சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


சீவக சிந்தாமணி...!!

🌟 ஓரிரு திங்களிலேயே விசையை கருவுற்று இருந்தாள். அவளுடைய தோற்றப்பொலிவுகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. தான் கருவுற்று இருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியை தன்னுடைய கணவரிடம் தெரிவித்தாள். 


🌟 பின்பு தன்னுடைய மனதில் சில ஐயங்கள் இருப்பதாகவும், அந்த ஐயங்களுக்கு தங்களால் விடை அளிக்க முடியுமா? என்றும் வினவினாள். என்னுடைய மனதில் ஏதோ ஒரு புதுவிதமான அச்சமும், இனம்புரியாத குழப்பமும் ஏற்பட்ட வண்ணமாகவே இருக்கின்றது. இந்த எண்ணம் எதனால் ஏற்படுகின்றது? எதற்கு ஏற்படுகின்றது? என்பதும் எனக்கு தெரியவில்லை என்று கூறினாள்.


🌟 இதைக் கேட்ட மன்னனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த தருணத்தில் ஏன் குழப்பமாக இருக்கின்றாய்? உனக்கு என்னதான் ஆயிற்று? உன் மனதில் இந்தவிதமான சிந்தனைகள் ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்று வினவினார்.


🌟 விசையையோ தன்னுடைய மனதில் தோன்றியதை எல்லாம் தனது கணவரிடம் நிதானமாக அவர் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துரைக்க துவங்கினாள். அதாவது நீங்கள் எந்தவிதமான கவலையும் இல்லாமல் உங்களை சார்ந்து இருப்பவர்களின் முன்னேற்றத்தைப் பற்றியோ, அவர்களுடைய வாழ்வாதாரத்தை பற்றியோ எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல், வெயிலின் அருமையை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்காமல் நீங்கள் நிழல் கண்ட இடத்தில் அமைதியாக இருக்கிறீர்கள். 


🌟 மக்கள் சார்ந்த பணிகளிலும், கடமைகளிலும் எந்தவிதமான விருப்பமும் இல்லாமல் இவ்விடத்தில் அதைப் பற்றிய சிறு எண்ணங்களும் இல்லாமல் மகிழ்ச்சியாக பொழுதை கழித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் ஏதோ தவறவிடுவது போல எமக்கு தோன்றுகின்றது என்று கூறினாள்.


🌟 தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்ட மன்னர் நான் எதையும் தவற விடுவதுமில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. எனக்கான பணிகளை நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தான் இங்கு வந்து இருக்கின்றேன் என்று கூறினார்.


🌟 ஆனால் விசையையோ நீங்கள் செல்லும் பாதை என்பது எமக்கு நேர் பாதையாக தெரியவில்லையே. குழப்பங்கள் நிறைந்த இருள் சூழ்ந்த வழியாகவே எமக்குத் தோன்றுகின்றது. 


🌟 பல விதமான கலைகளை கற்றறிந்த உமக்கு கூட என் மீது நம்பிக்கை இல்லையா? நான் எந்தவொரு பணியிலும் தவறு இழைப்பதில்லை, நினைவில் கொள் என்று கூறினார்.


🌟 இருவருக்கும் இடையே நிகழ்ந்து கொண்டிருந்த பேச்சுக்கள் காரசாரமாக சென்று கொண்டிருப்பதை புரிந்து கொண்ட விசையை அவருடைய மனதை மாற்றுவதற்காகவும், வேறுபாடுகள் மென்மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காகவும் நீங்கள் கனவு சாஸ்திரத்தை அறிந்திருக்கிறீர்களா? என்றும் வினவினாள்.


🌟 பல கலைகளை கற்றுக் கொண்டு இருந்தபொழுது ஓய்வு நேரங்களில் கனவு சாஸ்திரங்களையும் கற்று இருக்கின்றேன் என்று கூறினார்.


🌟 தாங்கள் கனவு சாஸ்திரத்தை அறிந்து இருப்பதினால் நேற்றைய சந்திர பொழுதில் சில கனவுகள் என்னிடத்தில் தோன்றின. அந்த கனவுகளுக்கு உங்களால் பலனளிக்க முடியுமா? என்று கேட்டாள்.


🌟 பல விடுகதைகளை உருவாக்கிய எனக்கு எந்த விடுகதைகளையும் விடுவிடிக்க இயலும் என்றும் நீ கண்ட அந்தக் கனவு யாதென்று வினவினார்.


🌟 விசையையும் தன்னுடைய மனதில் தோன்றிய கனவை எடுத்துரைக்க துவங்கினாள். அதாவது, பசுமை நிறைந்த, வளர்ந்த ஒரு அசோக மரமானது எதிர்பாராத சில சூழல்களில் திடீரென்று பட்டுப் போகின்றது. அடிமரமானது பசுமை இழந்து காய்ந்து விடுகின்றது. அந்த இடத்திலிருந்து ஒரு புதிய செடி ஒன்று உருவாகுகின்றது. அதன் தலை முடியில் எட்டு விதமான மாலைகள் விழுந்து அதை அழகு செய்கின்றன. இவை தான் நான் கண்ட கனவு என்று கூறினாள்.


🌟 விசையை கண்ட கனவுக்கு 'பழமை அழிகிறது... புதுமை தோன்றி, வளர்ந்து சிறப்படைகிறது. இதுதானே வாழ்க்கை நியதி" என்று விளக்கினான்.


🌟 உங்களை இது எந்த அளவில் பாதிக்கும்? என்று கேட்டாள். அவளுக்கு மேலும் விளக்கம் தர அவன் விரும்பவில்லை.


🌟 'கனவுகள் பலிப்பதும் உண்டு... பலிக்காமல் போவதும் உண்டு" என்று அமைதிப்படுத்தினான். நாட்கள் செல்ல செல்ல வெறி கொண்டு விலங்காக வாழ்ந்தவன் நெறிகாண முயன்றான். புலன் இன்பம் நுகர்ந்தவனுக்கு தன் புலன் அறிவு செயல்படத் தொடங்கியது. அவள் உருமாற்றம் அவன் உள்ளத்தைத் திருத்தியது.


🌟 அவளுடைய தோள்கள் மெலிந்தன. வாய் விளர்த்தது. கண் பசந்தது. முலைக்கண் கரிந்தது. செப்புப் போன்ற அவள் கொங்கை பால் சுமந்தது. இடை பருத்தது. சூல் உற்றாள். அதனால் அவள் இள நலம் தொலைந்தது. அவனுக்கும் அவள் மீது இருந்த கவர்ச்சிகள் குறைந்தது. அவள் வயிற்றை அவ்வப்பொழுது உதைத்து உயிர்த் துடிப்பைக் காட்டி வந்த மழலையின் எதிர்காலம் அவன் கண்முன் நின்றது.


🌟 ஒருவேளை கட்டியங்காரன் ஆட்சியைத் தராவிட்டால், எதிரியாக மாறிப் போர் தொடுத்தால் அந்த நினைவு அவனை அலைக்கழித்தது. தான் அழிந்தாலும் தன் மனைவியையும், வயிற்றில் உருவாகும் உதயகுமரனையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று எண்ணி, அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து அதற்கான உபாயத்தைத் தேடினான்.


🌟 மயனுக்கு நிகரான தச்சனை அழைத்து மயிற் பொறி ஒன்று செய்து தருமாறு வேண்டினான். அது பறக்கும் தட்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். சிற்ப நூல் வல்லவன் தன் கற்பனை கொண்டு ஒப்பனை மிக்க மயிற் பொறி ஒன்றை பழைய கந்தல் துணிகளையும், பருத்தியையும், அரக்கையும், நூலையும், பிசினையும், மெழுகையும் வைத்து நன்கு பக்குவமாகச் செய்து தந்தான். 


🌟 அதை இயக்குவதற்குத் தக்க விசைப்பொறிகளையும் அமைத்துக் கொடுத்தான். அதனை மேலே செல்லவும், கீழே இறக்கவும் திருகுவதற்கு வேண்டிய கருவிகளைப் பொருத்தி வைத்தான். ஏழே நாளில் இதை அழகுறச் செய்து முடித்தான்.


🌟 அதில் ஏறி மேலே செல்லவும், விண்ணில் பறக்கவும், கீழே இறங்கவும் தக்க பயிற்சியும் தந்தான். ஆபத்துக் காலத்தில் தப்பித்துச் செல்ல சச்சந்தனையும், விசையையும் தகுதி படைத்தவர்கள் ஆக்கி வைத்தான். அவளுக்கு அது உல்லாசப் பயணமாகவும் இருந்தது.


🌟 கட்டியங்காரன் அமைச்சர் அவையைக் கூட்டினான். அவர்கள் ஆமோதிப்பு உரையை எதிர்பார்த்தான். ஆட்சியைச் சில நாள் ஏற்று நடத்தினான். அதில் கிடைக்கின்ற ஆதாயங்களை அறியத் தொடங்கினான். ஏன் இதைத் தானே தொடர்ந்து நடத்தக்கூடாது என்ற யோசனை தோன்றுகிறது. 


🌟 நீர் வெள்ளத்தில் நீந்திச் சுகம் காணும் வேந்தன் நிச்சயம் கரை ஏறித்தான் ஆகவேண்டும். அக வாழ்க்கையில் அகப்பட்டவர் புறப்பொருள் பற்றிச் சிந்திக்காமல் இருக்கமாட்டார். வந்து திரும்பக் கேட்டால் என்ன சொல்வது? 'உங்கள் கருத்து யாது?" என்று கேட்டான். 'இல்லை என்று மறுத்துச் சொன்னால் என்ன?" என்று துணிந்து கேட்டான்.


🌟 நாட்டு மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நிழல் எப்பொழுதும் நிஜமாக முடியாது. நாம் வகுத்து இருக்கக்கூடிய சட்டங்களும் இதற்கு இடம் தராது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் எண்ணுவது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை துரோகமும் கூட. மனைவியை பார்த்துக் கொண்டிரு என்று ஒருவன் கூறினால் அந்தப் பெண்மணியை நமது உடன்பிறந்த சகோதரியாக நினைக்க வேண்டும். அதை விடுத்து விட்டு தன்னுடைய இன்பத்திற்கு துணையாக மாற்றிக் கொள்வது என்பது தவறான ஒன்றாகும். 


🌟 செம்மையாய் தீட்டிய கூரான முனைகளை கொண்ட மரத்தினை கூர் பார்ப்பது போன்ற செய்கை இதுவாகும். நீங்கள் செய்கின்ற இந்த செயல்களுக்கு நீதிநூல்கள் கூட இடம் தராது. மற்றொருவனின் மனைவியை நினைக்கின்றவனும், கன்னியை காமத்தில் கலக்கியவனும், நன்றி மறந்தவர்கள் முதலியவர்களால் அரசனுக்கு கேடு சூழும். 


🌟 அமைச்சர் முதலியவர்கள் எல்லோரும் குட்ட நோயால் அழிவார்கள். மரணத்திற்குப் பின்பு நமக்கெல்லாம் நரகத்தில் கூட இடம் என்பது துளியும் கிடையாது என்று அறிவுரை கூறினார்கள்.


🌟 அமைச்சர்கள் கூறிய நல்ல கருத்துக்களை கட்டியங்காரனின் மனமோ ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவன் மனம் முழுவதும் ஆசையிலும், அதிகாரத்திலும் முழுமையாக மூழ்கியது. நல்லது எது? தீயது எது? என்பது கூட தெரியாமல் தன் எண்ணமே சரியானது என்று அவனிடத்தில் தோன்றியது. 


🌟 பகுத்தறிந்து உணரும் உணர்வு கொண்ட மனிதன் கூட ஆசையும், அதிகாரமும் வரும்பொழுது பகுத்தறிவாவது நல்லறிவாவது என்பது போல நடந்து கொள்ளத் துவங்கினான். 


🌟 தவறு செய்பவர்கள் பக்கமே வலிமையும் நிறைந்திருக்கும் என்பது போல கட்டியங்காரனுடைய எண்ணத்திற்கு ஏற்ப அவனுடைய மைத்துனனும் அதிகார போதையிலும், பொன், பொருள் ஆசையிலும் உங்களுடைய மன்னனான கட்டியங்காரனின் முடிவே இறுதியானதாகும். இதை எள்ளளவும் எண்ணிலும் மாற்ற இயலாது.


🌟 அந்தப்புரத்தில் இருக்கக்கூடிய மன்னன் தானே இப்பொழுது நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கின்றான். அந்த மன்னனை அந்தப்புரத்திலேயே வைத்து நால்வகை படைகளுடன் சென்று முற்றுகையிட்டு போர்க்களத்திலேயே அவனை கொன்று விட்டால் மக்கள் மத்தியில் எதுவும் தெரியாதது போலவே இருக்கும் என்றான்.


🌟 நல்ல அறிவுரை கூறிய அமைச்சர்கள் பலமுறை முயன்றும் இவர்களுடைய எண்ணங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. தீய எண்ணம் கொண்டவர்களான கட்டியங்காரனும், அவனுடைய மைத்துனர்களும் மன்னனை கொல்வதற்கு உண்டான ஆயத்த பணிகளை மேற்கொண்டார்கள். படைகளுடன் அந்தப்புரத்தினை முற்றுகையிட்டனர்.


🌟 தன்னுடைய மனைவி கண்ட கனவு நிகழ்வதற்கான காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்த மன்னனும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளர்ந்து வரும் தன்னுடைய புதல்வனை காப்பாற்றுவதற்காக மனைவியை மயிற் பொறியில் ஏற்றி வானத்தின் வழியே அனுப்பி வைத்தான். அவள் எவ்வளவு முயன்றும் மன்னனை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லை.


🌟 போர் முரசுகள் யாவும் முழங்கின. அரசன் தங்கியிருந்த அந்தப்புரத்தினை சூழ்ந்து கட்டியங்காரனின் படைகளும் நெருங்கின. ஒலியைக் கொண்டு போரினை அறிந்தான் சச்சந்தன்.


🌟 கண்முன்னே மன்னனுக்கு மரணத்தின் வாசல் தென்பட்டாலும் புறமுதுகு காட்டுவது என்பது தலைகுனிந்த நிலையாகவே எண்ணினான். வாழ்வது என்றால் வீரனாக வாழ வேண்டும், வீழ்வது என்றாலும் வீரனாக வீழ வேண்டும் என்பதே அவனுடைய மனதில் ஓடிய எண்ணங்களாகும். 


🌟 செய்த தவறுகளுக்காக பயந்து ஓடுதல் என்பது தீர்வாகாது. எதையும் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும் என்று கூறி தன்னுடைய புதல்வனை பார்த்துக் கொள்ளுமாறு மனைவியிடம் கூறி வழியனுப்பினான். 


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)