சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


சீவக சிந்தாமணி...!!

🌟 ஓ..! உன்னிடம் என்னைப் பற்றி இவ்வளவு தெளிவாக கூறினேன். ஆனால் என் மகளைப் பற்றி உன்னிடம் கூற மறந்துவிட்டேனே. அவள் பண்பிலும், குணத்திலும் சிறந்தவள். அவள் அன்னையை போன்றவள். மனதிற்கு பிடித்தவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படக்கூடியவள். அனைவரையும் அனுசரித்துச் செல்வாள். சிறிது காலம் அவளிடம் பழகினாலே அவளை ரொம்ப பிடித்து விடும். அவளை பிரிவதற்கு மனமே வராது. நீ மட்டும் என்னுடைய மகளை திருமணம் செய்து கொண்டால் என் மனைவி, மகள் பெற்ற பலனை முழுமையாக அடைந்து விடுவாள் என்று கூறினார்.


🌟 ஆனால் சீவகன் எதையும் பேசாமல் அமைதியாக நந்தகோன் கூறியதைக் கேட்டுக் கொண்டு மட்டுமே இருந்தான். ஆனால் அவனுடைய மனதில் உள்ள எண்ணங்கள் மாறுபாடாக இருந்தது.


🌟 சீவகனின் சிந்தனை ஓட்டங்களை புரிந்துகொண்ட நந்தகோன் ஏன் அமைதியாக இருக்கின்றாய்? ஜாதி வேறுபாடு நம்மிடையே இருக்கும் என்று நினைக்கிறாயா? என் மகள் உன்னுடைய மனைவியாக மாறிவிட்டால் ஜாதி பற்றிய பேச்சுக்கள் இங்கே இருக்காதே.


🌟 மனிதர்களாகிய நாம் மட்டும் தான் இன்றும், என்றும் ஜாதியை பற்றி பேசிக் கொண்டே இருக்கின்றோம். ஆனால் நம்மைப் படைத்தவன் எந்த ஜாதி வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரிடத்திலும் ஒரே கருணை கொண்டவனாக மட்டுமே இருக்கின்றான். 


🌟 வள்ளியின் கணவனான முருகப்பெருமானின் பெயரை சொல்லும் பொழுது அனைவரின் மனமும் குளிரும் அல்லவா. சர்வேஸ்வரனின் மகனான முருகன் குறமகளை மனம் செய்து கொண்ட பொழுது அவனுடைய அன்னையான பார்வதி எந்தவொரு வார்த்தையும் சொல்லவில்லை. 


🌟 உமக்குத் தெரியும் தேவேந்திரனின் மகள் தெய்வானையை அவர் ஏற்கனவே திருமணம் செய்து இருக்கின்றார். ஆனாலும் அவளிடத்தில் இருப்பதைவிட வள்ளியின் மீதுதான் முருகனுக்கு ஆசைகள் அதிகமாக இருந்தன என்று மற்றவர்கள் கூற நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். 


🌟 வள்ளி எங்கள் குலத்தைச் சார்ந்த பெண் தான். மனதிற்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அதற்குப் பிறகு நாம் எதையும் யோசிக்க வேண்டியது இல்லை. நான் உன்னிடத்தில் என்ன உரைத்தாலும் நீ அனுபவித்தால் மட்டுமே அதைப் பற்றிய புரிதல் உன்னிடத்தில் ஏற்படும். ஒரு முறை நீ அவளை வந்து பார் அதற்குப் பிறகு நீயே அவளை வேண்டாம் என்று கூறமாட்டாய் என்றார்.


🌟 சீவகனும் நந்தகோன் கூறியதிலிருந்து ஒரு புதிய தகவலை அறிந்து கொண்டான். அதாவது சச்சந்த மன்னருடைய மகனின் வரவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும், தனக்கான உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அருகில் இருப்பதையும் புரிந்து கொண்டான். 


🌟 ஆனால் இன்றைய சூழ்நிலையில் இடையர்களின் தலைவருடைய மகளை திருமணம் செய்து கொள்வது என்பது முறையாக இருக்காது. படைகளை பெருக்க வேண்டும் என்பதில் சீவகன் நிலையாக இருந்தான். அவனுடைய குருவின் ஆலோசனைகளும் அவன் மனதில் ஆழ பதிந்து இருந்தது. 


🌟 அதாவது தனி மரம் தோப்பாகாது. அரசனுடைய மகளைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உனக்கு படை உதவி கிடைக்கும். அந்த படைகளின் மூலமாக உன்னுடைய இழந்த நாட்டினையும், தந்தைக்கு இழைத்த கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்து உன்னால் வெற்றிகொள்ள முடியும் என்றும் கூறினார். 


🌟 தனது மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தையும் வெளிப்படையாக கூறாமல் எதிரில் இருப்பவரின் மனம் புண்படாமல் இருக்கும் வகையில் தன்னுடைய பதிலையும் உரைக்கத் தொடங்கினான் சீவகன். 


🌟 ஐயா! நீங்கள் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். ஆனால் என்னுடைய நண்பனான பதுமுகன் உங்களின் மகள் மீது எல்லையற்ற அன்பும், ஆசையும் கொண்டிருக்கின்றான். பார்ப்பதற்கு அழகாக இருப்பான். நீங்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பான். உங்களுடைய வியாபார பணிகளுக்கும் உதவியாக இருப்பான். அவன் உங்களிடத்தில் மருமகனாக இல்லாமல் மகனாக இருப்பான். உங்களுடைய மகளின் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வான்.


🌟 ஆனால் என்னுடைய தந்தையோ கொஞ்சம் பிற்போக்குவாதியாக செயல்படக் கூடியவர். அதாவது தன்னுடைய நிலைக்கு நிகராகவும் அதற்கு மேல் உள்ள நிலையில் உள்ளவர்களின் பெண்ணையே எனக்கு மணந்து வைக்க அவர் விரும்பக் கூடியவர். 


🌟 அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய ஆசையாகும். செல்வ செழிப்போடு கணக்கிட்டுப் பார்த்தால் உங்களை விட எங்களுடைய செல்வநிலை அதிகமாகவே இருக்கும். 


🌟 உழவர்கள் நெல் விளைவிக்கலாம். நீங்கள் பால் பண்ணையும் வைக்கலாம். எனினும் இருவருக்கும் இடையில் தரகர்களாக இருக்கக்கூடிய மக்கள் மட்டுமே பணக்காரர்களாக இருகிறார்கள். அதைப்பற்றி எல்லாம் உங்களிடம் பேசுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டு கேட்டு எனக்கும் அந்த பழக்கம் தொற்றி விட்டது போல தோன்றுகின்றது. எனக்கு பதிலாக என்னுடைய நண்பனான பதுமுகனுக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திருமகளை தருவதாக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறினான்.


🌟 சீவகன் கூறிய கூற்றுகளிலிருந்து நந்தகோன் அவனின் மனநிலையையும், சூழ்நிலையையும் அறிந்து கொண்டார்.


🌟 சீவகனும், நந்தகோன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொண்டு யாருக்கும் எந்த பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் இருக்கும் சூழ்நிலையை கையாளத் தொடங்கினான். தன்னை கொல்ல வருபவனை சூழ்ச்சியாக வெற்றிக்கொள்ள தெரிந்தவனுக்கு, தனக்கு உதவியாக இருப்பவர்களின் மனதினை வெற்றிக்கொள்ள தெரியாமல் இருக்குமா!


🌟 நந்தகோனிடம் திருமணத்தைப் பற்றி நாம் மட்டுமே பேசிக் கொண்டு இருக்கின்றோமே! உங்களுடைய பெண்ணிடம் ஒரு வார்த்தை நீங்கள் கேட்கவில்லையா? ஓ... நீங்கள்தான் கூறியிருக்கின்றீர்களே! பசுக்களை யார் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தான் என் பெண்ணை மணமுடித்து வைக்கின்றேன் என்று. 


🌟 உங்களுடைய மகள் நீங்கள் கூறிய சொற்களை மீறி நடக்க மாட்டார். அடக்கமான பெண் தானே. வேறு என்ன அவரிடம் எதிர்பார்க்க முடியும். இதற்கு மேல் உங்களுடைய விருப்பம் என்று கூறினான்.


🌟 சீவகன் கூறியது பெருமையாக இருந்தாலும், அவருடைய மனதில் ஏதோவொரு இனம்புரியாத கவலை இருப்பது போல தோன்றியது. நாம் மட்டுமே அனைத்தையும் முடிவு செய்கின்றோம்... அவளிடமும் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்ற எண்ணமும் அவ்விடத்தில் அப்பொழுது தான் அவருக்குத் தோன்றியது. பொறுமையாக சிந்தித்து செயல்படவும் தொடங்கினார். உடனே தன்னுடைய மனைவியை அழைத்தார்.


🌟 மனைவியிடம் நம்முடைய மகள் திருமணத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? பதுமுகனுக்கு நம்முடைய மகளை திருமணம் செய்து வைக்கலாமா? என்று கேட்டார்.


🌟 உடனே கோதாவரியும் திருமணம் செய்துகொண்டு வாழப் போவது நம்முடைய மகள் தான். எதிர்கால வாழ்க்கை அவளுடைய கரங்களில் தான் உள்ளது. ஆகவே அவளிடம் ஒருவார்த்தை கேளுங்கள் என்று கூறினாள்.


🌟 நந்தகோன் தன்னுடைய மகளை அழைத்து நீ என்ன சொல்ல விரும்புகின்றாய்? பதுமுகனையே திருமணம் செய்து கொள்கிறாயா? என்று வினவினார்.


🌟 உடனே அவருடைய மகள் நான் அவரை ஏற்கனவே பார்த்து இருக்கின்றேன் என்று கூறினாள்.


🌟 இதைக் கேட்டதும் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றுகொண்டிருந்தார் நந்தகோன். என்னதான் பெரியவர்கள் சிறியவர்களை அடக்கி வைத்து இருந்தாலும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் சிறுவர்கள் என்றுமே அடங்குவது இல்லையே. சரி உனக்கு அவனை பிடித்திருக்கிறதா? என்று வினவினார்.


