நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
புரட்சிக்கவிஞர்..!!
👉 இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய் திகழ்ந்தவர் இவர்...!!
👉 தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரை கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர் என பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்து சென்றவர்...!!
👉 வார்த்தைகளை வாளாக வார்த்தவர்...
👉 மொழியை தேனாக வடித்தவர்...
👉 எதிரிகளை கவிதையால் அடித்தவர்...
👉 கம்பீரத்தால் காலங்கள் கடந்தவர்...
👉 தமிழ்மொழி மீது பற்று கொண்டவரான இவர், தனது மானசீக குருவின் பெயரோடு தனது பெயரை இணைத்துக் கொண்டவர்.
👉 தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாக கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர்...
👉 'வழிப்போக்கன்"
👉 'சுயமரியாதைக்காரன்"
👉 'கிண்டற்காரன்"
👉 'உண்மை உரைப்போன்" போன்ற பல புனைப்பெயர்களை கொண்டவர்...!!
👉 'தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்!
👉 தனது படைப்புகளுக்காக 'சாகித்ய அகாடமி விருது" பெற்றவர்...!!
அவர்தான் பாரதியின் தாசன் என்று தன்னை பிரகடனப்படுத்தி கொண்ட
👇👇
'புரட்சிக்கவி" என்று அழைக்கப்படும்
பாவேந்தர் 'பாராதிதாசன்"
👉 தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
👉 பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால் புரட்சிக் கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவரது தலைசிறந்த படைப்புகள் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
👉 புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் புதுவையில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.
👉 பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். இவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து 'கனகசுப்புரத்தினம்" என்று அழைக்கப்பட்டார்.
உடன்பிறந்தவர்கள் :
👉 சகோதரர் - சுப்பராயன்
👉 சகோதரிகள் - சிவகாம சுந்தரி மற்றும் இராசாம்பாள்
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :
👉 பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராக திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியில் சேர்ந்தார். பாரதிதாசன் அவர்களுக்கு இளம் பருவத்திலேயே கவிதை படைக்கும் ஆற்றல் இருந்தது. அதனோடு முரட்டுத்தனமும், பிடிவாதமும் இருந்தன.
👉 அவர் தனது தொடக்கக்கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி ஐயா என்ற புகழ்பெற்ற திண்ணைப்பள்ளி ஆசிரியரிடம் பயின்றார். திருப்புளிசாமி ஐயா பாரதிதாசனுக்கு எண்ணும், எழுத்தும் கற்றுக் கொடுத்ததோடு நிற்கவில்லை. ஆண்டாளின் திருப்பாவை பாடல்களை மார்கழி மாதத்தில் பக்தியோடு கற்பித்தார். பள்ளிக்கூட நாடகங்களை நடத்தி அவற்றில் பாரதிதாசனாரை பங்கேற்கும்படி கூறினார்.
👉 'ஆயுதபூஜை", 'மாசிமகம்" போன்ற விழாக்களில் முழு ஈடுபாட்டோடு நாடகங்களை நடத்தி, அதில் பங்கேற்று புகழ்பெற்றார் பாரதிதாசன். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாக கற்றார்.
👉 பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமான தமிழ் மொழியில் பாடங்களை கற்றார். சிறுவயதிலேயே சுவைமிக்க அழகான பாடல்களை, எழுதும் திறனை பெற்றிருந்தார்.
👉 தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ் புலமையையும் விரிவுப்படுத்தினார்.
👉 கல்வே கல்லூரியின் தமிழாசிரியராக இருந்த சி.பங்காரு பத்தர் என்பவரிடம் பாரதிதாசன் உயர்நிலைக் கல்வி பெற்றார். வகுப்பில் தம்மோடு பயின்ற நாற்பது மாணவர்களில் முதல் மாணவராக திகழ்ந்தார் பாரதிதாசன்.
👉 பாரதிதாசன், அரசு தகுதிமிக்க மாணவருக்கு வழங்கும் படிப்பு உதவித்தொகையை பெற்றார். கல்வே கல்லூரியில் ஓரளவு பிரெஞ்சு மொழியும், பிரான்ஸ் நாட்டு வரலாற்றையும் பயின்றார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடாமுயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதாலும், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலை பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார்.
👉 மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரி படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலில் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பதவியேற்றார். இந்த தகுதியோடு நில்லாமல் பாரதிதாசன் சிறந்த தமிழ் கல்வி பெற வேண்டும் என்று விரும்பிய அவருடைய தந்தையார் அவரை சாரம் மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப்பிள்ளை என்ற தமிழாசிரியரிடம் கல்வி பயில அனுப்பினார். இக்கல்வியே பாரதிதாசனாரை தமிழ் உலகில் நிலை பெற வைத்தது.
தமிழ்க்கல்வி :
👉 சாரம் மகாவித்துவான் பெரியசாமிப்பிள்ளையிடம் பாரதிதாசன் கற்ற கல்வி அவருக்கு அழுத்தமான புலமையை தந்தது. இக்கல்வி அவருக்கு புராண இலக்கியங்களிலும் ஓர் ஆழ்ந்த பயிற்சியை தந்தது.
👉 புலமையில் சிறுவனாக இருக்கும்போதே பாரதிதாசன் அவர்களுக்கு நம்பிக்கையும், உறுதியும் அதிகமாக இருந்தது. விசுவலிங்கம் பிள்ளை என்பவர் நிரவியில் ஒரு பிரபலமானவராக இருந்தார். இவருடைய ஆசிரியர் இராமசாமிப் புலவர் ஆவார்.
👉 'ஒருநாள் விசுவலிங்கம் பிள்ளை உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது", 'அல்லை ஈது அல்லை ஈது என நான்மறைகளும்" என்று தொடங்கும் அவையடக்க செய்யுளின் 'ஆசை என் சொல்வழி கேளாய்" என்று கடைசி வரியை சொல்லி முடித்தார். அப்பாடல் வரியை மனதால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இளந்தமிழாசிரியர் பாரதிதாசன் எழுந்து நின்று 'கேளாய் என்பதில்லைங்க, கேளா என்பதுதான் பாடல்" என்றார்.
👉 'நீ சின்ன பையன், உனக்கென்ன தெரியும்? சும்மா உட்காரப்பா", என ஆணவத்தோடு மீண்டும் கூறினார் பிள்ளை.
👉 'அப்படியில்லைங்க! நீங்கள் கூறியது பிழை!" என்று அழுத்தந்திருத்தமாக பேசினார் பாரதிதாசன்.
👉 அதன்பின் திருவிளையாடற் புராண நூல் எடுத்து வரப்பட்டது. தான் பாடியதில் பிழை இருந்ததை அறிந்து குறுகி போனார்.
👉 'மூலச்செய்யுளையே பிழையாக பாடும்படி என் ஆசிரியர் என்னைப் பயிற்றுவிக்கவில்லை." என்று கூறினார் பாரதிதாசன். இதிலிருந்து கவிஞர், பெரியசாமிப்பிள்ளையிடம் கற்ற கல்வியின் பெருமை விளங்கும்.
👉 பெரியபுராணம், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க சுவாமிகளின் அருட்பா, திருக்குறள், நிகண்டுகள், சதகங்கள், அந்தாதிகள் ஆகியனவற்றில் பலப்பல பகுதிகள் அவரால் மனப்பாடம் செய்யப்பட்டிருந்தன. பதினேழு வயதிற்குள் தகுதிவாய்ந்த தமிழறிஞராக உருவானார் பாரதிதாசன்.
ஆசிரியர் பணி :
👉 பாரதிதாசன் தம் 17வது வயதில் நிரவி என்ற ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்றார். மெலிந்த உடலோடும், குறைந்த வயதோடும் புகுந்த 'இவரா ஆசிரியர்?" என்று முதலில் எண்ணியவர்கள், பின்னர் பாராட்டும் படியாக பணி செய்தார்.
👉 நிரவியில் தொடங்கிய இவரது ஆசிரியர் பணி நிலையாக ஓர் ஊரில் நீடிக்கவில்லை. அவ்வப்போது ஊர்விட்டு ஊர் மாற்றப்பட்டார். தம் பணிக்காலத்தில் அவர் பதினாறு பள்ளிக்கூடங்களை பார்த்துவிட்டார். ஏறத்தாழ இரண்டாண்டு காலம் பணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டார்.
👉 மாணவர்கள் நலம் காக்கவும், ஊர்மக்கள் நலம் பேணவும் தாம் சென்ற இடமெல்லாம் போரிட்டார். செல்வந்தர்களாகவும், அரசியல் துறையில் வலிமை படைத்தவர்களாகவும் இருந்தவர்கள் பாரதிதாசனுக்கு எதிராக ஊர்மக்களை இயங்க செய்தார்கள். இவருக்கு எந்த உதவியும் செய்யக்கூடாதென்று கட்டுப்பாடு விதித்தனர்.
மாற்றம் புகுத்திய பாரதிதாசன் :
👉 ஆசிரியராக இருந்தபோது பாரதிதாசன் பல மாற்றங்களை செய்தார். பெரும்பாலும் தொடக்க வகுப்பிற்கு பாடம் கற்பிப்பதிலேயே அவர் காலம் கழிந்தது. 'அ" என்ற எழுத்தை கற்பிக்க 'அணில்" என்ற சொல்லைத்தான் காட்ட வேண்டுமா? 'அம்மா" என்று அனைவரும் அறிந்த சொல்லை காட்டக்கூடாதா? என்று அவர் கேட்டார்.
👉 ஆங்கில ஆதிக்கம் நிலவிய காலத்தில் தமிழ் புத்தகமே புதுவையிலும் பாடமாக இருந்தது. அதில் இங்கிலாந்து மன்னர் பற்றிய பாடத்தை கற்பிக்க கவிஞர் மறுத்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று கொள்கைகளை உலகிற்கு கூறும் பிரெஞ்சு குடியரசில் இப்படியொரு பாடமா? என்று கேட்டார்.
👉 பிரெஞ்சுமொழி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை தமிழாசிரியர்களுக்கும் வழங்க வேண்டுமென்று கவிஞர் போராடினார். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து படிக்க பிறர் ஏற்படுத்தியிருந்த தடைகளை அகற்றினார்.
👉 இவர் தேர்வாளராக பணி செய்த காலத்தில், நூற்றுக்கு பத்துப்பேரே தமிழில் தேர்ச்சிபெற்ற நிலைமாறி நூற்றுக்கு தொண்ணூறு பேர் தேர்ச்சி பெற்றனர். அஞ்சாமை, பொதுநலம், கல்விப்பணியில் தளராத ஊக்கம் ஆகியன ஆசிரியரின் அரும் பண்புகளாகத் திகழ்ந்தன.
திருமண வாழ்க்கை :
👉 பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியராக பதவியேற்ற அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு,
👉 மன்னர்மன்னன் என்ற ஒரு மகனும்
👉 சரஸ்வதி, வசந்தா மற்றும்
👉 ரமணி என்ற மூன்று மகள்களும் பிறந்தனர்.
புரட்சிக்கவிஞர் பாரதியாரை சந்தித்த நிகழ்வு :
👉 நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட பாரதிதாசன், விருந்துக்கு பின் பாரதியாரின் நாட்டு பாடலை பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார் என்பது பாரதிதாசனுக்கு தெரியாது. பாரதிதாசன் பாடிய பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
👉 தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் 'எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இந்த பாடலை பாரதியார் தம் கைப்படவே எழுதி 'ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது" என்ற குறிப்பையும் இணைத்து சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார்.
👉 பாரதியாருடன் ஏற்பட்ட பழக்கம் சுப்புரத்தினத்தின் பழைய கவிதை நடையை மாற்றியது. இதனால் 'பாரதிதாசன்" என்று புனைப்பெயர் வைத்து கொள்ள செய்தது. புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் 'கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டற்காரன், பாரதிதாசன்" என பல புனைப்பெயர்களில் எழுதி வந்தார்.
👉 தேசிய இயக்கத்தில் சேர்ந்து கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் கைத்தறி துணிகளை தெருத்தெருவாக விற்பனை செய்தார். தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன், புதுவைமுரசு, துய்ப்ளேக்ஸ், முல்லை, குயில் ஆகிய இதழ்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
தேசியப் பாடல்கள் :
👉 பாரதிதாசனுக்கு இயல்பாகவே நாட்டுப்பற்று மிகுதி. 'தேசசேவகன்" என்ற இதழில் அவர் பாரதிதாசனின் மேன்மை குறித்து பல பாடல்களை எழுதியுள்ளார். காந்தியடிகளை போற்றி அக்காலத்தில் பாடல் புனைந்துள்ளார். மதுவிலக்கை வற்புறுத்தும் வகையில் 'கள்ளை அகற்றுதல் தேசக்கலை" என்று பாடியுள்ளார்.
கவிஞரும், கதரும் :
👉 கதர் இயக்கத்தில் மிக அழுத்தமான பற்றுக் கொண்டவர் பாரதிதாசன். தாம் கதர் ஆடைகளை உடுத்தியதோடு அல்லாமல் தம் மனைவி, மக்களையும் கதர் உடுத்த வைத்தார். கதர்த்துணியை தம் தோளில் சுமந்து விற்றார்.
புரட்சிக்கவிஞர் நிறுவிய முத்தமிழ் மன்றம் :
👉 பாரதிதாசன், தந்தை பெரியாரின் தீவிர தொண்டராகவும் விளங்கினார். மேலும், திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
👉 திராவிட மேடைகள் தோறும் கவிஞரின் கவிதை வரிகள் பாடப்பட்டன. அப்போதுதான் கவிஞர் மத்தியிலே உலா வந்து கொண்டிருந்த கவிஞர், மக்கள் மத்தியில் உலா வர தொடங்கினார். அதன்பின் மக்கள் கவிஞராக விளங்கினார்.
👉 செட்டிநாட்டு தமிழறிஞர்களிடம் புரட்சிக்கவிஞர் தொடர்பு கொண்டிருந்தார். அவர்களின் நிதி உதவியுடன் சென்னை சாந்தோம் சாலையில் 'முத்தமிழ் மன்றத்தை" நிறுவினார். அந்த குழுவில் கவிஞர் சுரதா சேர்ந்திருந்தார். அவர் பாரதிதாசன்மீது பற்றுக் கொண்டதனால் இராசகோபால் எனும் தன் இயற்பெயரை சுரதா (சுப்புரத்தினதாசன்) என்று மாற்றிக் கொண்டார்.
👉 பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலேயே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்கு சென்றார்.
👉 பாரதிதாசன் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். அவரது இலக்கிய நடையை கண்டு வியந்த அன்றைய திரை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக பாரதிதாசன் :
👉 பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👉 ஜூலை 29, 1946ல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
👉 பாரதிதாசனின் படைப்பான 'பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969ல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசால் 1990ல் பொது உடைமையாக்கப்பட்டன.
பாரதிதாசனின் படைப்புகள் :
👉 எண்ணற்ற படைப்புகளை பாரதிதாசன் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், மக்களின் மனதிலிருந்த மூடநம்பிக்கைகளை அழிக்கும் விதமாக பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.
👉 பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழ் இயக்கம், இசையமுது, குயில், தமிழச்சியின் கத்தி, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் ஆத்திச்சூடி, பெண்கள் விடுதலை, பிசிராந்தையார், மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது, முல்லைக் காடு, கலை மன்றம், விடுதலை வேட்கை, சேரதாண்டவம், கண்ணகி புரட்சிக் காப்பியம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள், கழைக் கூத்தியின் காதல், இளைஞர் இலக்கியம், சௌமியன், இசையமுது இரண்டு தொகுதிகள், நல்ல தீர்ப்பு, தமிழியக்கம், திருக்குறள் உரை, சத்திமுத்தப்புலவர், சிறு காப்பியம் என பல்வேறு படைப்புகளை வழங்கியுள்ளார்.
பாடல் வகை :
👉 அகவல் எண்சீர், விருத்தம், அறுசீர் விருத்தம், சிந்து, கலிவெண்பா, நொண்டிச் சிந்து முதலியவை ஆகும்.
பாடுபொருள் வகை :
👉 தமிழ்மொழி, இயற்கை, சீர்திருத்தம், இல்லறமாண்பு, பொதுவுடைமை, சமத்துவம் முதலியன ஆகும்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் :
👉 பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், 'புரட்சி கவிஞர்" என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, 'புரட்சிக்கவி" என்ற பட்டமும் வழங்கினர்.
👉 1946ல் 'அமைதி-ஊமை" என்ற நாடகத்திற்காக அவர் தங்கக்கிளி பரிசு வென்றார்.
👉 தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது.
👉 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
பாரதிதாசனின் மறைவு :
👉 தன் படைப்பாற்றல் மூலம் தமிழுக்கு பல வழிகளில் தொண்டாற்றி எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகத்திறமை கொண்ட பாரதிதாசன் அவர்கள், 1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
👉 1965ஆம் ஆண்டு புதுவையில் கடற்கரையை ஒட்டி 'பாரதிதாசன் நினைவு மண்டபம்" அமைக்கப்பட்டது.
👉 1968ஆம் ஆண்டு உலகத்தமிழ் மாநாட்டின் சார்பில் சென்னைக் கடற்கரையில் பாரதிதாசன் முழு உருவச் சிலை நிறுவப்பெற்றது.
👉 1972ஆம் ஆண்டு புதுவை பூங்காவில் புதுவை அரசின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு முழு உருவச்சிலை நிறுவப்பட்டது.
👉 1982ஆம் ஆண்டு திருச்சியில் புதியதாக தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு, பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரை தமிழக அரசு சூட்டி பெருமை சேர்த்தது.
👉 1990ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு அவர்தம் நூல்களை அரசுடைமையாக்கியது.
பாவேந்தரின் புனைப்பெயர்கள் சில :
👉 கே.எஸ்.பாரதிதாசன்
👉 புதுவை கே.எஸ்.ஆர்
👉 கே.எஸ்.ஆர்
👉 வழிப்போக்கன்
👉 அடுத்த வீட்டுக்காரன்
👉 சுயமரியாதைக்காரன்
👉 கிறுக்கன்
👉 கிண்டற்காரன்
👉 கண்டெழுதுவோன்
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP