தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி..!!

Punniya seelan
0

 

நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி..!!

👉 இவர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி...!!


👉 சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்...!!


👉 மிகச்சிறந்த பொருளியல் அறிஞர்...!!


👉 அரசியல் தத்துவமேதை...!!


👉 உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்...!! 


👉 தீண்டாமை ஒழிய போராடியவர்...!! 


👉 தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இருளை போக்க உதித்த சூரியன்...!!


👉 பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்...!!


👉 மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர்...!!


👉 தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடு இணையற்ற ஜோதியாய் விளங்கிய சமூகப் போராளி...!!


👉 ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும், சமூகநீதி புரட்சியாளராகவும் விளங்கியவர்....!!


👉 தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பி...!!


👉 இந்திய வரலாற்றின் பழமைவாத பக்கங்களை கிழித்தெறிந்த மாமனிதர்...!!


👉 64 பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்...!!


👉 இந்தி, பாலி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், பெர்ஷியன் ஆகிய 9 மொழிகளில் புலமை பெற்றவர்...!!


👉 இந்திய அரசியலமைப்பு சாசன வரைவு குழுவின் தலைவராக பொறுப்பேற்றவர்...!!


அவர்தான்...


ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை


👇👇


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 

👉 சுதந்திரம் அடைந்த பின், இந்தியாவில் மக்களாட்சியினை கொண்டுவர பல தலைவர்களும், மக்களும் விரும்பினர். இந்தியாவில் மக்களாட்சியினை கொண்டுவர வேண்டும் என்றால் அதற்கான முறைப்படியான அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும்.


👉 அரசியல் சாசன சட்டங்களை வரையறுத்தால் தான் நாடு முன்னேற்ற பாதையினை நோக்கி செல்லும் என்று சிந்தித்த தலைவர்கள், இந்தியாவில் மிகச்சிறந்த சட்டம் படித்த மேதைகளை வைத்து இந்திய அரசியல் சாசனத்தினை எழுத நினைத்தனர். அப்பொழுது அவர்களுக்கு முதலில் தோன்றிய பெயர் 'அம்பேத்கர்".


🌟 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியப்பிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக மராத்திய குடும்பத்தில் பிறந்தார்.


🌟 அம்பேத்கருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் 'பீமாராவ் ராம்ஜி" என்பதாகும். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்" என்ற தகுதி பெற்றவர். அவர், வசித்த மோ பகுதியே இராணுவ தலைமையிடமாக செயல்பட்டு வந்தது. எனவே அம்பேத்கருக்கு இராணுவத்துடன் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல தொடர்பு இருந்தது.


கல்வி :


🌟 இராணுவத்தில் இருந்து அம்பேத்கரின் தந்தை ராம்ஜி மாலோஜி சக்பால் ஓய்வு பெற்றபோது அம்பேத்கருக்கு வயது இரண்டு. அதன்பின் குடும்பத்துடன், மகாராஷ்டிரா மாநிலத்தில் சாத்தாரா மாவட்டத்திற்கு குடியேறினர்.


🌟 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அம்பேத்கர் இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அம்பேத்கருக்கு 5 வயது இருக்கையில், அவரது அண்ணனுடன் 'சாத்தாராவில்" உள்ள ஒரு பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை துவங்கினார். பின் ராம்ஜி சக்பால் பம்பாயில் குடியேறி சாத்தாராவில் இராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு வேலையில் அமர்ந்தார். சாத்தாராவில் இவர்கள் குடியேறிய நேரத்தில் அம்பேத்கரின் தாயார் பீமாபாய் மறைவுற்றார்.


🌟 ஆரம்ப பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ, விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும், புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது.


🌟 தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமர்வதற்கு ஒரு கோணிப்பையை தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்கரின் பிஞ்சுமனம் வெம்பியது. இதனால், அம்பேத்கருக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்தது. தனது பொழுதுகளை விளையாட்டில் கழித்து வந்தார். அவரை வீட்டில் காண்பதே அரிதான நிகழ்வாகவே இருந்துள்ளது.


🌟 1897ஆம் ஆண்டு இவரது குடும்பம் மும்பைக்கு சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியை தொடர்ந்தார் அம்பேத்கர்.


