சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


சீவக சிந்தாமணி...!!

🌟 குருநாதர் சீவகனை விட்டு சென்றதும் தன்னுடைய நாட்டிற்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் நிகழ்ந்த இந்த கொடுமையை எவ்விதத்திலாவது சீர் செய்ய வேண்டும் என்று எண்ணினான். அதற்கு தனித்திருந்து போராடினால் மட்டும் போதாது என்பதை அவருடைய குருநாதர் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். தனக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதில் சீவகனும் சிறுவயது முதலே முயற்சியில் இறங்கினான். 


🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்ள வேண்டும் எனில் பலதரப்பட்ட அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து இருந்தான். அதற்காக பலதரப்பட்ட கேள்விகள் மற்றும் அனுபவங்கள் நிறைந்தவர்களின் பேச்சுக்களை தன் மனதில் ஆழப்பதித்துக் கொண்டான். அதுமட்டுமல்லாது கலை சார்ந்த துறைகளிலும் தன்னை வல்லவனாக வளர்த்துக் கொண்டான்.


🌟 வீணை இசைப்பதிலும், வாசிப்பதிலும் சிறந்தவனாக அனைவராலும் அறியப்பட்டு இருந்தான். கல்வி கற்பதனால் ஞானம் அதிகரிக்கும். எவரிடத்தில் ஞானம் அதிகரிக்க தொடங்குகின்றதோ அவரிடத்தில் அழகும் அதிகரிக்கும். பருவ வளர்ச்சியுடனும் வீர தீர செயல்பாடுகளில் ஈடுபட்டு காண்போர்கள் வியக்கும் வண்ணம் நடந்து கொண்டு இருந்தான். 


🌟 எதிரிகள் இடத்தில் அச்சத்தை உருவாக்கும் வகையில் வேலை கொண்டு வெற்றி வாகையை சூடிக் கொள்ளக்கூடிய மார்புகளை கொண்ட சீவகனை காணும் போதெல்லாம் அவ்வூரில் இருக்கக்கூடிய கன்னிப் பெண்கள் அனைவரும் சீவகனுடைய லாவண்யா தோற்றத்தினால் மதிமயங்கி இருந்தார்கள். 


🌟 ஒவ்வொருவரும் சீவகன் தனக்கானவனாக இருக்கக்கூடாதா? என்று எண்ணும் அளவில் கன்னி மங்கையர்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு நிரம்பியவனாக இருந்தான். 


🌟 தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல அவனது சகோதரனான நந்தட்டன் சீவகனுக்கு உற்ற துணையாக பல விஷயங்களில் இருந்தான். ராமருக்கு லட்சுமனன் என்பது போல எப்பொழுதும் அவனை பிரியாமல் அவன் மேற்கொண்டு இருந்த செயல்கள் அனைத்தையும் நன்கு கவனித்து அவனுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தான். சுருங்கச் சொன்னால் அவன் நிழல் போல அவனுடனே இருந்து வந்தான். 


🌟 இந்நிலையில் கந்துக்கடனுக்கு வாழ்க்கை துணையாக சுநந்தையும், அவனுக்குத் தேவையான நேரங்களில் சுகத்தை அளிக்கும் வகையில் சில கன்னிகளும் இருந்து வந்தனர். அரசு கணக்கில் மனைவியும், பதுக்கல் கணக்கில் சில விருப்பமுள்ள மாதர்கள் என குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அதனுடைய விளைவின் காரணமாக நபுலன், விபுலன் என்ற நன்மக்கள் இருவரையும் பெற்றெடுத்தான்.


🌟 சீவகன் தன்னுடைய சகோதரர்கள் இடத்தில் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் ஒருவர் போலவே எண்ணி அவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் ஒருங்கே கொடுத்தான். சகோதரர்கள் அவனுக்கு துணையாக எப்பொழுதும் இருக்கும் வகையில் அவர்களையும் தம்முடைய இலக்கை நோக்கிய பயணத்தில் அழைத்துச் செல்லும் நோக்கோடு செயல்பட்டான்.


🌟 எண்ணம் உயர்வானதாக இருக்கும் பொழுது அதற்கான உதவிகளும் சரியாக கிடைக்கும் என்பது போலவே அவனுடைய எண்ணத்திற்கேற்ப அவனுடைய சகோதரர்களும் அவனுக்கு துணையாக நின்றார்கள், அவர்களை அறியாமலேயே.


🌟 நாளும் கோளும் மாறுவது போல சீவகனின் குணநலன்களிலும் மாற்றம் காணப்படத் துவங்கியது. பதுமுகன் என்பவனும், புத்திசேனன் என்பவனும் இவனது வலது கரமாகச் செயல்பட்டனர். தம்பியரும், தோழர்களும் அறிவு மிக்க அமைச்சராகவும், செயலாற்றும் வீரர்களாகவும் செயல்பட்டனர். 


🌟 வேளைக்குச் சோறு, துணிமணிகள் மற்றும் அடிதடி, நாளைக்கு ஒரு நாடகம். கவலையில்லாத கட்டவிழ்ந்த வாழ்வு இவர்களை கவ்வியது. ஆனால் சீவகன் கொண்ட இலக்கில் மட்டும் மாற்றம் ஏற்படாமல் காலதிற்காக காத்துகொண்டு இருந்தது.


