இதில் யார் முட்டாள்?
ஒரு அடர்ந்த காட்டில் வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. மிகவும் வயதான அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாததால், சாப்பிட எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டது.
எத்தனை நாட்கள் தான் இப்படியே பசியில் இருப்பது உணவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது, சிங்கம். அச்சமயம் அந்தப் பாதையின் வழியே குள்ளநரி ஒன்று வந்தது. உடனே, சிங்கம் குள்ளநரியை உதவியாளனாக நியமிக்க முடிவு செய்தது. சிங்கம் நரியை அழைத்து 'இனிமேல் நீதான் என்னுடைய மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்" என்று கூறியது.
சிங்கம் கூறியதை நரி நம்பவில்லை. உடனே நரி 'ராஜா, உங்களுக்கு நான் மந்திரியாக இருப்பது என் அதிர்ஷ்டம்" என கூறியது. சிங்கம், இந்த காட்டுக்கே நான்தான் ராஜா. ராஜாவாக இருக்கும் நான் உணவுக்காக மற்ற விலங்குகளின் பின் சென்றால் அது நன்றாக இருக்குமா? அதனால் எனக்கு தேவையான உணவை சேகரிப்பது தான் உன்னுடைய வேலை என்று நரியிடம் கூறியது.
நரி அதைக்கேட்டு பயந்து போய் நின்றது. ராஜாவாக இருக்கும் சிங்கத்திற்கு நம்மால் எப்படி உணவு கொடுக்க முடியும்? என்று யோசித்தது. சிங்கம் நரியிடம், நீதான் அதிபுத்திசாலி ஆயிற்றே, மிகச் சுலபமாக இச்செயலை செய்து முடித்து விடுவாய் என்று நரியை புகழ்ந்து பேசியது. இதைக்கேட்டு நரியும் உடனே ஒப்புக்கொண்டது.
அதன்பின் நரி தன் வேலையை செய்யத் தொடங்கியது. சிங்கத்திற்காக உணவை தேடி செல்லும்போது ஒரு கழுதை அதன் எதிரில் வந்தது. கழுதையிடம் சென்று, நண்பனே இத்தனை நாட்களாய் எங்கே சென்றாய்? எனக் கேட்டது. கழுதை, நான் காட்டுக்குள்ளேயே தான் இருக்கிறேன். எதற்காக என்னை தேடுகிறாய் என கேட்டது.
உடனே நரி, நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம் காட்டின் ராஜா உன்னை முதல் மந்திரியாக தேர்வு செய்துள்ளார் என்றது. உடனே கழுதை பயந்தவாறே ஐயோ! எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம். அவர் என்னை ஒரு அடியில் கொன்றுவிடுவார் என்றது.
நரி கழுதையிடம், பயப்படாதே! நீ மட்டும் முதல் மந்திரியாக இருந்தால், அனைத்து விலங்குகளும் உனக்கே மரியாதை தரும். அதுமட்டுமில்லாமல் எது செய்தாலும் உன்னிடம்தான் அனுமதி கேட்க வரும் என்று கழுதையை நம்ப வைத்தது.
அப்பாவியான கழுதையும், நரியின் பேச்சை உண்மை என நம்பி சிங்கத்தைப் பார்க்க குகைக்குச் சென்றது. சிங்கம் கழுதையைப் பார்த்து வா நண்பா! இன்று முதல் நீ தான் என் முதல் மந்திரி என சிரித்துக் கொண்டே கழுதையை அழைத்தது. கழுதையும் மகிழ்ச்சியில் பணிவாக சிங்கத்தின் அருகில் சென்று நின்றது. சிங்கம் உடனே அதன் தலையில் பலமாக அடித்தது. அடுத்த நொடியே கழுதை இறந்தது.
அதன்பின் சிங்கம் கழுதையைச் சாப்பிட தொடங்கியது. உடனே நரி, மகாராஜா! என்னதான் பசியாக இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காமல் சாப்பிடக்கூடாது இல்லையா? என்று கூறியது. உடனே சிங்கமும் குளித்து வரச் சென்றது.
நரியும் பசியால் இருந்ததால் சிங்கம் வருவதற்குள் கழுதையின் தலையிலிருந்து மூளையை எடுத்து சாப்பிட்டுவிட்டது. குளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் தலை கிழிந்திருப்பதைப் பார்த்து கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. 'கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது? உள்ளே ஒன்றுமே இல்லையே?" என்று சிங்கம் கேட்டது.
உடனே நரி, சிங்கத்திடம் கழுதைக்கு மூளையே கிடையாது என்று கூறியது. சிங்கம் நரியை நம்பாமல் அது எப்படி மூளை இல்லாமல் இருக்கும்? பொய் சொல்லாதே! என்றது. 'கழுதைக்கு மூளை இருந்திருந்தால் என்னுடன் எப்படி வந்திருக்கும்?" என்று சிங்கத்திடம் நரி கேட்டது. சிங்கமும் நரி கூறியதைக் கேட்டு எதுவும் பேசாமல் அமைதியாக கழுதையை சாப்பிட்டது.
நீதி :
பிறர் கூறுவது உண்மையா? இல்லையா? என சிந்தித்துச் செயல்படுவதே சிறப்பு.