சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


சீவக சிந்தாமணி...!!

🌟 கந்துக்கடன் சீவகன், நந்தட்டன் முதலியோரை கல்வியிலும், நல்ல பழக்கவழக்கத்துடன் வளரவும் விரும்பினான். ஆகவே ஏட்டுக்கல்வி மட்டும் இல்லாமல் நடைமுறை கல்வியையும், அரசியல் முதலியவற்றையும் சிறந்த முறையில் சொல்லிக் கொடுக்கக்கூடிய வகையில் ஆசிரிய பெருமக்களை தேடினார். 


🌟 அவருடைய தேடலுக்கு உகந்த வகையில் நல்ல ஆசிரியரும் கிடைத்தார். அவர் தான் அச்சணந்தி என்னும் அப்பேராசிரியர் ஆவார். அவரிடத்தில் இருவரும் மாணவராக சேர்ந்து பல்கலைகளை கற்க துவங்கினார்கள். அவர்கள் இருவரில் சீவகன் சிறந்து விளங்கினான். அப்பேராசிரியர் சீவகனுடைய நுண்மாணுழைபுலனை உணர்ந்து மகிழ்ந்தனர். 


🌟 பூக்களில் தாமரை போன்றும், விண்மீன்களிடையே ஒளிவீசும் திங்களைப் போன்றும், அடர்ந்து எதிர்ப்பதில் சிங்கம் போன்றும் ஆற்றலோடும், வீரத்தோடும் தனித்து செயல்பட்டான். 


🌟 மழலை மொழி பேசி மகிழ்வித்த அவனுக்கு எழுத படிக்க கற்றுத்தர விரும்பினார். அவனை 'மையாடுக" என்று சொல்லி ஓலை தந்து எழுத வைத்தார். ஆரம்பக்கல்வி ஆறாம் வயது வருவதற்குள் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் நாமகள் இலம்பகம் ஆகியது. 


🌟 சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வியும் மனப்பழக்கம் என்பதற்கு ஏற்பத் தொடர்ந்து கல்வி கற்றான். 


கற்க கசடறக் கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக 

🌟 என்னும் குறட்பாவின் கருத்துப்படி அவன் கற்கவேண்டிய நூல்களைக் குற்றமறக் கற்றான். சான்றோர்கள் நூல் வழியாகத் தெரிவித்த அறக் கருத்துக்களை அவன் ஆழ்ந்து கற்று ஒழுக்கத்தால் சிறந்த நன்மகனாக வளர்ந்தான். கல்வி கேள்விகளில் சிறந்ததோடு ஆன்ற ஒழுக்கம் மிக்கவனாக வளர்ந்தான்.


🌟 காலம் செல்ல செல்ல வயதுக்கேற்ப படிப்பும், பல கலைகளையும் கற்றான். வீரனாவதற்கு வேண்டிய அனைத்து வித்தைகளையும் அறிந்து கொண்டான். யானை ஏற்றம், குதிரை ஏற்றம், மற்போர், விற்போர் முதலிய படைக்கலப் பயிற்சிகளை கற்று இராசமாபுரத்தில் நிகரற்ற வீரம் உடையவனாக திகழ்ந்தான். யாழ், குழல் முதலிய இசைக் கலைகளிலும் தேர்ந்தவனாக விளங்கினான்.


🌟 மற்ற மாணவர்களை காட்டிலும் ஒரே காலத்தில் பலதுறைகளில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தினான் சீவகன். கல்வியிலும் உடல் திறனை வெளிப்படுத்தக்கூடிய பயிற்சிகளிலும், அரசியல் சார்ந்த துறைகளிலும் படைப்பயிற்சியிலும் சிறந்து விளங்கினான் சீவகன். 


🌟 ஒருநாள் யாரும் எதிர்பாராதவிதமாக அனைத்திலும் சிறந்து விளங்கிய இக்காளையை அவனுடைய ஆசிரியராக விளங்கிய அச்சணந்தி என்பவர் அருகில் அழைத்து அன்புடன் பேசிக்கொண்டிருந்தார். 


