சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்...!!

                சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் 


சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் கேரளத்தில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோவிலாகும். இக்கோவில் பெண்களின் சபரிமலை எனப் பெயர் பெற்றது. இந்தக் கோவில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் சோட்டானிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போலவே மிகவும் பெயர் பெற்ற கோவிலாகும். இத்தலத்தில் பகவதி அம்மன் வழிபாடு மிகவும் பிரபலமானதாகும். மேலும் அன்னை பகவதி அம்மன் இறைவன் திருமாலுடன் இக்கோவிலில் காட்சித்தருகிறாள்.


கோவில் சிறப்புகள் :


சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும், உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள்.


இக்கோவில் பகவதி அம்மன் எல்லாவிதப் பாவத்திலிருந்து காப்பவள் என்பதால் வலதுகையை பாதத்தில் காட்டி இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பாகும்.


கோவிலின் வலது பக்கத்தில் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள கொடிமரத்தின் அருகில் நின்று பார்த்தாலே மூலஸ்தானத்தில் உள்ள தேவி பகவதியை தரிசிக்கலாம்.


கோவில் பரிகாரங்கள் : 


திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளையும், திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரனையும், குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. 


மாசி மகம் நாளில் இங்கு லட்சக்கணக்கான பெண்கள் கூடுகின்றனர். மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த கோவிலாக இது உள்ளது.


மன நிலை சரியாவதற்கு அம்மனை வழிபட தினமும் பலரும் வந்து செல்கின்றனர். மனஉளைச்சலால் மனநிலை பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு நலம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.


மன நலம் மட்டுமின்றி ஏவல், பில்லி சூனியம் போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வணங்கி நிவாரணம் அடைகின்றனர். 


இத்தலத்தில் ஒரு பலாமரம் உள்ளது. ஐந்து இலைகளுடன் உள்ள இந்த மரத்தில் மனச்சாந்தி இல்லாதவர்கள், தீயசக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆணி அடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு ஆணி அடிப்பதால் அவரை பிடித்துள்ள பீடைகள் விலகுவதாக நம்பப்படுகிறது.


விழாக்கள் :


சோட்டானிக்கரை கோவிலில் நடைபெறும் குருதி பூஜையில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, அன்னை பகவதியின் அருளைப் பெறுகின்றனர். முன்பு இந்த குருதி பூஜை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது ஒவ்வொரு நாளும் நடத்தப்படுகிறது.


ஆண்டுதோறும் இந்தக்கோவிலில் நடைபெறும் மிகவும் முக்கியமான விழா சோட்டானிக்கரை மகம் என்ற பெயரில் வழங்கப்படும் திருவிழா ஆகும்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)