🌟 இராசமாபுரத்தில் பேசுவதற்கும், பேசியதை சிந்திப்பதற்கும், சிந்திப்பதை செயல்படுத்துவதற்கும் ஏதேனும் ஒரு சில நேரங்களில் அதற்குண்டான நிகழ்வுகளும், வாய்ப்புகளும் தோன்றாமல் இருந்ததில்லை. பூக்கள் நிறைந்த ஒரு தோட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றால், யார் வேண்டுமானாலும் தோட்டத்தில் புகுந்து பூவினை பறித்துக் கொள்ளலாம். 


🌟 அதைப்போல தான் பாதுகாப்பு கொடுக்க இல்லாத வகையில் இருக்கக்கூடிய ஆட்சியாளரான பலருடைய நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தனக்கான சுகத்தையும், தன்னை சார்ந்தவர்களின் நன்மைக்காகவும் ஆட்சியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தும் நம்பிக்கைத் துரோகியான கட்டியங்காரனின் கரங்களில் ஆட்சிப் பொறுப்புகளில் இருக்க பாதுகாப்பில்லாமல் வளமும், கனிகளும் நிறைந்த தோட்டமாக இராசமாபுரம் இருந்துகொண்டே இருக்கின்றது.


🌟 கார் இருள் நிறைந்த கார்காலம் முடியப் போகின்றது என்பதை அறிந்துகொண்ட கொடிகள் நிறைந்த முல்லையானது தன்னிடத்தில் இருந்துவந்த மொட்டுக்களை பூக்கச் செய்தது. தன்னுடைய கன்றுகளை எண்ணிய ஆநிரையும் (பசுக்கள்) தன்னுடைய மடிகளில் பாலை பொழியச் செய்தது.


🌟 மற்ற நகரங்களில் இருந்து பொருட்களைக் கவர்ந்து வந்து மலையின் உச்சியிலே அரசு நடத்தும் சில வேடுவர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கக்கூடிய இராசமாபுரத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். சரியான பாதுகாப்பு இல்லாத நகரம் என்றும் வலிமை இல்லாத அரசன் தான் நாட்டை ஆளுகின்றான் என்ற தகவல் வரை அவர்கள் சேகரித்து கொண்டனர். 


🌟 வறியவன் என்றால் வலியவனுக்கு மகிழ்ச்சி தானே என்பது போல நாட்டின் நிலைகளை அறிந்ததும், நகரத்தில் வளமை நிறைந்த காலக்கட்டங்களை அறிந்து அந்த தினங்களில் வந்து தமக்கு தேவையான ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதற்காக மேய்ச்சல் இடத்தில் பதுங்கி காத்துக்கொண்டு இருந்தனர்.


🌟 காத்திருந்தது வீண்போகவில்லை வேடுவர்களுக்கு. அவர்கள் எதிர்பார்த்த தருணங்களும் சாதகமாக அமைந்தன.


🌟 இடையர்கள் சிலர் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கக்கூடிய காட்டில் உள்ள புற்களை மேய்வதற்காக மாடுகளை ஓட்டிச் சென்றார்கள்.


🌟 அதுவரை பொறுமை காத்திருந்த வேடுவர்கள் எதிர்பாராத தருணத்தில் திடீரென்று இடையர்களை தாக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய தாக்குதலுக்கு மறு தாக்குதல் செய்ய முடியாத இடையர்கள் தப்பித்தோம், பிளைத்தோம் என்ற எண்ணத்தில் அவ்விடத்தை விட்டு ஓடி நகரத்திற்குள் வந்தனர்.


🌟 இடையர்கள் பயந்து ஓடுவதை கண்டு சிரித்த வண்ணமாக இருந்த வேடுவர்கள் இடையர்கள் அனைவரையும் துரத்தி அடித்த பின்பு அந்த பசு மாடுகளை அவர்களுடைய இடத்திற்கு கவர்ந்து சென்றனர்.


🌟 தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் அப்பசுவின் உரியவர்களிடம் சென்று நிகழ்ந்த நிகழ்வுகளை எடுத்துக் கூறினார்கள். தன்னுடைய தாயை எதிர்பார்த்து குரல் கொடுத்து காத்துக்கொண்டிருந்த கன்று குட்டியை பார்த்த வண்ணமாக வீட்டில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் இருந்தார்கள்.


🌟 இது போன்றதொரு நிகழ்வு மீண்டும் இனிவரும் நாட்களில் நிகழக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பசுவை இழந்த இடையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசனிடம் சென்று அவனுடைய கடை வாயிலில் முறையிட்டனர். 


🌟 குறை கேட்டவன் படைகளை அனுப்பி பசுக்களை மீட்டு வருக! என்று ஆணையை பிறப்பித்தான். படைகள் அனைத்தும் மன்னருடைய மைத்துனனான மதனன் தலைமையில் வேடுவர்களை விரட்டி அடித்து ஆநிரைகளை மீட்டு வருவோம் என்று கூறி புறப்பட்டார்கள். சென்ற வேகத்தை விட திரும்பிய வேகம் அதிகம் என்பது போல முரடர்களான வேடுவர்களை எதிர்த்து அவர்கள் யாவரையும் விரட்டி அடிக்க முடியாமல் அவரவர்கள் தாம் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தோடு உடலுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே வீரத்தை விட உயிரை பெரிதாக மதித்து ஊர் திரும்பினர்.


🌟 திரும்பிய வீரர்களை கண்ட மக்கள் அனைவரும் வேடுவர்களை விரட்டி விட்டீர்களா? ஆநிரைகளை மீட்டு விட்டீர்களா? என்று வினவிய வண்ணமாக ஆநிரைகளை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். ஆனால் ஆநிரைகள் ஒன்றும் திரும்பவில்லை என்பதை அறிந்து பசுக்களைப் பறி கொடுத்தவர்கள் செய்வது அறியாது கலக்கம் அடைந்தனர்.


🌟 வேடுவர்களை எதிர்த்துப் போரிட முடியாமல் படை வீரர்கள் அனைவரும் புறமுதுகிட்டு திரும்பி வந்ததை அறிந்து கொண்ட இடையர்களின் தலைவனான நந்தகோன் இனி அரசனையும், அரசபடையினரையும் நம்பியிருந்தால் எந்தவித பயனும் ஏற்படாது என்பதை புரிந்து கொண்டான். ஆகவே ஆநிரைகளை மீட்கும் பொறுப்புகளை தானே ஏற்றுக்கொண்டார்.


🌟 மாடுகளுக்காக உயிர் விடுவதா? என சிந்தித்து எந்த செயலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருக்கக்கூடிய இளைஞர்களை அவர் வெறுக்கத் தொடங்கினார். இன்றைய இளைஞர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்ட இடையர்களின் தலைவன் அவர்களை எவ்விதத்தில் தூண்டிவிட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். 


🌟 நந்தகோனின் மகள் அழகு பதுமையாக இருந்தாள். அவளை திருமணம் செய்து கொள்வதற்காக இராசமாபுரத்தில் நிறைய இளைஞர்கள் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.


🌟 'எருதுகளின் கூரிய அம்பினை கண்டு அஞ்சுபவனை இடையர் பெண் விரும்பமாட்டாள்" என்றும் வீரத்திருமகனையே இடைப் பெண்கள் விரும்புவார்கள். 'வீரம் மிக்கவனுக்கு என் மகள் தாரம் ஆவாள்" என்று நந்தகோன் பறையறிவித்தான். ஆநிரையை மீட்டுக் கொண்டு வரும் வீரத்திருமகனுக்குத் தன் மகள் உரியள் எனவும், அவளோடு வரிசை என்ற பேரால் பசுக்கள் ஈராயிரமும், பொற்பாவைகள் ஏழும் தருவதாகவும் உரைத்தான்.


🌟 ஊரில் இருக்கக்கூடிய அனைத்து காளைகளும் பறையொலியை கேட்டார்கள். 'கோவிந்தை" என்ற அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ளக் காத்திருந்தவர்கள் எல்லாம் காத தூரம் ஓடினார்கள். 'கட்டி வெண்ணெய் போன்ற காரிகை கோவிந்தையானாலும் சரி, கொட்டிய முல்லை போன்ற நிறம் உடைய அரமகளிர் ஆயினும் சரி, வெட்டி வீழ்த்தும் செயல் உடைய வேடுவரை எதிர்க்க நம்மால் முடியாது" என்று விதிர்விதிர்த்து ஒடுங்கினர்.


🌟 சீவகனின் தோழர்களும், தம்பியரும் இச்செய்தி கேட்டனர். புதுமுகம் என்றால் நகைமுகம் காட்டும் பதுமுகன் சீவகனிடம் வந்து போர் தொடுப்போம் என்று தூண்டினான். 'நம்மால் இயலுமா?" என்று சிந்தித்துப் பார்த்தனர். 'அழகி ஒருத்தி கிடைப்பாளே" என்று அங்கலாய்த்தான் பதுமுகன். 'அதற்காக நாம் வைரக் கத்தியில் கழுத்து அறுத்துக் கொள்ள முடியுமா? யோசித்துச் செயல்படுவோம்" என்றான் புத்திசேனன்.


🌟 பதுமுகனுக்கு அந்த அழகு தாரகையை கண்டது முதல் அவள் மீது இனம் புரியாத ஆவல். அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஊரில் உள்ள அனைத்து இளைஞர்களும் என்னும் போது நான் மட்டும் என்ன விதி விலக்கா? சிந்தித்தால் சிந்தித்து கொண்டே தான் இருக்க முடியும். ஆனால் அவளுடைய லாவண்யா பிரதிமை உரைப்பது அவ்வளவு எளிதல்ல. 


🌟 வெண்ணெய் போன்று இனியவளாகவும், பால் போல் வெண்மை மனம் கொண்டவளாகவும், வெண்ணெய் உருக்கிய பசு நெய்போல் இளைத்த தேக மேனியள். நீ எப்போதாவது கரும்பு வில்லை பார்த்திருக்கிறாயா? பார்க்க வில்லை என்றால் விடு. ஏன் அதை பார்க்க வேண்டும். அதற்கு அவசியமும் இல்லை அவளுடைய இரண்டு புருவங்களைப் பார்த்தால் போதும். 


