வீரத்தின் விளைநிலங்கள்..!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


வீரத்தின் விளைநிலங்கள்..!!

👉 இவர்கள் தமிழ் மண்ணை காத்த வீர சகோதரர்கள்...!!


👉 தமிழ் மண்ணில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்டி மீண்டும் வேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்த சிங்கங்கள்...!!


👉 தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்...!!


👉 ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்திற்கு முன்னால் வேல்கம்பு, வீச்சரிவாள் மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் ஒருவன் ஆங்கிலேயரை 'போருக்கு வா" என்று கேட்கும் தைரியம் திப்பு சுல்தானுக்கு அடுத்தபடியாக இவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது...!!


👉 வெறும் கைகளால் புலியை நேருக்கு நேர் நின்று கொல்லும் திறன் கொண்டவர்கள்...!!


👉 ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்ததோடு, ஒரு அங்குல இடத்தை கூட விட்டுத்தர மறுத்தவர்கள்...!!


👉 வளரி என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவதிலும், தொடு வர்மக்கலையிலும் மிகப்பெரும் வல்லவராவார்கள்.


👉 'கிஸ்தியெல்லாம் தர முடியாது. வேண்டுமானால் மோதிப்பார்த்து விடலாம்" என்று ஆங்கிலேயரை பார்த்து அறைகூவல் விடுத்தவர்கள்...!!


👉 சிவகங்கை சீமையில் நல்லாட்சி செய்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்...!!


அவர்கள் தான்


👇👇


மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்...!!

👉 வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் மருது பாண்டியர் விளங்குகின்றனர்.


👉 மருது பாண்டியர்கள் என்றால் வேலு நாச்சியாருக்கு துணையாக இருந்த படைத்தளபதிகளான மருது சகோதரர்களையே சாரும். 


👉 நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் ஈந்த மருது பாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்திராத ஒன்று...


👉 மருது சகோதரர்களுடைய வீரமும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான இவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்களது பங்களிப்பும் மறக்க முடியாத ஒன்றாகும்.


👉 சிவகங்கை சீமையின் வேங்கைகளாக வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்கள்தான் இந்த சகோதரர்கள்.


வீரம்..


அஞ்சாத நெஞ்சம்..


வெள்ளையருக்கு எதிரான துடிப்பான போராட்டம்..


சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை அழியாத எழுத்துக்களால் எழுதிய தியாகம்..


இவை எல்லாம் மருது சகோதரர்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்!

👉 மாமன்னர் மருது பாண்டியர்கள் இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் மொக்க பழநியப்பன் என்பவருக்கும், ஆனந்தாயி என்னும் பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி மகனாக பிறந்தவர் பெரிய மருது பாண்டியர்.


👉 ஐந்து ஆண்டுகள் கழித்து 1753ஆம் ஆண்டு சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்று அழைக்கப்பட்டார். பெரிய மருதுவை விட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது/சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.


👉 இவர்களின் தந்தை மொக்க பழநியப்பர் சிறந்த பக்திமானாகவும், வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரிய மருதுவும், சின்ன மருதுவும் எதற்கும் அஞ்சாதவர்களாகவும், விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர். தாயார் பொன்னாத்தாள் இவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவை ஏற்படுத்தினார்.


சிறுவர்களின் வீரம் :


👉 சிறுவர்களாக இருந்த மருது பாண்டியர்களை தாயார் மொக்க பழநியப்பருடன் சேதுபதி நாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கு இரவு வேளையில் கோட்டை கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.


👉 ஒருநாள் இரவு சிறுவர்களான பெரிய மருதுவும், சின்ன மருதுவும் அந்த பீரங்கியை தள்ளிவைத்து கோட்டை கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதை செய்தது? என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர்.


👉 நடு இரவில் மருது சகோதரர்கள் அந்த பீரங்கியை தள்ளி கதவுகளை திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களை பிடித்தபோது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்பதை அறிந்து செய்வதறியாது திகைத்தனர்.


👉 மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார்.


👉 மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்தி கேட்டு என்ன செய்வது? என்று திகைத்தார். ஆனால், பழநியப்பரை சந்தித்த அரசர், சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். இதைக்கேட்ட தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்கு பின் அவர்களை அரண்மனை காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.


