சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 


சீவக சிந்தாமணி...!!

🌟 நாம் வாழும் பொழுது என்னென்ன புண்ணியங்கள் செய்கின்றோமோ... அந்த புண்ணியங்களே அவர்களை காப்பாற்றும் என்பது போல, திக்கு தெரியாத அந்த மயானத்தின் நடுஇரவில் யாரும் இல்லாமல் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த பேதையின் இன்னல்களை காணமுடியாமல், புறக் காட்டில் காவல் தெய்வமாக இருந்துவந்த கர்மத்தின் கணக்கினை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்ட தெய்வமே மனித வடிவில் விசையையின் தோழியான சண்பகமாலை என்பவள் போல கூனி ரூபம் கொண்டு அவள் முன் தோன்றினாள். 


🌟 எங்கோ பழகிய முகம் போல தெரிகின்றது என்று விசையை எண்ணினாலும் தெய்வமே தன்னை காப்பதற்காக வந்திருக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டாள். ஏனென்றால் தான் இருப்பது எங்கே என்று தனக்கே தெரியாத போது தன்னுடைய தோழி இங்கே வந்திருப்பது என்பது மிகுந்த ஆச்சரியமும், அதிசயமாகவும் இருந்தது. 


🌟 தெய்வமும் மானிட ரூபம் என்பது போல கருவில் இருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தாள். 


🌟 மருத்துவர்கள் பலர் சூழ்ந்து இருந்து அலங்காரம் செய்யப்பட்ட படுக்கை அறையில் பிறக்க வேண்டியவன்... சாம்பலும், மணலும், எலும்புகளும் நிறைந்த மயானத்தில் பிறந்தான். பிறந்த அவனுடைய அழு குரலை கேட்டதும் அவள் அனுபவித்த அத்தனை வேதனைகளும், துன்பங்களும் கணப்பொழுதில் மறந்து உள்ளம் மகிழ்ந்தாள்.


🌟 இருள் சூழ்ந்த கரும்புகை நிறைந்த அந்த இடுகாட்டில் சிறு ஒளியான மின்னலைப் போன்றதொரு ஒரு மிகச்சிறிய ஆறுதல் அவளுக்கு ஏற்பட்டது. கணவனை இழந்த பேதையானவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற வழியும் பிறந்தது. 


🌟 நாட்டை விட்டு தனித்து பிரிந்து எதிரிகளால் தேடப்பட்டு வரும் நிலையில் இருப்பவள், தன்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த கணவனையும் இழந்தவள், சொல்ல முடியாத அளவில் துன்ப நிலையிலும், துயரத்திலும் ஆழ்ந்து இருக்கக்கூடியவள் தான் ஈன்றெடுத்த மகனைக் கண்டதும் மகிழ்ச்சி கொண்டாள்.


🌟 தன்னுடைய குழந்தையை கண்ணே! மணியே! என்று கொஞ்சி அழைக்காமல் தன்னுடைய வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய 'சிந்தாமணியே" என்று அழைத்து தன்னுடைய மகிழ்ச்சியை அந்த இன்னல்கள் நிறைந்த நிலையில் வெளிப்படுத்தினாள். 


🌟 கேட்டது தரும் கற்பகத்தரு போலவும், கேட்டது கொடுக்கும் காமதேனு போலவும் நல்கும் ஒளிமிக்க சிந்தாமணியாக அவன் அவளுக்கு விளங்கினான். தன்னுடைய குழந்தையிடத்தில் கொஞ்சி பேசி விளையாடக்கூடிய சூழ்நிலையிலும் அவள் இல்லை. அவள் உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று அஞ்சி நிற்கக்கூடிய சூழ்நிலையில் அவள் இருந்தாள். 


🌟 அவள் அருகில் சண்பகமாலை ரூபத்தில் நின்று கொண்டிருந்த தெய்வ ரூபம், அவளுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கக்கூடிய சிந்தனைகளின் ஓட்டங்களை புரிந்து கொண்டாள். அவளின் அருகில் சென்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கத் தொடங்கினாள்.


🌟 பூமியில் பிறந்த எவன் ஒருவனும் பிறப்பினால் உயர்வு அடைவதில்லை. அவன் வளருகின்ற சூழ்நிலையின் மூலமாகவே மேன்மை நிலையை அடைவான். உன்னுடைய குழந்தையை இவ்விடத்திலேயே விட்டுவிட்டு சென்றால், இங்கே இருக்கக்கூடிய வெட்டியான் எடுத்து சென்று வளர்ப்பான். 


🌟 ஒருவேளை தப்பித் தவறிப் போனாலும் அவன் அரிச்சந்திரனாக வளருவான். நீ அவனை வளர்க்க முற்பட்டால் உங்கள் இருவரின் விவரங்களையும் கட்டியங்காரன் அறிந்துகொண்டால் முளையிலேயே களை எடுத்து விடுவான். அதனால் இவனை சிறந்த ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது தான் நல்லது என்று கூறினாள்.


🌟 என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு இறைவனின் சொரூபமாக இருந்த அவளுடைய தோழி எடுத்துரைத்தது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக காட்டியது. 


🌟 தன்னுடைய குழந்தையை செல்வ செழிப்புமிக்க ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணினாள். இப்பொழுது இருக்கும் நிலையில் தன்னால் எதுவும் செய்ய இயலாத தன்னுடைய இயலாமையை எண்ணி வருத்தம் அடைந்தாள்.


🌟 அப்பொழுது அந்த மயானத்தை நோக்கி ஒருவர் வந்து கொண்டு இருக்கும் சத்தத்தை இருவரும் அறிந்தனர். வந்து கொண்டு இருப்பவன் யார்? என்று முன்னரே அறிந்திருந்தாள் தெய்வ ரூபமாக இருந்த சண்பகமாலை.


🌟 சண்பகமாலை விசையையிடம் குழந்தையின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்றால் நான் கூறுவதை இப்போதே செய்ய வேண்டும் என்று கூறினாள். 


🌟 மனதில் குழப்பமும், வலியும் விழிகளில் தன்னுடைய புதல்வனை கண்டு கொண்டு இருக்கின்ற மகிழ்ச்சியான சூழலில் இருந்துவந்த விசையைக்கு வேறு வழியில்லாத காரணத்தினால் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள். 


🌟 உடனே சண்பகமாலை விசையையிடம் இவ்விடத்தில் குழந்தையை வைத்து விட்டு இருவரும் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் மறைந்து கொள்வோம் என்று கூறினாள். 


🌟 இதை கேட்டதும் சற்றும் பொறுத்து கொள்ள முடியாத விசையை முடியாது, யாரும் இல்லாத பேய்கள் நிறைந்த இந்த இடுகாட்டில் என்னுடைய புதல்வனை தனியே விட்டு செல்வதா? முடியாது என்று மறுத்து கூறினாள்.


🌟 ஆனால் சண்பகமாலை நிகழவிருக்கும் எந்தவொரு நிகழ்வையும் எடுத்து கூறாமல் உன்னடைய குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நான் கூறுவதை இப்போதே செய் என்று எடுத்து கூறினாள். 


🌟 இப்போது இருக்கும் சூழலில் எதையும் செயலாற்ற முடியாத நிலையில் இருப்பதால் சண்பகமாலை கூறியதை செய்ய துணிந்தாள். தன்னுடைய சிந்தாமணியை இறுக அணைத்து நெற்றில் ஒரு அன்பு முத்தினை கொடுத்து குழந்தையை கீழே மெதுவாக வைத்தாள். 


🌟 சண்பகமாலை காலம் குறைவாக இருக்கின்றது விரைவாக என்னுடன் வருவாயாக என்று அழைத்தாள். தன்னுடைய சிந்தாமணியிடம் இருந்து பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றாள். 