🌟 கயல் விழி என்று கேள்விப் பட்டிருக்கிறாயா? சிலர் அவளைக் 'கயல்விழி" என்றே கூப்பிடுகிறார்கள். கட்டமைந்த மேனி, தொட்டால் துவண்டு விடும் இடை, அழகுக்காகவே அவளை ஆராதிக்கலாம். கோயில் சிலைபோல அவளுடைய லாவண்யா வடிவம் இருக்கும் என புதுமுகம் சிறு நொடியில் கண்ட அந்த பதுமையின் லாவண்யா வடிவங்களை ஏதோ யுகம் பொழுது அவளுடன் வாழ்ந்தவன் போல கூறிக்கொண்டு இருந்தான்.


🌟 அவனுடைய நண்பர்களோ கவிஞரே! போர் புரிய செல்லலாம் என்று கூறியது ஆநிரைகளுக்காக இல்லை என்பது போல தெரிகின்றதே.. என்று புத்திசேனன் கூறிய போது தான் பதுமுகன் கற்பனை உலகத்தை விடுத்து நிகழ் உலகிற்கு வந்தான். வந்தவன் அது இல்லை, இது இல்லை என்று கூறி விளையாடிக் கொண்டு இருந்தான்.


🌟 ஆனால் சீவகனோ நண்பர்களின் பேச்சுக்களையும், உரையாடல்களையும் கேட்டுக் கொண்டு இருந்தாலும், அவனுடைய உடலில் ஓடுவது என்னவோ அரச ரத்தம் தானே. தன் நாட்டின் நிலையையும், பொதுமக்களுடைய சூழலையும் எண்ணி மிகுந்த கவலை கொண்டான். பதுமுகன் கூறியதுபோல சிந்தித்தால் சிந்தித்துக் கொண்டே தான் இருக்க முடியும். ஆகவே செயலில் இறங்க வேண்டும் என்றும், அதற்கான வாய்ப்புகள் அமைந்து விட்டன என்றும் திண்ணமாக எண்ணினான்.


🌟 அதுவரை புன்னகைத்துக் கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் சீவகனை கண்டார்கள். சீவகனோ இங்கு நிகழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய நிகழ்வுக்கும், தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது போலவே எதையோ சிந்தித்துக் கொண்டே இருப்பதை அவனுடைய முகத்தின் வெளிப்பாடுகள் மூலம் தெரிந்து கொண்டார்கள் அங்கிருந்த நண்பர்கள் அனைவரும்.


🌟 என்ன சீவகனே! ஆழ்ந்த யோசனையில் அகப்பட்டுக் கொண்டாயோ? சிரிப்பதற்கு கூட நொடிகள் இல்லாமல் சிந்தித்துக் கொண்டே இருக்கின்றாய் என்று கேட்டான் பதுமுகன்.


🌟 சீவகனோ தன்னுடைய நண்பர்களைப் பார்த்து நம்முடைய நாட்டு நிலைதான் என்ன? வேடுவர்களை எதிர்த்துப் போராடக்கூட நம் நாட்டில் வீரர்கள் இல்லையா? இனியும் பொறுத்திருப்பது என்பது முடியாது. இது நமக்கு விட்ட சவால் அல்ல. நமது நாட்டிற்கே விட்ட சவால் ஆகும். இதை முளையிலேயே கிள்ளி விடுவது நாட்டிற்கும் நல்லது... நாளைய தலைமுறைக்கும் நல்லது என்று நண்பர்களிடையே தனது மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தையும் கூறினான்.


🌟 சீவகன் வெளிப்படுத்திய எண்ணங்களுக்கு பின்புதான் நகைச்சுவையாக இருந்த களமானது போர்க்களமாக மாறத் துவங்கியது. சீவகன் கூறுவது உண்மை தானே என்று புத்திசேனனும் எண்ணினான். சீவகனோடு இணைந்து அவனுடைய நண்பர்கள் அனைவரும் வேடுவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக படைகளைத் திரட்ட தொடங்கினார்கள். 


🌟 இராசமாபுரத்திலிருந்து இளைஞர்களை நோக்கி அன்னியர்கள் வந்து சூழ்ந்து சூறையாட நம் நாடு அவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டதா? இது நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்கல்ல. நம்முடைய ஆண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று கூறி, இளைஞர்களிடமிருந்து வேடுவர்களை பற்றிய அச்சத்தால் மறைந்திருந்த வீரத்தினை வெளிக்கொணர்ந்து அவர்களை வீரமிக்க ஒரு படைவீரனாக மாற்றி தன்னுடைய படையில் இணைத்துக் கொண்டான்.


🌟 தன்னுடன் இணைந்தவர்களை அழைத்துக்கொண்டு வேடுவர்களை எதிர்த்துப் போராட கிளம்பினான். வேடுவர்களை எதிர்க்க மேற்கொண்ட பயணத்தில் சீவகன் தன்னுடைய நிரந்தர எதிரி என்பவர்கள் வேடுவர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டான். தன்னுடைய எதிரி இன்னும் தன்னுடைய நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். இவர்களிடம் போரிடுவதை காட்டிலும் சாதுர்த்தியமான முறைகளில் இவர்களை வெற்றி கொள்வது தான் சிறந்தது என்பதை அறிந்து கொண்டான்.