🌟 நாங்கள் இருவரும் ஏற்கனவே பலமுறை சந்தித்து இருக்கின்றோம். அதுமட்டுமில்லாமல் அவரை காதலித்து வருகிறேன் என்று கூறினாள்.


🌟 தன்னுடைய மகளின் கூற்றுக்களை கேட்டதும், இரு மனங்கள் இணைந்த பின்பு என்ன செய்ய முடியும் என்று சிரித்துக் கொண்டே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.


🌟 சீவகனும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய நண்பனான பதுமுகனிடம் சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டான்.


🌟 பதுமுகனும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். எதிர்பாராத இந்த தருணத்தில் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது போல, யாருக்கும் கிட்டாத பொருள் தனக்குக் கிடைத்தது போல மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். 


🌟 தன்னுடைய நண்பனான சீவகனை கட்டி அணைத்துக் கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டான். அப்போது சீவகனிடம் நான் எப்பொழுதும் உன்னிடத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பக்கபலமாகவும் இருப்பேன் என்று தன்னை அறியாமல் எதிர்காலத்திற்கு உண்டான அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்து விட்டான்.


🌟 என் ஆறுயிர் தோழனே... ஏழ்பிறவியில் யான் செய்த நல்வினையே... என் உடன்பிறவா சகோதரனே... சீவகனே! இப்பொழுது நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன். என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள். என்னால் முடிந்த அளவு நீ வினவியதை செய்கிறேன் என்று கூறினான்.


🌟 காலம் வரும் தோழனே! அப்பொழுது நான் உன்னிடம் கேட்கிறேன் என்று மாயம் நிறைந்த எதிர்காலத்தை கருதி நிகழ்காலத்தில் அதற்கான பாதையும் உருவாக்கிக் கொண்டான் சீவகன்.


🌟 நாளும், கோளும் நிறைந்த ஒரு நல்ல நாளில் பெரியோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என பலர் சூழ பதுமுகனின் திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமண சடங்குகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது. இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டு புன்னகை பூத்த வண்ணமாக மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.


🌟 சுட்டெரித்த சூரியன் மறைந்து இருளை பரப்ப, இருளில் வெண்மையான குளுமையை பரப்பும் சந்திரன் தோன்ற, தடைகளற்ற தனிமையில் சிக்கிய இளம் பறவைகள் ஒன்றாக சேர காத்துக்கொண்டு இருந்தனர்.


🌟 மங்கிய அகழ் வழியில் வெள்ளாளி பரப்பும் சந்திரனே வெட்கம் கொள்ளும் கோவிந்தையின் அழகில் மெய்மறந்து நின்று கொண்டிருந்தான் பதுமுகன்.


🌟 கற்பனை உலகிலிருந்த பதுமுகனை தன்னுடைய இனிமையான குரல் மூலமாக நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தால் கோவிந்தை.


🌟 ஒலியும், ஒளியும் இல்லாத அமைதியான இருள் நிறைந்த, மதி நிறைந்து இருக்கும் அந்தப் பொழுதில் என்ன பேசுவது என்று புரியாமல் இருவரும் அமைதி காத்தனர்.


🌟 சிறு வினாடியும் பொரும் யுகமாக தோன்ற பதுமுகன் இனியும் அமைதி காத்தல் கூடாது என்று பல இரவுகள் வரும், போகும். ஆனால் மனதிற்கு பிடித்த பெண்ணுடன் ஊர் அறிய, உலகறிய மனைவியான என்னுடைய காதலியுடன் அமைதியான தருணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதுபோல முதல் பேச்சை தொடங்கினான் பதுமுகன்.


🌟 உன்னுடைய தந்தையோ மிகவும் கண்டிப்பானவர். அவர் எப்பொழுதும் உன்னை தனியே வெளியே அனுப்ப மாட்டார். அதுவும் ஆடவர்கள் நிறைந்திருக்கும் பகுதியில் பெண்கள் எப்பொழுதும் வர மாட்டீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி நீ என்னை பார்த்தாய். நீ என்னை பார்த்து இருப்பதாக கூறி இருக்கின்றாய் என்று சிலர் கூற நான் கேட்டிருக்கின்றேன். இது உண்மையா? என்று வினவினான்.


🌟 பதுமுகன் கூறி முடிப்பதற்குள் கோவிந்தை இல்லை நான் பொய்யுரைத்தேன். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் அப்படி சொன்னேன் என்று கூறினாள்.


🌟 பதுமுகனுக்கு வெளியில் சொல்ல முடியாத அளவில் மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆயிரம் காளைகளை அடக்கியது போல சிறந்த வீரனாகவும் அந்த கணப்பொழுதில் உணர்ந்தான்.


🌟 காளையும் மயங்கும் பாவையின் கடைக்கண் பார்வையில் என்பது போல அனைத்தையும் மறந்து சிலை போல நின்றான். பின் நான் உன்னை பலமுறை பார்த்திருக்கின்றேன் என்று கூறினான்.


🌟 கோவிந்தையும் உடனே சில இடங்களில் மறைமுகமாக யாரும் அறியாத வண்ணத்தில் சில கணப்பொழுதில் கண்டிருக்கின்றேன். பசுவைப் பார்த்து தான் விலை பேசுவோம், மடியையும் தொட்டுப் பார்ப்போம் என்று கூறி புன்னகை பூத்தாள். ஆமாம் என்னை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று கேட்டாள் இறுதியாக.


🌟 உடனே காலத்தை தாமதிக்காமல் உன்னை பிடித்திருப்பதால்தான் உன் கையினை என் கையில் பிடித்து இருக்கின்றேன் என்று கூறினான். அப்போதுதான் கோவிந்தையும் நிகழ் உலகத்திற்கு வந்தாள். சிரிப்பலைகள் நிரம்பி வழிந்தன.


🌟 நான்மதி ஆரச்சுவர் சூழ, சீதளம் குறைந்து வெம்மை மிக, அறையிருள் நீங்கி பொழுது புலர்தலே என்பது போல இன்பக் கடலில் மூழ்கி மகிழ்ச்சி அலைகளின் மத்தியில் பதுமுகன் கோவிந்தை நீந்திக் கொண்டு இருந்தனர்.


🌟 இராசமாபுரத்தில் செல்வம் நிறைந்த பெரு வணிகர்கள் பலர் இருந்தனர். அதில் அனைவராலும் அறிந்து கொள்ளக் கூடியவராக இருந்தவர் கந்துக்கடன். வியாபாரம் என்றாலே போட்டி தானே. ஒருவர் மட்டும் இருந்தால் அது எப்படி? அவருக்கு நிகர் இன்னொருவரும் இருக்கின்றார். அவர் தான் சீதத்தன் என்பவர் ஆவார்.


🌟 வணிகத்தில் லாபமும், நஷ்டமும் என்பது வாளின் கூர்மையை போன்றதாகும். அதை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் மேன்மை ஏற்படும். சில நேரங்களில் கூர்மையான வாள்கள் விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. அது போல தான் சீதத்தன் என்னும் வணிகன் நிலையும்.


🌟 எதிர்பாராத ஒரு சமயத்தில் அவன் ஈட்டிய பொருள் செல்வங்கள் அனைத்தும் அவனை விட்டு நொடியில் அகன்று சென்றன. அருள் இல்லை என்றால் அவ்வுலகில் இடமில்லை. ஆனால் செல்வம் இல்லை என்றால் இவ்வுலகில் இடமில்லை என்பது போல அதுவரை பலரும் அறிந்த ஒரு வணிகர் தாழ் நிலையை அடைந்து விட்டார் என்ற செய்தி பலரிடத்தில் பரவத் தொடங்கியது. 


🌟 சீதத்தனை நம்பி இருந்த பலரும் அவருடைய இந்த தாழ் நிலையை எண்ணி கவலை கொண்டார்கள். அந்த செய்தியின் தாக்கத்தினால் அவருடைய மனமானது சிறுக சிறுக உடையத் துவங்கியது. 


🌟 இந்த நிலை தொடர்ந்து சென்றால் ஒரு நாள் நம்முடைய நிலை பகலில் இருக்கும் நிலவைப் போல மாறி விடுமோ என்று எண்ணத் தொடங்கினான். இதை மென்மேலும் தொடர விடக்கூடாது என்பதை முடிவுசெய்து தன்னுடைய வணிகத்தை திரைக்கடல் ஓடி திரவியம் தேடுவதில் நாட்டம் கொள்ள துவங்கினான். 


🌟 நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த மண்ணில் விளையும் பல பொருட்கள் பல தீவுகளிலும், நாடுகளிலும் கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கின்றதே அதை வைத்து நாம் நம்முடைய வணிகத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.


🌟 அதன் விளைவாக கடல் கடந்து சென்று பல புதிய தீவுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு இராசமாபுரத்தில் விளையும் விளைபொருட்களில் சிறந்ததாகவும், குறைந்த விலையில் தமக்கு கிடைக்கும் வகையிலும், அதை விற்கும் பொழுது பெரும் லாபம் அடைய வேண்டுமென்று என்ற கண்ணோட்டத்தோடு பல தேடல்களுக்கு பின்பு சில குறிப்பிட்ட விளைபொருட்களை மட்டும் தன்னுடைய மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு சென்றான்.


🌟 அவனோடு படகோட்டிகளும், தொழில் செய்ய விரும்பியவர்களும், பல தேசங்களுக்கும், தீவுகளுக்கும் செல்ல ஆசைப் படக்கூடியவர்களும், உறவினர்கள், நெருக்கமானவர்கள் என சிலர் சென்று கொண்டிருந்தனர். முயற்சி கொண்டவன் முன்னேற்றம் அடைவான் என்பது போல, துவக்கத்தில் ஏளனமாக பேசியவர்கள் கூட அவர் அடைந்த லாபத்தை கண்டு பொறாமையும் கொண்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர் இழந்த பொருளை விட பல மடங்கான பொருட்களையும், செல்வத்தையும் ஈட்டிக்கொண்டான்.


🌟 சீதத்தனுடைய மனைவி அழகும், எழிலும் நிறைந்த பேரழகு உடைய பதுமையாவாள். பல மடங்கு செல்வ வளங்களை கொடுத்த இறைவன் அவர்களுக்கு ஒரு வரத்தை மட்டும் கொடுக்கத் தவறினான். அதுதான் மகப்பேறு என்ற பெரும் வரமாகும். 


🌟 அவர்கள் இருவருக்கும் வாரிசு இல்லையே என்பது மிகுந்த குறையாக அவர்களை வாட்டி வதைத்தது. தனக்கு கிடைத்து இருக்கக்கூடிய இந்த செல்வச்சேர்க்கை நிலையையும், அனுபவிக்க வாரிசு இல்லையே என்ற எண்ணம் சீதத்தனை மிகுந்த துன்பத்தில் ஆழ்த்தியது.


🌟 அவனுடைய மனதில் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த துன்ப நிலையை போக்கி கொள்வதற்காக அவ்வப்போது வெளியூரில் சென்று மன நிறைவையும், மகிழ்ச்சியான தருணங்களையும் ஏற்படுத்திக் கொள்வான். வெளியூர்களுக்கு சென்று விட்டு வரும் பொழுது தனக்கு படகு ஓட்டுவதற்கு வேண்டிய ஆட்களையும் தன்னுடன் பயணம் செய்வதற்கு விருப்பமுள்ள உறவினர்களையும் அழைத்து வருவது அவனுடைய பழக்கமாக இருந்து வந்தது.


🌟 தன்னுடைய கணவர் இவ்விதமாக பல தீவுகளுக்கு கடல் வழியாக வாணிபம் செய்வது சீதத்தனுடைய மனைவிக்கு விருப்பம் இல்லாததால் அவருடைய உறவினர்களிடம் கூறி தன்னுடைய கணவனுக்கு நல்லுரை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினாள். 


🌟 உறவினர்கள் பலர் இருக்கும் செல்வமே அதிகமாக இருக்கும் பொழுது எதற்காக கடலுக்கு சென்று உனது உடல் ஆரோக்கியத்தை குறைத்துக் கொள்கின்றாய். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து அல்லவா! என்று கூறினார்கள்.


🌟 ஆனால் அதற்கு சீதத்தனும் அவர்கள் கூறும் கூற்றுகளுக்கெல்லாம் பதில் கூற்று கூறத் துவங்கினான். ஒருவனிடத்தில் ஊக்கம் இருந்தால் மட்டுமே அவனால் புதியதை உருவாக்கவும், ஆக்கமும் செய்ய முடியும். 


🌟 பிறக்கின்ற அனைவருக்கும் என்றோ ஒருநாள் மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். ஆறிலும் சாவு தான், நூறிலும் சாவு தான். மரணம் என்பது கடல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மட்டும் தான் ஏற்படும் என்பதில்லை. இங்கு நிலத்தில் இருக்கின்றவர்களுக்கும் எப்பொழுது, எப்படி வேண்டுமானாலும் மரணம் நேரிடலாம் என்று கூறினான். 


🌟 அது மட்டுமல்லாமல் தனக்கு எதிராக பேசியவர்களையே தனது வாய் ஜாலத்தின் மூலமாக வெற்றி கொண்டு அவர்களையும் தன்னுடன் கடற்பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு ஊக்குவித்தான்.


🌟 சீதத்தன் கூறிய கூற்றுகளில் இருந்த உண்மையும், புதிய பயணம், புதிய நாடு முதலியவற்றை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் பலர் இடத்தில் தோன்ற அவரவர்கள் தமது குடும்பம், குழந்தைகளை விட்டுவிட்டு புதுமையான பயணம் காண்பதற்கு அவரோடு விருப்பம் கொண்டனர்.


🌟 வணிகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தன்னுடைய கப்பலில் ஏற்றிக்கொண்டு சங்குகள் நிறைந்த, நிலமகள் மறைந்த, நீர்மகள் தெரிந்த எண்ணற்ற அலைகள் தோன்றிடும், எங்கும் பரந்து விரிந்திருக்கும் எல்லைகளற்ற கடலில் நீண்ட நெடும் பயணமாக சென்று கொண்டிருந்தனர். 


🌟 பயணங்களின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்பத்தையும், அனுபவித்து தங்களுடைய பயணத்தை புதிய அனுபவமாக ரசித்து மேற்கொண்டனர். இறுதியாக வணிகத்திற்கு ஏற்ற ஒரு புது தீவினை அடைந்தனர்.


🌟 அந்தத் தீவின் தலைவன் இவர்களை நல்முறையில் வரவேற்று அவர்களுக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தான். அவர்களுடைய தீவுகளில் இருக்கக்கூடிய உணவுகளைக் கொண்டு விருந்துகள் வைத்து உபசரித்தான். 


🌟 பயணம் மேற்கொண்டவர்கள் அதுவரை அவ்வளவு சுவை நிறைந்த உணவினை உண்டதில்லை என்பது போல உண்டு மனம் மகிழ்ந்தனர். உணவின் மூலம் வயிறு தானே நிறையும். மனம் நிறையுமா? அந்த நிறைவில்லா மனதினை நிரப்புவதற்கும் ஒரு வழியினை உருவாக்கித் தந்தான் அந்த தீவின் தலைவன். 


🌟 அந்த புதிய தீவில் மேனி அழகிலும், மனதினை கொள்ளை அடிக்கும் மங்கைகள் கொண்டும் மதிமயங்க வைக்கக்கூடிய மதுக்கள் மூலமாக ஆடலும், பாடலும் நிறைந்த உல்லாச நிகழ்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. 


🌟 அதுமட்டுமல்லாது கதிரவன் மறைந்த குளிர்ச்சி நிறைந்த சந்திரன் உதித்த பொழுதில் மங்கையர்கள் பலர் சூழ, நீண்ட நெடும் பயணத்தால் உடல் உறுப்புகளுக்கு ஏற்பட்ட களைப்பு மறைந்து, சுறுசுறுப்பாக அவர்களுடைய உடல் அளவிலும், மன அளவிலும் கிளர்ச்சிகள் உருவாகின.


🌟 மங்கையும், மதுவும் இணைந்து மதியை மயக்கிட சில நாட்கள் எவ்விதம் கழிந்தது என்பதே நினைவில் இல்லாமல் சென்றது. பல இடங்களில் தோன்றினாலும், பல பயணங்களை மேற்கொண்டாலும், மாறுபட்ட பரிணாமங்களை உருவாக்கிக் கொண்டாலும், நீரின் பிறப்பிடம் மேகம் என்பது போல சீதத்தனுடன் பயணம் மேற்கொண்ட அனைவரும் இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலையும் அவர்களுக்கு உருவாகியது.


🌟 இன்புற்று இருந்தவர்களுக்கு இந்த தீவினை விட்டு செல்வதற்கு மனமே இல்லை என்பது போல பிரியா விடை கொடுத்து விட்டு அந்த தீவினை விட்டு தங்களுடைய சொந்த நாட்டிற்கு செல்லும் பொழுது அந்த தீவில் கிடைக்கும் பொருட்களையும் மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.


🌟 விலைமதிப்பில்லாத விலை உயர்ந்த முத்துக்களையும், யானை தந்தங்களையும், அகில் சந்தனம் முதலிய பொருட்களை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு அந்த தீவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துவிட்டு, தீவின் தலைவனுக்கு தனிப்பட்ட முறையில் சில பரிசுகளையும் அளித்துவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்ற சீதத்தன் தன்னுடைய தாய்நாட்டை நோக்கி மரக்கலத்தை செலுத்த துவங்கினான்.


🌟 மரக்கலத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தனக்கான கனவுகளையும், கடந்தகால சுகங்களையும் எண்ணிக் கொண்டு நிகழ்காலத்தில் பயணத்தை மேற்கொண்டு இருந்தனர்.


🌟 மரக்கலத்தில் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் விரைவில் தம்முடைய நாட்டிற்குக் கொண்டு சென்று, விற்று தன் ஊரில் இருக்கக்கூடிய அனைத்து வணிகர்களும் பொறாமை கொள்ளும் அளவில் நாம் வாழ வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தான். 


🌟 அதுமட்டுமல்லாது தன்னுடைய வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கக்கூடிய தன்னுடைய பதுமையிடம் இந்த புதுமைகளை கொண்டு சென்று அவளிடத்தில் காட்டினால் அவள் அடையும் மகிழ்ச்சி எண்ணிலடங்காத வகையில் இருக்கும் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான். பழங்கள் என்பது போதையைத் தரும். அந்த போதையை விட பல மடங்கு இன்பத்தை தர வல்ல தன்னுடைய மனைவியின் அரவணைப்பை எண்ணி அந்த சுகத்திற்காக காத்துக்கொண்டிருந்தான் சீதத்தன்.


🌟 தூக்கத்தில் இருக்கும் பொழுது கனவுகள் எவ்விதம் கலையுமோ அவ்விதத்தில் நிகழ்காலத்தில் கண்ட கனவுகளும் எதிர்பாராத சில சூழ்நிலைகளால் கலையத் துவங்கின. யாவரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் வானத்து நட்சத்திரங்கள் யாவும் மின்னிக்கொண்டிருந்தன. 


🌟 நிலவானது தன்னுடைய ஒளியை வீசி கடலைக் குளிர்ச்சிப் படுத்திக் கொண்டிருந்தது. நிலவின் குளிர்ச்சியினால் கடல் அலைகளும் எப்பொழுதும் போல எழும்பி ஓலம் இட்டுக்கொண்டிருந்தன. 


🌟 கடலின் அமைதியானது சிறு நொடிகளிலேயே மாறத் துவங்கியது. மேகமானது காற்றினால் புகுந்து கடலில் ஈர்ப்பை ஏற்படுத்த, அதன் விளைவாக அலைகள் எழும்பும் உயரமும் அதிகரித்தது. காற்றும், மேகமும் இணைந்து கொண்டு எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் பெரும் மழையை உருவாக்கிட கட்டுப்பாடுகள் பல நிறைந்த மரக்கலமானது கட்டுப்பாட்டை இழந்து காற்றின் திசைக்கு ஏற்ப செயல்பட துவங்கியது. 


