சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 


சீவக சிந்தாமணி...!!

🌟 இந்த பூமியில் உயிர் வாழ்வதற்காக மற்றவர்களின் கால்களை பிடிப்பது என்பது மரணமடைந்த நிலையாகவே வீரம் கொண்ட மன்னன் கருதினான். பிறப்பதும் ஒரு முறையே, வாழ்வதும் ஒரு முறையே எதிரியை நேரடியாக எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கடைசி மூச்சாக இருக்க வேண்டும் என்பதோடு, போருக்கு உண்டான உடைகளையும், உடை வாளையும் அணிந்து எதற்கும் துணிந்து எதிரியை எதிர்பார்த்து துணிந்து இருந்தான்.


🌟 மன்னனை நோக்கி ஓநாய் கூட்டங்கள் போல, நல்முறையில் ஆட்சி செய்து வந்த மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்த அதிகாரப் பதவியில் இருக்கக்கூடிய துரோகியின் கட்டளையை ஏற்று, செய்வது தவறாக இருந்தாலும் துணிந்து செய்யக்கூடிய படைவீரர்கள் எண்ணிலடங்கா வகையில் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். 


🌟 தன்னை எதிர்த்து வருகின்ற மக்கள் தம்நாட்டு மக்களே என்பதை உணர்ந்திருந்த மன்னனும், என்ன செய்வது என்று புரியாமல் உடை வாள், சிறு வாள், கேடயங்கள் என அனைத்தும் தன்னுடைய கரங்களில் ஏந்திய வண்ணமாக வனத்தில் தனித்துத் இருக்கக்கூடிய அரிமாவைப்போல் கர்ஜனையுடன் அனைவரையும் எதிர்த்தார்.


🌟 பல திங்கள்கள் எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் இருந்த மன்னன் தன்னுடைய பயிற்சிகள் அனைத்தையும் ஒருமுகமாக சிந்தித்து, சுகபோகங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்னுடைய உடலை பயிற்சியின் போது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு ஏற்றார் போல தன்னுடைய மனதின் மூலமாக உடலை கட்டுக்குள் கொண்டு வந்தார். மனமானது செம்மையாகும் பொழுது உடலும் அதற்கு வளையும் என்பதுதானே உண்மை.


🌟 பல கலைகளையும் அறிந்திருந்த மன்னன் தனித்திருந்து துரோகியின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படக்கூடிய பல வீரர்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடம் கொண்ட ஆயுதங்கள் மூலம் விழ்த்திக் கொண்டிருந்தார். வாளின் வேகமும், கேடயத்தின் பாதுகாப்பும், மன்னுடைய போர் திறமையும் எதிராளியின் படையை பயம் கொள்ள வைத்தது. 


🌟 நேரம் ஆக ஆக எதிரியின் படையானது அதிகரித்துக் கொண்டே இருந்தது. பல தூரங்களில் இருந்து ஏவப்பட்ட வில்களில் இருந்தும், குதிரை வீரர்கள் இடத்திலிருந்தும் மன்னன் உயிர் பிழைத்து அவர்களைக் கொன்று எதிரி நாட்டு படையை சிறு சிறுவாக குறைக்கத் துவங்கினார். இனியும் பொறுமை காத்தல் என்பது முடியாது என்று முடிவு செய்த நம்பிக்கை துரோகியான கட்டியங்காரன் வீரர்களை நேரடியாக எதிர்த்து கொள்வது என்பது முடியாது என்பதை புரிந்து கொண்டான். 


🌟 துரோகம் செய்ய துணிந்த மனதிற்கு வெற்றி என்பதே வேண்டும். அந்த வெற்றி எந்த வழியில் வந்தால் என்ன என்பது போல குறுக்கு வழியை சிந்தித்தான். 


🌟 பல வளங்களும், திறமைகளும் நிறைந்திருந்த தமிழ் மன்னர்கள் பலரும் வீழ்ந்ததின் காரணம் என்பது துரோகமாகும். மற்றவர்களை தவறாக எண்ணுதல் கூடாது, யாரையும் எப்போதும் நேரடியாக சென்று போர் புரிய வேண்டும், சர்வேசன் படைத்து இருந்த இந்த உலகத்தில் அனைவரும் சமம், அனைவரும் நல்லவர்கள் என்ற தமிழர்களுடைய உயர்ந்த குணமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமானது என்றால் மிகையாகாது. 