👉 பிரிட்டிஷ்காரன் துப்பாக்கியை தூக்கி கொண்டு வேட்டையாட காட்டிற்கு சென்ற சமயம், வெறும் கைகளால் புலியை நேருக்கு நேர் நின்று கொல்லும் திறன் கொண்டவராக இருந்தார் பெரிய மருது. இளையவரான சின்ன மருது அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார்.


மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம் :


👉 ஒருநாள் அரசர் விஜயரகுநாத சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுக கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கை சீமையின் அரசரும், தனது மருமகன் முத்து வடுகநாதரும், அரசி வேலு நாச்சியாரும் அங்கு வந்தனர்.


👉 தமது அரசியல் அமைச்சருக்கும், தளபதிக்கும் வயதாகி விட்டதாகவும், அவர்களுக்கு பின்பு நாட்டை திறமையுடன் ஆள தகுதி வாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாதர் கோரிக்கை விடுத்தார்.


👉 அதனை ஏற்று, அனைத்து தகுதிகளையும் பெற்று தனது மதிப்பிற்கு பாத்திரமாக திகழ்ந்த மருது பாண்டிய சகோதரர்களை அனுப்பலாம் என்று அரசர் விஜயரகுநாத சேதுபதி தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தை கூறினார்.


👉 அவரும் அவர்களை சிவகங்கை அரசரிடம் ஒப்படைக்க அழைத்து செல்லுமாறு கூறினார். முத்துவடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர்.


முத்துவடுகநாதரும், வேலு நாச்சியாரும் :


👉 சிவகங்கை சீமையின் மன்னர் முத்துவடுகநாதர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்தியும், மக்கள் நலன் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர்.


👉 வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பல மொழிகளை கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர். ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.


மருது பாண்டியர்களின்.. வீரமும், திறமையும் வெளிப்படுதல் :


👉 அரசர் முத்துவடுகநாதர் காளையார் கோவில் காட்டில் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அப்படி ஒருமுறை வேட்டைக்கு செல்லும்போது மருது சகோதரர்களும் உடன் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பல மிருகங்களை வேட்டையாடினர்.


👉 எதிர்பாராத சமயத்தில் வேங்கைப்புலி ஒன்று அரசர் மீது பாய்ந்தது. இதை கவனித்த சின்ன மருது குறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டி புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது.


👉 அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்து வேங்கையின் வாலை பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார். பிறகு அதன் வாயை பிளந்து கொன்றார். அந்த நிகழ்வு நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று அழைக்கப்படுகிறது.


👉 இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும், புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் ஜமீன்தாரர்களாக 1769 ஆண்டில் இருந்தனர்.


👉 இந்த நிலையில்தான் முத்துவடுகநாதரின் அமைச்சர் மற்றும் தளபதி ஆகியோரின் வயது முதிர்வு காரணமாக அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும், மதிநுட்பம் நிறைந்த சின்ன மருதுவை அமைச்சராகவும் அரசர் நியமித்தார். அரசி வேலு நாச்சியாருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியை தந்தவர் சின்ன மருது ஆவார்.


👉 சேது நாட்டின் அரசர் விஜயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். இதற்கிடையில் தஞ்சை மன்னன் 1770ஆம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார் தளபதி. சேது நாடு தஞ்சை மன்னனின் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததை கவனித்து கொண்டிருந்தான் நவாபு.


👉 ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தனர். ஈடுகொடுக்க முடியாத தஞ்சை மன்னன் ஆற்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும், பிடிப்பட்ட சேது நாட்டு பகுதிகளை திருப்பி தரவும் ஒத்து கொண்டான்.


👉 அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவியுடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளை சிறைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான்.


👉 அதன்பிறகு மீதமிருந்த சிவகங்கை சிவகங்கை சீமையை கைப்பற்ற நவாபு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில், ஆற்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார். இதனால் வஞ்சக திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வேட்டையாட செல்கிறார். ராணி வேலு நாச்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்கினார்.


👉 அன்று நவாப்பின் படை மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது, மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர்கொண்டார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாபு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிட்டான்.


