நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை..!!
👉 இந்திய சுதந்திர போராட்டத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் இவர்...!!
👉 இவர் ஒரு 'தேசியவாதியும்", 'சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.
👉 இந்தியாவிற்கு முதன்முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் இவரும் ஒருவர்.
👉 'சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்" என முழங்கியவர்.
👉 'இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை" என கருதப்படுபவர்...
👉 இவர் ஒரு அறிஞர், கணிதத்தில் புலமைமிக்கவர், தத்துவவாதி, தேசிய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.
👉 'எங்கள் சகாப்தத்தின் மிகப்பெரிய தலைவர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர்;.
👉 மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்று மக்களாலும்,
👉 Father of Indian unrest என்று பிரிட்டிஷ் அதிகாரிகளாலும்,
👉 'நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என காந்தியாலும் அழைக்கப்பட்டார்.
👉 இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே.
👉 முதன்முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்.
அவர்தான் 'இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை" என கருதப்படும்
👇👇
பால கங்காதர திலகர்
👉 இவரது பெயருடன் கௌரவ பட்டமான 'லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு.
👉 மகாத்மா காந்திக்கு முன்பே தேசிய அளவிலான தலைவர் என்றால் அது திலகர் தான் என நம்பப்படுகிறது.
👉 'பால கங்காதர திலகர்" என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள 'ரத்தினகிரி" என்ற இடத்தில் கங்காதர் ராமச்சந்திரா திலக்;, பார்வதி பாய் கங்காதர் தம்பதிக்;கு மகனாக பிறந்தார். திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவராகவும் விளங்கினார்.
ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் கல்வி :
👉 திலகர் தனது பத்து வயது வரை ரத்தினகிரியில் படித்தார். பின்னர் அவரது தந்தை பணி காரணமாக புனேவுக்கு இடம் பெயர்ந்ததால் அங்கே தனது கல்வியை தொடர்ந்தார். பத்து வயதாக இருக்கும்போதே திலகர் தனது தாயை இழந்தார். இவருக்கு கேசவ் கங்காதர திலக் என்றே பெயரிட்டனர். தாயார் இவரை பாலா என்று அன்போடு அழைத்தார். தாயாரின் நினைவாகவே திலகர் தனது பெயரை பால கங்காதர திலக் என்று வைத்துக்கொண்டார்.
👉 1871ல் சத்தியபாமா என்ற 11 வயது சிறுமியை திலகருக்கு மணம் முடித்தனர். திலகர் தனது பதினாறாவது வயதில் தந்தையையும் இழந்தார். பள்ளிப் படிப்பு முடித்த பின் இவர் 1877ஆம் ஆண்டில் புனேவில் உள்ள டெக்கன் கல்லூரியில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றார்.
👉 அதன்பிறகு, சட்டம் படிக்க முடிவு செய்து, சட்டக்கல்லூரியில் விண்ணப்பித்தார். அவருடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும், பேராசிரியரும், 'நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய், எனவே அதையே சிறப்புப் பாடமாகப் படித்தால், நல்ல எதிர்காலம்" என்றனர்.
👉 அதற்கு திலகர், 'என்னுடைய நாடு, அடிமைப்பட்டு துன்புற்றுக்கிடக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். எனவேதான், நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்!" என்றார். அதன்பின் சட்டப்படிப்பை முடித்த இவர் பல தேச பக்தர்களுக்காக வாதாடி, அவர்களை சிறையிலிருந்து மீட்டார்.
👉 பின் பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு கணிதத்தை கற்பித்தார். இந்த பள்ளி வாழ்வே அவரது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது.
👉 பிறகு தன்னுடன் வேலை பார்த்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் தொடர்பாக வேலையை விட்டு வெளியே வந்து தன் கல்லூரி நண்பர்கள் சிலருடன் இணைந்து ஒரு பள்ளியை தொடங்கினார். இந்திய தேசிய சிந்தனைகளுடன் சேர்ந்த நல்ல படிப்பை இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த பள்ளி உருவானது.
👉 அந்த பள்ளியின் வெற்றியை தொடர்ந்து 'டெக்கான் கல்வி சமூகம்" என்ற அமைப்பை உருவாக்கி அந்நிறுவனங்கள் விரிவடைந்தன. இதைத்தொடர்ந்து இந்திய தேசிய விடுதலைக்காகவும் பாடுபட தொடங்கினார்.
👉 இந்திய செல்வங்கள் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாக கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரை சிந்திக்க செய்தன.
விடுதலை போராட்டத்தில் திலகரின் பங்கு :
👉 ஆங்கிலேய ஆட்சியின் ஆதிக்கத்தை கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் 1881ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து 'கேசரி" என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையையும், 'மராட்டா" என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையையும் தொடங்கி ஆங்கில அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வெளியிட்டார்.
👉 தலையங்கத்தில் ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார். இரண்டே ஆண்டுகளில் 'கேசரி" இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது. இது பிரித்தானியர்களின் கீழ் மக்கள்படும் துன்பங்கள் குறித்ததாகவே இருந்தன. இந்தப் பத்திரிக்கைகள், இந்திய மக்களை தமது உரிமைகளுக்காக போராடும்படி தூண்டின. அதன் தலையங்கங்கள் மக்களின் சிரமங்களையும், உண்மையில் நடப்பதையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்ததால் மக்கள் அந்த பத்திரிக்கைகளை விரும்பி படித்தனர்.
👉 இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டார் திலகர். பத்திரிக்கை விற்பனை நாடு முழுவதும் சூடு பிடித்தது. இது ஆங்கிலேயருக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
👉 மக்கள் ஒவ்வொருவரும் வீறு கொண்டு எழுந்து போராட துடித்தனர். கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை 'கேசரி" இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார். இதுவே அவரின் முதல் சிறை அனுபவம்.
👉 விடுதலை செய்யப்பட்ட பின் மக்களுக்கு இந்திய கலாச்சாரத்துடன் சேர்ந்த கல்வியறிவை கொடுப்பதற்காக தக்காண கல்வி சபையைத் தோற்றுவித்தனர். கடுமையாக உழைத்து திறமையாக நடத்தினர். அது பின்னர் ஃபெர்குஸன் கல்லூரியாகவும் விரிவடைந்தது.
அரசியல் வாழ்க்கை :
👉 1885ஆம் ஆண்டு திலகர் காங்கிரஸில் சேர்ந்தார். 1896ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலனில்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயரத்தை துடைத்தார்.
👉 அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார்.
👉 இந்த கட்டுரைகளை காரணம் காட்டி 1897ஆம் ஆண்டு திலகருக்கு கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கில அரசு. சிறைவாசத்தில் திலகரின் உடல்நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை 'லோகமான்யா" என்று அழைத்தனர்.
புனேவில் விவேகானந்தருடன் திலகர் :
👉 சுவாமி விவேகானந்தர் இந்தியாவை சுற்றி வந்தபோது, மும்பையில் இருந்து புனேவிற்கு செப்டம்பர் 1892ல் ரயிலில் வந்தார். அப்போது பால கங்காதர திலகரும் அந்த ரயிலில் பயணம் செய்தார். பின்னர் திலகரின் இல்லத்தில் 10 நாட்கள் வரை சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார்.
👉 விவேகானந்தரும், திலகரும் ஒருவர் மீது ஒருவர் பெருமதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். விவேகானந்தர் தங்கியிருந்த அந்த அறை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பின்னாளில், இதே அறையில்தான் புகழ்பெற்ற விநாயகர் திருவிழாவையும் திலகர் ஆரம்பித்தார்.
திலகர் ஆரம்பித்த அமைப்பு :
👉 1907ல் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மிதவாதம், தீவிரவாதம் என இரண்டாக காங்கிரஸ் கோஷ்டி பூசல் உண்டானது. திலகர் மிதவாத பிரிவை சேர்ந்த கோபால கிருஷ்ண கோகலேவை எதிர்த்தார். திலகரின் ஆதரவாளர்களாக விபின் சந்திர பால், வ.உ.சிதம்பரம் பிள்ளை, லாலா லஜபதி ராய், அரபிந்தோ கோஷ் ஆகியோர் இருந்தனர்.
👉 1909ல் பிரிட்டிஷிடம் இருந்து இந்தியாவை பிரிப்பதற்காக 'பிரிவினைவாதம்" பேசிய குற்றத்திற்காகவும், இந்தியர்களுக்கும், பிரிட்டிஷாருக்கும் இடையே இனவாதத்தை தூண்டி கட்டுரைகளை எழுதிய குற்றத்திற்காகவும் ஆறு வருடங்கள் பர்மாவில் உள்ள சிறைக்கு திலகர் அனுப்பி வைக்கப்பட்டார்.
👉 சிறையிலிருந்து 1914ல் வெளிவந்தபோது திலகர் உடலாலும், மனதாலும் மிகவும் சோர்ந்து போயிருந்தார். தனது சிறைவாசத்தின் போது சர்க்கரைநோய் வந்ததால் மிகவும் அவதியுற்றார்.
👉 காந்தியை அகிம்சை வழியை கைவிடுமாறும், இந்தியா சுயராஜ்ஜியம் அடைய என்ன வழிகள் தேவைப்படுமோ அவை அனைத்தையும் பின்பற்றுமாறும் திலகர் வற்புறுத்தினார். காந்தி அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்தாலும், திலகரின் மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். ஒரு ஆங்கிலேயருக்கு எதிரான வழக்கில் திலகர் தோல்வியுற்று கடனாளியாக ஆனபோது Tilak Purse Fund என்ற ஒன்றை ஆரம்பித்து அனைவரையும் நிதி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் காந்தி.
👉 காங்கிரஸில் உள்ள கோஷ்டிகளை இணைக்க முயற்சி செய்து சலித்து போன திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் உடன் இணைந்து Indian Home Rule Movement என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். கிராமம் கிராமமாக சென்று இந்தியாவில் சுயராஜ்ஜியம் மற்றும் அதற்கான தேவையை வலியுறுத்தி உறுப்பினர்களை சேர்க்க ஆரம்பித்தார்.
👉 1916ஆம் ஆண்டு 4 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்த அமைப்பு, 1917ல் 32 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு விரிவடைந்தது. விவேகானந்தரும், திலகரும் ஒருவர் மீது ஒருவர் பெருமதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.
👉 திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர். இதன்பிறகு மிதவாதிகளுக்கு ஆதரவு குறைய தொடங்கியது. தீவிர கருத்துடைய திலகர் போன்றோர் மீது மதிப்பும், மரியாதையும் கூடியது.
👉 இப்படிப்பட்ட செயல்களுக்கு காரணம் காங்கிரஸ் தீவிர தலைவர்களே என கருதிய ஆங்கில அரசு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்றோரை கைது செய்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிய திலகரும், தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார்.
👉 இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, 'கீதா ரகசியம்" என்ற நூலை எழுதினார். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்றார். அவர் சிறையில் இருந்தபோது அவரது மனைவி இறந்தார்.
மாக்ஸ் முல்லர் கடிதம் :
👉 ஜெர்மனியின் மாக்ஸ் முல்லர், அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும், சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினார். வில்லியம் வில்சன் ஹன்டர் மற்றும் பலரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
👉 சிறையில் இருந்து வெளிவந்த பிறகு திலகர் மீண்டும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டால்தான் விரைவில் சுதந்திரம் கிடைக்கும் என்ற திலகர், சத்ரபதி சிவாஜி விழாவுக்கு புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணர்த்தினார்.
👉 திலகர், அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து ஹோம்ரூல் இயக்கத்திற்காக போராடினார். கிராமம் கிராமமாக சென்று மக்களிடையே சுயராஜ்ஜியம் குறித்து பேசினார்.
👉 1919ஆம் ஆண்டு திலகர் இங்கிலாந்து சென்றார். இந்திய சுதந்திரம் குறித்து அங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். லேபர் கட்சியை சேர்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
👉 1919ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் வந்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். அப்படி ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஜெனரல் டயர் என்பவரின் ஆணைப்படி சுட்;டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு நாடு திரும்பினார் திலகர்.
மறைவு :
👉 1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் திலகரை கடுமையாக பாதித்தது. ஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாக போராடி, 'சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் விடுதலை நெருப்பை பற்ற வைத்தவர்.
👉 ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராட தூண்டிய திலகர், கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத திலகர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தன்னுடைய 64வது வயதில் மறைந்தார்.
👉 திலகரின் மறைவு, இந்திய விடுதலை போராட்டதில் ஒரு பேரிழப்பு என்றாலும், அவர் விட்டுச்சென்ற கொள்கைகள் மற்றும் தேசப்பற்றாளர்கள் இந்தியாவின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினர்.
நினைவு சின்னங்கள் :
👉 1908ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரை சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.
👉 ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார். இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
👉 2007ல் அவருடைய 150வது பிறந்தநாளை கொண்டாட இந்திய அரசு அவர் நினைவாக ஒரு நாணயம் வெளியிட்டது. பர்மாவில் அவர் இருந்த சிறை பர்மா அரசாங்கத்தால் ஒரு பாட அறையாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP