நாமக்கல் கவிஞர்..!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


நாமக்கல் கவிஞர்..!!

👉 இவர் முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர்...


👉 சிறந்த விடுதலை போராட்ட வீரர்...


👉 தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்...


👉 சாகித்திய அகாடமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்...


👉 'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்கிற வீரநடைக்கு வித்திட்டவர்...


👉 'பத்ம பூஷண்" விருது பெற்றவர்...


👉 கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமுதாய சீர்திருத்த செம்மல் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்...


👉 தேசபக்தி பாடல்களைப் பாடி தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்...


👉 தேசிய போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர்...


👉 மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர்...


👉 ராஜாஜியின் மனதிற்கு உகந்த தோழர்...


👉 இருமுறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தவர்...


👉 தேசிய எழுச்சியோடு நடைபோட்டு விடுதலை வரலாற்றில் இடம் பெற்றவர்...


👉 ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தவர்...


👉 உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் வழிநடை பாடலாக


கத்தியின்றி ரத்தமின்றி


யுத்தமொன்று வருகுது


சத்தியத்தின் நித்தியத்தை


நம்பும் யாரும் சேருவீர்

எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர் 


அவர்தான்👇👇


நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் 


வெ.இராமலிங்கம் பிள்ளை

👉 தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை. இவரை கண்டு வியந்த இராஜாஜி 'திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது, காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக வளர்ந்தது" என்றார்.


👉 திருக்குறளின் உரைகள் அதன் கருத்தோடு ஒன்றிப்போக முடியாததால் திருக்குறளுக்கு புதிதாக உரை எழுதினார். தற்போது அதிகமாக விற்பனையாகும் திருக்குறள் உரைகளில் இராமலிங்கனாரின் உரையே முதன்மைப் பெற்றுத் திகழ்கிறது...!!


👉 நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமன்-அம்மணியம்மாள் தம்பதியருக்கு ஆறு பெண் குழந்தைகளுக்கு பிறகு எட்டாவது மகனாக பிறந்தார். (4வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.)


👉 இராமலிங்கம் பிள்ளை அவர்களின் தாயார் அம்மணி அம்மாள் இதிகாச புராணக்கதைகளை எல்லாம் தன் மகனுக்கு சொல்லி, அறம் தவறாமல் வாழ வேண்டும் என்றும், பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பது கூடாது என்றும் திரும்ப திரும்ப சொல்லி மகனை சான்றோனாக வளர்த்தார்.


பெயர் காரணம் :


👉 இராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை சென்று வந்த பிராமணர் வாக்குப்படி, தமக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று வெங்கட்ராமபிள்ளை மிகவும் நம்பியதால், இராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் அக்கடவுளின் திருப்பெயர்களுள் ஒன்றான இராமலிங்கம் என்ற பெயரை தம் குழந்தைக்கு இட்டார்.


👉 கவிஞருக்கு இராமலிங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டதற்கு இதுவே காரணமாகும். இதனைக் கவிஞர் எழுதிய 'என் கவிதை" என்ற நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.


👉 அந்த பிராமணர் உரைத்ததை போன்று 'எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்" என்ற கூற்றும் கவிஞர் வாழ்வில் மெய்யாகிவிட்டது. தமிழ்நாட்டில் கவிதையுலகில் தனிப்பெரும் மன்னராக திகழ்ந்து கவியரசராக, அரசவை கவிஞராக வீற்றிருந்து, மக்களின் உள்ளங்களையெல்லாம் கவிதையால் ஆண்டார்.


கல்வி :


👉 இராமலிங்கனார் தொடக்கக்கல்வியை பழனி வாத்தியார் என்பவரிடம் கற்றார். பின்னர் நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியில் சேர்ந்தார். இவரின் தந்தையார் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்த நிலையில், கோவைக்கு இடம் மாற்றலானார். பின் இராமலிங்கனார் அங்குள்ள பள்ளி ஒன்றில் சேர்ந்து உயர்கல்வியை தொடர்ந்தார்.


ஓவிய புலமை :


👉 நாமக்கல் கவிஞர் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அப்பொழுது நம்மாழ்வார் என்ற ஆசிரியர் ஒரு கணக்கு கொடுத்திருந்தார். எல்லா மாணவர்களும் கணக்கு போட்டு கொண்டிருந்தனர்.


