சீவக சிந்தாமணி...!!

Punniya seelan
0

 



சீவக சிந்தாமணி...!!


📚 காப்பியம் என்பது பல கருத்துக்களை ஒருங்கிணைத்த வாழ்க்கைக்கு தேவையாக இருக்கக்கூடிய அறம், பொருள், இன்பம், வீடு முதலியவற்றை இலக்கிய நயத்துடன் எடுத்து உரைக்கும் வடிவங்களில் ஒன்றாகும். 


📚 ஐம்பெரும் காப்பியங்களாக கூறப்பட்டுள்ள அனைத்து நூல்களின் பெயர்களும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பயன்படுகின்ற ஆபரணங்களின் தொகுப்பாகவே கூறப்பட்டிருக்கும்.


📚 வாழ்வில் மாற்றம் என்பது மாறாத ஒன்றாகும். அந்த மாற்றம் யார் மூலமாக ஏற்படுகிறது என்பதை பொறுத்து ஒருவரின் வாழ்க்கையில் பல திருப்பங்களும், யாவரும் எதிர்பாராத திடீர் மாற்றங்களும் ஏற்படுகின்றன.


📚 பல திருப்பங்கள் நன்மையில் முடிந்தாலும், சில திருப்பங்கள் பலருக்கு எடுத்துரைக்கும் மாற்றமாகவோ, கதைகளாகவோ திரும்பி எதிர்காலத்தினை பார்க்கின்றது.


📚 தலைவனின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்குவதில் தலைவியின் பங்கு என்பது முதன்மையாக இருக்கிறது. தலைவி இல்லையேல் தலைவனும் இல்லை. சுருங்கச் சொல்ல போனால், சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது போல தான்.


📚 ஒவ்வொரு காப்பியங்களிலும் தலைவனுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தலைவியின் மூலமாகவே அனைத்து மாற்றங்களும், வாழ்வியல் இயக்கங்களும், இன்பத்தின் நுகர்வுகளும், மோட்சத்தின் வழித்தடங்களும் பிறக்கின்றன என்பதை மறைமுகமாக எக்காலத்திலும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அக்காலத்தில் அதாவது, சங்க காலத்தில் வாழ்ந்த சான்றோர் பெருமக்கள் மூலமாக எதிர்காலத்தில் வாழ்வோருக்கு எடுத்துரைக்கப்பட்ட உன்னதமான கருத்துக்கள் பல பொதிந்த சிறந்த நூல்களாகும்.


📚 அதிகாரம் என்பது பொதுநலமாக இருக்கும் பொழுது அனைவரையும் காக்கும் பாதுகாவலனாக இருக்கும். அதே அதிகாரம் சுயநலமாக மாறும் பொழுது அனைவரையும் அழிக்கும் எமனின் பாசக்கயிறாகவும் மாறும். அளவற்ற இன்பம், அளவில்லாத இன்னல்களை உருவாக்கக் கூடியதாகும். எதிர்ப்பை வெல்லும் காலத்தை அறியும் வரை பொறுமை காத்தல் என்பது உன்னதம். அதைவிட தன் எண்ணம் ஈடேறும் வரை தனது செயலை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறப்பாகும்.


📚 வாழ்வதும், வீழ்வதும் ஒரு முறையேயானாலும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீட்டில் மாற்றம் ஏற்படும் பொழுது வீழ்வதும், வாழ்வதும் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறுகின்றன.


📚 பதவியில் இருக்கின்றவன் தன்னுடைய நிலையிலிருந்து தவறும் பட்சத்தில் அவனுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிலையில் தோன்றக்கூடிய மாற்றங்களையும், அவனை சார்ந்து இருக்கக்கூடிய மக்களின் நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும், அவன் வம்சா வழியில் ஏற்படப்போகும் மாற்றத்தினையும் சீவக சிந்தாமணி என்னும் நூலின் மூலமாக இனி வரும் தினங்களில் இலக்கியச் சுவையுடன் நாம் அறிந்து கொள்வோம்.


