அழகைப் பார்த்து ஏமாந்த மீன்!!
இயற்கை எழில் நிறைந்த அழகான ஊர் தான் புதூர். அங்கு ஏரி, குளங்கள் என நீர் நிலைகள் நிறைந்திருக்கும். அங்குள்ள ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. அக்குளத்தில் உள்ள மீன் குட்டிகள் எப்பொழுதும் கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும்.
அதில் ஜானி, பட்டு என்ற இரு குட்டி மீன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. ஜானி, ஏய்! பட்டு எங்கே என்னைப் பிடி பார்க்கலாம் என்றது. அதற்கு பட்டு, என்னிடமே சவால் விடுகிறாயா? இப்பொழுது பார். ஒரு நொடியில் உன்னை பிடிக்கிறேன் என்று கூறி விளையாடிக் கொண்டே கரையோரம் வந்தன.
அச்சமயம் கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து, 'ஏய் ஜானி, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான்." மேலும் அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறது. வா! ஜானி நாம் உள்ளே சென்று விடலாம் என்று கூறியதும், எல்லா மீன்களும் குளத்திற்குள் வேகமாக சென்றுவிட்டன.
வேக வேகமாக மீன்கள் உள்ளே சென்றபோது, குட்டிகளா! ஏன் இப்படி அவசரமாக ஓடி வருகிறீர்கள்? என்று அங்குள்ள ஒரு பெரிய மீன் கேட்டது. கரையோரத்தில் ஒரு காகம் இருக்கிறது. அக்காகத்தின் நிறம் மற்றும் குரலைக் கேட்டால் பயமாக இருக்கிறது. அதனால்தான் வேகமாக ஓடி வந்தோம் என்றது, பட்டு.
அதற்கு அந்த பெரிய மீன் காகத்தால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றது. 'உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது" என்று பெரிய மீன் கூறியது. மற்ற மீன்குட்டிகள் இந்த தாத்தாவுக்கு வேறு வேலையே இல்லை. எப்பொழுதுமே உபதேசம் தான் என்று கூறிவிட்டு சென்றன.
தினமும் காகத்தைப் பார்த்து கரைக்குச் செல்லாமல் குளத்தினுள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தன, மீன்கள். சில நாட்களுக்குப் பிறகு குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்திருந்தது.
அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய்! அங்கே பாருங்கள். வெள்ளை நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் அலகு நீளமாக மட்டுமில்லாமல் கூர்மையாகவும் உள்ளதே! அதனுடைய நடையைப் பார் என்று கொக்குவை வர்ணித்துக் கொண்டிருந்தது.
மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது, கொக்கு. உடனே மீன் குட்டிகள் கொக்குவைப் பார்த்து நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், உங்களது அலகை தொட்டுப் பார்க்கலாமா? என்று ஒரு மீன் குட்டி கேட்டது.
அக்குட்டிமீன் அவ்வாறு கேட்டதும் கொக்கு மகிழ்ச்சியில் மூழ்கியது. உடனே, கொக்கு தொட்டுப் பார் என்று கூறியது. ஒரு மீன் குட்டி கொக்கிடம் சென்றதும், கொக்கு அந்த மீனை கவ்விக் கொண்டது. நன்றாக மாட்டிக்கொண்டாயா? என்றது.
கொக்கிடம் மாட்டிய மீன் ஆ! என்னை விட்டிவிடுங்கள்! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குட்டிகள் ஆபத்து ஆபத்து வேகமாக ஓடுங்கள் என்று அனைத்து மீன்களும் குளத்திற்குள் சென்றன. ஆனால், அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது. மற்ற மீன் குட்டிகள் அந்த தாத்தா மீன் சொன்னது சரிதான்.
அழகை மட்டும் பார்த்து ஒருவருடன் பழகக்கூடாது என்று அனைத்து மீன்களும் உறுதியெடுத்துக் கொண்டன. அன்று முதல் அனைத்து மீன் குட்டிகளும் கவனமாக இருந்தன. மகிழ்ச்சியாக குளத்தில் வாழ்ந்து வந்தன.
நீதி :
அழகற்று இருப்பது எல்லாம் தீயதுமல்ல. அழகாக இருப்பது எல்லாம் நல்லதுமல்ல.