👉 ஆனால், இராமலிங்கம் பிள்ளை மட்டும் அன்றைய நாடக விளம்பரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த படத்தை பார்த்து, தம் பலகையில் வரைந்து கொண்டிருந்தார். அப்போது ஆசிரியர் கணக்கை காட்ட சொன்னார். இராமலிங்கம் ஓவியத்தை காட்ட, அவருக்கு பளீர் என அடி விழுந்தது. கவிஞர் கலைத்திறனை வெளிப்படுத்திய போதெல்லாம் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த மறுத்தனர். மாறாக, பிரம்படி கொடுத்து தண்டனை வழங்கினர். இது உயர்நிலை பள்ளியிலும் தொடர்ந்தது.


👉 நாமக்கல் கவிஞர், தனது பத்தொன்பது வயதில் மெட்ரிக்குலே‌ஷன் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் திருச்சி பி‌ஷப்ஹீபர் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஓவியக்கலையில் நாட்டம் கொண்ட நாமக்கல் கவிஞர் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.


இராமலிங்கம் பிள்ளைக்கு கிடைத்த பாராட்டும், ஊக்கமும் :


👉 இராமலிங்கம் பிள்ளை கல்லூரியில் அடியெடுத்து வைத்த போதுதான் அவர் வரைந்த ஓவியங்களுக்கு மரியாதை ஏற்பட்டது. கல்லூரியில் ஆங்கிலக் கட்டுரை ஒன்று எழுத எல்லியட் என்ற கல்லூரி முதல்வர் பணித்தார். அதை எழுதி முடித்துவிட்டு, இராமலிங்கம் பிள்ளை முதல்வர் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருப்பதை அப்படியே வரைந்தார். இதைப் பார்த்த முதல்வர் எல்லியட் மகிழ்ச்சி அடைந்து உடனடியாக தம் சட்டை பையிலிருந்த தங்கக்குழாயும், மூடியும் உள்ள பென்சிலை பரிசாக தந்து பாராட்டினார்.


👉 கட்டுரை எழுதிய திறனையும், ஓவியம் வரைந்த திறனையும் பாராட்டிய கல்லூரி முதல்வர், பைபிளையும், கட்டுரை எழுதுவது எப்படி? என்ற ஒரு நூலையும் பரிசாக தந்து, ஓவியக்கலை பயிற்சியை விடாமல் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார்.


👉 தம் மகன் படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என தந்தை ஆசைப்பட்டார். ஆனால், அத்துறையில் சேர இராமலிங்கம் பிள்ளைக்கு விருப்பமில்லை. தந்தையாரின் சிபாரிசு பெயரில் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அவர் ஓவியம் வரைவதில் நாட்டமுடையவராக விளங்கிய காரணத்தால் அங்கு பணியாற்ற முடியாமல் வெளியேறினார்.


👉 பின்னர் அவருக்கு நாமக்கல் தொடக்க நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அப்போது இராமலிங்கம் பிள்ளை பிரித்தானியரை எதிர்த்து வந்த திலகரை ஆதரித்து பேசி வந்தார். இது அங்குள்ள தலைமையாசிரியருக்கு பிடிக்காமல் போகவே அங்கிருந்தும் விலகினார்.


👉 இராமலிங்கம் பிள்ளையின் சிந்தனை முழுவதும் ஓவியத்தையே நாடி நின்றதால், இவரின் நண்பரான ஸ்ரீநாகராஜ ஐயங்கார் என்பவர் ஓவியத்திறமையை தொழிலாக மாற்றினால் புகழ்பெற்று முன்னேறிவிடலாம் என ஆலோசனை கூறினார்.


இராமலிங்கம் பிள்ளை முதல் முதலில் வரைந்த படம் :


👉 1910ல் முதன் முதலாக இராமகிருஷ்ண பரமஹம்சர் படத்தை பெரியதாக வரைந்து இராமலிங்கம் பிள்ளை பாராட்டை பெற்றார். அதனை தொடர்ந்து பொது இடங்களில் வைப்பதற்கு விவேகானந்தர், திலகர், அரவிந்த் கோஷ், லஜபதிராய் ஆகியோரின் படங்களையும் வரைந்து தந்ததால் இவரின் புகழ் தமிழ்நாடெங்கும் பரவியது. குறிப்பாக, செட்டிநாட்டில் இவர் வரையும் ஓவியங்களுக்கு தனிமரியாதை ஏற்பட்டது.


👉 1912ல் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் நாயக்கர் அவர்களின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு சென்றார். அங்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை வரைந்து பரிசாக அளித்தார். அதைக் கண்டு மகிழ்ந்த மன்னர் குடும்பத்தினர் தங்கப்பதக்கம் அணிவித்து அவரை சிறப்பித்தனர்.


நாமக்கல் கவிஞர் வரைந்த ஓவியத்திற்கு கிடைத்த பரிசு :


👉 கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் ஆசான் லட்சுமண ஐயர் மறைந்த பின் அவரது உருவத்தை ஓவியமாக தீட்டினார். அந்த ஓவியம் நாமக்கல் நகர மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது.


👉 ஒருமுறை நாமக்கல்லிற்கு வந்த சிம்சன் என்ற ஆங்கிலேயர் அந்த ஓவியத்தை பார்த்து வியந்தார். புகைப்படத்தை போன்று இருந்த அந்த ஓவியத்தை தீட்டியவர் குறித்து விசாரித்து இராமலிங்கம் பிள்ளையை சந்தித்தார் சிம்சன். 'இறந்து போன தன் ஒரே குழந்தையின் படத்தை கவிஞரிடம் தந்து அதை ஓவியமாக தீட்டித்தர வேண்டும் என்றும், அதற்கு ஐம்பது ரூபாய் சன்மானம் தருவதாகவும், ஓவியம் தனக்கு பிடித்தால் மேற்கொண்டு பணம் அதிகமாக தருவதாகவும்" கூறினார்.


👉 அதை ஏற்றுக்கொண்ட கவிஞர் குழந்தையின் ஓவியத்தை வரைந்து சிம்சனிடம் தந்தார். அப்படத்தை வாங்கி ஒரு மேஜை மேல் வைத்து சற்று விலகி நின்று பல கோணங்களில் அந்த ஓவியத்தை பார்த்தார் சிம்சன். நெடுநேரம் இப்படி பார்த்து 'ஓவியரே! நீர் வெற்றி பெற்றுவிட்டீர். என் குழந்தையின் படம் உயிர் துடிப்போடு இருக்கிறது. இதை என் மனைவி பார்த்தால் அழுதுவிடுவாள்" என்று கவிஞரை பாராட்டி ஒரு கட்டு நோட்டை எடுத்து கவிஞரிடம் கொடுத்தார்.


👉 நோட்டுக்களை எண்ணி பார்த்த கவிஞர் 675 ரூபாய் இருப்பதை பார்த்து வியந்து இவ்வளவு அதிகமாக கொடுத்திருக்கிறாரே? என சந்தேகித்து அந்த நோட்டுக்களை அப்படியே மேஜை மேல் வைத்தார்.


👉 'ஏன் வேண்டாமா?" என்று கேட்டார் சிம்சன்.


👉 'இல்லை. மிகவும் அதிகமாக இருக்கிறது" என்றார் கவிஞர்.


👉 சிம்சன் நோட்டுக்களை எண்ணி பார்த்து 'ஒரு நண்பருக்கு கொடுக்க வைத்திருந்த 500 ரூபாய் தாள் கூடுதலாக சேர்ந்துவிட்டது. உங்களுக்கு 175 ரூபாய் கொடுக்க நினைத்தேன். ஆனால், வேறொருவருடைய பணமும் இதில் சேர்ந்தது தெய்வசித்தம். உங்கள் அற்புத ஓவியத்துக்கு இது தகும். இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றார் சிம்சன்.


ஓவியத்தொழிலை விட்டு வெளியேறுதல் :


👉 இராமலிங்கம் பிள்ளை ஓவியத்தொழிலில் நல்ல வருமானம் ஈட்டிய போதும், அவரது மனம் இந்திய விடுதலைக்கான அரசியலை நோக்கியே பயணித்தது. அதோடு கவி புனையும் ஆற்றலும் பெற்றதால் ஓவியத்தொழிலை விட்டு வெளியேறும் நிலை உருவானது.


👉 சிறுவயதில், தெருக்கூத்துகளில் பாடப்படும் பாட்டுக்களை கேட்டே கவிபாடும் திறனை வளர்த்து வந்தவர் இராமலிங்கம் பிள்ளை. அவர் தொடக்கத்தில் புகழ்பெற்ற நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா நாடகக்குழுவிற்கும், ஒளவை சண்முகம் சிறுவர் நாடகக்குழுவிற்கும் ஏராளமான பாடல்களை எழுதி வந்தார். அப்போது மகாகவி பாரதியாரின் பாடல்கள் மீது தீராக் காதல் பிறந்தது.


நாமக்கல் கவிஞர், பாரதியார் சந்திப்பு :


👉 1920ல் பாரதியாரின் குடும்ப நண்பர் வேங்கட கிருஷ்ண ஐயரின் தொடர்பு நாமக்கல் கவிஞருக்கு கிடைத்தது. சுப்ரமணிய பாரதியார் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பியதும் காரைக்குடிக்கு அருகில் உள்ள கானாடு காத்தான் என்னும் ஊருக்கு வந்திருந்தார். அவரை பார்க்க ஆசைப்பட்டு நாமக்கல் கவிஞர் அங்கு சென்றிருந்தார். நாமக்கல் கவிஞரை பாரதியாரிடம் 'இவர் நல்ல ஓவியர்" என்று அறிமுகப்படுத்தினார்கள். 'பிள்ளைவாள்! நீர் நம்மை ஓவியம் தீட்டும். யாம் உம்மை பற்றி காவியம் தீட்டுவோம்" என்று பாரதியார் கூறினாராம்.


👉 நாமக்கல் கவிஞர் பாடல்கள் இயற்றுவதிலும் ஈடுபாடு உடையவர் என்றதும் 'ஏதாவது நீர் இயற்றிய பாடலை கூறும்" என்று பாரதியார் கேட்டுக்கொண்டாராம். ஆனால், மகாகவியின் முன் நமது பாடலா? என்று நாமக்கல் கவிஞர் முதலில் தயங்கினார்.


👉 'கூச்சம் எதற்கு? பாடும் என்று பாரதியார் தூண்டியபோதும் எந்த பாடலை பாடுவது என தயங்கிய நாமக்கல் கவிஞர், கிட்டப்பா நாடக குழுவினருக்கு தாம் எழுதிக் கொடுத்த பாடல் ஒன்றை கூறியுள்ளார். 'லங்காதகனம்" என்னும் நாடகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களுள் ஒன்று ராமருடைய சோகத்தை கூறுவதாக அமைந்திருந்தது.


'தம்மரசைப் பிறர் ஆளவிட்டுவிட்டுத்

தான் வணங்கிக் கைகட்டிநின்றபேரும்"

👉 என்று பாடலின் முதல் அடியை சொன்னவுடனே எழுந்து நின்று கைத்தட்டி 'பலே பாண்டியா! பலே! பலே!" 'பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை" என்று ஆனந்த கூத்தாடினாராம் பாரதியார்.


👉 இவ்வாறு பாரதியாரின் உள்ளம் கவர்ந்த நாமக்கல் கவிஞர் பாரதியாரின் வழிவந்த தேசியக்கவிஞர் என்று புகழ்பெற்றதில் வியப்பில்லை. அதன்பின் தொடர்ந்து விடுதலை உணர்வை கிளர்ந்து எழ செய்யும் பாடல்களை படைத்தார். பரிசுக்காகவோ, பாராட்டுக்காகவோ தமது கவிதை படைப்பில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை.


👉 1920களில், திலகருக்குப்பின் காந்தியின் சகாப்தம் உருவானபோது பாரதியார் உயிரோடு இல்லை. அவர் இல்லாத வெற்றிடத்தை இராமலிங்கம் பிள்ளை நிரப்பிவிட்டதாக பலரும் பேச தொடங்கினார்கள். அதற்கு முன்னோட்ட நிகழ்வாக காந்தி தொடங்கிய உப்பு சத்தியாக்கிரக போராட்ட நிகழ்வு அமைந்தது.


👉 1930ல் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திற்கு புறப்பட்ட சத்தியாக்கிரக போராளிகளின் ஊர்வலத்தில் இராமலிங்கம் பிள்ளை, தொண்டர்கள் பாடுவதற்கென்று,


'கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும் யாரும் சேருவீர்"

👉 என்று பாடல் எழுதி தந்தார். அந்த பாடலானது தொண்டர்களிடையே வேத மந்திர பாடலாக உருவெடுத்தது. அதைக்கண்டு வியந்த ராஜாஜி 'திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது, காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக வளர்ந்தது" என்றார்.


நாமக்கல் கவிஞர் திருக்குறளுக்கு உரை எழுதிய நிகழ்வு :


👉 சத்தியாக்கிரக ஊர்வலத்தில் இராமலிங்கம் பிள்ளை பாடிய 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" பாடலை பாராட்டி கவிஞருக்கு ராஜாஜி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் 'இந்த சமயத்தில் சுப்பிரமணிய பாரதியார் இல்லையே! என்று நான் எண்ணினேன். அந்த குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.


👉 சத்தியாக்கிரக போர் முழக்க பாடலாக விளங்கிய இந்த பாடலை ஒரு வார பத்திரிக்கை லட்சக்கணக்கில் அச்சிட்டு தமிழ்நாடெங்கும் பரப்பியது. காந்திய திட்டங்களான தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, கதர் அபிவிருத்தி, கைத்தொழில் வளர்ச்சி, தாய்மொழி கற்றல் ஆகியவை பற்றி அவர் எழுதிய பாடல்கள் மேடைதோறும் ஒலிக்க தொடங்கின.


👉 தமது பாடல்களாலும், நூல்களாலும், சொற்பொழிவுகளின் மூலமாகவும், நாட்டுப்பற்றை ஊட்டும் பணியில் அயராது ஈடுபட்டார் இராமலிங்கம் பிள்ளை. சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். அங்குதான் தமிழியச் சிந்தனைகளும் அவரின்பால் ஊற்றெடுத்து பீறிட்டன. அப்போது சிறை கைதிகளுக்கு திருக்குறள் பாடம் நடத்த தவறுவதில்லை.


👉 மதுரை சிறையிலிருந்தபோது திருக்குறளை பற்றிய வௌ;வேறு உரைகளை வாங்கி படித்தார். அதில் பரிமேலழகர் உரையும் ஒன்று. அந்த கருத்துக்கள் திருக்குறளோடு ஒன்றிப்போக முடியாததால் புதியதாக திருக்குறள் உரை எழுதினார். தற்போது அதிகமாக விற்பனையாகும் திருக்குறள் உரைகளில் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரையே முதன்மை பெற்று திகழ்கிறது.


👉 இராமலிங்கம் பிள்ளை, எளிய சொற்களால் கவிதை பாடி, தேசிய, காந்திய கொள்கைகளை பரப்பினார். தேசபக்தி பாடல்கள் பாடியும், ஆவேச உரைகள் நிகழ்த்தியும் இளைஞர்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான கவிதைகள் எழுதி குவித்தார். 'தேசியக் கவி" என்று போற்றப்பட்டார்.


திருமணம் :


👉 இராமலிங்கம் பிள்ளை, தனது அத்தை மகள் முத்தம்மாளை 1909ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பதினைந்து ஆண்டுகால இல்லற வாழ்வில் குழந்தை செல்வம் இல்லை என்பதால் அவரது மனைவி உட்பட அனைவரும் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.


👉 ஆனால், கவிஞரோ 'ஒருதாரம் இருக்க மறுதாரம் கூடாது" என மறுத்துவிட்டார். திடீரென அவரது முதல் மனைவி முத்தம்மாள் 1924ஆம் ஆண்டு காலமானார். அதனை தொடர்ந்து, குடும்பத்தாரின் வற்புறுத்தலால் முத்தம்மாளின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.


👉 இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். தனது மூத்த மகனுக்கு தம் முதல் மனைவியான முத்தம்மாளின் நினைவாக 'முத்து" என்று பெயரிட்டு அழைத்து வந்தார் இராமலிங்கம் பிள்ளை.


நாமக்கல் கவிஞர் அறிஞர் அண்ணாவை சந்தித்த நிகழ்வு :


👉 சுதந்திரத்திற்கு பின் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவிலில் காந்தியடிகளின் நினைவாக நினைவுத்தூண் ஒன்று நிறுவி அதனை அப்போதைய தமிழக முதலமைச்சரை கொண்டு திறக்க செய்தார். அன்று மாலை நிகழ்ச்சிக்கு நாமக்கல் கவிஞரை தலைமை வகிக்க செய்து, அவரது தலைமையில் பேரறிஞர் அண்ணாவை சொற்பொழிவு ஆற்ற செய்தார்.


👉 அண்ணாவும், நாமக்கல் கவிஞரும் அன்றுதான் நேருக்கு நேர் சந்தித்து பேசினர். அப்போது 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று அண்ணா நாமக்கல் கவிஞருக்கு புகழாரம் சூட்டினார். அவரது எழுத்தாற்றலையும், கவிதை சிறப்பையும் மனமார பாராட்டி மகிழ்ந்தார்.


👉 1949ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு 'அரசவைக் கவிஞர்" எனும் பதவியை வழங்கி சிறப்பித்தது. 1956ஆம் ஆண்டு 'சாகித்ய அகாடமி"யின் நிர்வாகக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றார். சாகித்ய அகாடமி என்னும் அமைப்பு இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனமாகும்.


👉 இந்திய மொழிகளின் இலக்கியப் படைப்பாளிகளின் சார்பாளர்கள் கலந்து செயற்படும் இந்த அமைப்புக்கு ஜவஹர்லால் நேரு தலைவராக அப்போது விளங்கினார். முதல் கூட்டத்தில் நாமக்கல் கவிஞரை நேருவுக்கு அறிமுகப்படுத்தியபோது டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தமது அறிமுக உரையில்


👉 'நாமக்கல் கவிஞர் ஓர் அரிய கலைஞர்...


👉 தலைசிறந்த தேசபக்தர்...


👉 தேசத்திற்காக தியாகம் பல செய்தவர்...


👉 சிறைவாசம் புரிந்தவர்...


👉 ஒழுக்கத்தில் உயர்ந்தவர்...


👉 'ஆடு ராட்டே சுழன்று ஆடு ராட்டே!" என்று பாடித் தமிழ்நாட்டையே சுழன்று ஆடச் செய்தவர்" என்று பாராட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.


👉 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1971ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு 'பத்மபூஷண்" விருது வழங்கி சிறப்பித்தது.


👉 இந்திய விடுதலையை முதன்மை நோக்கமாக அவர் கொண்டிருந்த போதிலும் அதில், 'தமிழ்நாடு தமிழருக்கே" உரிமை படைத்தது என்ற பார்வை அவருக்கு இருந்தது. இதனை கீழ்க்கண்ட பாடல் வரியானது தெளிவுப்படுத்தும்.


'முத்தமிழ் நாடென்றன் முன்னையர் நாடு

முற்றிலும் சொந்தம் எனக்கெனப்பாடு"

நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகள் :


தமிழுணர்வு :


👉 பயிர், செடி, கொடி, மரம், மனித உயிர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றிற்கு அடிப்படை ஆதாரமாக எப்படி நீர் இருக்கின்றதோ, அதுபோல உயிரை இயக்க மொழி அவசியமாகின்றது. அந்த சக்தியை தருவது தாய்மொழி. தாய்மொழியாம் தமிழ்மொழியை அமிழ்தம் என்று பாவேந்தர் பாடியதைப்போல (தமிழுக்கும் அமுதென்று பேர்) நாமக்கல் கவிஞரும்,


தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று

வருகின்ற அதுவந்து சேரும்

👉 என்று தமிழ்மொழியின் பெருமையை உணர்ந்து பாடுகின்றார்.


கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருந்திடல் உனக்கே சரியாமோ?

👉 என்று கைத்தொழிலின் பெருமையை தான் பாடிய பாடலில் கூறியுள்ளார்.


👉 1954-ல் இராமலிங்கனார் எழுதிய 'மலைக்கள்ளன்" புதினக்கதை திரைப்படமாக வெளிவந்தது. அந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரும் சாதனை படைத்ததோடு, குடியரசு தலைவர் விருதும் பெற்றது. அத்திரைப்படத்தில்,


'தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவற்கொரு குணமுண்டு;

அமிழ்தம் அவனது மொழியாகும்

அன்பே அவனுடை வழியாகும்"

👉 என்ற பாடலை உச்சரிக்காத உதடுகளே இல்லையென்று கூறலாம்.


👉 அதேபோல், 1960-ல் வெளிவந்த 'கடவுளின் குழந்தை" திரைப்படத்தில்,


'தமிழன் என்று சொல்லடா!

தலை நிமிர்ந்து நில்லடா!,

👉 பாடலும்,


'இளந்தமிழா! உன்னைக் காண

இன்பம் பெருகுது!

இதுவரைக்கும் எனக்கிருந்த

துன்பம் குறையுது"

👉 பாடலும், தமிழின எழுச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.


👉 இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை. இவர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் பணியாற்றி வந்தவர். இவர்தான் 'தமிழ்ப்பண்ணை" புத்தக நிலையம் அமைத்து இராமலிங்கனாரின் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நாமக்கல் கவிஞரின் படைப்புகள் பலப்பல.


📘 இசைப் புதினங்கள்


📘 கட்டுரைத் தொகுதிகள்


📘 தன் வரலாறு 


📘 புதினங்கள்


📘 இலக்கியத் திறனாய்வு நூல்கள்


📘 கவிதைத் தொகுப்புகள்


📘 சிறு காப்பியங்கள் 


📘 மொழிப்பெயர்ப்புகள் எனப் பட்டியல் நீள்கிறது...!


கவிதை :


📘 தேசபக்திப் பாடல்கள்


📘 பிரார்த்தனை 


📘 தமிழன் இதயம்


📘 காந்தி அஞ்சலி


📘 சங்கொலி 


📘 கவிதாஞ்சலி 


📘 மலர்ந்த பூக்கள் 


📘 தமிழ்மணம் 


📘 தமிழ்த்தேன் 


📘 நாமக்கல் கவிஞர் பாடல்கள்


📘 அவனும் அவளும் 


📘 இலக்கிய இன்பம்


உரைநடைக் கட்டுரைகள் :


📘 தமிழ்மொழியும் தமிழரசும்


📘 இசைத்தமிழ்


📘 கவிஞன் குரல்


📘 ஆரியராவது திராவிடராவது


📘 பார்ப்பனச் சூழ்ச்சியா


📘 திருக்குறள் - உரை


📘 கம்பன் கவிதை இன்பக் குவியல் 


📘 திருக்குறளும் பரிமேலழகரும்


📘 திருவள்ளுவர் திடுக்கிடுவார்


📘 கம்பனும் வால்மீகியும்


புதினம் :


📘 மலைக்கள்ளன்


📘 தாமரைக்கண்ணி


📘 கற்பகவல்லி


📘 மரகதவல்லி


📘 காதல் திருமணம்


📘 மாமன் மகள்


📘 காணாமல் போன கல்யாணப் பெண் 


📘 என்கதை (சுயசரிதம்)


📘 தாயார் கொடுத்த தனம்


📘 தேமதுரத்தமிழோசை


மொழிப்பெயர்ப்பு நூல் :


📘 காந்திய அரசியல்


இதழ் :


📘 லோகமித்திரன்


நாமக்கல் கவிஞரின் மறைவு :


👉 நாமக்கல் கவிஞர், தமது பாடல்களாலும், நூல்களாலும், சொற்பொழிவுகளின் மூலமாகவும் நாட்டுப்பற்றை ஊட்டும் பணியில் அயராது ஈடுபட்டார்.


மறைவு :


👉 தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் கவிஞர் 1972ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24ஆம் தேதி, தனது 84வது வயதில் தான் பற்றுக் கொண்டிருந்த தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் மீளாத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்தார்.


நினைவாலயம் :


👉 தமிழ்நாட்டு அரசின் தலைமை செயலக பத்து மாடிக்கட்டிடத்திற்கு 'நாமக்கல் கவிஞர் மாளிகை" எனப் பெயர் சூட்டி இவரைப் பெருமைப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.


👉 நாமக்கலில் கவிஞரின் நினைவு இல்லம் அமைந்துள்ளது. இங்கு, கிளை நூலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நினைவு நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு 2000ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்பின், 2006ஆம் ஆண்டு கவிஞர் நினைவு இல்லம், கிளை நூலகமாக மாற்றப்பட்டது. நினைவு இல்லத்திற்கு வருவோர், பல்வேறு நூல்களை கற்றறிந்து செல்கின்றனர்.


👉 இங்கு கதை, கவிதை, நாவல் நூல்கள் மட்டுமின்றி, இலக்கியம், பொருளாதாரம், ஆன்மிகம், மருத்துவம், மாணவர்களின் கல்விக்கான பொது அறிவு நூல்கள், போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான நூல்களும் இடம் பெற்றுள்ளன.


👉 தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


👉 சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)