🌟 கலத்தில் இருந்த அனைவருக்கும் மனதில் அச்சம் உருவாகத் துவங்கியது. கலத்தினை இயக்கிய தலைவனுக்கோ எந்தவிதமான அச்சம் இன்றி கலத்தில் இருப்போரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு காற்றின் திசைக்கு எதிர் திசையில் பாய்மரத்தினை இறக்கி மரக்கலத்தின் கட்டுப்பாடுகளை மாற்றிக்கொண்டு இருந்தான். 


🌟 எதிர்பாராத விதமாக காற்றின் வேகத்தினால் மரக்கலத்தின் பாய்மர கொடியானது உடைய, கட்டுப்பாடுகள் அனைத்தும் தளரத் தொடங்கின. இனியும் மரக்கலத்தினை கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட தலைவனோ! பயணம் செய்த அனைவரிடத்திலும் இனி இறைவன் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்பது போல முக பாவனைகள் மூலம் வெளிப்படுத்த, இறுதியில் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தன்னுடைய பயணத்தை நடுக்கடலிலேயே முடித்துக் கொண்டது மரக்கலம்.


🌟 மரக்கலத்தில் பயணம் செய்த அனைவரும் கண்ட கனவுகள் கனவாகவே மாறத் துவங்கின. கனவு கண்டவர்களும் கடலுக்குள் செல்லத் துவங்கினார்கள். கலத்தில் பயணம் செய்த அனைவரும் மூழ்கிட சீதத்தன் ஏதோ அதிர்ஷ்டகரமாக உயிர் பிழைத்தான். 


🌟 உயிர் பிழைத்தவன் தன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிய முயற்சிகள் பல மேற்கொண்டான். சுற்றிலும் இருள் சூழ்ந்து காற்றின் வேகம் அதிகரித்த வண்ணமாகவே இருந்தது. ஆனால் அப்போதைய சூழ்நிலையில் அவனால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காற்றின் திசைக்கு ஏற்பவும் அலைகளின் வேகத்திற்கு ஏற்பவும் தன்னுடன் வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று இருப்பார்களா? அல்லது அவர்கள் அனைவரும் நடுக்கடலில் மூழ்கி இறந்து விட்டார்களா? அல்லது தப்பித்துக் கொண்டார்களா? என்பது தெரியவில்லையே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.


🌟 பயணம் மேற்கொள்ளும் பொழுது உறவினர்கள் கூறிய அனைத்தும் அவன் நினைவுக்கு வர துவங்கியது. தன்னுடைய ஊரில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தவர்களை புதிய தேசங்களுக்கும், நாடுகளுக்கும் அழைத்துச் செல்வதாக ஊக்கம் கொடுத்து அவர்களை அழைத்து வந்து அவர்களது குடும்பத்தினர் பார்க்க முடியாத பட்சத்தில் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்ததை எண்ணி கவலையும், அச்சமும் அடைந்தான். அந்த எண்ணத்தின் விளைவாக அவன் மனமும், உடலும் தளரத் தொடங்கியது. உடைந்த படகில் சிறு மரக்கலம் ஒன்று அவன் கண்களுக்கு அகப்பட அதில் ஏறிக் கொண்டான்.


🌟 கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் நீரும், காற்றின் வேகம் மட்டும்தான் நீண்டுகொண்டே சென்றது. தன்னிடத்தில் இருக்கக்கூடிய ஒரு கட்டுமரத்தின் சிறு துண்டுகளை கொண்டு நம்மால் கரை ஏற முடியும் என்ற நம்பிக்கை அவன் ஆழ்மனதில் சிறிதளவு இருந்து வந்தது.


🌟 கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் இதை நன்று பற்றிக்கொண்டு நம் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தன்னுடைய மனைவியையும், மகிழ்ச்சியான நினைவுகளையும் எண்ணிக்கொண்டே திக்கு தெரியாத கடலில் ஓரளவு தானறிந்த நீச்சலை கொண்டு நீந்தி பெயர் தெரியாத ஒரு மணல் மேட்டின் ஒரு பகுதியை அடைந்தான். 


🌟 எட்டுத் திக்குகளிலும் நீர், மண் இவற்றைத் தவிர வேறு எதுவும் தன்னுடைய கண்களுக்கு புலப்படவில்லை.


🌟 கொண்டுவந்த பொருட்கள் அனைத்தும் கடலில் மூழ்கியதை எண்ணி மீண்டும் மனம் வருந்தினான். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தன்னுடைய மனைவியான பதுமை எடுத்து உரைத்தும் அதைக் கேட்காமல் இன்று இவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டோமே என்று வருந்தினான். 


🌟 தன்னுடைய மனைவியின் கழுத்தில் கட்டிய தாலி கயிறு நிலைக்குமா? அதை காப்பாற்ற இயலுமா? என்று மிகவும் ஏங்கினான். மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்த அவனுடைய மனமும், உடலும் பதட்டத்திலும், பயத்திலும் நிறைந்திருந்தது. 