🌟 இயற்கை வளங்கள் அனைத்தும் நிரம்பி இருக்கக்கூடிய எழில் மிகுந்த விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்கள் கூட மனிதர்களாக பிறந்து வாழவேண்டும் என்று எண்ணக்கூடிய அளவில் செழித்து விளங்கக்கூடிய ஒரு அழகிய நாடுதான் ஏமாங்கத நாடாகும். 


🌟 ஆகாயத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களும், மேகங்களும் நாட்டின் வளங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. எந்த நிலையிலும் பொய்க்காத மேகங்களால் நாட்டின் வளமும், வளமையும் பெறுகி நிற்கின்றன. அதனால் மனிதர்களிடத்தில் இருந்துவந்த செல்வ வளங்களும் நிரம்பி வழிந்தன. 


🌟 வளங்கள் நிரம்பி இருந்த காரணத்தினால் மனிதர்கள் தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளாமல் துன்பத்தில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளையும், தான தர்மங்களையும் செய்து வந்தனர். 


🌟 நல்லோர்கள் எங்கே வாழ்கின்றார்களோ, அங்கே இறைவனும் குடி கொள்வான் என்பது போல அனைத்து வளங்களும் நிரம்பி வழிந்தன. கல்வி கற்ற சான்றோர்கள் நாட்டில் முறையாக மதிப்புடன் நடத்தப்பட்டனர். 


🌟 அவர்களுடைய கல்வி அறிவு நாட்டிற்கு ஒரு தீப ஒளி போல இருளை விலக்கி இருந்தது என்றால் அது மிகையல்ல. அந்த தீபச் சுடரின் ஒளியினால் மக்கள் அனைவரும் தீமை எது? நன்மை எது? என்று பிரித்துப் பார்த்து பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்டு சிறந்து விளங்கினார்கள். தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமானது அனைவரிடத்திலும் குறைந்து காணப்பட்டது.


🌟 பல துறைகளில் சிறந்து விளங்கிய வணிகர்களும் தான் ஈட்டிய பொருட்களைக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கும், அறம் வளர்ப்பதிலும் உறுதுணையாக இருந்தனர். கலை சார்ந்த துறைகளில் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கினர். 


🌟 ஆண், பெண் பேதமின்றி அனைவரும் சமமாகவே ஆடலிலும், பாடலிலும் ஈடுபட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தனர்.


🌟 ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாகவும், மற்றவர்கள் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகள் அனைவரும் மரியாதையுடனும், அவர்களுக்குண்டான மதிப்புகளுடனும், வாழ்க்கையை நடத்துவதற்கான சூழ்நிலைகள் மன்னருடைய அரசாட்சியில் ஏற்படுத்தப் பட்டிருந்தன. 


🌟 விவசாயிகள் அனைவரும் எந்த நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த நாடு மட்டற்ற வளர்ச்சி அடையும் என்பது போல ஏமாங்கத நாடும், மற்ற நாடுகளைவிட சிறந்து விளங்கியது. 


🌟 விவசாயிகள் இடத்தில் இருந்துவந்த வளமை என்பது எப்படி இருந்தது? என்று கூற வேண்டுமென எண்ணினால் நெற்பயிர்கள் விளைந்து இருக்கக்கூடிய நிலத்தில் அந்தப் பயிர்களை உண்பதற்காக வரக்கூடிய புள்ளினத்தை விரட்டி அடிப்பதற்கு விவசாயிகள் எவரும் அவ்விடத்தில் இருக்கக்கூடிய கற்களைத் தேடவில்லை. அதற்கு பதிலாக தனது காதுகளில் அணிந்திருந்த குழைகளை கழற்றி அவற்றின் மீது வீசி எறிந்தனர் என்றால் அவர்களிடத்தில் இருந்த செல்வ சிறப்புக்கு இதை விட மிகச் சிறந்த உதாரணத்தை தர இயலாது.


🌟 அனைத்து மங்காத வளங்களும் நிரம்பி இருக்கக்கூடிய ஏமாங்கத நாட்டினை ஆண்டு கொண்டு இருப்பவன் தான் சச்சந்தன். நகரினை சுற்றி அகழிகளும், மதில்களும் அமைந்திருந்து நாட்டிற்கு சிறந்ததொரு அரண்களாக அமைந்திருந்தன.


🌟 நால்வகைப் படைகளும் நாட்டிற்கு எந்நிலையிலும் துன்பம் ஏற்படாத வகையில் ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்தது. பார்லோகமும் போற்றும் படியாக சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தான் மன்னன்.


🌟 இளம் காளை போல கட்டுடல் நிரம்பிய உடல் அமைப்பினையும், காண்பவர்களை கவரும் விதமான பேரழகும், யாவரையும் எதிர்த்துப் போராடக்கூடிய பேராற்றலையும், எதிரிகளையும் விரட்டி அடிக்கக்கூடிய போர் கலைகளான வில்வித்தையிலும், வாள் வித்தைகளிலும், நுட்பமான அறிவினையும் கொண்டு இருந்தது மட்டுமல்லாமல் நாட்டு மக்களிடத்தில் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி சூரியனைப் போல பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்து நல்வழி பாதைக்கு அழைத்து செல்லும் ஒருவராக திகழ்ந்து இருந்தான் மன்னன் சச்சந்தன்.


🌟 சிறப்பானவர்களுக்கு எது கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும் என்பது போலவே, இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இருக்கக்கூடிய மன்னனுக்கு, தன்னுடைய தாய் மாமனாகிய விதையை நாட்டு அரசனின் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் துவங்கின.


🌟 விதையை நாட்டு அரசனின் மகளான விசையை என்பவள் தேவலோகத்தில் இருக்கும் ஊர்வசிக்கு நிகராக அழகு நிரம்பி இருக்கக்கூடிய ஒரு பேரழகியாக இருந்தாள். நற்குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமாகவும் இருந்தாள். தன்னுடைய கற்பு சார்ந்த விஷயங்களில் எள்ளளவும் கலக்கம் இல்லாமல் கற்புக்கு இலக்கணமாக ஒரு கற்புடைய காரிகையாக திகழ்ந்தாள்.


🌟 பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சுபம் மிகுந்த ஒரு நல்ல நாளில் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின்பு சச்சந்தன் விசையையிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும், அவளை இமைப்பொழுதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினான். 


🌟 அவளிடத்திலிருந்து இடையறா வகையில் பல விதங்களில் இன்பங்களை முகர்ந்தான். மன்னனுடைய மனமோ மனைவியானவளிடத்திலேயே மங்கி மயங்கியது. அவன் கொண்டிருந்த அந்த மயக்கத்தின் காரணமாக மன்னனுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளும், அவரை நம்பி இருந்தவர்களும், அரசு காரியங்களும் அவனுக்குப் பெரும் சுமையாகவே இருந்தது. 


🌟 நாட்டு மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ள கடமையும், அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருந்த மன்னன், மக்களுடைய சேவை பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து, சிறிது காலம் மட்டும் அவர்கள் அந்த பணிகளை பார்த்துக் கொள்ளும் படியான வாய்ப்புகளை அளிக்கலாம் என தீர்மானித்தார்.


🌟 அதற்காக தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்துவந்த கட்டியங்காரனை தனது ராஜ்ய பகுதிகளை ஆள்வதற்கு தகுந்த நபராக இருப்பார் என எண்ணினார்.


🌟 பின்பு மன்னன் கட்டியங்காரனை தனது அரசவைக்கு வருமாறு ஆணை பிறப்பித்தார். மன்னர் எந்தவொரு காரணமும் இல்லாமல் தன்னை வர வைத்திருக்கிறாரே! என்று எண்ணிய கட்டியங்காரன் துரிதத்துடன் அரண்மனைக்கு சென்றடைந்தான்.


🌟 கட்டியங்காரனை கண்ட மன்னன் தனது மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படையாக கூறினார். அதுமட்டுமல்லாமல் நான் சொல்கின்ற பணியை எந்தவிதமான தடையும், சுமையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.


🌟 சொல்லுங்கள் மன்னா! நான் எதையும் எளிதில் புரிந்து கொள்வேன். நான்கு தலைமுறையாக அமைச்சராக இருந்து தங்கள் குடும்பத்திற்கும், மக்களுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறோம். எதுவாக இருந்தாலும் கூறுங்கள் மன்னா என்று கூறினார். 


🌟 பொறுப்புகள் இருந்தாலும் அது இம்மைக்கும், மறுமைக்கும் சாதகமாக அமையும். பரபரப்புகள் நிறைந்த இந்த காலத்தினை தவிர்த்து இனிமையாக சில காலம் செலவிட வேண்டும் என்று எண்ணுகிறேன். நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டுமானால் நீ தான் அதற்கு உதவ வேண்டும். 


🌟 நான் ஓய்வு காலம் முடிந்து மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வரை நீதான் அரசு பொறுப்புகளையும், மக்கள் பணிகளையும் ஏற்று நடத்த வேண்டும். என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம் நீதான். அதனால் உன்னை என்னுடைய உடன்பிறந்த சகோதரராக நினைத்து சிறிது காலம் வரை ராஜ்யத்தை பொறுப்புடன் பார்த்துக் கொள்ளுமாறு கூறி அதிகாரத்தையும், பொறுப்பையும் கட்டியங்காரனிடம் ஒப்படைத்தார்.


🌟 மன்னனிடம் இருந்து ஆட்சி சார்ந்த அனைத்தும் கட்டியங்காரனிடம் தரப்பட்டது. அவன் ஆட்சி தொடர்பான செயல்பாடுகளில் எந்த விதமான விருப்பமும் இல்லாமல் பதவியை ஏற்றுக்கொண்டான். பசு தோல் போர்த்திய புலியை போல் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் எந்தவிதமான சண்டைகளும், இழப்புகளும் இல்லாமல் அரச பொறுப்புகளை ஏற்று கொண்டான்.


🌟 தன்னிடத்தில் இருந்த அனைத்து பொறுப்புகளையும் சிறிது காலத்திற்கு தன்னுடைய அமைச்சரிடம் கொடுத்துவிட்டு முழு ஓய்வுடனும், அமைதியுடனும் தன்னுடைய இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டான் சச்சந்தன். 


🌟 அந்த எண்ணத்தின் விளைவாக அவன் மனம் ஆட்சியில் எள்ளளவும் லயம் கொள்ளவில்லை.


🌟 நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் செய்ய வேண்டிய அறப்பணிகள், தர்மப்பணிகள் என அனைத்தையும் அவர் சிந்திக்கத் தவறி யாவற்றையும் மறந்தார். தன்னுடைய தோள் வலிமையும், படை வலிமையும் காட்டி ஆட்சியை நல்லமுறையில் அமைக்க வேண்டியவர், பெண்கள் அணிகின்ற வளையலில் வெளிவருகின்ற ஓசைக்கு தகுந்தார் போல வளைந்து தாழ்ந்து தன்னுடைய வாழ்க்கையில் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்.


🌟 தன்னுடைய துணைவியுடன் இணைந்து பல கதைகளை பேசி மகிழ்ந்தார். விடுகதைகள் பல பேசி தன்னுடைய திறமைகளையும் வெளிப்படுத்தினார். இன்னிசை பாடல்களை இயற்றி அந்தப்புரமே தன்னுடைய சொர்க்கலோகம் ஆக எண்ணி சுந்தரிகளுடனும், மனைவியுடனும் உரையாடி பொழுதுகளை செலவழித்துக் கொண்டிருந்தார்.


🌟 சிலம்பு ஒலியும், வளையல் ஒலியும், இன்னிசை கீதங்களும் காலை, மாலை என பொழுதுகள் அறியாது ஒலித்துக் கொண்டிருந்தன. சந்திர பொழுதுகளில் விளையாட வேண்டிய விளையாட்டுகளை சூரிய பொழுதிலும் இடைவெளிகளில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். கவலை என்பது சிறிதும் அறியாத வண்ணமாக தன்னுடைய மனைவியை பலவிதங்களில் இன்புறச் செய்தாh.


🌟 அவளும் அவர் இசைக்கின்ற கீதத்திற்கு தகுந்தார் போல யாழின் நரம்புகளாக செயல்பட்டாள். யாழில் இருந்து நாதமும், இசையும் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால் ஒரு நாள் யாழின் நரம்பு அறுந்தது போல விசையையின் செயல்பாடுகளில் மாற்றங்கள் தெரியத் தொடங்கின.


தொடரும்...!!


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)