🌟 தன்னுடைய எண்ணத்தை தன்னுடன் வந்தவர்களிடம் எடுத்துரைத்து அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டான். பகைவன் என்பவர்கள் தனக்கு நிகரானவர்கள் அல்ல என்பதை சிந்தித்து செயல்பட்ட சீவகன் அவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி தன்னுடைய நாட்டிற்கு என்றும் வராத வகையில் சிறிதளவு கூட இரத்தமும், எந்த விதமான சேதமும் இல்லாமல் புத்திசாலித்தனத்தின் மூலமாகவே எதிரிகளான வேடுவர்களை வெற்றி கொள்வதற்கு உண்டான திட்டத்தையும் அவ்விடத்தில் உருவாக்கினான்.


🌟 கட்டியங்காரனின் படைகளை அடித்து துரத்திய வேடுவர்கள் சீவகன் தன்னை எதிர்க்க படைகளுடன் வந்து கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டார்கள். சீவகனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்றும் இவர்கள் எண்ணினார்கள். பெரும்படை வீரர்களையே தோற்கடித்து விட்டோம் இவர்கள் என்ன ரத்த சூட்டில் வந்திருக்கக்கூடிய இளம் காளைகள் தானே எளிதில் வெற்றி கொள்ளலாம் என்று மார்தட்டிக் கொண்டு இருந்தார்கள் வேடுவர்கள்.


🌟 தன்னுடைய எதிரிகளை தாழ்வாக எடை போடுதல் என்பது போரில் தோல்வி அடைவதற்கான முதல் படி ஆகும் என்பதை அறியாதவர்கள். வந்து கொண்டு இருப்பவன் வாலின் நுனியை மட்டும் பயன்படுத்தாமல் அறிவின் கூர்மையும் பயன்படுத்தினான் என்பதை அறியாமல் எதிரியை எதிர்ப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.


🌟 வேடுவர்கள் பற்றிய சில தகவல்களை முன்னரே அறிந்து வைத்திருந்த சீவகன் அவர்களை வெற்றி கொள்வதற்கான லாவகமான முறைகளை தனது நண்பர்கள் மற்றும் தன்னுடன் இருப்பவர்களிடம் எடுத்துரைத்து, வேடுவ படைகளை அவர்களுடைய இடத்திலேயே சூட்சுமமான முறையில் சிறைப்பிடித்து, அவர்களிடத்தில் எப்பொழுதும் இந்த நாட்டிற்கு வராத வகையில் அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். 


🌟 கொடூரமான தோற்றங்களும், வேடுவர்கள் அஞ்சி பயம் கொள்ள கூடிய ரூபங்களையும் தரித்துக்கொண்டு அவர்கள் அனைவரையும் இருந்த இடத்திலிருந்து ஓட வைத்தனர்.


🌟 ஒருவரிடத்தில் பயத்தை உருவாக்குவது என்பது எப்பொழுதும் அவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சமமாகும். பயம் என்பது கூர்முனை நிறைந்த ஆயுதங்களை விட பல மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆயுதமும் கூட என்பதை நன்கு புரிந்து அதை செயல்படுத்தினார்கள்.


🌟 உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அவ்விடத்தில் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு இனி எப்பொழுதும் இந்த நாட்டின் பக்கமே வரக்கூடாது என்ற முடிவில் பயந்து ஓடினார்கள். கவர்ந்துவந்த பசு கூட்டத்தையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு சென்றார்கள்.


🌟 பயந்து ஓடிய வேடுவர்களை துரத்திக்கொண்டு ஓடிய பயமறியா இளம் காளைகளை தடுத்து நிறுத்திய சீவகன் நம்முடைய எதிரிகள் இவர்கள் அல்ல. இன்னும் சில நாட்களில் நீங்கள் அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். அப்பொழுது உங்களுடைய வீரத்தையும், கோபத்தையும் அவர்களிடத்தில் காட்டுங்கள். இவர்களிடத்தில் இல்லை என்று கூறி அவர்களை அமைதிப்படுத்தினான். 


🌟 நாட்டிலேயே தன்னுடைய தாய் பசுவிற்காக வாசலைப் பார்த்து காத்துக் கொண்டிருந்த கன்றுக்குட்டி சிறிது நேரத்திற்குப் பின்பு அவ்விடத்தில் இருந்து எழுந்து வாயிலின் நுழைவிடத்தை அடைந்தது. தன்னுடைய கன்றுக்குட்டி என்ன செய்யுமோ என்று எண்ணிக் கொண்டிருந்த தாய்ப்பசு வேடுவர்களிடமிருந்து தப்பித்து சீவகனின் படைகள் மூலமாக அவர் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டன. 


🌟 தாயை கண்ட கன்றுக்குட்டி அதுவரையில் அதனிடத்தில் இருந்துவந்த சோர்வுகள் முழுவதும் நீங்கி மகிழ்ச்சி கொண்டது. தன்னுடைய கன்றை நினைத்து மடியில் நிறைத்திருந்த பாலை அடி வயிற்றில் சுமந்து பசியோடு இருந்த கன்றுக்கு ஊட்ட அவற்றை கண்ட பாவையர்கள் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாததாக இருந்தது.


🌟 நந்தகோன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். இதற்கெல்லாம் காரணமான சீவகனை அந்த இடத்தில் காணும் பொழுது அவனுடைய இதயத்தில் ஏதோ ஒரு விதமான பழைய நினைவுகள் அனைத்தும் அவனிடத்தில் குடிகொள்ள தொடங்கின. சீவகனின் தோற்றமும், செயல்பாடும் நந்தகோனுக்கு மிகவும் பிடித்த ஒருவரை நினைவுபடுத்தியது. தன்னுடைய மகளுக்கு சிறந்த வீரன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சியுடன் அவனை அணுகினான். 


🌟 சீவகனின் அருகில் சென்றதும் எதிரில் வந்திருந்த நந்தகோனை வரவேற்கும் விதத்தில் பணிவுடன் அவரிடத்தில் நடந்து கொண்டான். பின்பு அவனிடத்தில் தனது மனதில் தோன்றிய அனைத்தையும் வெளிப்படையாக கூறத் தொடங்கினார்.


🌟 வீரம் நிறைந்த இளைஞனே! உன்னை கண்டதும் உன்னிடத்தில் பல விஷயங்களைப் பேச வேண்டும் என்ற ஆவல் என்னிடத்தில் அதிகரிக்கிறது. ஆகையால் நான் கூறுவதைக் கவனமாக கேள். ஆனால் அதை நினைவில் வைத்துக் கொள்ளாதே... மறந்துவிடு. இருந்தாலும் உன்னிடத்தில் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.


🌟 நாங்கள் அனைவரும் கொடுங்கோன்மை நிறைந்த நம்பிக்கை துரோகம் செய்த கட்டியங்காரன் என்னும் ஒருவனின் ஆட்சியில் அகப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். எண்ணற்ற வளங்கள் யாவும் நிறைந்து இருந்த இந்த வழமைமிக்க நாட்டில் இப்பொழுது வறுமை மட்டுமே குடிகொண்டுள்ளது. 


🌟 இப்பொழுது இருக்கின்ற வளங்களை விட பலமடங்கு அதிக அளவில் வளங்கள் நிறைந்த இவ்விடத்தை ஒரு மன்னன் ஆட்சி செய்தான். அந்த ஆட்சி என்பது தேவர்களும் வந்து வாழும் தேவலோகம் போல இருந்தது. 


🌟 சீவகனும் எதையும் அறியாதது போல, புதிதாக கதை கேட்பது போல நின்று அவரிடத்தில் யார் அந்த மன்னன் இவ்வளவு வளங்கள் நிறைந்த நாட்டை ஆட்சி செய்து, இன்றைய நிலைக்கு காரணமாக இருக்கக்கூடிய மன்னனை அமர வைத்தவன் யார்? ஏனென்றால் இன்று இந்நாட்டினை ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய மன்னனை நம்பிக்கை துரோகி என்று கூறுகின்றீர்கள் என எதுவும் அறியாதது போல வினவினான். 


🌟 நந்தகோன் சீவகனிடத்தில் அவர் தான் மக்களின் மன சிம்மாசனத்தில் இன்றும் மறையாமல் நிலையாக அமர்ந்திருக்கின்ற அரிச்சந்திரனாகிய சச்சந்தன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.


🌟 மன்னருடைய மனைவி இன்றைய நிலையில் என்னவாக இருக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாததாக இருக்கின்றது. இருப்பினும் அவள் கர்ப்பமாக இருந்தாள். அன்றைய பொழுதில் அவளுடைய குழந்தையை ஈன்றெடுத்து இருந்தாள். அந்த குழந்தையின் வயது ஏறக்குறைய உன்னுடைய வயதாக தான் இருக்கும். 


🌟 உன்னை பார்க்கின்ற பொழுதெல்லாம் எனக்கு அவனுடைய எண்ணமும், சிந்தனைகளும் அதிகரிக்கின்றன. ஒரு நாள் அவன் நிச்சயமாக வருவான். தன்னுடைய தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணமாக இருந்தவர்களை அழித்து அவன் தந்தை இழந்த நாட்டை மீண்டும் பெறுவான். அவன் ஒருவன் தான் இந்த நயவஞ்சகனை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் ஆகும். அவனுக்காக தான் இந்த நாட்டு மக்களும் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவன் வருவான் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருக்கின்றது. 


🌟 சூரியன் மறைந்ததும் கருமையான இருள் சூழ்ந்து வானத்தை முழுமையாக மறைத்துக் கொள்ள முடியாது. அது போல் தான் மக்களுடைய மனதில் நிலை கொள்ளாத மன்னர்களும், கொடுமையான ஆட்சிகளை செய்கின்ற மன்னர்களும் நிலைத்து வாழ்ந்திருக்கின்றார்கள் என்று எந்த ஒரு சரித்திரமும் பேசியதில்லை. 


🌟 உன்னுடைய செயல்களையும், பேச்சுக்களையும் கேட்டும் போதெல்லாம் இந்த சிந்தனைகள் என்னிடத்தில் அளவுக்கு அதிகமாக ஏற்படுகின்றன. இந்த எண்ணத்தை உன்னிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருந்தது. அதனால் தான் உன்னிடத்தில் நான் என்ன நினைக்கிறேனோ அனைத்தையும் கூறி விட்டேன். அதிகமாக பேசி இருந்தால் என்னை மன்னித்துவிடு. இது பொதுவான விஷயமாகும். நாட்டு அரசியல். இனி நம் வீட்டு அரசியலுக்கு செல்வோமா.


🌟 நாங்கள் இடையர் குலத்தில் பிறந்தவர்கள். கண்ணனை வழிபடக்கூடியவர்கள். அவனுடைய பெயரைத் தான் எனக்கு வைத்தார்கள். கோவிந்தன் என்று என்னை அழைப்பார்கள். எனக்கு வாய்த்த மனைவி மகா குணவதியாவாள். என்னுடைய விருப்பு, வெறுப்புகளை அறிந்து செயல்படக் கூடியவள். நல்ல வாழ்க்கை துணைவர். 


🌟 நான் எனக்கு ஒரு ஆண் மகன் பிறப்பான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பெண் குழந்தை பிறந்து விட்டாள். என்ன ஆண் குழந்தையாகப் பிறந்து இருந்தால் நான் சேமித்து வைத்திருக்கக் கூடிய அனைத்து சொத்துக்கும் வாரிசாக இருந்திருப்பான்.


🌟 ஆனால் பெண் குழந்தை பிறந்ததும் என்னுடைய மனைவி அடைந்த மகிழ்ச்சி என்பது மட்டற்றதாக இருந்தது. அவளைப் பார்த்த அந்த நொடியில் திருமகளே என் வீட்டில் மகளாகப் பிறந்து விட்டாள் என்று எண்ணினேன். அவள் பிறந்து வளர வளர எங்களுடைய செல்வாக்கும், செல்வமும் அதிகரிக்கத் தொடங்கியது. 


🌟 இன்றைக்கு நான் இந்த சமுதாயத்தில் ஒரு பெரும் புள்ளியாக இருக்கின்றேன் என்றால் அதற்கு முழு காரணம் என் மகள் தான். என் மகள் பிறந்ததும் அவளுடனே என்னுடைய அதிர்ஷ்டமும் சேர்ந்து வந்துவிட்டது போல எனக்கு தோன்றியது. அவளுடைய புன்னகை பூத்த முகத்தை பார்த்துவிட்டு எங்கே நான் சென்றாலும் அங்கெல்லாம் மகிழ்ச்சியும், பொன்னுமாக கிடைத்தது. 


🌟 என்னுடைய பாட்டனார் இரு நூறு பசுக்களை வைத்திருந்தார். என்னுடைய தந்தையார் அதை இரண்டாயிரமாகப் பெருக்கினார். இப்பொழுது என்னிடம் இருபதினாயிரம் பசுக்கள் இருக்கின்றன. 


🌟 பசுக்கள் தானே நம்முடைய செல்வம். நிலம், நீர் இவற்றில் விளையும் பயிர்கள் ஒரு நாட்டின் அடிப்படை செல்வ வளத்தில் குறிப்பிடும். அதற்கு அடுத்தபடியாக இருப்பது பசு வளமாகும். பொன்னும், மணியும் இல்லாமல் இருந்தாலும் உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் பாலும், சோறும் இல்லாமல் எவராலும் உயிர் வாழ முடியாது. அது மட்டும் அல்லாமல் இந்த ஊரிலேயே நான் தான் இடையர்களின் தலைவன். என்னுடைய ஒரே மகளை உனக்கு மணம் முடித்துத் தர விரும்புகிறேன்.


🌟 ஓ..! உன்னிடம் என்னைப் பற்றி இவ்வளவு தெளிவாக கூறினேன். ஆனால் என் மகளைப் பற்றி உன்னிடம் கூற மறந்துவிட்டேனே. அவள் பண்பிலும், குணத்திலும் சிறந்தவள். அவள் அன்னையை போன்றவள். மனதிற்கு பிடித்தவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படக்கூடியவள். அனைவரையும் அனுசரித்துச் செல்வாள். சிறிது காலம் அவளிடம் பழகினாலே அவளை ரொம்ப பிடித்து விடும். அவளை பிரிவதற்கு மனமே வராது. நீ மட்டும் என்னுடைய மகளை திருமணம் செய்து கொண்டால் என் மனைவி, மகள் பெற்ற பலனை முழுமையாக அடைந்து விடுவாள் என்று கூறினார்.


🌟 ஆனால் சீவகன் எதையும் பேசாமல் அமைதியாக நந்தகோன் கூறியதைக் கேட்டுக் கொண்டு மட்டுமே இருந்தான். ஆனால் அவனுடைய மனதில் உள்ள எண்ணங்கள் மாறுபாடாக இருந்தது.


🌟 சீவகனின் சிந்தனை ஓட்டங்களை புரிந்துகொண்ட நந்தகோன் ஏன் அமைதியாக இருக்கின்றாய்? ஜாதி வேறுபாடு நம்மிடையே இருக்கும் என்று நினைக்கிறாயா? என் மகள் உன்னுடைய மனைவியாக மாறிவிட்டால் ஜாதி பற்றிய பேச்சுக்கள் இங்கே இருக்காதே.