🌟 சிந்தனைகளில் தெளிவில்லாமல் குழப்பமும், எதிர்கால நிலை என்ன? என்ற தவிப்பும் அவனிடத்தில் மேம்பட்டு காணப்பட்டது. அந்த தவிப்பின் ஒரு பாதிப்பாக ஒருவேளை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றால் இங்கேயே உணவின்றி, தனிமையில் சிக்கி எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் நம்முடைய உயிரை இழந்துவிடுவோமோ என்று அஞ்சினான்.


🌟 இனி என்ன நிகழப் போகின்றது என்பதை தெரியாமல், என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை? என்னுடன் வந்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்களா அல்லது இருக்கின்றார்களா? என்று தெரியாமலேயே என்னுடைய உயிரானது இவ்விடத்தில் சென்றுவிடுமோ என்று பலவிதமான சிந்தனைகளுடனும், குழப்பங்களுடனும் மணல் திட்டில் இருந்து சிறிது தூரம் தன்னுடைய நடை பயணத்தை மேற்கொண்டான். 


🌟 அந்த இடத்தில் அவன் கண்ட சிறு காட்சியானது அவனுடைய மனதில் ஒரு பெரும் மாற்றத்தையும், ஒரு நம்பிக்கையையும் உருவாக்கியது.


🌟 சற்றுத் தொலைவில் ஒரு பொழிலைக் கண்டான். ஞாழலும், புன்னையும் பூத்துக் கிடந்தன. நண்டுகள் பக்கத்தில் இருந்த அன்னத்தைக் கண்டு மருண்டு ஒதுங்கவில்லை. அந்த அன்னங்கள் அவற்றைக் கண்டும் காணாமல் தவயோகிகளைப் போல அவற்றைத் தின்னாமல் விட்டு வைத்தன. 


🌟 பூத்த மலர்களை உடைய பொழிலையும், அதை அடுத்து இருந்த அகிம்சா மூர்த்திகளாக விளங்கிய அன்னப் பறவைகளையும் கண்டதும் அவனுக்கு உயிர் தப்ப முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.


🌟 இருளில் சிக்கியவனுக்கு ஒளி கிடைத்தது போல தப்பிப்பதற்கு வழி பிறந்துவிட்டது என்று அந்தப் பொழிலை நோக்கி விரைந்து சென்றான். தன்னுடைய நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துவிட்டன என்பதை அறிந்ததும், அவன் உடலில் இருந்துவந்த அவ்வளவு சோர்வும், மன வருத்தங்களும் நொடியில் அவனை விட்டு அகன்றன. 


🌟 பொழிலை அடைந்து பலவாறாக யாராவது இருக்கின்றார்களா? என்று கழுகுப்பார்வை கொண்டு தேடிக்கொண்டிருந்தான். யாராவது தன்னை வந்து பார்க்க வருவார்களா? என்று எதிர்பார்த்தான். ஆனால் அவனுடைய முயற்சிகள் அனைத்தும் எந்தவிதமான பயனும் அளிக்கவில்லை. 


🌟 மாறாக யாரும் அவ்விடத்தில் இல்லை. குழப்பத்தில் இருந்த மனமும், அவனுக்கு பலவிதமான கற்பனைகளையும் ஏற்படுத்தியது. துன்பத்தில் சிரிப்பது தான் அனைத்தையும் கடந்து செல்வதற்கான முதல் படி என்பதை நன்கு அறிந்திருந்தானோ என்னவோ சீதத்தன்.


🌟 அவனுடைய மனதில் வன தேவதை ஒருத்தி அவ்விடத்தில் தோன்றி தனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அன்னமிட்டு ஆதரிப்பது என்ற ஆவலும் ஏற்பட்டது. ஒருவேளை காட்டு மனிதர்களும் அல்லது வேட்டையாடுபவர்கள் யாரேனும் இவ்வழியாக வந்து தன்னை காப்பாற்றி செல்வார்கள் அல்லது பல பயணங்கள் மேற்கொள்ளும் மரக்கலங்கள் ஏதேனும் இவ்வழியாக சென்று தன்னிடம் அருள் காட்ட முடியும் என்ற நம்பிக்கையும் அவனிடத்தில் தோன்றியது.


🌟 அந்தப் பொழிலில் இருக்கக்கூடிய சிறு குச்சிகளையும், மரங்களையும் கொண்டு அவ்விடத்தில் மனித நடமாட்டம் இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கினான். 


🌟 அனைத்து சூழ்நிலைகளையும் தன்னால் முடிந்த அளவு உருவாக்கிய சீதத்தனுக்கு அவன் மனதில் ஒரு சிறு ஆசையும் தோன்றியது. அதாவது விண்ணுலகத்தில் இருந்து யாரோ ஒரு தேவதூதன் தன்னை வந்து அழைத்து சென்று அறுசுவை நிறைந்த உணவுகள் நிறைந்த விருந்து வைத்து உபசரிப்பான் என்ற ஆவலும் அவனிடத்தில் தோன்றாமல் இருக்கவில்லை.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)