🌟 அவர்களுடைய பேச்சுக்கள் எதிர்காலத்தை நோக்கியதாக அமைந்தது. பின்பு தன்னுடைய மாணவனான சீவகனுடைய எதிர்காலத்தினை அவர் வரைபடமாக காட்டி அறிவுரை கூறினார். அப்பொழுது தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் அவனிடம் கூறினார். 


🌟 நான் இராசமாபுரத்தில் நீண்ட நெடுங்காலமாக தங்கிக் கொண்டு இருக்கின்றேன். நான் இங்கு வந்து தங்கி கொண்டிருந்த நாட்களில் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு அறிந்து கொண்டேன். 


🌟 நீ பச்சிளம் குழந்தையாக இருக்கின்ற பொழுது உன்னுடைய இல்லத்திற்கு நான் வந்திருந்த பொழுது உன்னுடைய தாய் இன்முகம் காட்டி நல்வரவு செய்து என்னிடத்தில் இருந்த பசி என்ற உணர்வை போக்கிக் களைப்புகளை நீக்கினாள். 


🌟 பச்சிளம் குழந்தையாக இருக்கக்கூடிய பவித்திரமான உன்னைக் கண்டதும் அந்நாள் வரை எனது உடலில் நீங்காமல் பல துன்பங்களை அளித்துவந்த யானைத்தீ என்னும் நோயானது முழுவதுமாக நீங்கப் பெற்றேன். அது எனக்கு மிகுந்த வியப்பையும், மகிழ்ச்சியையும் அளித்தது என்றார்.


🌟 அதைக்கேட்டு சீவகனும் சில வினாடிகள் ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருந்தான். 


🌟 அதிலிருந்து உன்னை பற்றிய விவரங்களை நான் அறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். அதில் சில ரகசியங்களையும் புரிந்துகொண்டேன் என்று கூறினார் ஆசிரியர்.


🌟 சீவகனோ மிகுந்த ஆச்சரியத்தோடு யான் அறியாத எனது ரகசியம் இருப்பதென்றால் அது அதிசயம் தானே! என்னைப் பற்றிய ரகசியம் என்னவென்று தாங்கள் கூறலாமா என்று ஆசிரியரிடம் வினவினார்.


🌟 ஆசிரியரோ! அதை அறிந்து கொள்வதற்கான காலம் வரும்பொழுது அந்த ரகசியத்தை பற்றி உன்னிடத்தில் நான் கண்டிப்பாக கூறுவேன் என்று விடுகதையும் விடுத்தார்.


🌟 விடுகதை விடுத்த நாள்முதல் சீவகனுக்கு மற்ற மாணவர்களைவிட படைக்கலப் பயிற்சியை கற்றுத் தருவதில் அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார் அச்சணந்தி.


🌟 நாட்கள் செல்லச் செல்ல அவன் திறமையும், அறிவும், அழகும் கொண்டவனாக பலராலும் விரும்பப்பட கூடியவனாகவும், இவ்விதம் செயல்பட முடியுமா? என்று ஆச்சரியம் கொள்ளும் விதத்திலும் செயல்பட்டான்.


🌟 இவ்விதமாக சென்று கொண்டிருந்த சீவகனின் வாழ்க்கையில் காலம் தன்னுடைய வேலையை செய்யத் தொடங்கியது. அதாவது சீவகனுக்கு தெரியாமல் இருந்துவந்த சில ரகசியங்களும் அவனுக்குத் தெரிந்து கொள்வதற்கான காலங்களும், வாய்ப்புகளும் அமையத் தொடங்கின.


🌟 பயிற்சிகள் அனைத்திலும் சிறந்து விளங்கிய சீவகனை ஆசிரியர் வாழ்த்தி, ஒரு கதையையும் சொல்ல துவங்கினார். நான் சொல்லும் இந்த கதையை கவனமாக கேட்க வேண்டும் அதில் சில ரகசியங்களும், சூட்சுமங்களும் மறைந்திருக்கின்றன.


🌟 நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நாட்டின் சூழ்நிலை என்பது இன்றைய நிலையில் மிகவும் சீர்குலைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? என்று வினவினார்.


🌟 சீவகனும் நாட்டு மக்களின் நலனையும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக முக்கியத்துவம் தராமல் இருக்கக்கூடியவர் மன்னன். அதனால்தான் நம் நாட்டின் சூழ்நிலை இன்று இவ்விதமாக உள்ளது என்று கூறினான்.


🌟 ஆசிரியரோ, நீ கூறுவது உண்மைதான். ஏனென்றால் மன்னன் என்பவன் மக்களுக்கு உயிர் போன்றவன் ஆவான். வலிமை இழந்து இருக்கக்கூடிய மக்களை காக்க வேண்டிய பாதுகாவலன் அவன்தான். ஒரு நாட்டின் சிறப்பு என்பது அந்த நாட்டில் இருக்கக்கூடிய நீர், நில, கால்நடை வளங்களால் மட்டும் உயர்வது இல்லை. 


🌟 அங்கு வாழக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை பொறுத்துதான் அமைகின்றது. அந்த வாழ்வாதாரம் என்பது அரசன் எவ்விதத்தில் செங்கோல் செய்கின்றான் என்பதை பொருத்தே அந்த நாட்டின் சிறப்பும், அறமும், மக்களின் வாழ்வும் இருக்கின்றது என்று கூறினார்.


🌟 அதுமட்டுமல்லாது உண்பதற்கு உணவும், குடிப்பதற்கு நீரும், உடுப்பதற்கு உடையும், வாழ்வதற்குத் தேவையான வசதிகள் மட்டும் இருந்துவிட்டால் போதுமா ஒரு நாடு மேன்மை அடைய... என்று தன்னுடைய மாணவனை பார்த்து கேட்டார்.


🌟 இவை மட்டும் போதாது ஒரு நாடு சிறப்புற்று விளங்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் ஒழுக்கம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று கூறினான் சீவகன்.


🌟 சீவகனின் பதிலைக் கேட்டு ஆசிரியரோ மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தன்னுடைய மாணவன் சிறந்து விளங்குவது ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை என்பது எதுவும் அல்ல. 


🌟 நீ கூறுவது போல நாட்டு மக்களும் ஒழுக்கம் உடையவராக இருக்க வேண்டும். ஆனால் இன்று நம் நாட்டின் நிலை என்ன? நம் நாட்டை ஆளக்கூடிய அரசன் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டு இருக்கின்றான். காம கன்னியர்களை அடைந்து இன்ப கேளிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் வளர்ச்சிக்கு தேவைப்படக் கூடிய பொருட்கள் அனைத்தையும் தவறான முறைகளில் செலவு செய்து வருகின்றான். 


🌟 அதுமட்டுமல்லாது நாட்டு மக்களுடைய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான நாச செயல்களையும் செய்கின்றான். நல்லோர் உரைகளைக் கேட்டு நடக்காமல் தவறான கருத்துக்களை சொல்லக்கூடிய இழி சொற்களைக் கேட்டு நெறி தவறுகின்றான். இந்த நிலையானது மாற வேண்டும் அப்பொழுது தான் நம்முடைய நாடு வளம் பெறும் என்று கூறினார்.


🌟 சீவகனோ அவன் நாட்டு அரசன் ஆயிற்றே அவனை எவ்விதத்தில் அகற்ற முடியும் என்று வினவினான்.


🌟 அச்சணந்தி சீவகனை நோக்கி அதுதான் இல்லை. இவ்விடத்தில் ஒரு வரலாறு மறைந்து இருக்கின்றது. இந்த நாட்டை ஆண்டவன் சச்சந்தன் என்பவன் ஆவான். 


🌟 சீவகன் தனது ஆசிரியர் கூறும் செய்தியை கேட்டதும் மிகுந்த ஆச்சரியம் கொண்டான். இதுவரை யாரும் என்னிடத்தில் இவ்விஷயத்தை எடுத்துரைக்கவும் இல்லையே? யாவரும் இதைப் பற்றி வெளியில் பேசி கேட்டதும் இல்லையே? என்று ஆசிரியர் கூறுவதை பொறுமையுடனும், கவனமாகவும் கேட்டான்.


🌟 அச்சணந்தி, சச்சந்தன் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் எடுத்துரைக்க தொடங்கினார். அவன் ஆட்சி காலத்தில் நாடு வளமையும், சிறப்பும் பெற்று இருந்தது. இளமை நிறைந்த வீரம் செறிந்திருந்த பருவத்தில் அவன் ஒரு தவறு செய்துவிட்டான். 


🌟 அதாவது தன்னுடைய மாமன் மகளை மணந்து அவளுடைய அழகில் மயங்கி, அவளுடனே காலத்தை செலவு செய்து வந்தான். தன்னுடைய கடமைகளில் இருந்து சிறு காலம் விடுப்பு எடுப்பது போல தன்னுடைய ஆட்சி பொறுப்புகள் அனைத்தையும் கட்டியங்காரனிடம் ஒப்படைத்து விட்டு தன்னுடைய மனைவியுடன் இன்பமாக காலம் கடத்தினான்.


🌟 அதுவரையில் அமைச்சராக இருந்தவன் அரசனுடைய அதிகாரத்தை ஏற்றது முதல் அனுபவித்த சுக போகங்கள் மீது பற்றுக்கொண்டான். நாளடைவில் அவன் தன்னுடைய நிலையையும் மறக்க துவங்கினான். 


🌟 ஒருவேளை நாளை உண்மையான மன்னன் வந்து தன்னுடைய அதிகாரத்தை கேட்டால் என்ன செய்வது? என்ற சிந்திக்கவும் செய்தான். அதற்காக அவரை கொலை செய்யக்கூடிய துரோக நிகழ்வையும் நிகழ்த்தினான். அரசன் இறந்ததும் அவருடைய ஆட்சியை தன்னுடைய உடைமை ஆக்கிக் கொண்டான் என்று கூறினார்.


🌟 இதைக் கேட்டதும் சீவகனுக்கு இனம்புரியாத ஒரு கவலை அவனுடைய முகத்தில் வெளிப்படத் துவங்கியது. தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் அல்லவா! என்பது போல அவன் விழிகளில் இருந்து அவனை அறியாமல் சிறு துளிகளும் விழத் துவங்கின. பின்பு தன்னுடைய ஆசிரியரை நோக்கி அந்த மன்னனுக்கு குழந்தை ஏதேனும் பிறக்கவில்லையா? என்று வினவினான்.


🌟 அச்சணந்தி அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய அமைச்சர் நம்பிக்கை துரோகம் செய்யப் போகிறான் என்பதை உணர்ந்து கொண்ட மன்னன் தன்னுடைய வாரிசை அதாவது தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கின்ற பொழுது மயில் பொறி ஒன்றில் ஏற்றி அவளை அனுப்பி வைத்தான். அந்த மயில் பொறி வாகனமானது இடுகாட்டில் இறங்கியது. அவ்விடத்திலேயே அவனுடைய மனைவியும் ஒரு மகனை பெற்றாள் என்று கூறினார்.


🌟 அவருடைய மனைவி ஈன்றெடுத்த அந்த புதல்வன் இன்று உயிரோடு இருக்கிறானா? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் எங்கே இருக்கிறான்? என்று வினவினான் சீவகன்.


🌟 ஆசிரியரும் சீவகனை நோக்கி அவன் உயிரோடுதான் இருக்கிறான். அவனுக்கு ஏறக்குறைய உன்னுடைய வயது தான் இருக்கும். அவன் தாய் என்ன ஆனார்கள் என்று எதுவும் தெரியவில்லை என்று கூறினார்.


🌟 குருவே! அவன் இருக்குமிடம் எங்கே என்று கூறுங்கள். அவனை அழைத்து வருகின்றேன். அவனை வைத்து மக்களிடத்தில் புரட்சி செய்ய சொல்லி நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய போலி அரசனை அரியணையில் இருந்து இறங்க செய்து அவனிடத்தில் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பேன் என்று கூறினான் சீவகன்.


🌟 சீவகன் கொண்டிருக்கக்கூடிய வேகத்தினையும், துடிப்பையும் பார்த்த குரு அவசரப்படாதே. இன்னும் ஒரு வருஷம் போகட்டும். அதற்குப் பிறகு தான் இவனை எதிர்க்க முடியும் என்றார்.


🌟 சீவகன் தன்னுடைய ஆசிரியரை நோக்கி 'முதலில் அவனை எப்படித் தேடுவது? அதை சொல்லுங்கள்" என்று கேட்டான்.


🌟 அவனை கண்டுபிடிப்பது மிகவும் எளிது என்று கூறினார். காலம் தாமதிக்காமல் நேராக உன்னுடைய வீட்டிற்கு போ. உன் வீட்டில் இருக்கக்கூடிய நிலைக்கண்ணாடி முன் நில், அதில் ஒருவன் நிழல் தோன்றும். அவன் தான் அந்த இளைஞன். சச்சந்தன் அரசனுக்கும், அவனுடைய மனைவிக்கும் பிறந்த உண்மையான அரச வாரிசு அவன்தான். அவன் பெயர்தான் சீவகன் என்று கூறினார்.


🌟 சற்றும் எதிர்பாராத இந்த பதிலைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தான். ஆசிரியர் கூறுவது உண்மையா? தன்னுடைய தந்தையும், தாயும் அவர்கள்தான் என்றால் இவர்கள் யார்? என்ற பலவிதமான கேள்விகளோடு எதுவும் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தான்.


🌟 தன்னுடைய மாணவன் என்ன எண்ணுகின்றான் என்பதைப் புரிந்து கொண்ட ஆசிரியரும் அவனுடைய ஐயத்தை போக்கும் விதத்தில் சில விஷயங்களையும் கூறத் துவங்கினார்.


🌟 சீவகனின் ஆசிரியரான அச்சணந்தி இவ்விதம் உரைக்க தொடங்கினார். வெள்ளிமலை என்னும் பகுதியில் வாரணவாசி என்னும் ஊருக்கு அரசனாக இருந்தவன் நான். மக்களுக்கும், புதல்வர்களுக்கும் தேவையான அனைத்து செயல்களையும் செய்து முடித்த பின்பும், ஏனோ என் மனதில் இனம் புரியாத சில கவலைகள் உண்டாகின. 


🌟 என் வாழ்க்கையில் இன்னும் நான் சில செயல்களை செய்ய வேண்டும் என்பது போல என்னுடைய மனமானது என்னிடம் கூறியது. அதற்கு மேல் என்னால் அவ்விடத்தில் இருந்து என்னுடைய பணிகளை செவ்வனே செய்து வர முடியவில்லை.


🌟 ஒவ்வொரு நிமிடமும் என் மனமானது இவ்விடம் உனக்கில்லை என்பது போலவே கூறிக் கொண்டே இருந்தது. அதற்கு மேலும் என்னால் அரச பொறுப்பை சரிவர செய்ய இயலவில்லை. எனவே சுபம் நிறைந்த ஒரு நல்ல நாளில் என்னுடைய புதல்வனுக்கு அனைத்து அரச உரிமைகளையும் கொடுத்து விட்டு தவம் செய்வதற்காக தென்புறம் நோக்கி வந்து கொண்டிருந்தேன்.


🌟 அந்த நீண்ட நெடும் பயணத்தில் யானைத்தீ எனும் நோயினால் பல இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவித்தேன். பயணங்களில் பல ஊர்களில் பலவிதமான மருந்துகளை அருந்தியும் அந்த நோயிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.