👉 நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீரர்களும், உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதரும் எழுந்து சீறிப் பாய்ந்து போராடினார்கள். இதில் முத்துவடுகநாதர் உட்பட உயிர் சேதம் அதிகமாயிற்று. சின்ன மருதுவை இச்செய்தி திகைக்க வைத்தது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலு நாச்சியாரை காப்பாற்ற துரித நடவடிக்கையை மேற்கொண்டார். மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும், வேலு நாச்சியாரை காப்பாற்றவும், சிவகங்கை சீமையை கைப்பற்றவும் ஆலோசனை செய்தார்.


👉 முதலில் அரசியை காப்பாற்ற வேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைத்திரட்டி நாட்டை பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசி வேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. இந்நிலையில் ஒரு பெண் குழந்தையை அரசி பெற்றெடுத்தார். வெள்ளச்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்.


வனவாசம் :


👉 கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலு நாச்சியார், இளவரசி வெள்ளச்சியை கையில் சுமந்து பிரதானி தாண்டவராயன் மற்றும் மருது சகோதரர்கள் துணையுடன் விருப்பாட்சிக்கு தஞ்சம் புகுந்தார். விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், உதவி கேட்டு வந்த வேலு நாச்சியார் பாதுகாப்பாக தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்தார்.


👉 இந்த காலக்கட்டத்தில் மருது பாண்டியர்கள் வேலு நாச்சியாருக்கு ஆதரவாக சிவகங்கை சீமையிலுள்ள பல்வேறு சீமைகளுக்கு சென்று அங்கு நடந்த விபரங்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி பொதுமக்களை நவாப்பிற்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு கேட்டு ஒன்று திரட்டினர். அப்போது மைசூரை ஆண்ட ஹைதர் அலியின் படை உதவியை கோபால் நாயக்கர் உதவியுடன் வேலு நாச்சியார் பெற்றார்.


ஹைதர் அலி, வேலு நாச்சியார் சந்திப்பு :


👉 உருதுமொழியை சரளமாக பேச தெரிந்தவர் வேலு நாச்சியார். ஆகையால்தான், விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்த வேலு நாச்சியார் திண்டுக்கல் கோட்டையில் தங்கியிருந்த ஹைதர் அலியை சந்தித்து ஆங்கிலேயர்களின் எதிர்ப்பு குறித்து உருதுமொழியில் விளக்கி பேசினார். இவரின் திறமைகளை கண்டு வியந்த ஹைதர் அலி போர் புரிவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்து மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தார்.


👉 அதன்பிறகு தளபதிகளில் ஒருவரான தாண்டவராயன் மூலமாக கடிதம் ஒன்றை எழுதினார் வேலு நாச்சியார். அந்த கடிதத்தில் 5000 ஆயிரம் குதிரைகளையும், 5000 குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து போரிட்டு இரண்டு சமஸ்தானங்களையும் ஆற்காட்டு நவாப்பிடமிருந்து மீட்க முடியும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


👉 சிவகங்கை சீமையை ஆற்காட்டு நவாப்பிடமிருந்து மீட்பதற்காக நீங்கள் கேட்ட படைகளை திண்டுக்கல் கோட்டைக்கு வந்து பெற்று கொள்ளுமாறு வேலு நாச்சியாருக்கு பதில் கடிதம் அனுப்பினார் ஹைதர் அலி.


👉 இதன்மூலம் தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது மற்றும் அவர்களுடன் இருந்த படையினர் கொல்லங்குடி, பனங்குடி, பாகனேரி, திருபுவனம், மல்லக்கோட்டை, மேலூர், லிங்கவடி, சிறுமலை, திண்டுக்கல், விருப்பாச்சி போன்ற கோட்டைகளில் போர் பயிற்சி எடுத்து கொண்டு இருந்தனர்.


👉 இதற்கிடையில், 1773-ல் நவாப் சிவகங்கையை உசைன் நகர் என்று பெயர் மாற்றி இருந்தார். மக்கள் அனைவரும் செய்வது அறியாமல் ராணி வேலு நாச்சியாரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தனர். வேலு நாச்சியார், தாண்டவராயன், மருது சகோதரர்களின் துணையுடன், சிவகங்கையை கைப்பற்றிய நவாப் மற்றும் ஆங்கிலேயர் கூட்டுப்படையோடு போர் தொடுக்கச் செல்வதாக திட்டம். ஆனால், போருக்கு தயாராவதற்குள் வயது முதிர்ந்த காரணத்தினால் உயிர் துறந்தார் தாண்டவராயன்.