🌟 முன்னே எதிரியின் படைகளை எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருந்த மன்னனுடைய பின்புறத்தில் சென்ற கட்டியங்காரன் தன்னுடைய ஆயுதத்தின் மூலமாக பின்புறத்திலிருந்து வீழ்த்தினான். சற்றும் எதிர்பார்க்காத இந்த தாக்குதலினால் மன்னன் மிகவும் நிலை குழைந்தான். முதுகில் குத்திவனைத் திரும்பிப் பார்த்தபொழுது உடன்பிறந்த சகோதரனாக இருப்பான் என்று எண்ணியவன் கரங்களில் ஆயுதத்துடன் முகத்தில் எள்ளளவும் குற்ற உணர்வு இல்லாத அளவில் மிகுந்த மகிழ்ச்சியோடு, ஆனந்தத்தோடு தன்னுடைய மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றான் என்பதை கணப்பொழுதில் உணர்ந்து கொண்டான் மன்னன். 


🌟 காலம் தாழ்ந்த பின்பே தன்னுடைய தவறினை புரிந்து கொண்ட மன்னன் இனி என்ன செய்வது என்பது புரியாமல், புற முதுகில் குத்தப்பட்டு மரணம் அடைவது என்பது தன்னுடைய மரணத்திற்கு பெருத்த அவமானம் என்பதை உணர்ந்தார். 


🌟 தாய்மடியான மண் மடியில் தன்னுடைய உடைவாளை ஊன்றிய வண்ணமாக தன்னுடைய நாட்டின் வளமையான சூழ்நிலைகளை நினைவு கூர்ந்தும், தன்னுடைய மனைவியின் அன்பில் இருந்த மகிழ்ச்சியான நினைவுகளுடனும், தன்னுடைய எதிர்கால புதல்வன் என் நிலையில் இருப்பான் என்பதை சிந்தித்த வண்ணமாக மரணத்தை வரவேற்று கட்டியங்காரனை நேரடியாக தன்னுடைய உடை வாளினால் எதிர்க்கத் தயாரானான்.


🌟 உயிரைப் பறித்து செல்லும் எமனோ மன்னருடைய அருகில் நின்று அவருடைய உயிரினை எடுத்து செல்வதற்கு விருப்பமில்லாமல் மன்னன் இடத்தில் தயை கேட்பது போல நின்று கொண்டிருந்தான்.


🌟 எள்ளளவும் நம்பிக்கையும், விசுவாசமும் இல்லாத கட்டியங்காரன் நிலைகுலைந்த நிலையில் இருக்கக்கூடிய மன்னனின் எதிர்ப்பை ஏதோ பெரிய வீரனை தடுத்தது போல மகிழ்ச்சியுடன் மன்னனை கண நொடியில் கொன்றான். 


🌟 பல மக்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் துடைத்தெறிந்த நல்ல உள்ளம் கொண்ட மன்னன் மரணம் என்பது குருதி வெள்ளத்தின் நடுவில் முழுமையான துரோகத்தினால் முழுவதுமாக விழுந்தது.


🌟 பாசக்கயிற்றால் உயிர்களை அரவணைக்கும் எமன் மன்னனின் உயிரை விருப்பமே இல்லாமல் அவ்விடத்தில் இருந்து பறித்து எமலோகத்திற்கு எமகிங்கரர்கள் சுமந்து செல்லக்கூடிய வசதிகள் பல நிறைந்த பொன்களாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட விமானத்தின் மூலமாக அழைத்துச் சென்றான். 


🌟 காலம் என்பது அனைத்தையும் உற்று நோக்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நாம் எதைச் செய்கின்றோமோ... அதை திரும்ப காலமே நமக்கு கொடுக்கும். காலம் கொடுக்கும் தண்டனை என்பது காலதாமதமாக இருந்தாலும் கடுமைகள் நிறைந்த சொல்ல முடியாத துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் காலம் தாழ்ந்த தண்டனை குற்றத்தை குறைக்காது என்பதை உணராமல் இருக்கின்றதே காலம் என்பது போல எமனும் சிந்தித்தான்.


🌟 விசையை மயிலேறிச் செல்லும் விமானமானது பறக்கும் தட்டாகப் பறந்து சென்றது. அது நகர் விட்டு விண்ணில் புறநகர் நோக்கிச் சென்றது. 


🌟 வீரத்தின் மூலமாக வெற்றி கொள்வது என்பது முடியாமல் நயவஞ்சகமாக செயல்பட்டு வெற்றி அடைந்தாலும் அதை மகிழ்ச்சியான முறையில் மாறு தட்டிக் கொண்டான். வெற்றி முரசு ஒலிகள் எட்டுத் திக்கிலும் ஒழிக்கப்பட்டன. துரோகத்தின் ஆளுமைக்கு கீழ் மக்கள் அனைவரும் அடிமையாகினர். 


🌟 புறநகர் பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த விசையை வெற்றி முரசொலியை கேட்டதும் நிகழ்ந்திருப்பது என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு கணித்துக் கொண்டாள். அவளுடைய கணிப்பு சரியாகும் விதத்திலேயே சிறிது கால இடைவெளியில் அவல ஒலியும் கேட்கத் துவங்கியது. 


🌟 தன்னுடைய கணவன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும் அவளுடைய உடலில் ஒருவிதமான பதற்றமும், இத்தனை நாள் தனக்கு துணையாக இருந்த தன்னுடைய கணவர் இல்லையே என்ற எண்ணமும் அவளுடைய செயல்பாடுகளை மறக்க வைக்க துவங்கியது. 


🌟 இனி என்ன செய்யப் போகின்றோம்? தன்னுடைய கருவில் இருக்கக்கூடிய தன்னுடைய புதல்வனின் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகின்றது? இனி யார் நம்மை காப்பாற்றப் போகிறார்கள்? என்ற பலவிதமான கேள்விகள் அவளுடைய உள்ளத்தில் ஊற்றெடுக்க விமானத்தினை செலுத்த மறந்தாள். 


🌟 என்ன செய்வது என்பது புரியாமல் திகைத்து மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள். யாரும் இல்லாமல் தனியாக இருக்கக்கூடிய பேதை அல்லவா! அந்த சிந்தனைகளின் விளைவினால் அவள் எதையும் செய்ய முடியாத மயக்க நிலையை அடைந்தாள். 


🌟 விசையை மயங்கியதும் செலுத்த ஆளில்லாத விமானம் நீண்ட நேரமாக வானில் பறந்து கொண்டு பின்னர் மெல்ல மெல்ல நகரத்தின் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய வனங்கள் சூழ்ந்த, புகைகள் நிறைந்த மயான பகுதியில் இறங்கியது.


🌟 மன்னனைக் கொன்ற நம்பிக்கை துரோகியான கட்டியங்காரன், மன்னனின் துணைவியையும், அவள் வயிற்றில் இருக்கக்கூடிய கருவினையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். அந்தப்புரத்தில் பல இடங்களிலும் தேடி மன்னனின் துணைவியை காணவில்லை. 


🌟 பின்பு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஓரளவு யூகித்தான். குறுக்கு வழியில் வந்தவன் குறுக்கு வழியிலேயே செயல்படுவான் என்பதுபோல அந்தப்புரத்தில் இருந்த அனைவரையும் அழைத்து ஒவ்வொருவரையும் மிரட்டியும், கொலை செய்தும் அங்கு நிகழ்ந்தது என்ன என்பதை தெரிந்து கொண்டான்.


🌟 விமானம் செய்தவன் யாரென்று அறிந்து அவனை அழைத்து வந்து, விமானம் எங்கே சென்றிருக்கின்றது என்ற விபரங்களையும் கேட்டான். சிறிதும் ஆசைப்படாத விமானம் செய்தவன் துரோகமும், அதிகாரமும் நிரம்பியுள்ள கட்டியங்காரனின் முன்னிலையில் எதையும் உரைக்காமல் வீழ்ந்தான். 


🌟 பின்பு தன் படைகளை நாலாபக்கமும் அனுப்பி மன்னனுடைய மனைவியை கொலை செய்வதற்கு உண்டான அனைத்து அதிகாரங்களையும் கொடுத்தனுப்பினான். படைகளும் எட்டுத் திக்கிலும் பரவி சென்றன.


🌟 மயக்க நிலையிலிருந்து தெளிந்த விசையை வயிற்றின் உள்ளிருந்த கருவானது துரோகமும், ரோகமும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த உலகத்திற்கு வர துடித்தது. 


🌟 கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்த பகுதியாக விமானம் இருந்த இடம் மாறியது. அழகில் சிறந்த ஆடவர்களின் பாடல் மற்றும் ஆடல்களை கண்டவள் பேய்கள் நடனம் ஆடும் கூத்துகளையும் கண்டாள். 


🌟 அவற்றின் நிழல்கள் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள் அலறின. கோட்டன்கள் கூவிக் கொண்டிருந்தன. நரிகள் அனைத்தும் ஊளையிட்டு கொண்டிருந்தன.


🌟 வாழ்வில் இதுவரை காணாத அமங்கலம் நிறைந்த இந்த காட்சிகளையும், ஒலிகளையும் கேட்ட பின்பு இனி தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நொடி அடைந்து விட்டோம் என்பதை உணரத் துவங்கினாள். 


🌟 ஆனால் அவளுடைய வயிற்றிலிருந்த கருவானது முற்றிய நிலையில் வெளிவர துவங்கியது. வலியும், வேதனைகளும் நிறைந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு என்று யாரும் இல்லாத அந்த வேளையில் உச்சக்கட்ட துன்ப நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தாள். செய்த கர்மம் விடாது நிழல்போல அவளையும் பின்தொடர்ந்தது.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)