🌟 ஒருநாள் தீரா பசியுடன் இராமபுரத்திற்கு வந்த பொழுது உன் அன்னையின் கையால் உணவு உண்டு, உன்னை கண்ட அந்த நொடியில் நீண்ட காலமாக என்னை துன்புறுத்தி வந்த யானைத்தீ என்னும் நோயிலிருந்து விடுபட்டேன்.


🌟 அந்த நொடியில் என் மனம் அடைந்த நிம்மதி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்தது. அந்த நிம்மதியை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. அப்பொழுதுதான் என் மனம் கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வந்தது. 


🌟 எனக்கான பணிகள் இன்னும் காத்திருக்கின்றது என்பதை அந்தத் தருணத்தில் நான் உணர்ந்து கொண்டேன். உன்னை கண்டதும் குழப்பம் நிறைந்த என்னுடய மனமானது கலங்கம் இல்லாத குளம் போன்ற அமைதி கொண்டது. 


🌟 அப்போது தான் என்னுடைய வாழ்வின் மீதி கடமை என்பது நீதான் என்பதை அறிந்து கொண்டேன். அதனால் எனது பயணத்தை மேற்கொள்ளாமல் இவ்வூரிலேயே தங்கினேன். இங்கு தங்கி இருந்த காலத்தில் சில செய்திகளையும் அறிந்து கொண்டேன். என்னுடைய இலக்கு சரிதான் என்பதை புரிந்து கொண்டு காலம் வரும் வரை காத்திருந்தேன் என்றார்.


🌟 அதை கேட்டு கொண்டிருந்த சீவகன் நீங்கள் அறிந்து கொண்ட சேதி என்ன குருவே? என்று வினவினான். 


🌟 நான் இங்கு வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் இந்த ஊரில் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த மாற்றங்களுக்கு காரணம் யார்? என்பதையும், இதை மாற்றக்கூடிய வல்லமை கொண்டவர் யார்? என்பதையும் அறிந்து கொண்டேன். பின்பு ஒரு நாள் உன்னுடைய தந்தை உமக்கு படைக்கலப் பயிற்சியையும், போர் பயிற்சியையும், அரசியல் சார்ந்த நுணுக்கங்களையும் கற்றுக் கொடுக்கும் வகையில் ஆசிரியரைத் தேடி கொண்டு இருக்கின்றார் என்பதையும் புரிந்துகொண்டேன். 


🌟 என்னிடத்தில் ஏற்பட்ட மெய் துன்பங்களை நீக்கிய உமது குடும்பத்திற்கு நான் ஏதேனும் கைமாறு செய்யவேண்டும் அல்லவா! அதற்காகத்தான் யான் அறிந்த அனைத்து கலைகளையும் உமக்கு கற்றுக் கொடுத்து இருக்கின்றேன் என்று கூறினார்.


🌟 உமது மனதில் இருக்கக்கூடிய வேகம் என்பது எமக்கு புரிகின்றது. ஆனால் இப்பொழுது அவசரம் கொள்ளாதே! ஏனென்றால் இந்த நிலையில், இந்த நொடியில் நீ கந்துக்கடன் என்பவனின் மகன் மட்டுமே. 


🌟 பிறப்பால் நீ அரசனுடைய மகனாக இருந்தாலும் அதற்கு வேண்டிய சிறப்புகள் யாவும் உன்னிடத்தில் இல்லை. அதற்கு வேண்டிய தகுதிகளை நீ ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உமது தகுதியை மேம்படுத்த அரச மகளிரை மணந்து அவர்களுடைய படைகளை கொண்டு உமது நாட்டிற்கும், உமது குடும்பத்திற்கும் கேடு விளைவித்த அந்த நம்பிக்கை துரோகியை நீ எதிர்க்க வேண்டும். 


🌟 தனி மரம் என்றும் தோப்பாகாது என்பதை நினைவில் கொள். ஆகவே படையில்லாமல் அவனை எதிர்ப்பதை மரணம் அடைவதற்கு சமமாகும். ஆகவே காலம், இடம், துணை வலிமை ஆகிய மூன்றும் உமக்கு அமைகின்ற பொழுது அதை அறிந்து அவனை எதிர்த்து வெற்றி கொள்வாயாக என்று அறிவுரை கூறினார்.


🌟 குருவின் ஆலோசனைகளை கேட்ட சீவகனும் இதுவே சரியான வழியாகும் என்பதையும் புரிந்து கொண்டான். தமக்கு வழிகாட்டிய குருவை பணிந்து வணங்கி நான் மேற்கொள்ள போகின்ற இந்த புதிய பயணத்தில் தாங்களும் என்னுடன் இருக்க வேண்டும் என்று வேண்டினான்.


🌟 ஆனால் குருவோ, தனது மாணவனான சீவகனிடம் என்னுடைய பிறவிக்குண்டான அனைத்து கடமைகளும் இனிதே நிறைவுற்றது. இனியும் நான் இவ்வூரில் இருப்பதற்கான அவசியம் என்பது கிடையாது. 


🌟 ஆகவே நான் மேற்கொண்ட எனது பயணத்தை முடித்துக் கொள்வதற்கான காலமும் ஏற்பட்டுவிட்டது. இனியும் இவ்விடத்தில் நான் இருக்கப்போவதில்லை. நான் விட்ட என்னுடைய தவப் பணியை மேற்கொள்ள போகின்றேன் என்று கூறினார். 


🌟 இதைக்கேட்டு சீவகன் மிகுந்த கவலை அடைந்தான். குருநாதரே! என்னுடைய வாழ்க்கையில் இலக்கு என்பது இல்லாத வரையில் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். ஆனால் எனக்கு இதுதான் இலக்கு என்று ஆனவுடன் என்னை தனியே விட்டு செல்வது தர்மமா? என்று வினவினான்.


🌟 சீவகன் கூறியதை கேட்ட குருநாதரோ, புன்னகைத்த வண்ணமாக நீர் எங்கே தனித்து விடப்பட்டு இருக்கின்றாய். உன்னுடனே நான் இருக்கின்றேன். கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பாகும் என்பதை புரிந்து இருக்கின்றாயா? 


🌟 உமக்கு யான் ஏட்டு சுரக்காய் மட்டும் சொல்லித்தரவில்லை. வாழ்க்கைக் கல்வியும், நடைமுறை வாழ்க்கையும், ஆராய்ச்சி சிந்தனையும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்து கொள்ளக்கூடிய பக்குவத்தையும், அதற்குண்டான சாணக்கிய அறிவையும், எவ்வளவு பெரிய எதிரிகள் வந்தாலும் எதிர்த்துப் போராடக்கூடிய போர் திறனையும், படை திறமையையும் உமக்கு யாம் கற்றுக் கொடுத்திருக்கிறோம். 


🌟 இவ்விதமாக உமக்குள் அனைத்தும் இருக்கும் பொழுது நீ எங்கே தனித்து இருக்கின்றாய்? அதுமட்டுமல்லாமல் எங்கிருந்தாலும் என்னுடைய பரிபூர்ணமான முழு ஆசீர்வாதமும் உனக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.


🌟 எதிலும் திருப்தி அடையாத சீவகன் தன்னுடைய குருநாதரை தன்னிடமே இருக்க பல வகைகளில் முயன்றும் குருநாதரின் மன உறுதிக்கு முன்னால் சீவகனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.


🌟 குருநாதர் தனது மாணவர்களுக்கு அனைத்து ஆசீர்வாதங்களையும் அளித்து விட்டு தவம் செய்வதற்காக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். அவர் மனம் கூறியது போலவே அவருடைய வாழ்க்கையில் அனைத்து கடமைகளையும் முடித்துவிட்டு திருப்தியுடன் மேற்கொண்ட தவத்தின் பயனாக வீடு பேற்றையும் அடைந்தார்.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)