👉 தளபதி தாண்டவராயன் இறந்ததால் ராணி வேலு நாச்சியாருக்கு மருது சகோதரர்கள் மட்டுமே துணையாக இருந்தனர். சிவகங்கை மண்ணை மீட்க மும்முனை தாக்குதல் நடத்த திட்டமிட்டும், நவாபிடமிருந்து தன் நாட்டை மீட்டுவிட வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார் வேலு நாச்சியார். 


சிவகங்கை சீமை மீட்பு :


👉 இறுதியாக சிவகங்கை நகரை கைப்பற்ற சின்ன மருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டி போர் நடந்தது. 1780ஆம் ஆண்டு திண்டுக்கல் கோட்டையில் இருந்து மாபெரும் புரட்சிப்படை சிவகங்கை சீமை நோக்கியை சீறி பாய்ந்தது. மருது சகோதரர்கள் தலைமையில் இருந்த குதிரைப்படை சிவகங்கை நோக்கி செல்லும்போது தடைகளை ஏற்படுத்தியது ஆங்கிலேய படைகள். அனைத்து தடைகளையும் சாமர்த்தியமாக தகர்த்தெறிந்து முன்னேறி சென்றது வீர மங்கையின் படைகள்.


👉 இந்த வரலாற்று சிறப்புமிக்க போர்க்களத்தில்தான் குயிலி என்னும் முதலாவது தற்கொலை படை போராளி வரலாற்றில் இடம்பெற்றார். வேலு நாச்சியாருக்கு மிக முக்கியமான இந்த போரில் ஆங்கிலேயர்கள் வெடிப்பொருட்களை வைத்திருக்கும் கிடங்கினுள் மாட்டிக்கொண்ட பொழுது வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்ற படைப்பெண், வேலு நாச்சியாரை காக்க ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கு மீது நெருப்புடன் பாய்ந்து ஒரு சரித்திரத்தை படைத்தார்.


👉 இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கலில் இருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது.


👉 பின்னர் போர்ப்படை காளையார் கோவிலை கைப்பற்றியது. வேலு நாச்சியார், கணவரை கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் போரில் தோற்கடித்தார். இந்தப் போரின் முடிவில் வேலு நாச்சியார் தலைமையிலான படை வென்றது.


👉 இறுதியில் வேலு நாச்சியார் தனது அரண்மையை அடைந்த பொழுது சிவகங்கை மக்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியுடன் வேலு நாச்சியாரை வரவேற்றனர். சரியாக 8 ஆண்டுகள் கழித்து சிவகங்கை நாட்டை கைப்பற்றியவுடன் மக்களின் விருப்பத்திற்கேற்ப, சிவகங்கையில் ஆட்சி புரிந்தார்.


👉 வேலு நாச்சியார், தம்மை காட்டி கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட ஏற்பாடு செய்தார். உடையாள் மீதுள்ள பாசத்தால் தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக செலுத்தினார். இந்தக் கோவில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.


மருது சகோதரர்களின் ஆட்சி பொறுப்பு :


👉 வேலு நாச்சியார் சிவகங்கை சீமையை, தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்க்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதரர்களிடம் ஒப்படைக்க முன்வந்தார். அதற்கு மருது சகோதரர்கள் மறுப்பு தெரிவித்தனர். அதற்கு வேலு நாச்சியார், 'எனது மறைவிற்கு பிறகு நாடும், மக்களும் நிம்மதியாகவும், வளமாகவும் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அரசர்களாக வேண்டாம், அரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நடத்துங்கள்" என்று கூறி சம்மதிக்க வைத்தார்.


👉 மக்களுக்கு மருது சகோதரர்கள் நல்லாட்சி செய்ததால் மக்கள் மருது சகோதரர்களை மாமன்னர் மருது பாண்டியர்கள் என்று அழைத்தார்கள். இவர்கள் 1780 முதல் 1801 வரை சிவகங்கை சீமையில் நல்லாட்சி புரிந்தார்கள். மேலும், இவர்கள் ஆண்ட காலத்தில் பல கோவிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டது.


👉 மருது சகோதரர்கள் சிவகங்கைச் சீமையை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். காளையார் கோவிலை சீரமைத்தனர். குன்றக்குடி முருகன் கோவில், ஆவுடையார்கோவில், செம்பொன்நாதர் கோவில், சிங்கம்புணரி சேவகப் பெருமாள் அய்யனார் கோவில் ஆகியவற்றை சீரமைத்து மக்கள் வழிபாட்டுக்கு வகை செய்தனர்.


மக்கள் பணி :


👉 குன்றக்குடியில் அரண்மனை ஒன்று கட்டினர். அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தனர். தாம் பிறந்த நரிக்குடியில் தம் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டினர். மருது சகோதரர்கள் கலைகளை வளர்த்தனர். ஆதலால் இவர்கள் காலத்தில் நாடகக்கலை பெரிதும் வளர்ச்சி பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேர் வழங்கியுள்ளனர். மேலும் காளையார் கோவில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்துள்ளனர்.


👉 வேலு நாச்சியார் ஆட்சியை மருது சகோதரர்களிடம் ஒப்படைத்த சில ஆண்டுகளில் அவர் மரணமடைந்தார். மருது சகோதரர்கள் வேல் கம்புகளையே ஆயுதமாக கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்த 12 ஆயிரம் வீரர்களை கொண்டு நவாப்புகளின் இடத்தை சூறையாடினர்.


👉 இதனால் 1789ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொல்லங்குடி நோக்கி படையெடுத்தனர். இந்த தாக்குதலை மருது சகோதரர்கள் முறியடித்து வெற்றி பெற்றனர். மருது சகோதரர்கள் பாளையங்கோட்டை மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் நல்ல நட்பு வைத்திருந்தனர்.


👉 இளையவரான சின்ன மருது அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றை தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டனர்.


👉 1799ஆம் ஆண்டு கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுகிறார். அதற்கு பிறகு, வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தருகிறார். அதற்காகவே 1801ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது. சிவகங்கை அரண்மனையை ஆங்கிலேயப்படை கைப்பற்றியது. அதன்பின் மருது பாண்டியர்கள் அருகில் இருந்த காட்டில் மறைந்து இருந்தவாறே போரிட்டனர்.


சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்:


👉 1801ஆம் ஆண்டு ஜுன் 16ஆம் தேதியன்று, சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை 'ஜம்புத் தீவு பிரகடனம்" என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப்பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுக்க வேண்டுமென்றும் அறைக்கூவல் விடுக்கப்பட்டது.


மருது பாண்டியர்களை நெருங்கிய மரணம் :


👉 காளையார் கோவிலை முற்றிலுமாக ஆங்கிலேய ராணுவ கர்னல் ஸ்டிரே கைப்பற்றியதே மருது பாண்டியர்களை குறிவைத்து தான். ஆனால், மருது பாண்டியர்கள் இருவரும் ஆங்கிலேயரிடம் பிடிப்படவில்லை. அடுத்தக்கட்டமாக மருது பாண்டியர்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் என தேடித்தேடிக் கொலை செய்யப்பட்டனர். காளையார் கோவிலில் இருந்து வெளியேறிய மருது பாண்டியர்கள் தனது படை வீரர்களோடு காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்தனர்.


👉 கர்னல் ஸ்டிரேவின் படையும் மருது பாண்டியர்களை தேடி அலைந்தனர். மருது பாண்டியர்களை கண்டுபிடித்து கொடுத்தால் ஏராளமான பொற்காசுகளும், அரசாங்கத்தில் பல நல்ல பதவிகளும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மருது பாண்டியர்களின் படை வீரர்களில் சிலர் பரிசுக்கும், அரசாங்கப்பதவிக்கும் ஆசைப்பட்டு மருது பாண்டியரை ஆங்கிலேயருக்கு காட்டி கொடுத்தனர்.


👉 மருது பாண்டியர்கள், காளையார்மங்களம் கிராமத்தின் காடுகளில் மறைந்திருக்கின்றார்கள் என்ற செய்தி, ஒரு ஒற்றன் மூலம் தெரிந்துக்கொண்ட ஆங்கிலேயப்படை, பீரங்கிப் படைகளுடன் பாய்ந்தது. ஆங்கிலேயர்களின் பெரும்படைக்கும், மருது பாண்டியர்களின் படைக்கும் வாழ்வா? சாவா? என்ற உணர்வோடு கூடிய போர் நடந்தது.


👉 பல நாட்கள் நல்ல தூக்கம், உணவு இல்லாததால் காடு, மேடு என்று ஓடியும், ஒளிந்தும் திரிந்ததால் மருது பாண்டியர்களின் உடல்கள் களைத்து போயின. காளையார் கோவில் கோபுரங்களுக்கு எதிரில் பீரங்கிகளை நிறுத்திய ஆங்கிலேயப்படை, மருது பாண்டியர்கள் சரணடையாவிட்டால் கோபுரங்களை தகர்க்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். தாங்கள் கட்டிய கோவில் தகர்க்கப்படுவதை விரும்பாத மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர் படையிடம் சரணடைந்தனர்.


👉 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு. இவர்களின் குடும்பத்தை சேர்ந்தோரும், மொத்தம் 500-க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.


மருது பாண்டியர்களின் இறுதி ஆசை :


👉 மருது பாண்டியர்களை, தூக்கிலிடுமுன் உங்களின் கடைசி ஆசை என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு மருது பாண்டியர்கள், 'எங்களுக்கு நீங்கள் எந்த தயவும் காட்டவேண்டாம். நான் என் நாட்டை காப்பாற்ற போரிட்டு உங்களிடம் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். என் உயிரை பறிக்கும் உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆனால் என் உயிரோடு எதற்காக, இந்த சின்னஞ்சிறு உயிர்களையும் சேர்த்து பறிக்கின்றீர்கள்?... இந்த சிறுவர்களா உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள் என்று நினைக்கீன்றீர்கள்? எங்கள் உயிரை பறித்ததும், எங்கள் உடலை காளையார் கோவிலில் நாங்கள் கட்டிய கோபுரத்திற்கு எதிரில் புதைத்துவிடுங்கள். இது எங்கள் மரண சாசனமாக கூட நீங்கள் எடுத்துகொள்ளலாம்" என்று சிறிதும் தயக்கமின்றி தங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் போகப்போகின்றது என்பதை அறிந்தும் எந்த பதற்றமும் இல்லாம் ஆங்கிலேயர்களிடம் கூறினார்கள்.


👉 நாங்கள் இதுநாள் வரை எழுத்து மூலமாக, ஓலை மூலமாக, வாய்மொழி மூலமாக கொடுக்கப்பட்ட மானியங்கள் தொடர வேண்டும் என்றும், அப்படி அறிவித்து இருக்கும் மானியங்களையும் உடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.


👉 இது அவர்களது கொடைத்தன்மையையும், நன்றி மறவாத்தன்மையையும், மனஉறுதியையும் வெளிப்படுத்துகிறது. அவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று ஆங்கிலேயக் கர்னல் அக்னியூ உறுதி அளித்தார்.


நினைவுச்சின்னங்கள் :


👉 காளையார் கோவிலில் இருந்து 68கி.மீ தொலைவில் நரிக்குடி என்னும் கிராமத்தில் உள்ள சத்திர வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலையெடுத்து மக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். அந்த ஊர் மக்களின் பார்வையில் இவர்கள் கடவுளாக தெரிந்தாலும் உண்மையில் அவர்கள் தமிழ் மண்ணின் மூத்த சுதந்திர போராட்ட வீரர்களில் இருவர் என்பதையும் நாம் மறவாது இருக்க வேண்டும்.


👉 மருது சகோதரர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிவகங்கை மன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பவும், அந்த மண்டபத்தில் மருது பாண்டியர் உருவச்சிலைகளை அமைத்திடவும் 1990 ஜூன் 16ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி திருப்புத்தூரில் நினைவு மண்டபம் கட்டி மருது பாண்டியர்களின் சிலைகளையும் நிறுவியது.


👉 மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்புத்தூரில் அவர்களது நினைவாக தமிழக அரசால் 200வது நூற்றாண்டை முன்னிட்டு சுவிடீஸ் மருத்துவமனையில் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)