🌟 மனிதர்களாகிய நாம் மட்டும் தான் இன்றும், என்றும் ஜாதியை பற்றி பேசிக் கொண்டே இருக்கின்றோம். ஆனால் நம்மைப் படைத்தவன் எந்த ஜாதி வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரிடத்திலும் ஒரே கருணை கொண்டவனாக மட்டுமே இருக்கின்றான். 


🌟 வள்ளியின் கணவனான முருகப்பெருமானின் பெயரை சொல்லும் பொழுது அனைவரின் மனமும் குளிரும் அல்லவா. சர்வேஸ்வரனின் மகனான முருகன் குறமகளை மனம் செய்து கொண்ட பொழுது அவனுடைய அன்னையான பார்வதி எந்தவொரு வார்த்தையும் சொல்லவில்லை. 


🌟 உமக்குத் தெரியும் தேவேந்திரனின் மகள் தெய்வானையை அவர் ஏற்கனவே திருமணம் செய்து இருக்கின்றார். ஆனாலும் அவளிடத்தில் இருப்பதைவிட வள்ளியின் மீதுதான் முருகனுக்கு ஆசைகள் அதிகமாக இருந்தன என்று மற்றவர்கள் கூற நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். 


🌟 வள்ளி எங்கள் குலத்தைச் சார்ந்த பெண் தான். மனதிற்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அதற்குப் பிறகு நாம் எதையும் யோசிக்க வேண்டியது இல்லை. நான் உன்னிடத்தில் என்ன உரைத்தாலும் நீ அனுபவித்தால் மட்டுமே அதைப் பற்றிய புரிதல் உன்னிடத்தில் ஏற்படும். ஒரு முறை நீ அவளை வந்து பார் அதற்குப் பிறகு நீயே அவளை வேண்டாம் என்று கூறமாட்டாய் என்றார்.


🌟 சீவகனும் நந்தகோன் கூறியதிலிருந்து ஒரு புதிய தகவலை அறிந்து கொண்டான். அதாவது சச்சந்த மன்னருடைய மகனின் வரவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும், தனக்கான உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அருகில் இருப்பதையும் புரிந்து கொண்டான். 


🌟 ஆனால் இன்றைய சூழ்நிலையில் இடையர்களின் தலைவருடைய மகளை திருமணம் செய்து கொள்வது என்பது முறையாக இருக்காது. படைகளை பெருக்க வேண்டும் என்பதில் சீவகன் நிலையாக இருந்தான். அவனுடைய குருவின் ஆலோசனைகளும் அவன் மனதில் ஆழ பதிந்து இருந்தது. 


🌟 அதாவது தனி மரம் தோப்பாகாது. அரசனுடைய மகளைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உனக்கு படை உதவி கிடைக்கும். அந்த படைகளின் மூலமாக உன்னுடைய இழந்த நாட்டினையும், தந்தைக்கு இழைத்த கொடுமைகளையும், அநீதிகளையும் எதிர்த்து உன்னால் வெற்றிகொள்ள முடியும் என்றும் கூறினார். 


🌟 தனது மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தையும் வெளிப்படையாக கூறாமல் எதிரில் இருப்பவரின் மனம் புண்படாமல் இருக்கும் வகையில் தன்னுடைய பதிலையும் உரைக்கத் தொடங்கினான் சீவகன். 


🌟 ஐயா! நீங்கள் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். ஆனால் என்னுடைய நண்பனான பதுமுகன் உங்களின் மகள் மீது எல்லையற்ற அன்பும், ஆசையும் கொண்டிருக்கின்றான். பார்ப்பதற்கு அழகாக இருப்பான். நீங்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பான். உங்களுடைய வியாபார பணிகளுக்கும் உதவியாக இருப்பான். அவன் உங்களிடத்தில் மருமகனாக இல்லாமல் மகனாக இருப்பான். உங்களுடைய மகளின் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வான்.


🌟 ஆனால் என்னுடைய தந்தையோ கொஞ்சம் பிற்போக்குவாதியாக செயல்படக் கூடியவர். அதாவது தன்னுடைய நிலைக்கு நிகராகவும் அதற்கு மேல் உள்ள நிலையில் உள்ளவர்களின் பெண்ணையே எனக்கு மணந்து வைக்க அவர் விரும்பக் கூடியவர். 


🌟 அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய ஆசையாகும். செல்வ செழிப்போடு கணக்கிட்டுப் பார்த்தால் உங்களை விட எங்களுடைய செல்வநிலை அதிகமாகவே இருக்கும். 


🌟 உழவர்கள் நெல் விளைவிக்கலாம். நீங்கள் பால் பண்ணையும் வைக்கலாம். எனினும் இருவருக்கும் இடையில் தரகர்களாக இருக்கக்கூடிய மக்கள் மட்டுமே பணக்காரர்களாக இருகிறார்கள். அதைப்பற்றி எல்லாம் உங்களிடம் பேசுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டு கேட்டு எனக்கும் அந்த பழக்கம் தொற்றி விட்டது போல தோன்றுகின்றது. எனக்கு பதிலாக என்னுடைய நண்பனான பதுமுகனுக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திருமகளை தருவதாக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறினான்.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)