🌟 அந்த வேளையில் அந்நகரத்திலுள்ள கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவன் இறந்த தன் மகனைப் புதைப்பதற்காக வந்து கொண்டு இருந்தான். அவன் அருகில் வருவதை உணர்ந்த இருவரும் அயலிலே (அருகிடம்) சென்று மறைந்திருந்தனர். 


🌟 உடனே விசையை தன்னுடைய விரலில் இருந்த அரச மோதிரத்தினை அந்தக் குழந்தை கையில் அணிவித்தாள். கள்ளக் காதலில் உள்ளம் பறிகொடுத்தவள் சுமக்க மாட்டாமல் இறக்கி வைத்த சுமை அல்ல இது. அரச மகன் தான் என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக.


🌟 கண்டதும் மகிழ்ச்சி அளிப்பான் என்று எதிர்பார்த்த என்னை கண்டதும் கவலையில் மூழ்க செய்தானே! என்ன செய்தேன் என்று புலப்படவில்லையே... தன் மார்போடு இணைத்து துள்ளி விளையாட வேண்டியவன் எந்தவித துடிப்பும் இல்லாமல் என்னுடைய கரங்களில் அமைதியாக இருக்கின்றானே... இனி என்ன செய்யப் போகின்றோம்? என்ற ஆழ்ந்த கவலையுடன் தன்னுடைய மகனை கரங்களில் ஏந்திய வண்ணமாக இடுகாட்டிற்குள் நுழைந்தான் கந்துக்கடன். 


🌟 அவன் இடுகாட்டில் நுழைந்ததும் ஒரு குழந்தையின் அழுகுரலானது அவன் செவிகளில் எட்டியது. அந்த ஒலியை கேட்டதும் ஒரு வேளை தன்னுடைய மகன் பிழைத்து விட்டானோ? என்று தன்னுடைய மகனை பார்த்தான். ஆனால் குழந்தையிடம் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. பின்பு எங்கிருந்து அந்த அழுகுரல் கேட்கிறது? என்று அழுகுரல் வரும் திசை நோக்கி இடுகாட்டில் தேடினான்.


🌟 சற்றும் எதிர்பார்க்காத வண்ணமாக இடுகாட்டில் ஓரிடத்தில் தன்னம் தனியாக ஒரு குழந்தை மட்டும் அழுது கொண்டு இருந்தது. அந்தக் குழந்தையின் எட்டுத்திக்கிலும் சுற்றிப் பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது வறுமையில் சிக்கிய வழியவனுக்கு ஏதோ பெரிய அளவிலான தங்கக்குவியலே கிடைத்தது போல மகிழ்ச்சியடைந்தான். தன்னுடைய மனைவியிடம் இக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு அவளுடைய சிந்தையில் இருக்கக்கூடிய துன்பத்தை களைந்தெறிய வேண்டும் என்றும் எண்ணினான்.


🌟 இறந்த குழந்தையை கீழே வைத்துவிட்டு உயிருடன் இருக்கும் குழந்தையை கையில் எடுத்த பொழுது அக்குழந்தையானது தும்பியது. அப்பொழுது இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்தையும் மறைவாக நின்று கவனித்துக் கொண்டிருந்த விசையை தன்னுடைய குழந்தையை 'சீவ" என்று வாழ்த்தினாள். 


🌟 இந்த ஒலியைக் கேட்டதும் யார்? என்று கேட்ட வண்ணமாக கந்துக்கடன் தான் நின்ற இடத்தில் இருந்து தேடினார். அவன் தேடியும் அவன் பார்வையில் யாரும் புலப்படவில்லை. ஆனால் அந்த ஒலியானது இவன் காதுகளில் திரும்பத் திரும்ப கேட்ட வண்ணமாக இருந்தது. 


🌟 ஏனென்றால் சீவன் இழந்தவனுக்கு சீவனாக இருந்தவன் அல்லவா. பல இடத்தில் தேடியும் யாரும் கிடைக்காததால் இனியும் காலம் தாமதிக்கக்கூடாது என்று எண்ணி தான் எடுத்து வந்த தன்னுடைய இறந்த குழந்தையை புதைத்துவிட்டு, புதையலாக கிடைத்த இந்த புதிய மகனை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி விரைந்து சென்றான்.


🌟 பத்து மாதம் வயிற்றில் சுமந்து காத்த மகவை இறக்கி வைத்து அதைக் கண்டு மகிழ வேண்டியவள். அதனை மார்போடு அணைத்துப் பாலூட்டக் காத்திருந்தவள். வாய் திறந்து அழாத அந்தக் குழந்தையைச் ஜடமாகக் கண்டவள். இப்பொழுது மனம் திடப்படுத்தி கொள்ளப் புதிய செய்தி கொண்டு வந்தான்.


🌟 தன்னுடைய மனைவியான சுநந்தையை அழைத்த வண்ணமாக நம்முடைய மகன் பிழைத்து விட்டான், அவனுக்கு ஆயுள் கெட்டி. போகும் வழியிலே விழித்துக் கொண்டான் என்று அவளிடம் சொல்லி தன்னிடம் இருந்த குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்தான். 


🌟 தன் மழலைச் செல்வம் தன்னிடம் திரும்ப சேர்ந்துவிட்டது என்பதால் அவள் மிகவும் மகிழ்ந்து அவனை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள்.


🌟 கந்துக்கடன் இடுகாட்டிலிருந்து தன்னுடைய புதல்வனை எடுத்துச் சென்றதும் மறைவில் இருந்தவர்கள் வெளிவந்தனர். விசையைக்கோ என்ன காரியம் செய்துவிட்டோம்? என்பது போல சிந்திக்கத் துவங்கினாள். இனி அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த ஆதரவற்ற பேதயை, தனித்தே விடாமல் இறை வடிவில் இருந்த அவளுடைய தோழி அழைத்து கொண்டு தண்டகாரண்யத்தில் சென்று துறவு மேற்கொள்பவர்களிடம் விட்டுவிட்டு மறைந்து சென்றாள்.


🌟 வேதனைகள் நிறைந்த இந்த வாழ்க்கையில் இறைவனே துணை என்று இருந்தவள் இறைவனின் சித்தப்படியே துறவு மேற்கொள்பவர்களுடன் இணைந்து தன் மகனுடைய நலன் கருதி துறவும், நோன்பும் மேற்கொண்டாள்.


🌟 நகரத்திலோ இறந்த மகன் உயிர் பிழைத்து விட்டான் என்ற செய்தியும், வியப்பும் அவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஊர் மக்களிடம் பறையடித்து தெரிவித்தார் கந்துக்கடன். அவர்கள் இல்லத்தில் இருந்த கவலையானது ஆதவன் வரும்பொழுது வருகின்ற இருள் போல சீவகன் வீட்டில் நுழைந்ததும் கவலைகள் அனைத்தும் வெளியேறின. கந்துக்கடன் மகன் கிடைத்து விட்டான் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியதுமட்டுமல்லாது கட்டியங்காரனின் செவிக்கும் எட்டியது.


🌟 ஏனென்றால் கட்டியங்காரனும், கந்துக்கடனும் நெருங்கிய உறவினர்கள் போல பழகினார்கள். அவனுடைய குழந்தை தவறியது என்ற செய்தி கேட்டதும் மிகுந்த வருத்தம் கொண்டான். ஆனால் இறந்த குழந்தை மீண்டும் பிழைத்தது என்று அறிந்தவுடன் பொன்னையும், வாழ்த்துரைகளையும் அனுப்பி வைத்து தன்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்தான். காலம் மெதுவாக செயல்பட்டாலும் காரியத்துடன் செயல்படுகின்றது.


🌟 தன்னுடைய குழந்தையை காணவந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்களையும், ஆபரணங்களையும் கொடுத்து தன்னுடைய மனதில் இருந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கந்துக்கடன்.


🌟 தன்னுடைய குழந்தை சிறந்ததொரு முறையில் வளர்ந்து பெரியவனாக வேண்டும் என்ற முறையில் அவனுக்குத் தகுந்த ஒரு நல்ல பெயரை வைக்க வேண்டும் என்று தம்பதியர்கள் விரும்பினார்கள். 


🌟 குழந்தைக்கான பெயர் தேடல்களும் துவங்கின. பல பெயர் தேடலின் முடிவில் இறுதியான பெயராக இடுகாட்டில் அவனுடைய அன்னை வாழ்த்திய சீவ என்ற சொற்கள் நிறைந்த சீவகன் என்ற பெயரை கந்துக்கடன் சூட்ட, சுநந்தையும் எவ்விதமான தடைகளையும் கூறாமல் அதையே விரும்பி அப்பெயரையே குழந்தைக்கு சூட்டினாள்.


🌟 தன்னுடைய கணவன் குழந்தைக்கு இந்த பெயரை சூட்டுகின்றார் என்றால் அதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று அவளுடைய மனைவி, கணவனின் எண்ணங்களை புரிந்து செயல்பட்டு மனமொத்து அப்பெயரை ஏற்றுக் கொண்டாள். இல்வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்பது புரிதல் என்பதை நன்கு உணர்ந்தவள்.


🌟 பிறப்பில் எந்தவிதமான உயர்வும், தாழ்வும் இல்லை அனைவரும் சமமே. ஆனால் அந்தக் குழந்தை வளருகின்ற சூழ்நிலையே உயர்வையும், தாழ்வையும் நிர்ணயம் செய்கின்றன. நல்ல எண்ணங்களும், கருத்துக்களும் கேட்கும் பொழுது உயர்வான சூழ்நிலைகளும், பயனற்ற எண்ணங்களும், விதண்டாவாதமும் வளர்கின்ற பொழுது தாழ்வான சூழ்நிலைகளையும் அடைகின்றன. 


🌟 கந்துக்கடன் செல்வக்குடியைச் சேர்ந்தவன் ஆவான். அதனால் அவன் எடுத்துச் சென்ற சீவகனும் செல்வக்குடி சூழ்நிலையிலேயே வளர்கின்றான். அவனைப் பாராட்டி வளர்க்க செவிலித் தாயார்களும் இருந்தனர். 


🌟 குழந்தைகள் வளர்கின்ற பொழுது எந்த கதைகளை கேட்டு வளர்கிறார்களோ.. அதைப் போலவே அவர்களின் வாழ்க்கையின் எதிர்காலமும் அமையும் என்பதை உணர்ந்திருந்த மக்கள் தன்னுடைய குழந்தைகளுக்கு இறை நம்பிக்கை சார்ந்து தர்மம் எதுவென்றும், அதர்மம் எதுவென்றும் பகுத்தறிந்த உணர்வும், தன்மையையும், வீரமிக்க நாயக்கர்கள் நிறைந்த கதைகளைச் சொல்லி இந்த பூமிக்கு நன்மைகளை செய்யக்கூடிய நாயகனாக வளர்க்க வழி செய்தார்கள்.


🌟 தாலாட்டி வளர்த்தபோது அவனுக்கு இசைக் கலை அறிமுகம் ஆகியது. முக்கால் தேரைச் செலுத்த வைத்து அவனை நடைபயிலச் செய்தனர். யானை, தேர், குதிரை இவற்றின் பொய்ம்மை வடிப்புகளில் அவனை அடியெடுத்து வைக்கக் கற்றுத் தந்தனர். ஊர்திகளைத் தள்ளி உரம் கொண்ட நெஞ்சும், உடலும் பெற்றான். இந்த நிலையில் சீவகன் வளர்ந்து வரும் வேளையில் சுநந்தை நந்தட்டன் என்னும் ஒரு மகவினை ஈன்றாள்.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)