நீதி தவறிய மன்னன்..!!

Punniya seelan
0

 



நீதி தவறிய மன்னன்..!!
பூஞ்சோலை என்னும் நாட்டை மதியழகன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அரசரின் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் அறிந்தவள். தன்னைத் தவிர வேறு யாரும் இசையில் ஞானமுள்ளவர் இல்லை என அவள் நினைத்திருந்தாள்.

ஆண்டுதோறும் கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அத்திருவிழாவில் ராமர் என்ற இசைக்கலைஞர் மிகவும் அழகாக இசை நிகழ்ச்சி நடத்துவார். அவர் இறந்த பின், அவரது மனைவி இறைவனைப் புகழ்ந்துப்பாடுவாள். சில வருடத்திற்குப் பிறகு அரசியாரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ராமரின் மனைவி தன்னை பாட அனுமதிக்காததால் மிகுந்த வேதனை அடைந்தாள். பின் சில காலம் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து நின்றாள்.

இந்த ஆண்டும் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வருடம் எப்படியாவது இறைவனைப் புகழ்ந்து பாட வேண்டும் என முடிவு செய்தாள், ராமரின் மனைவி. வழக்கம்போல் திருவிழாவில் அரசியாரின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் அரசியாரின் இசையை ரசித்து கேட்டு கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. அதைப் பார்த்த அரசருக்கு எதுவும் புரியவில்லை. எதற்காக மக்கள் அனைவரும் எழுந்துச் செல்கிறார்கள் என்று பார்க்கச் சொன்னார். அங்கு சென்று பார்த்தால் ராமரின் மனைவி இறைவனை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட அரசியார் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

அரசி தன் கணவன் மதியழகனிடம் எவ்வளவு தைரியமிருந்தால் இவள் எனக்கே எதிராக இசைப்பாடுவாள். இவளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கோபமாகக் கூறினாள். தன் மனைவியை திருப்திபடுத்துவதற்காக ராமரின் மனைவியை பழிவாங்க நினைத்தார், அரசர்.

அச்சமயத்தில் அரசர் இசைக்கலையில் சிறப்புப்பெற்ற மணிமேகலை என்பவளை அழைத்து இசை நிகழ்ச்சி வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில், என்னுடன் போட்டியிட யார் தயார்? என்றாள். உடனே மன்னன் ராமரின் மனைவியைப் பார்த்து, அம்மையே! தாங்கள் தான் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும் என்றார்.

அதற்கு ராமரின் மனைவி, அரசே! நம் நாட்டின் பெருமைக்காக கலந்து கொள்கிறேன் என்றார். உடனே போட்டி பற்றிய விதிமுறைகளை அரசர் அறிவித்தார். இப்போட்டி மூன்று நாட்கள் நடைபெறும். நடுவர் தீர்ப்பே இறுதியானது. மணிமேகலை வெற்றி பெற்றால் அரசவைக் கலைஞராகும் தகுதியும், ராமரின் மனைவி தோற்றால் நாடு கடத்தப்படுவதாகவும் மன்னர் அறிவித்தார்.

அரசரின் சதிதிட்டத்தைப் பற்றி புரிந்துகொண்ட ராமரின் மனைவி, இறைவனிடம் சென்று இறைவா! நீ மட்டுமே எனக்குத் துணை என்று கூறி அழுதாள். தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டி நடைபெற்றது. மூன்று நாட்களும் மணிமேகலையே சிறந்தவள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது ஒரு முதியவர் எழுந்து நடுவர்களிடம் எதன் அடிப்படையில் மணிமேகலையின் இசைதான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கினீர்கள்? மேலும், மணிமேகலையின் இசை, ராமரின் மனைவி இசைத்த இசை இரண்டிற்கும் இடையேயான நிறை, குறைகளைத் தெளிவாக விவரித்தார். ராமரின் மனைவி இத்தனை சிறப்பாக இசைக்க, அவரை எப்படி தோற்றவர் என்று அறிவித்தீர்கள்? நடுவர்கள் மனசாட்சியோடு தீர்ப்பு வழங்காமல் பொய்யாக தீர்ப்பு வழங்குவது சரியா? என்று கேட்டார்.

இசைக்கும், இறைவனுக்கும் தொடர்பு உண்டு. இசைக்கு அநீதி செய்வதன் மூலம் இறைவனையே அவமதிக்கிறீர்கள் என்றார் முதியவர். இதைக்கேட்டு கடும் கோபத்திற்குள்ளான அரசர் அம்முதியவரை கைது செய்யுமாறு கூறினார். காவலர்கள் அவரை கைது செய்ய சென்றதும் அவர் அங்கிருந்து மறைந்து போனார். பின் கோவிலில் இருந்து பெரும் சத்தம் கேட்டது. முதியவர் இருந்த இடத்தில் இறைவன் காட்சியளித்து மறைந்தார்.

அதிர்ச்சியடைந்த அரசர் தன் தவறை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினார். தன் மனைவிக்காக தான் செய்தது தவறு எனப் புரிந்து கொண்டு, தன் மகனிடம் அரச பொறுப்பை ஒப்படைத்து அரச வாழ்வைத் துறந்து ஆன்மீக வாழ்விற்குச் செல்வதாக அறிவித்தார்.


Post a Comment

0Comments

Post a Comment (0)