நண்பன்..!!
பாபு, ராமு என்ற இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தார்கள். பாபு ஏழை குடுப்பத்தைச் சார்ந்தவர். ராமு, பாபுவை விட கொஞ்சம் வசதி படைத்தவர். கடுமையான வெயிலால் பாலைவனத்தில் பயணம் செய்வது சிரமமாக இருந்தது.
அவர்கள் கொண்டு வந்திருந்த உணவையும், தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட முடிவு செய்தார்கள். ஒரு கட்டத்தில் பணக்காரனான ராமு, தன் உணவை பாபுவுடன் பகிர்ந்து உண்பதை விரும்பாமல் எரிச்சல் அடைந்தார்.
அதனால் தன் ஏழை நண்பன் பாபுவிற்கு பகிர்ந்து தராமல் உணவைத் தான் மட்டுமே சாப்பிடத் தொடங்கினார். தண்ணீரையும் ராமு மட்டுமே குடித்தார். இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.
பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை எடுத்து உண்பதற்காக பாபு வேகமாக ஓடினார். ஆனால் ராமு, அனைத்துப் பழங்களும் தனக்கே சொந்தமாகும் என பாபுவைத் தடுத்தார். அதற்கு பாபு, ராமுவிடம் உன்னிடம் தான் தேவையான உணவு இருக்கிறதே. பிறகு ஏன் என்னைத் தடுக்கிறாய்? என்று கேட்டார்.
அப்படியானால் நான் உணவை வைத்துக் கொண்டு உனக்கு தராமல் நான் மட்டுமே சாப்பிடுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா? என்று கூறிக்கொண்டே கோபத்தில் பாபுவின் முகத்தில் ஓங்கி அடித்தார், ராமு. ஆனால், பாபு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அதன்பின் இருவரும் பிரிந்து தனித்தனியாக நடக்கத் தொடங்கினர். பாபு வலி, வேதனையுடன் பாலைவன மணலில், 'இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு வேகமாக நடந்துச் சென்றார்.
இரண்டு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்ட ராமு ஓடிச்சென்று தண்ணீரை குடிக்க முயன்றார். உடனே, ராமுவிற்கு தன் நண்பன் பாபுவின் நினைவு வந்தது.
இத்தனை நாட்கள் பழகியும் நண்பனை ஒரு கஷ்டமான சூழ்நிலை வந்ததும் ஏமாற்றியதை நினைத்து வருந்தினார், ராமு. உடனே நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான். நீண்ட நேரம் அழைத்த பிறகு தான் ராமுவின் குரல் கேட்டு ஓடி வந்தார், பாபு.
பாபு, அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான். இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும். நீயே குடித்துக்கொள் என்று ராமு கூறினார். மிகுந்த தாகத்தில் இருந்ததால் தண்ணீர் முழுவதும் குடித்தார் பாபு. பின்பு தன் நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி கூறினார்.
பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர். பாபு அங்கிருந்த ஒரு கல்லில், 'என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்' என்று எழுதி வைத்தார்.
உடனே வானத்திலிருந்து ஒரு உருவம் தோன்றி பாபுவிடம், உன் நண்பன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய். அதே நண்பர் உதவி செய்தபோது அதை கல்லில் எழுதி வைக்கிறாய். அது ஏன்? என்று அந்த உருவம் கேட்டது.
தவறுகள் அனைத்தும் காற்றோடு போக வேண்டியவை. அதனால் அதை மணலில் எழுதி வைத்தேன். ஆனால், ஒருவர் செய்த நன்றியை எப்பொழுதும் மறக்கக்கூடாது. ஆகவே, அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்று பாபு கூறினார்.
நீதி :
ஒருவர் செய்த தவறை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஆபத்து நேரத்தில் உதவுபவர்களை மறக்கக்கூடாது.