🌟 அம்பேத்கரின் தாய் மறைவிற்கு பின், தந்தை மறுமணம் செய்து கொண்டார். இது அம்பேத்கருக்கு பிடிக்கவில்லை. எனவே, தனது தந்தையை சார்ந்திருக்க கூடாதென்று மும்பையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலைக்கு சென்றுகொண்டே தனது கவனத்தை படிப்பின் மீது செலுத்த தொடங்கினார். அதன்மூலம் தனது விளையாட்டு தனத்தை முற்றிலும் துறந்தார். தொடர்ந்து படிப்பில் நல்ல முன்னேற்றம் காணத் துவங்கினார்.


கல்வி ஆர்வம் :


🌟 அம்பேத்கர், குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது.


🌟 அப்பாவின் துணையுடன், ஹோவர்ட் ஆங்கில பாடநூலை கற்றார். மேலும், புகழ்பெற்ற மொழிப்பெயர்ப்பு பற்றிய நூல்களையும் படித்தார். இதனால், மொழிப்பெயர்ப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தொடர்ந்து அம்பேத்கர் பாடநூல்களை படிப்பதை விட மற்ற நூல்களை படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.


🌟 அவருடைய ஆசிரியர் ஒருவர், நீ படிப்பது வீண் என்று பலமுறை சொல்லிக்காட்டி சாதி ரீதியில் தாக்கினார். இதனால், ஒருமுறை சினம் கொண்ட அம்பேத்கர், உங்கள் வேலையை நீங்கள் பார்த்து கொண்டு போங்கள் என்று பதிலடி கொடுத்தார். ஆனால், வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர், சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக கற்க அனுமதிக்கப்படவில்லை.


🌟 1907ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி மெட்ரிக்குலேசன் தேர்வில் அம்பேத்கர் தேர்ச்சி பெற்றார். அப்போது தீண்ட தகாத மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அதற்காக அம்பேத்கருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.


உயர்கல்வி :


🌟 மெட்ரிக்குலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும், ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியை தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை தொடர்ந்தார்.


🌟 ஆனால் சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும், அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து 1912ஆம் ஆண்டு அரசியல், அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.


🌟 படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்கு தலைவராக 'லெப்டினன்ட்" பதவியில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார்.


🌟 பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச்சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.


🌟 1913ஆம் ஆண்டு அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.


🌟 அங்கு அவர் 1915ஆம் ஆண்டு 'பண்டைய இந்தியாவின் வாணிகம்" என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். 


அம்பேத்கர் பெற்ற பட்டங்கள் :


🌟 அம்பேத்கர் 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு" என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு 'டாக்டர் பட்டம்" வழங்கியது.


🌟 இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.


🌟 மேலும் அம்பேத்கர் 'பிரித்தானிய இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்" என்ற ஆய்வுரைக்கு 1921ல் 'முது அறிவியல் பட்டம்" பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை" என்ற ஆய்வுரைக்கு 1923ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். பிறகு சட்டப்படிப்பில் 'பாரிஸ்டர் பட்டமும்" பெற்றார்.


சமூகப்பணிகள் :


🌟 1923ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடிவு செய்தார்.


🌟 ஆயிரக்கணக்கான கூட்டங்கள், மாநாடுகள் வாயிலாக மக்களை விழிப்படைய செய்தார். 'ஒதுக்கப்பட்ட பாதரம், மூத்தத் தலைவன்" போன்ற பத்திரிக்கைகளை துவக்கினார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக 'பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா" என்ற அமைப்பை நிறுவினார். இதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார்.


🌟 1927ஆம் ஆண்டு 'பஹிஷ்கிருத் பாரத்" என்ற இதழை தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக எழுதி வந்தார் அம்பேத்கர். அதே ஆண்டு தீண்டாமைக்கு எதிராக போராட துவங்கினார். பொது கிணற்றில் நீர் எடுப்பது, கோவில்களில் அனுமதி மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.


🌟 1926ல் பம்பாய் சட்டப்பேரவைக்கு அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு சிறுபிள்ளைகள் கல்வி, தாய்மார்களின் மகப்பேறு கால உதவி, விவசாய தொழிலாளர் ஊதியம் போன்றவைகளை நிறைவேற்றினார். விவசாய அடிமை முறையை ஒழித்தார். தீண்டாமை ஒழிப்புக்கான சட்டங்களை கொண்டு வந்தார். தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை, அவசரக்கால - ஓய்வுக்கால உதவி போன்றவைகளுக்காக வழிவகுத்தார்.


முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் :


🌟 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்படுகையில், 'என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ? அதற்காக போராடுவேன். அதேசமயத்தில் சுயராஜ்ய கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்" என்று கூறி சென்றார்.


🌟 முதலாம் வட்ட மேசை மாநாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மண்ணிலேயே, அவர்களது ஆட்சிமுறையின் கோளாறுகளை கடுமையாக சாடினார் அம்பேத்கர்.


🌟 'இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாகவும், கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டு மக்கள்தொகைக்கு ஈடாகவும் இருக்கக்கூடிய பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக இங்கு பேசுகிறேன். உங்களது ஆட்சி எம் மக்களுக்கு அளித்துவந்த வேதனைகள் போதும். காலங்காலமாக எம்மக்கள் மதத்தின் பேரால் அனுபவித்துவரும் துயரங்களிலிருந்து மீட்காமல், உங்கள் அரசு மேலும் அவர்களை இழிவுப்படுத்தி வருவதை இனியும் எங்களால் சகித்துக்கொள்ள முடியாது.


🌟 ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு அந்த நாட்டின் ராணுவப் படையில் சேர உரிமை மறுக்கப்படுமானால், அப்படிப்பட்ட ஆட்சியே எங்களுக்கு தேவை இல்லை. இனி இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காக மக்களே ஆள்கிற புதிய ஆட்சிமுறை வேண்டும்.


🌟 அந்த ஜனநாயக ஆட்சியில் எம் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது வாழ்கிற அடிமை நிலையிலிருந்து விடுபட்டு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் ஏனைய உயர் சாதியினரை போல பூரண விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும்!" என உரக்கக் கூறினார். அம்பேத்கரின் துணிச்சலான இந்த பேச்சு உடன் வந்த சிற்றரசர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.


🌟 அம்பேத்கர், அமெரிக்கா சென்று படிக்க அவருக்கு பண உதவி செய்த பரோடா மன்னர், நம் கையால் மண்ணில் ஊன்றிய விதையானது சட்டென செழித்து வளர்ந்து, கனிகளுடன் பூத்துக் குலுங்குவதை தற்செயலாக பார்க்க நேரிடுகிறபோது எழுகிற பூரிப்பு போல பேரானந்தம் கொண்டார்.


🌟 மாநாட்டுக்கு வந்த இதர சிற்றரசர்கள் முன்னிலையில் அன்றிரவு அம்பேத்கருக்கு விருந்து கொடுத்து கௌரவப்படுத்தி கட்டி தழுவினார் மன்னர். அன்று முதல் இந்தியாவிலிருந்து வந்த அனைத்து பிரதிநிதிகளும் அம்பேத்கரை சற்று மரியாதையுடன் பார்க்க துவங்கினர்.


🌟 வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை குறித்து லண்டனிலிருந்து வெளியான ஆங்கில நாளேடுகள் புகழ்ந்தன. 'வயது வந்தோருக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும்" என்பன போன்ற அம்பேத்கரின் அதிமுக்கியமான கோரிக்கைகள் குறித்து வியந்து எழுதின.


🌟 'அம்பேத்கரின் உரையே மாநாட்டின் சிறப்பு!" என இண்டியன் மெயில் நாளேடு எழுத, ஸ்பெக்டேட்டர் நாளேடு அதற்கும் ஒரு படி மேலாக, 'அம்பேத்கர், இந்திய தேசிய தலைவர்களில் தவிர்க்க முடியாத நபர்!" எனப் புகழ் மாலை சூட்டியது.


🌟 முதலாம் வட்ட மேசை மாநாடு முடிவுக்கு வந்தபோது, இந்தியாவின் தேசிய தலைவர்களுள் ஒருவராக உயர்ந்திருந்தார் அம்பேத்கர்.


🌟 முதலாம் வட்ட மேசை மாநாட்டை தொடர்ந்து, அடுத்த வருடமே ஆங்கில அரசு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கான அழைப்பை வெளியிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட மாநாட்டிற்கான அறிவிப்பில் முக்கியமான தலைவர்களின் பட்டியலில் சக்திவாய்ந்த இரண்டு பெயர்கள் இருந்தன. ஒன்று, அம்பேத்கர். இன்னொன்று காந்தி.


🌟 இந்த இரண்டு துருவங்களும் அதுவரை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருவரும் ஒன்றாக லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், சலசலப்பையும் இந்திய அரசியலில் உருவாக்கியது.


🌟 இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு தனிவாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் கடுமையாக வலியுறுத்தினார்.


🌟 இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.


🌟 இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் காந்தியின் உடல்நிலையும் மோசம் அடைந்தது, நாட்டில் குழப்பமும் ஏற்பட்டது.


பூனா ஒப்பந்தம் :


🌟 பல தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார். 


🌟 இதன் விளைவாக செப்டம்பர் 24, 1932-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்" ஏற்பட்டது. இதை தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார். இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது. 


🌟 பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்திற்கு நேரே அம்பேத்கர் இப்படி சொல்கிறார் - 'காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையில் எடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்திற்கு நீங்கள் தேவைப்படலாம்!" என்று கூறினார்.


இந்திய அரசியலமைப்பில் அம்பேத்கரின் பங்கு :


🌟 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகஸ்ட் 29ல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.


இந்திய அரசியலமைப்பு :


🌟 1947, ஆகஸ்ட் 29ல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத, பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.


🌟 இரவு பகல் பாராமல் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் வேலையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார் அம்பேத்கர். தனது பிறப்பு முதல் எத்தனையோ இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்தவர் அம்பேத்கர். தனது மக்களுக்கு தகுந்த சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் கவனமாக இருந்தார்.


🌟 இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய மன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26ல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது.


🌟 அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தினமாக கொண்டாடப்படுகிறது.


🌟 அதன்பின் ஜனவரி 24ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக இராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


🌟 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி, லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்கு குடியரசு தினமாக அறிவித்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.


🌟 அதன்படி, ஜனவரி 26ஆம் தேதியை, இந்தியா குடியரசு நாளாக ஏற்பதென்று, அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது. அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.


🌟 அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது 'மிகச்சிறந்த சமூக ஆவணம்" என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது.


🌟 இச்சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ஆம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்.


முதல் திருமணம் :


🌟 1906ஆம் ஆண்டு 15 வயதான அம்பேத்கருக்கும், 9 வயதான ரமா பாய்க்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யஷ்வந்த் அம்பேத்கர் என்ற மகன் பிறந்தார். 1935ஆம் ஆண்டு இவர் தனது மனைவி ரமா பாயை இழந்தார்.


இரண்டாவது திருமணம் :


🌟 தன்னுடைய முதல் மனைவி இறந்து 12 ஆண்டுகள் கழித்து, 1940களின் பிற்பகுதியில் இந்தியாவின் அரசியலமைப்பின் வரைவை முடித்த பின்னர், அவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டார். கால்களில் நரம்பியல் வலி இருந்தது. இன்சுலின் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தார். அவர் சிகிச்சைக்காக பம்பாய்க்குச் சென்றார், வயதாகிவரும் நிலையில் தன்னைக் கவனித்துக் கொள்ள வாழ்க்கைத் துணை வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார்.


🌟 அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் சாரதா கபீர் என்பவர் அம்பேத்கரை நன்றாக கவனித்து வந்தார். மிகுந்த பரிவுடன் இருந்தார். அவரையே திருமணம் செய்துகொள்ள அம்பேத்கர் முடிவு செய்தார். சாரதாவும் அவரை மணக்க சம்மதித்தார்.


🌟 பின்னர் தனது 56-வது வயதில் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள அவரின் வீட்டில் டாக்டர் சாரதா கபீர் எனும் பிராமண பெண்ணை திருமணம் செய்தார். அப்போது சாரதாவுக்கு வயது 39. மணமானதற்கு பிறகு 'சவீதா அம்பேத்கர்" என்றும், 'மாய்" என்றும் அவர் அழைக்கப்பட்டார்.


மனைவியின் நிறைவேறாத ஆசை :


🌟 அம்பேத்கரின் முதல் மனைவி ரமா பாய் கடவுள் பக்தி மிகுந்தவர். பந்தார்பூர் என்ற ஊரிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டுமென்பது அவரது ஆசை. அம்பேத்கரிடம் அந்த ஆசையை தெரிவித்தார். அந்த கோவிலில் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி இல்லாததால் அங்கே போய் அவமானப்பட வேண்டாம் என்று அம்பேத்கர் நினைத்தார்.


🌟 'கடவுள் சிலையை வணங்குவதை மறந்துவிடு. நம்முடைய ஒழுக்கமான வாழ்வின் மூலம் அடித்தட்டு மக்களுக்கு சுயநலமின்றி பணிபுரிவதன் வழியாக என்றாவது ஒருநாள் நாம் வணங்கக்கூடிய கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்குவோம்" என்று மனைவியை அமைதிப்படுத்தினார். கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறாமலேயே ரமாபாய் 1935 மே 27ஆம் தேதி மறைந்தார்.


ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்கு :


🌟 அம்பேத்கர் 1921ஆம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.


🌟 கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).


🌟 1921-பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)


🌟 1923-ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்


🌟 மற்றும் கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.


மதமாற்றம் :


🌟 1950ஆம் ஆண்டிற்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கில் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955ஆம் ஆண்டு 'பாரதீய பௌத்த மகாசபாவை" தோற்றுவித்தார். 1956ல் 'புத்தரும் அவரின் தம்மாவும்" என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.


அம்பேத்கரின் மறைவு :


🌟 1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும், கண்பார்வை குறைந்ததாலும் 1954ஆம் ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை படுக்கையிலேயே இருந்தார். 1955ஆம் ஆண்டில் இவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி டில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது உயிர் பிரிந்தது.


🌟 பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் 'தாதர் சௌபதி" கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.


தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து...


தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய்...


சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை...


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

அம்பேத்கரின் நினைவுச்சின்னங்கள் :


அம்பேத்கர் தேசிய நினைவகம் :


🌟 அம்பேத்கர் தன் வாழ்வின் இறுதி காலத்தை கழித்த அவரின் வீடு, அம்பேத்கர் தேசிய நினைவகமாக புது டில்லியில், அலிப்பூர் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள நினைவகத்தின் இருபக்கமும் அகன்ற எல்இடி திரையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், அரிய படங்கள், காணொளி மற்றும் ஒலிப்பதிவுகள், நிகழ்ச்சிகளின் தொகுப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இராஜ கிருஹா :


🌟 அம்பேத்கர் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம், மும்பை தாதர் பகுதியில் 'இராஜ கிருஹா" என்கிற இல்லத்தை தானே நிர்மாணித்து, உருவாக்கி கட்டிய வீடு வரலாற்று சிறப்பு வாய்ந்த வீடாகும். மூன்று தளம் கொண்ட இந்த வீடு அம்பேத்கரின் நினைவு இல்லமாகவும், முதல் தளம் அருங்காட்சியகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


🌟 அம்பேத்கர் இராஜ கிருஹாவில் தனது காலத்தில் 50,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்தார். இது உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது.


அம்பேத்கர் நினைவகம், லண்டன் :


🌟 அம்பேத்கர் வடமேற்கு லண்டனின் காம்டென் நகரில் கிங் ஹென்றி சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த வீட்டை மகாராஷ்டிர அரசு சுமார் ரூ.30 கோடிக்கு வாங்கியது. பின்னர் அந்த வீடு அம்பேத்கரின் நினைவகம் மற்றும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதில் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


அம்பேத்கர் நினைவு பூங்கா :


🌟 லக்னோவில் அமைந்துள்ள அம்பேத்கர் நினைவு பூங்கா மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்க பெற்ற பெரிய பூங்கா ஆகும். இங்கு அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை படங்கள் சிற்பங்களாக உள்ளன.


அம்பேத்கர் ஜெயந்தி :


🌟 அம்பேத்கரின் பிறந்த நாளானது அம்பேத்கர் ஜெயந்தி அல்லது பீம் ஜெயந்தி என பிரபலமான வருடாந்திர விழாவாகவும், பொது விடுமுறை நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.


தபால் தலை :


🌟 மத்திய அரசு டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் தினத்தில் தபால் தலையை வெளியிட்டது.


அம்பேத்கரின் பொன்மொழிகள் :


🌟 ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல. ஆடுகளாக இருக்க வேண்டாம்.


🌟 வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.


🌟 நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.


🌟 சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றை கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.


🌟 உங்களின் வறுமை உடன்பிறந்தது, தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்று எண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழிதோண்டி புதையுங்கள்.


🌟 ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.


🌟 சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள். குறிக்கோளை எட்டும்வரை தீ போல் சுடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.


🌟 சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.


🌟 முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.


🌟 ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதில் வாழும் பெண்கள் அடைந்த வளர்ச்சியை கொண்டு அளவிடலாம்.


🌟 இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வை தராத வரை, சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை.


🌟 நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை.


🌟 முடிவான குறிக்கோளை தெரிந்து கொள்வதைவிட பொருத்தமான வழிமுறைகளை தெரிந்து கொள்வதே மிக முக்கியம்.


🌟 உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து தான் முன்னேற்றமோ, வீழ்ச்சியோ ஏற்படுகிறது.


🌟 இருளை உணராதவர்கள் ஒளியைத் தேடமாட்டார்கள்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)