதுமட்டுமல்லாமல் பல தேசங்களில் இருந்து பல இளவரசர்களும், மன்னர்களும் வருவார்கள். ஆகையால் ஏற்பாடுகள் அனைத்தும் பிரம்மாண்டமாகவும், நமது ராஜ்யத்தை பற்றி பெருமை பேசும் அளவிலும் இருக்க வேண்டும் என்றும்,
🌟ஊர் மக்கள் கூடுகின்ற இடத்தில் எல்லாம் அந்த இசை போட்டிக்கான அட்டைகளை வைத்து விளம்பரம் செய்.. அதில் தான் கையெடுத்து கும்பிடுவது போலவும், இந்த போட்டியை தான் தலைமை தாங்குவது போன்ற வாசகங்களும், அனைவரையும் வரவேற்பது போலவும் இருக்க வேண்டும் என்றும் மன்னர் கட்டியங்காரன் கூறினார்.
🌟அதற்கு சீதத்தனோ தன் வாழ்நாளில் இதுவரை ஈட்டிய பொருட்கள் அனைத்தும் மண்டபத்தை அமைப்பதற்கும், வரவேற்பதற்குமே செலவாகி விடும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டு உதட்டளவில் அப்படியே ஆகட்டும் மன்னா என்று கூறினான். இன்னும் நின்றால் ஏதேனும் செலவுகள் அதிகரித்து விடுமோ என்று எண்ணி போட்டி நடத்துவதற்கு ஏதுவான இடம் கொடுத்தமைக்கு நன்றி என சொல்லிவிட்டு உடனே அவ்விடத்தில் இருந்து விடைபெற்றான்.
🌟மன்னரிடம் போட்டி நடப்பதற்கான அனுமதி கிடைத்தவுடன் போட்டி நடப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இனிதே நடைபெற துவங்கின. போட்டி நடைபெறுவதற்கான மணிமண்டபம் கட்டும் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டன.
🌟இப்பணிகளின் நடுவே போட்டி நடைபெறுவது தொடர்பான செய்தியை முரசு கொட்டுவோரிடம் கூறி, ஒரு தேசம் விடாது அனைத்து தேசங்களிலும், மக்கள் வசிக்கும் அனைத்து தெருக்களிலும் இப்போட்டியை குறித்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
🌟தேவர்களும் கண்டு மயங்கும் வகையில் இருக்கக்கூடிய, பெண்களும் விரும்பி போற்றும் எழில் மிகுந்த பேரழகியை மணக்க விரும்புவோர் யாழிசையில் அவளை வெற்றி கொள்ள வேண்டும்.
🌟மன்னர்கள்தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. எந்த குலத்தவராக இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்ள உரிமையுண்டு.
🌟விழாவிற்கு வருக.. வெற்றி வாகை சூடுக.. பேரழகியை அழைத்து செல்க.. என்பது போல அனைத்து திசைகளிலும் இந்த போட்டிக்கான செய்திகள் பரப்பப்பட்டன.
🌟போட்டி நடைபெறுவது தொடர்பான அனைத்து விவரங்களும் மக்களிடையே காட்டுத்தீ போல பரவியது. போட்டியில் பங்கேற்பதை விட போட்டியில் யாழிசைக்கும் அந்த எழில் மிகுந்த பெண்ணை காண்பதற்காகவே கூட்டங்கள் யாவும் அலைமோத காத்துக் கொண்டிருந்தன.
தொடரும்...!!
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP